கழுத்து வலியில் கவனம் தேவை!

கழுத்து வலியில் கவனம் தேவை!

மது முன்னோர்கள் முற்காலங்களில் அறுபது வயதில் கூட கூன் விழாமல், கண்ணாடி அணியாமல், நிமிர்ந்த நடையுடன் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால், இன்றோ, இருபது வயதிலேயே பலரும், ‘கழுத்து வலி’ என்று கூறுவதைக் கேட்கிறோம். காரணம், ஊட்டச் சத்தில்லாத உணவும், அலைபேசியும், கணினியும் என்று தெரிந்தும் இவற்றைத் தவிர்த்து வாழ்வது சாத்தியமற்ற ஒன்றாகவே உள்ளது. சரி, முதலில் கழுத்து வலி எதனால் வருகிறது என்பதைப் பார்ப்போம்.

கழுத்து எலும்புகளும் முதுகெலும்புகள் போலவே ஒன்றின்மேல் ஒன்றாக பொருந்தி உள்ளது. அதில் உள்ள முள்ளெலும்புகள் தேய்வதாலும், தேய்ந்த எலும்புகள் இடையே உள்ள வட்டுகளை அழுத்துவதாலும், சிறிய எலும்புத் துணுக்குகள் வளர்வதாலும், அதிலிருந்து வெளியேறும் நரம்புகள் அழுத்தப்படுவதாலும் வலி வேதனை மற்றும் நரம்புப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. தவறான உணவுப் பழக்கத்தால் உடலுக்குத் தேவையான சத்துக்களை உரிய உறுப்புகளுக்குக் கொண்டுசெல்ல பயன்படும் கல்லீரல், கணையம் போன்ற ஒருங்கிணைந்த செரிமான மண்டல பலவீனமே வலிமையற்ற தசை, நரம்பு, எலும்பு தேய்மானத்துக்குக் காரணமாகின்றன. இப்படி நோய் ஓரிடத்தில் இருக்க, வலி இன்னொரு இடத்தில் இருப்பதை, ‘தொலைவிட வலி’ (Referred Pain) என்று கூறுகிறோம்.

கழுத்தில் ஏற்படும் வலி, அதன் தசைகளில் இறுக்கமும் பிடிப்பையும் தந்து தோள் மூட்டு, புஜம், நெஞ்சு போன்ற இடங்களுக்கு வலியை பரவச்செய்யும். கை, கால்கள், பாதம் போன்ற இடங்களில் ஊசியால் குத்துவது போன்ற வலி, எரிச்சல் அறிகுறிகளும் தென்படும். மேலும், அந்த இடங்களில் மரத்துப்போனது போன்ற உணர்வும் ஏற்படலாம். சிலசமயம், அப்பகுதி தசைகள் பலம் இல்லாமலும் போகும். கழுத்து எலும்புத் தேய்மானம் என்பது, தொடர்ந்து வலி இல்லாமல் விட்டுவிட்டு வருவதுடன் கழுத்துத் தசைகள் இறுக்கமாகவும் இருக்கும். இதெல்லாம் கழுத்து வலியின் பாதிப்புகள் மற்றும் அறிகுறிகள்.

சரி, கழுத்து வலி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்: நெடுநேரம் கணினி மற்றும் அலைபேசியில் மூழ்குவது போல் தலையை குனிந்தவாறு செய்யும் வேலைகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

புத்தகம் படிப்பது, சமையல் வேலை போன்றவற்றின்போதும் அதிகம் கவனமாக இருக்க வேண்டும்.

அதிக கனம் மற்றும் உயரமில்லாத தலையணையை மட்டுமே உறங்கும்போது உபயோகிக்க வேண்டும்.

கழுத்தை ஒரே பக்கமாக நீண்ட நேரம் வைத்திருப்பதைத் தவிர்ப்பது முக்கியமானது.

முகத்தை கவிழ்த்து குப்புறப்படுப்பது தவறானது. கழுத்து அமைப்பு, நேராக அல்லது பக்கவாட்டில் படுப்பதையே விரும்புகிறது.

கழுத்தைத் தாங்கும் தலையில் தாங்க முடியாத சுமைகளைத் தூக்குவதும் கழுத்து வலிக்கு வழிவகுக்கும்.

முக்கியமாக, கழுத்து வலிக்கு சுய வைத்தியம் பார்க்காமல் தகுந்த மருத்துவரிடம் அல்லது பாரம்பர்ய மருத்துவத்தை நாடுவதே சிறந்தது. காரணம், கழுத்து என்பது மென்மையான நரம்புகளைக் கொண்ட முக்கியமான உறுப்பு. கவனமாக இருந்து கழுத்து வலியைத் தவிர்ப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com