0,00 INR

No products in the cart.

பிக்பாஸ், பாஸா… ஃபெயிலா ?

நீங்கள் கேட்டவை / தராசு பதில்கள்

? கோயில்களுக்குப் பக்தர்கள் வழங்கிய தங்க நகைகள் உருக்கி, வங்கியில் முதலீடு செய்யப்பட உள்ளதாமே?
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்
! இது இன்றைய தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டம் போல பா.ஜ.க.வும் சில இந்து அமைப்புகளும் எதிர்ப்புக் குரல் எழுப்புகின்றனர். இந்தத் திட்டம் 1977ல் இருந்து இருக்கிறது. 1977 ஆம் ஆண்டு முதல் இதுவரை, 5 லட்சம் கிலோ கோயில் நகைகள் ஏற்கெனவே உருக்கப்பட்டு, தங்கக் கட்டிகளாக மாற்றி டெபாசிட் செய்ததன் மூலம், ஆண்டுக்கு 11 கோடி ரூபாய் வட்டியை அறநிலையத்துறை பெற்று வருகிறது.

கோயில்களுக்கு வந்த அனைத்து நகைகளையும் உருக்கிவிட மாட்டார்கள். மன்னர்களும் ஜமிந்தார்களும் செல்வந்தர்களும் கொடையாகக் கொடுத்த பழைய நகைகள், பூஜை காலங்களில் அலங்காரத்தில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய நகைகளைத் தொடர்ந்து பாதுகாப்பார்கள். கடந்த 10 ஆண்டுகளாகக் கோயில்களுக்குக் காணிக்கையாக வந்த நகைகள் தேங்கிக் கிடக்கின்றன.

எந்தவித பயன்பாட்டிலும் இல்லாத நகைகளைத்தான் உருக்கி, கட்டிகளாக்கி, வங்கியில் வட்டிக்கு டெபாஸிட் செய்யப் போகிறார்கள். இதற்கான நகைகளை ஆய்வு செய்து முடிவு செய்ய முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

?  உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க. சாதித்து விட்டதே?
–  கே. இந்து குமரப்பன், விழுப்புரம்
! மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சி உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றிபெறுவதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், இந்த அளவுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதன் காரணம் தி.மு.க.வின் உட்கட்சி கட்டமைப்பும், அதன் விசுவாசமான தொண்டர்களின் உழைப்பும்தான். மற்ற கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது.

? அப்பாடா ஒரு வழியாய் கோயில்கள் திறக்கப்பட்டு விட்டதே?
– நாகராஜன்,
செம்பானர் கோவில்

! ’மக்களைத் திரட்டிப் போராடியதின் விளைவால் அரசுக்கு எழுந்த அழுத்தத்தால் ஏற்பட்ட வெற்றி’ என்கிறார் பா.ஜ.கா. தலைவர் அண்ணாமலை.

’இது அரசின் முடிவு. ஸ்டாலின் இதைவிடப் பல அழுத்தங்களை அமைதியாக சந்தித்தவர்’ என்கிறார் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. எப்படியோ பல பக்தர்களுக்கு நிம்மதி அளிக்கக்கூடிய செய்தி. ஆனால், ’கொரோனா தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்காமல் பக்தர்களின் கூட்டம் நெருங்கி நின்று ஆபத்தை விளைவிக்காமலிருக்கவேண்டுமே’ என்று எழும் அச்சத்தைத் தவிர்க்க முடியவில்லை. பக்தர்கள் வழிபடும் அந்த ஆண்டவன் அவர்கள் மூலம் தொற்றுப் பரவாமல் அருளட்டும்.

? பிக்பாஸ்… பாஸா… ஃபெயிலா?
புவனா நாகராஜன், ராணிப்பேட்டை
! ’பாஸ் இஸ் ஆல்வேஸ் ரைட்’ என்பதை அறிந்திருப்பீர்களே? சரியாகச் செயல்களைச் செய்பவர்கள் தேர்வுகளில் ஃபெயில் ஆவதில்லை. அந்த வகையில் பிக்பாஸும் ஃபெயிலாகவில்லை. — வணிகரீதியாக மட்டும்!

? ’சுமார்’ என்று ஒற்றை வரியில் தராசார் பதில் சொல்ல வைக்கும் கேள்வி எதுவாக இருக்கும் ?
-நெல்லை குரலோன், பொட்டல்புதூர்
! ஒரு தேசிய கட்சியாகக் காங்கிரஸின் செயல்பாடுதான்!

? மதுவந்தியின் வீடு சீல் வைக்கப்பட்டிருக்கிறதே?
– தமிழ் நேசன், திருச்சி
! வங்கி அல்லது, நிதி நிறுவனங்கள் தங்கள் கடனை வசூலிக்கப் பல வகை முயற்சிகளுக்குப்பின் உச்சகட்டமாகத்தான் அடமான சொத்துக்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் கைப்பற்றுவார்கள். மதுவந்தி மட்டுமில்லை; இப்படி வேறு பலரின் சொத்துக்களையும்
நிதி நிறுவனத்தினர் முடக்கியிருக்கிறார்கள். பலர் ஓரளவாவது பணம் செலுத்தி, இம்மாதிரி நடப்பதைத் தடுத்திருக்கிறார்கள். மதுவந்தி அப்படிச் செய்யத் தவறிவிட்டிருக்கிறார்.

? சசிகலாவின் திடீர் எழுச்சி?
– சொக்கலிங்க ஆதித்தன், நெல்லை
! பொன்விழா கொண்டாட்டங்களுக்கு அ.தி.மு.க. தயாராகி வரும் வேளையில், சசிகலாவின் அடுத்தடுத்த அறிக்கைகள் அக்கட்சியின் தலைமையைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளன என்பது உண்மையானாலும், பேசவேண்டிய நேரத்தில் பேசாத அரசியல்வாதி வெற்றிபெற்ற வரலாறில்லை. ’விடுதலைக்குப்பின் 8 மாத கால அமைதிக்கு சரியான காரணம் சொல்லாமல், ஓ.பி.எஸ்ஸும் – இ.பி.எஸ்ஸும் ஒற்றுமையாகச் செயல்படுவது உண்மையென்றால், மதுசூதனன் இறந்த பிறகு புதிய அவைத் தலைவரைத் தேர்வு செய்வதில் தாமதம் ஏன்?’ போன்ற கேள்விகளை எழுப்பாமல் தன் அரசியல் நிலைப்பாடு என்னவென்று சொல்லாமல் அம்மாவின் சமாதியில் அழுவதினால் ஒரு கட்சியைக் கைபற்றிவிட முடியாது.

? நடிகர் ஶ்ரீகாந்த் மரணம் குறித்து?
ராமலிங்கம், திருமங்கலம்
!மிகையுணர்ச்சி அல்லாமல் தனது இயல்பான நடிப்பை எப்போதும் வெளிப்படுத்திய கலைஞன். ’ஜெயலலிதாவின் முதல் ஹீரோ, ரஜினியின் முதல் வில்லன்’ என்ற பெருமை பெற்ற இவர், எம்.ஜி.ஆர். உடன் சேர்ந்து நடித்ததே இல்லை. நல்ல வாசிப்பாளர். ஜெயகாந்தனின் நண்பர். அவரது ’அக்னிப்பிரவேசம்’ சிறுகதை                        ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்று திரைப்படமாக வந்தபோது, அதில் மிகச் சிக்கலான ’பிரபு’ என்ற பாத்திரத்தை மிக இயல்பாக நடித்தவர்.

? மம்தா பிரதமராகும் சான்ஸ் உண்டா?
வண்ணை கணேசன், சென்னை
! இந்திய அரசியலில் பிரதமராகும் வாய்ப்பு ’ஒரு தேசிய கட்சிக்கோ அல்லது அது தலைமையேற்கும் வலிமையான கூட்டணிக்கோ தான்’ என்பது வரலாறு சொல்லும் உண்மை. மே. வங்கத்தில் செல்வாக்குப் பெற்ற கட்சியின் தலைவியாக இருந்தால் மட்டும் பிரதமராகிவிட முடியாது. அவர் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேசிய அளவில் ஒரு வலிமையான அணியை உருவாக்கினால் ஓரளவு வாய்ப்பு உண்டு

? ’அண்ணாத்தே’யின் ’சாரல் காற்றே’ எப்படி?  – எம்.ராஜா, மதுரை

! நீண்ட நாட்களுக்குப்பின் ஸ்ரேயாகோஷலின் தேன் சொட்டும் குரலில் ஒரு பாடல், உடன் பாடும் சித் ஶ்ரீராமும் அருமையாக இணைந்திருக்கிறார். படம் எப்படியோ…. பாட்டு ’இமான் தொப்பியில் இன்னுமொரு சிறகு’.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

மூங்கில், நண்டு, வாழை, மனிதன்!

3
கடைசிப் பக்கம் சுஜாதா தேசிகன்   இந்த வாரம் மீண்டும் சென்னை விஜயம். காலை நடையில் தி.நகர் ‘ஹாட் சிப்ஸ்’ல் காஃபி சாப்பிடும்போது  விஜயதசமி முடிந்து வாழை தோரணங்கள் வாடி வதங்கி அதன் அடிப் பகுதியில் தண்டு சின்னதாக...

‘அதை வெளிப்படுத்துபவனே நல்ல நடிகன்’

1
lll ஒரு கலைஞனின் பயணம் முடிந்தது - வினோத்   தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் நெடுமுடி வேணு, அண்மையில் கொரோனா கொடூரத்துக்குப் பலியானார். கலகலப்பான சுபாவம் கொண்டவரான வேணு, தமது எளிமையான...

ஆரம்பமே அசத்தல்!

0
உங்கள் குரல் சர்வதேச சந்தையின் நிலைக்கேற்ப நம் நாட்டின் எரிபொருட்களின் நிலையை மாற்றி அமைக்கும் முறை குழித்தோண்டிப் புதைக்கப்பட்டு விட்டது என்று சாடிய "பிரதமரே கருணைக் காட்டுங்கள்" கல்கியின் தலையங்கம்,  எதிர்க்கட்சி நிலையில் இருந்தபோது...

இலுமினாட்டிகள் நிறுவியதா இது?

0
-  முனைவர் அருணன்   அமெரிக்காவின் தெற்கு உட்டாவில் உள்ள பாலைவனத்தில் 12 அடி உயர மர்ம உலோகப் பொருள் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு சிலர் இது கலைப்பொருள் என்றும் , ஒரு சிலர் இது வேற்று...

ஓவர் சென்டிமெண்ட்

இணையத் தளத்தில் வெளியாகியிருக்கும் 'உடன்பிறப்பே' திரைப்படம் - ஒரு பார்வை - ராகவ் குமார் சென்டிமெண்ட் உடன்பிறப்பு : 'பாசமலர்', 'கிழக்குச் சீமையிலே', ’முள்ளும் மலரும்’ போன்ற அண்ணன் - தங்கை சென்டிமெண்ட் பட வரிசைகளில் வந்துள்ள...