
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி மிக மிக அவசியமான ஒன்றாகும். உடல் எடையைக் குறைப்பது முதல், கொழுப்பைக் கரைப்பது வரை பல உடற்பயிற்சிகள் இருந்தாலும் அவற்றில் முக்கியமானது, ‘ஸ்கிப்பிங்.’ இந்தப் பயிற்சி உடல் நலத்துக்குப் பல நன்மைகளைத் தருகிறது.
தினமும் ஸ்கிப்பிங் செய்வதால் உடல் எடையை வெகு சீக்கிரத்திலேயே குறைக்க முடியும். ஸ்கிப்பிங் (கயிறு கொண்டு குதிப்பது) உடற்பயிற்சி செய்தால் எலும்புகளுக்கு கூடுதல் பலம் கிடைக்கும். தேவையற்ற கொழுப்பைக் கரைக்கவும் இந்த உடற்பயிற்சி உதவுகிறது. வீட்டில் இருந்தபடியே இந்த ஸ்கிப்பிங் உடற்பயிற்சியைச் செய்யலாம். இதன் மூலம் அழகான கட்டுடலையும் பெறலாம்.
தினமும் காலை அல்லது மாலை வேளையில் ஸ்கிப்பிங் உடற்பயிற்சி செய்வதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். உடலிலிருந்து அதிக வியர்வை வெளியேறும். இதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பளபளப்பாக மாறும். தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் 15 அல்லது 20 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்வதால் மன அழுத்தம் குறையும். நாள் முழுவதும் நம்மை மகிழ்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும்.
சாதாரணமாக ஒருவர் ஸ்கிப்பிங் பயிற்சியை 15 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம். பெண்கள் குறிப்பாக நடுத்தர வயதில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு 120 முறை ஸ்கிப்பிங் செய்தாலே போதுமானது. முதல் இரண்டு நாட்கள் ஸ்கிப்பிங் செய்யும்போது கால்வலி, தசை வலி இருப்பதுபோல் உணர்வீர்கள். இது போகப்போக சரியாகிவிடும். உடலிலிருந்து வியர்வை வெளிவந்து, கொழுப்பு கரைந்தாலே உடல் எடை குறைந்துவிடும். இதற்கு ஒரு மாதம் ஆகலாம். ஆனால், முயற்சியை மட்டும் கைவிட்டுவிடக்கூடாது. ஒரு பத்து நாட்கள் ஸ்கிப்பிங் செய்துவிட்டு விட்டுவிடக்கூடாது. தொடர்ந்து செய்தால்தான் முழு பலன் கிடைக்கும்.