சுனாமியில் பெற்றோரை இழந்த சிறுமி: ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தத்தெடுத்த அச்சிறுமிக்கு இன்று திருமணம்!

சுனாமியில் பெற்றோரை இழந்த சிறுமி: ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தத்தெடுத்த அச்சிறுமிக்கு இன்று திருமணம்!

கடந்த 2004-ம் ஆண்டு இந்தியாவைத் தாக்கிய சுனாமி பேரலையில் சிக்கி நாகை மாவட்டத்தில் 6065 பேர் உயிரிழந்தனர். அப்போது நாகையில் அரசால் துவங்கப்பட்ட அன்னை சத்யா இல்லத்தில் சுனாமியில் பெற்றோரை இழந்த  99 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார்கள். அதில் 9 மாத குழந்தை சௌமியா மற்றும் 3 மாத குழந்தை மீனா ஆகியோரை அப்போதைய நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த ராதாகிருஷ்ணன்  ஐஏஎஸ் தத்தெடுத்து வளர்த்தார்.பின்னர் பணி மாறுதலில் சென்னை சென்றாலும், அக்குழந்தைகளின் கல்வி, வளர்ச்சிக்கு பங்களிப்பை செலுத்தி பராமரித்து வந்தார்.

இந்நிலையில் சௌமியாவின் திருமணம் நாகையில் இன்று தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. நாகை ஆபிசர்ஸ் கிளப்பில் நடந்த திருமண விழாவில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ், நாகை எஸ்பி ஜவஹர், மற்றும் பல சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  ஆதரவில் வளர்ந்த தனக்கு திருமணம் நடந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக சௌமியா கூறினார்.

திருமண விழாவில் மகிழ்ச்சியாக பங்கேற்ற ராதகிருஷ்ணன் மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

நாகையில் அப்போது சுனாமி பேரலை பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்றபோது பாலத்தின் அருகே அழுதுகொண்டு இருந்த 9 மாதக்  குழந்தையாக சௌமியாவைக் கண்டெடுத்தோம்.  அதேபோல மீனாவையும் மீட்டெடுத்தோம். இக்குழந்தைகளை நான் தத்தெடுக்க, நாகையில் மலர்விழி, மணிவண்ணன் தம்பதியினர் பாதுகாவலராக இருந்தனர். இப்போது சௌமியா திருமணம் நடைபெறுவது சந்தோஷமாக உள்ளது.

-இவ்வாறு ராதகிருஷ்ணன் தெரிவித்தார்.

குழந்தையாக மீட்கப்பட்ட சிறுமிகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட உதவிகளை செய்ததோடு நிறுத்தி விடாமல் வாழ்வின் அடுத்த நிலையான திருமணம் வரை செய்து வைத்து அழகு பார்த்துள்ள தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மலர்விழி, மணிவண்ணன் தம்பதி குடும்பத்தினரின் செயல் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி, வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com