– சேலம் சுபா
சேலம் மாவட்டம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், தேக்கல்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த ஜம்பூத்து மலை கிராமம் இயற்கையின் எழில் கொஞ்சும் அந்த மலை கிராமம் நகரங்களின் ஒப்பனைகள் எதுவுமின்றி அமைதியாக இருக்கிறது. எப்போது வரப்போகும் ஒரு பஸ்ஸுக்காக காத்திருக்கிறோம்.
அப்போது அங்கு சைக்கிளில் வந்த ஓர் இளைஞர் தன் வண்டியை நிறுத்தி மணியடித்ததும் குழந்தைகள் ஓடி வந்து தரையில் அமர்கின்றனர். முகத்தில் மகிழ்ச்சி. கண்களில் ஆர்வம். சைக்கிளில் வந்தவர் ஓர் ஆசிரியர். ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு பாடங்கள் நடத்த வந்திருக்கிறார். என்பதை அறிகிறோம். அவரின் செய்கையும் அந்தக் குழந்தைகளின் ஆர்வம் நம்மை அட போட வைக்கிறது.
அந்த எழுத்தறிவிக்கும் இறைவனான கலைச்செல்வனுக்கு நன்றி சொல்லி அவருடன் பேச ஆரம்பிக்கிறோம்.
எப்படி வந்தது இந்த மிதிவண்டிப் பள்ளி யோசனை ? ஆசிரியர் கலைச்செல்வன் சொல்கிறார்:
நான் தலைமையாசிரியராக பணிபுரியும் மலைகிராமத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்களும் உண்டு. அப்படியே இருந்தாலும் ஆன்லைன் வகுப்புகளுக்கான சிக்னல் கிடைப்பது வெகு அரிதாக இருந்தது. சிக்னலே இன்றி எப்படி பாடங்களை நடத்துவது? மற்ற குழந்தைகளும் எப்படி கல்வி கற்பது? இதற்கான மாற்று வழி என்ன? என்று யோசித்ததின் விளைவே இந்த மிதிவண்டியில் பள்ளி. தேவைகளே கண்டுபிடிப்புகளுக்கு வழிகோலும்… அப்படி மலைகிராமப் பள்ளி மாணவர்களின் தேவையைக் கருதி கண்டுபிடிக்கப்பட்டதுதான் இது .
இந்த யோசனை தோன்றியதும் அதை செயல்படுத்த மாவட்ட ஆசிரியர் நிறுவன முதல்வரிடம் ஆலோசனை கேட்டபோது அவர் தந்த ஊக்கமும், டேப்லட் போன்றவைகளைத் தந்து உதவிய தன்னார்வலர்களின் உற்சாகமும் செயலில் இறங்க வைத்தது.
கொஞ்சம் கொஞ்சமாய் யோசித்து அந்த மிதி வண்டிக்குள் என்னன்ன அமைத்தால் மாணவர்கள் கல்வி அறிவு வளரும் என்பதை சிந்தித்து சுமார் இருபது மணி நேர உழைப்பில் ஒரு வாரத்தில் எங்கள் கல்வி வாகனம் தயாரானது. தற்சமயம் சேலம் மாவட்டம் ஜம்பூத்து மலைகிராம பள்ளியில் ஆசிரியராக உள்ளார். தற்போதுள்ள இந்தப் பள்ளியில் ஏழு மாணவர்களிலிருந்து இருபத்தி ஒன்றாக உயர்த்தி இருப்பது இவரின் சிறப்பு .
சிகரம் தொட்ட ஆசிரியர், கனவு ஆசிரியர், மற்றும் பறவையியல் சங்கத்துக்கான அவார்டு என பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். மத்திய அரசு கல்வி அமைப்பு சார்பாக தில்லியில் நடந்த தலைமைப்பண்பு தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட தலைமை ஆசிரியர்களில் தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட நான்கு ஆசிரியர்களில் இவரும் ஒருவர்.
ஒரு சாதாரண சைக்கிளை நடமாடும் பள்ளியாக மாற்றியிருக்குக் கலைச்செல்வனின் சைக்கிளில் தமிழ் – ஆங்கில மொழிகளின் எழுத்துகள் மற்றும் எழுத்துகளின் வகைகள், கணித பாடத்தில் இடமதிப்பு, ஆணி மணிச் சட்டம், ஏறுவரிசை இறங்கு வரிசை மற்றும் எண் பெயர்கள், பிற பாடங்களுக்கு விளக்க அட்டைகள், அகராதி பயன்பாடு, நூலகப் புத்தகங்கள், எழுது பொருள்கள், பொம்மலாட்டம் நிகழ்த்த பொம்மைகள், குழந்தைகள் பங்கேற்று நடிக்க முகமூடிகள் இவைகளுடன் பின்பக்க கேரியரில் பள்ளி போல வடிவமைக்கப்பட்ட ஒரு அட்டைப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள டேப்லட் கணினியில் முன்னரே பதிவேற்றம் செய்யப்பட்ட தொடக்கநிலை மாணவர்களுக்கான கல்வி காணொளிகள் எல்லாம் இருக்கிறது.”
இப்படி ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள் கற்றுக்கொள்ள ஏதுவான அனைத்தையும் இந்த மிதிவண்டியில் வடிவமைத்திருக்கிறேன் என்கிறார்.
பள்ளிக்கு வரமுடியாத பெருந்தொற்று காலத்தில் இந்த மிதிவண்டிப்பள்ளி மாணவர்களுக்கு கற்றலுடன் ஏற்படும் இடைவெளியைக் குறைத்து கல்வியின் மீதான அவர்களின் ஆர்வத்தை தூண்டுவதைக் கண்கூடாக காணமுடிகிறது. மேலும் ஆன்லைன் வகுப்புகளில் கிடைக்காத மாணவர்களின் நெருக்கமும் கல்வி கற்பித்தலில் நிறைவும் இதன் மூலம் கிடைப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.
தற்போது மாலையில் இரண்டு மணிநேரம் அவர்களின் வீட்டருகே சென்று அடிப்படை கற்பித்தலோடு பாடப்புத்தக கற்பித்தலும் இந்த மிதிவண்டிப் பள்ளியின் மூலம் நடைபெறுகிறது. அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி அங்கு செல்லும்போதே கிருமிநாசினியும் முககவசங்களும் எடுத்துச் சென்று விடுவேன்.
”இதை முன்மாதிரியாகக் கொண்டு பள்ளி தேடி வர முடியாத நிலையில் உள்ள குழந்தைகளின் இருப்பிடம் சென்று கற்றுத்தர ஆசிரியர்கள் முன் வந்தால் அதுவே மகிழ்ச்சி” என்கிறார் கலைச்செல்வன் .
”மிதிவண்டி என்றால் ஓட்டுவதற்கு மட்டுமே” என்ற மனநிலையை மாற்றி, இப்படி பாடம் படிக்கவும் பயன்படும் என்பதை நிரூபித்த ஆசிரியரின் புதிய பார்வையும் முயற்சியும் இப்பகுதி மக்களாலும் மாணவர்களாலும்
சக ஆசிரியர்களாலும் வெகுவான பாராட்டைப் பெறுகிறது.
பாராட்டுக்கள். கலைச்செல்வன் பணி தொடர இறைவன் அருள் வேண்டுகிறேன்
திருவரங்க வெங்கடேசன் பெங்களூரு