ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளப் பெண் குழந்தைகளை இரு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று வறுமை நிலையில் இருப்பவர்கள். உண்ண உணவு இல்லாமல் சரியான ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காமல் ஒல்லியாக இருக்கும் பெண் குழந்தைகள். மற்றொன்று, பணம் இருந்தும் தேவையானச் சத்தான உணவைச் சாப்பிட முடிந்தும் சாப்பிடாமல் இருந்து உடலைக் கெடுத்துக்கொள்வது. வறுமை நிலையில் இருப்பவர்கள் விலை மதிப்புள்ள சத்தானப் பொருட்களைச் சாப்பிட்டுத்தான் உடல் நலனைக் காக்க வேண்டும் என்பதில்லை. கிடைக்கும் சிறிய வருமானத்திலும் பசிக்காக சிப்ஸ், பிஸ்கட், டீ என வயிற்றை நிறப்பாமல் தேவையான சத்தான மலிவு விலையில் கிடைக்கும் பொருட்கள் எத்தனையோ உண்டு, அதைச் சாப்பிட்டுக் கொள்ளலாம். மற்றவர்கள் எது உடலுக்கு ஆரோக்கியமானது என்பதை அறிந்து சாப்பிட வேண்டும். தேவையற்ற தின்பண்டங்களைத் தவிர்த்தாலே போதும். அதேபோல் அதிக அளவு சர்க்கரை/இனிப்பு, மைதா சேர்த்து உடல் எடையைக் கூட்டும் முயற்சியில் ஈடுபடுவது தவறு. அது தேவையில்லாத கொழுப்புச் சத்தினை அதிகரித்து உடல் உபாதைகளை ஏற்படுத்தும். அதற்குப் பதிலாக சத்தான உணவைச் சாப்பிட்டு உடல் தசை, எலும்புகளை வலுப்படுத்துவது என உடல் எடையை / ஆரோக்கியத்தைக் கூட்ட வேண்டும்.