நாம் அனைவருக்கும் தூக்கம் என்பது நம் உடலுக்கும், மனதுக்கும் அவசியமான ஒன்று. ஆனால், சில சமயங்களில் நாம் எவ்வளவு தூங்கினாலும் எப்போதுமே தூக்கம் வருவது போன்ற உணர்வை அனுபவிப்போம். இந்த நிலை நம் அன்றாட வாழ்க்கையை பாதித்து உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை சீர்குலைக்கும். இந்தந் பதிவில் எல்லா நேரமும் தூக்கம் வருவது போன்ற உணர்வு எதனால் ஏற்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இரத்த சோகை: ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் உடலின் செல்கள் போதுமான அளவு ஆக்ஸிஜனை பெறாமல் போகும். இதனால், தூக்கம், சோர்வு போன்ற உணர்வுகள் ஏற்படலாம். சிலருக்கு தலைச் சுற்றல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளும் ஏற்படும்.
தூக்கமின்மை: போதுமான தூக்கம் இல்லாததால் உடல் மற்றும் மனம் சோர்வடைந்து, பகலில் தூக்கம் வரும் உணர்வு ஏற்படலாம். இதனால், மனநிலை மாற்றங்கள் கவனக்குறைவு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவு: தொடர்ச்சியான நோய் அல்லது மருந்து உபயோகம் போன்ற காரணங்களால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் சோர்வடைந்து தூக்கம் வரும் உணர்வு ஏற்படக்கூடும். இதனால், அடிக்கடி நோய்வாய்ப்படுதல், காயங்கள் மெதுவாக ஆறுதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.
ஹார்மோன் மாற்றங்கள்: தைராய்டு, அட்ரீனல் சுரப்பிகள் போன்றவற்றில் ஏற்படும் கோளாறுகள், ஹார்மோன் மாற்றங்களுக்கு வழி வகுத்து தூக்கம் மற்றும் சோர்வு போன்ற உணர்வுகளை ஏற்படுத்தலாம். இதனால், உடல் எடை அதிகரிப்பது அல்லது குறைவது, மாதவிடாய் கோளாறுகள், உடல் வெப்பநிலையில் மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் உண்டாகும்.
ஊட்டச்சத்து குறைபாடு: இரும்பு, வைட்டமின் பி12, வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் குறைபாடு ஏற்பட்டால், உடல் சோர்வு, தூக்கம் வருவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். இதனால், சரும பிரச்சனைகள், முடி உதிர்வு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பாதிப்புகள் உண்டாக்கலாம்.
மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு: தொடர்ச்சியான மன அழுத்தம், பதட்டம், கவலை போன்ற உணர்வுகள் தூக்கத்தை பாதித்து பகலில் தூக்கம் ஏற்பட வழிவகுக்கும். இத்துடன் மனச்சோர்வு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போதுமே சோர்வாகவும் தூக்க கலக்கத்துடன் இருக்கும் அறிகுறிகள் தென்படும்.
எல்லா நேரமும் தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்பட மேலே குறிப்பிட்ட விஷயங்கள் காரணமாக இருக்கலாம். இது உடல் ரீதியான மற்றும் மன ரீதியான பிரச்சனையாக இருக்கக்கூடும். இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு முதலில் அதற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை எடுப்பது அவசியம்.