இன்று உலக தண்ணீர் தினம்: நீரை சேமிப்போம்!

இன்று உலக தண்ணீர் தினம்: நீரை சேமிப்போம்!

-தனுஜா ஜெயராமன்

நீரின்றி அமையாது இவ்வுலகு. உலகில் பல்லாயிரக்கணக்கான பேர் ஒரு குடம் தண்ணீருக்காக பல கீலோமீட்டர் நடந்து செல்லும் அவலம் நடைமுறை நிதர்சனம். இன்றும் உலகில் சில நாடுகள் குடிநீரை பணம் கொடுத்து வாங்குவதுமுண்டு. நமது நாட்டில் இயற்கையாகவே நீர்வளத்தை ஏராளமாக பெற்றுள்ளோம். அதை முறையாகப் பயன்படுத்தி  பாதுகாப்பது நமது கடமையல்லவா?

இதோ.. கோடைக்காலம் ஆரம்பித்து விட்டது.. இப்போதே பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கோடையில் பல பகுதிகளில் லாரிகள் மூலம் குடிதண்ணீருக்கு தவம் கிடைக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப் படுகிறார்கள். வருங்கால தலைமுறையினர் காசு கொடுத்தாலும் நீரை பெறமுடியாது என்ற அவலநிலைக்கு தள்ளாமலிருக்க, இப்போதே நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நீரில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதிகம். எனவே ஒவ்வொரு சொட்டு நீரையும் செலவழிக்கும் முன் நாம் யோசித்து செலவழிப்போம். தண்ணீரை சிக்கனமாக செலவழிக்க இதோ.. சில வழிகள்..

வீடுகளில் மற்றும் வெளியிடங்களில் தண்ணீர் குழாய்களை திறந்திருப்பின் கவனமாக மூடி நீரை பாதுகாப்போம். நீர் சொட்டும் குழாய்களை உடனே பழுது பார்ப்பதும் நமது சமூக கடமைகளில் ஒன்றே..

நமது வீடுகளில் மழை நீர் தொட்டியை அமைத்து,  வீணாக போகும் மழைநீரை சேமிப்பது நமது நாட்டின் குடிமகன் ஓவ்வொருவரின் கடமை.

நமது வீட்டில் உபயோகப்படுத்திய நீரை வீணாக்காமல் செடிகளுக்கு பயன்படுத்தலாம்.  காய்கறி கழுவிய நீர், ஏசியிலிருந்து சொட்டும் நீர் ஆகியவற்றையும் வீணாக்காமல் சேமித்து செடிகளுக்கு பயன்படுத்துவோம்.

நீரை பாதுகாப்பதில் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பங்கு உண்டு. அதே போன்று அரசாங்கத்திற்கென சில கடமைகள் உண்டு. பொதுஇடங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில் மழைநீர் வடிகால்களை அமைத்து மழைநீரை பெருமளவில் சேகரிக்கலாம்.

கோடையிலேயே ஆறு, ஏரி, கண்மாய், குளங்களை தூர்வாரி செப்பனிட்டு மழைகாலத்தில் பெய்யும் நீரை பெருமளவில் தேக்கி வைக்கலாம்.

பெருமளவில் கடலில் கலக்கும் நன்னீரை வேறுவழித்தடங்களை அமைத்து சேகரித்தும் வைத்துக்கொள்ளலாம்.

அங்கங்கே பயன்படுத்திய அல்லது உபயோகப்படுத்த இயலாத நீரை சுத்திகரிப்பு செய்து மறுசுழற்சி செய்யும் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கலாம்.


நீர்வழித்தடங்களை குடியிருப்பு பகுதிகளாக மாற்றுவோர் மீது தக்க நடவடிக்கை எடுத்து நீர்வழித்தடங்களை பாதுகாக்கலாம்.

அளவுக்கதிகமாக நிலத்தடி நீரை ஊறிஞ்சுவதும் சட்டப்படி தவறு. அதனை செய்யும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து நிலத்தடி நீர்வளத்தை பாதுகாக்கலாம்.

நீர்வளத்தை பாதுகாப்பதில் மக்களும் அரசாங்கமும் இணைந்து செயல்பட்டால் நிச்சயமாக வருங்கால தலைமுறைக்கு நீர் என்னும் மிகப்பெரிய சொத்தினை வைத்துவிட்டு செல்லலாம்.

மண்வளத்தை பாதுகாப்போம்!! மழைவளத்தை பெறுவோம்!
மழைவளத்தை பாதுகாப்போம்! வருங்கால தலைமுறையை காப்போம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com