

ஒரு பெண் பருவம் அடைந்தாலும் அல்லது அவளுக்கு மாதவிடாய் நின்று போனாலும் வருகிற பிரச்னைகளை பற்றி நாம் எல்லோருமே பேசுகிறோம், மேலும் எல்லோருக்குமே தெரியும். ஆனால் ஒரு ஆண்மகன் பருவமடையும் போது அதைப்பற்றி யாருமே கண்டு கொள்வதில்லை. அந்த நேரத்தில் அந்தப் பையனுக்கு எப்படிப்பட்ட உணர்வுகள் இருக்கும், எந்த மாதிரியான உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரும் என்பதை பற்றி எல்லாம் நமக்கு தெரிவதில்லை, மேலும் நாம் யோசிப்பதுமில்லை. அந்த ஆண்மகனும் யாரிடமும் கூறாமல் மனதிற்குள்ளேயே போட்டு வைத்துக் கொள்கிறான். இதைப் போலவே 50 வயதை கடந்த ஆண்களும் ஒரு சில மனரீதியான பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். எப்படி பெண்கள் மெனோபாஸினால் பாதிக்கப்படுகிறார்களோ அப்படியே இந்த ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
பெண் மாதவிடாய் நிறுத்தத்திற்கு இணையாக, ஆண்களுக்கு ஆண்ட்ரோபாஸ் (andropause) அதாவது Late-onset hypogonadism என்ற நிலை ஏற்படுகிறது. இதனால் ஆண்களின் உணர்வுகளும் உறவுகளும் அதிக அளவில் பாதிக்கப்படலாம். எப்படி எல்லாம் பாதிக்கப்படுவார்கள் மற்றும் அதை கையாளும் முறைகளை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்...
பெண்கள் மெனோபாஸை அனுபவிப்பது போல் ஆண்களும் ஆண்ட்ரோபாஸ் என்கிற மாற்றத்தை அனுபவிக்கிறார்கள். ஆண்கள் வயதாகும்போது எதிர்கொள்ளும் டெஸ்டோஸ்டிரோன் அளவுகளின் சரிவால் இந்த நிலை ஏற்படுகிறது. ஆண்ட்ரோபாஸ் என்பது ஆண்களுக்கு வயதான பிறகு உண்டாகும் ஒரு படிப்படியான மாற்றமாகும். மேலும் இது உணர்ச்சி, அறிவாற்றல் மற்றும் உறவு சவால்களுக்கும் வழிவகுக்கும். இந்த மாற்றங்கள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. இதனால் ஆண்கள் இந்த கட்டத்தை அனுபவிக்கும்போது அவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை விளக்க வார்த்தைகளோ புரிதலோ இல்லாமல் போய்விடுகிறது.
ஆண்களுக்கு ஏற்படும் ஆண்ட்ரோபாஸின் அறிகுறிகள் என்னென்ன?
ஆண்கள் ஆண்ட்ரோபாஸை எதிர்கொள்ளும் போது, அது அவர்களின் அன்றாட வாழ்க்கையை பெருமளவு பாதிக்கும். மேலும் உடல் மற்றும் உணர்ச்சி பூர்வமான மாற்றங்களையும் அவர்கள் அனுபவிக்கக்கூடும்.
உடல் சக்தியில் ஏற்படும் மாற்றங்கள்: பல ஆண்கள் முதலில் தங்களுடைய சக்தியின் குறைவை கவனிக்கலாம். எப்போதும் சோர்வாகவோ அல்லது ஒரு இரவு முழுவதும் தூங்கிய பிறகும் ஓய்வெடுக்காமல் இருப்பது போல் உள்ள உணர்வையோ அவர்கள் காணலாம். இதனுடன், அவர்களின் பாலியல் உந்துதலும் குறைவதை கவனிக்கலாம். இது பெரும்பாலும் மன அழுத்தம் அல்லது வயதாகி விடுவதால் ஏற்படுகிறது. இருப்பினும், இந்த மாற்றங்கள் தற்காலிகமானவை மட்டுமல்லாமல் அவை அவர்களின் உடலுக்குள் ஏற்படும் ஒரு மாற்றத்தைக் குறிக்கின்றன.
உணர்ச்சிகளில் ஏற்றத்தாழ்வு: ஹார்மோன் மாற்றங்கள் பல ஆண்களுக்கு எதிர்பாராத 'ஏற்றத்தாழ்வு உணர்ச்சி'களுக்கு வழிவகுக்கும். எரிச்சல், விரக்தி அல்லது சோகம் போன்ற உணர்வுகள் அடிக்கடி வரக்கூடும். இந்த உணர்ச்சிகளைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, சில ஆண்கள் பின்வாங்கி, தங்கள் உறவுகளில் தூரத்தை உருவாக்க முயற்சிப்பர் என்று மனநல நிபுணர்கள் கூறுகிறார்கள். பாதிப்பை வெளிப்படுத்தும் இந்தப் போராட்டத்தினால் குடும்பத்தில் அவர்களின் மீது தவறான புரிதல்களை ஏற்படுத்தும்.
தன்னம்பிக்கையின் மறைவு: டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் குறையும்போது, பல ஆண்கள் சுய சந்தேகத்தை உணரத் தொடங்குகிறார்கள். இதனால் அவர்கள் எப்போதும் தன்னைத் தானே சோதித்து கொண்டே இருப்பார்கள். இந்த போரட்டத்தால் அவர்களுடைய பாலியல் நெருக்கம், வேலையில் கவனம் மற்றும் பொது இடங்களில் சுயமரியாதை உட்பட வாழ்க்கையின் பல பகுதிகளில் பாதிக்கப்படலாம்.
மறுபரிசீலனையால் ஏற்படும் மாற்றங்கள்: நடுத்தர வயதில் பெரும்பாலும் பல ஆண்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க முயலுகிறார்கள். குறிப்பாக ஆண்ட்ரோபாஸின் போது அவர்கள் தாங்கள் கடந்து வந்த வாழ்க்கையை மறுபரிசீலனை செய்கிறார்கள். ஹார்மோன் மாற்றங்களால் தீவிரமடைந்த இந்தக் கேள்வி குழப்பத்திற்கும் தொலைந்து போன உணர்வுக்கும் வழிவகுக்கும். இதன் விளைவாக, இந்த நேரத்தில் அவர்கள் தங்கள் அடையாளத்துடன் கடுமையாக போராடவும் வாய்ப்பிருக்கிறது.
ஆண்ட்ரோபாஸின் போது ஆண்களுக்கு என்ன நடக்கும்?
ஆண்ட்ரோபாஸ் மனநிலையானது, ஆற்றல் மற்றும் உந்துதல் ஆகியவற்றில் ஏற்படும் நுட்பமான மாற்றங்களாகக் காணப்படுகிறது. இந்த மாற்றங்கள் முதலில் முக்கியமானதாகத் கருதப்படவில்லை என்றாலும், அவை ஒரு மனிதனின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கலாம்.
இந்த உள் மாற்றங்கள் நிகழும்போது, ஆண்கள் இந்த மாற்றத்தை தனிப்பட்ட தோல்வியின் அடையாளமாகக் காணலாம், இது அவமான உணர்வுகளைத் தூண்டி உணர்ச்சி ரீதியாக பின்வாங்க வழிவகுக்கும்.
ஆண்ட்ரோபாஸ் உள்ளவர்கள் கையாள வேண்டிய முறைகள்:
ஆண்ட்ரோபாஸால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தயக்கமில்லாமல் இயல்புடன் குடும்பத்தினரிடம் அவர்களுக்கு உண்டாகும் பிரச்னைகளை பற்றி பகிர வேண்டும்.
ஆண்ட்ரோபாஸ் என்பதும் மாதவிடாய் நிறுத்தத்தைப் போன்றே இயற்கையான முறையில் உண்டாகும் ஒரு மாற்றம் தான் என்பதை ஆண்கள் புரிந்துகொண்டால், இந்த மாற்றத்திலிருந்து எளிதாக வெளியே வர முடியும்.
இதற்கான தகுந்த சிகிச்சையாக, ஆண்கள் சிறந்த மருத்துவ நிபுணரை நாடி அவர்களிடம் தங்களுக்கு உண்டாகும் உணர்வுகளைப் பற்றி பேச வேண்டும். சிகிச்சையின் மூலமாக மன அழுத்தத்தை கண்ட்ரோல் செய்யலாம். இந்த ஆலோசனையின் மூலமாக நிபுணர்கள் உங்களுடைய ஆண்மை தன்மையில் ஏற்படும் பாதிப்பானது பலவீனத்தின் அடையாளம் அல்ல என்பதை தெளிவாக உணர வைப்பார்கள்.
குடும்பத்தில் இருப்பவர்களும் அவர்களின் நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு மட்டும் தான் பருவநிலைக்கு ஏற்றவாறு மாற்றங்கள் வரும் என்பதில்லை, ஆண்களுக்கும் உண்டாகும் என்பதை நாம் எல்லோருமே புரிந்து கொள்ள வேண்டும். இந்த சமயத்தில் அவர்கள் சரியாக பேசாமல் எரிச்சலோடும் தனிமையிலும் இருந்தால் அவர்களை தவறாக புரிந்து கொள்ளாமல் அன்போடு பேசி அவர்களுக்கு ஆதரவை தர வேண்டும்.
ஒரு சில நடைமுறை மாற்றங்களை செய்வதன் மூலமாகவும் இந்த மாற்றங்களை எளிதாக சமாளிக்கலாம். மருத்துவ ஆலோசனை, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆழ்ந்த உறக்கம் மற்றும் உடல் செயல்பாடு (physical activities) இவை அனைத்துமே நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் விளக்குகிறார்கள்.