முதுமையிலும் பற்கள் முத்துப் போல் ஜொலிக்க…

முதுமையிலும் பற்கள் முத்துப் போல் ஜொலிக்க…

முகத்துக்குத் தனி அழகைத் தருவது பற்கள்தான். பற்கள் தெரிய சிரிக்கும்போது முக அழகு கூடும். பற்கள் பளிச்சென்று வெண்மையாக இருந்தால், நமது புன்னகையை நாமே ரசிப்போம். பொதுவாக, பற்கள் வெள்ளை வெளேரென்று இருக்க வேண்டியதில்லை. லேசான மஞ்சள் நிறத்துடன் இருப்பதுதான் ஆரோக்கியம் என்கின்றனர் பல் மருத்துவர்கள். ஆனால், அவற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியம். அதற்கான எளிய குறிப்புகளை இந்தப் பதிவில் காண்போம்.

ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்பும் வாயை நன்றாகக் கழுவ வேண்டும். அப்போதுதான் உணவுப்பொருட்கள் பற்களின் சந்துகளில் தங்காது. இரவு தூங்கப் போகும் முன்பு அவசியம் பல் தேய்க்க வேண்டும். இதனால் பற்களில் கிருமிகள் சேராது. தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல் தேய்த்துக் கழுவும்போது ஈறுகளையும் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.

அடிக்கடி உணவில் முருங்கைக்காயை சமைத்து சாப்பிட்டு வந்தால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.

கிராம்பை பொடி செய்து வைத்துக்கொண்டு, டூத்பேஸ்டுடன் இதனை சிறிதளவு தூவி, பல் தேய்த்து வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும்.

எலுமிச்சை சாற்றில் சிறிது உப்புத் தூள் கலந்து, பற்களை நன்றாகத் தேய்க்க வேண்டும். இதனால் பற்கள் வெண்மையாவதுடன் ஈறுகளும் பலம் பெறும்.

வாரம் இருமுறை வேப்பங்குச்சியினால் பல் துலக்கி வந்தால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும். சொத்தைப்பற்களும் வராது.

புதினா இலைகளை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து, இதில் கால் பங்கு உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் வலி தீரும்.

தினமும் ஒரு பெரிய நெல்லிக்காயை நன்றாக மென்று சாப்பிட்டு வர, பற்களும் ஈறுகளும் உறுதியாகும். அதேபோல பச்சை வெங்காயத்தை தினமும் நன்றாக மென்று சாப்பிட்டு வர, பல் சம்பந்தமான நோய்கள் அணுகாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com