
இன்றிருக்கும் பெரும்பாலான குழந்தைகளும் அதிக அளவு சுயமரியாதையை எதிர்பார்க்கின்ற பிள்ளைகளாக வளர்கிறார்கள். அது மட்டுமல்லாமல் எதையும் எளிதில் தாங்க கூடிய அல்லது சந்திக்கக்கூடிய பக்குவம் அவர்களுக்குள் வளரவில்லை. குறிப்பாக குற்றங்களை சுட்டிகாட்டும்போதே அல்லது தோல்விகளை சந்திக்கும்போதே இன்றைய குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
அப்படிப்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் சிறப்பான முறையில் கையாளுவதின் மூலம் அவர்களிடையே இருக்கின்ற தாழ்வு மனப்பான்மையை களைந்து நம்பிக்கை நட்சத்திரங்களாக மாற்ற முடியும். பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஒரு நல்ல பிணைப்பு இருக்கும் போதுதான் இந்த விஷயத்தை சிறப்பாக அவர்களால் செய்து முடிக்க முடியும்.
பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையே நெருக்கம் இருக்கும் போது தான் எந்த ஒரு விஷயத்தையும் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களிடம் எளிதாக பகிர்ந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட நெருக்கத்தை பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக உருவாக்கி தருவதோடு மட்டுமல்லாமல் ஒரு நாளில் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது குழந்தைகளோடு செலவிடுவது அவசியமான ஒன்றாகும்.
இதன் மூலம் இவர்களது உறவு மேம்படும். ஆசிரியர்களை விட பெற்றோர்களே குழந்தைகளுக்கு முதல் ஆசான் என்பதை புரிந்து கொண்டு அவர்களுக்கு சுய அன்பு மற்றும் நம்பிக்கையை எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது போன்ற விஷயங்களை விளக்கமாக கற்றுக் கொடுப்பதன் மூலம் அவர்களிடையே தன்னம்பிக்கை வளரும்.
மேலும் எந்த ஒரு விஷயத்தையும் அவர்கள் செய்யும்போது அதில் தவறு ஏற்படும். இதனைப் பெற்றோர்கள் தட்டிக் கழிக்காமல், அவர்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி தட்டிக் கொடுப்பதன் மூலம் அவர்கள் எதையும் தன்னம்பிக்கையோடு முயற்சி செய்வார்கள். இதன் மூலம் அவர்களுக்கு இடையே நல்ல புரிதல் ஏற்பட்டு பாசிட்டிவான எண்ணங்கள் உருவாகும்.
மேலும் பிள்ளைகள் முன் பெற்றோர்கள் முன் மாதிரியாக இருந்து செயல்பட வேண்டும். அவர்களின் வார்த்தைகளுக்கு நீங்கள் உத்வேகம் அளிக்கக்கூடிய வகையில் உறுதுணையாக நிற்பது அவசியமாகும். உங்கள் பிள்ளைகள் என்றாலும் தவறான செயல் என்றால் அதனை உடனே சுட்டிக்காட்டி விடுவதும் அவசியமானதாகும்.
அதேபோல், அதிகளவு நீதிபோதனை கதைகளை சொல்ல வேண்டும்.இதுவும் அவர்களுக்கு பாசிட்டிவ் எண்ணங்கள் உருவாக வழி செய்யும். குடும்பத்தில் நிலவும் சூழ்நிலைகள், குடும்ப பொருளாதாரம், குடும்ப வரவு செலவு போன்றவற்றை உங்கள் பிள்ளைகளோடு அமர்ந்து பேசும் போது அவர்கள் வரவுக்குத் தகுந்த செலவினை செய்ய முற்படுவார்கள்.
மேலும் குழந்தைகளுக்கு முயற்சி செய்து சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வழி செய்யும். மேலும் இன்று அதிகரித்து வரும் உருவ கேலிகளில் இருந்து உங்கள் பிள்ளைகள் சிக்கி சின்னா பின்னம் ஆகாமல் இருக்க முதலில் அவர்களுக்கு அவர்களின் உடல்நிலை பற்றிய முழு விபரங்களையும் கற்றுக் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு ஒரு தெளிவான மனநிலை ஏற்படும். இதன் மூலம் அவர்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் உடல் பருமனுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பதை எளிதில் புரிந்து கொள்வார்கள்.
எனினும் உடல் பருமன் அதிகமாக ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி விரிவாக உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து அவர்கள் மனதில் நேர்மறை எண்ணங்களை நீங்கள் விதைக்கலாம். எப்போதுமே எதுவும் முடியும் என்ற மனநிலையில் நீங்கள் இருந்தால் உங்களை பின்தொடர்ந்து வரும் குழந்தைகளும் தம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற உணர்வை தங்களுக்குள் வளர்த்து கொள்வார்கள். எனவே உங்களது தன்னம்பிக்கை அவர்களின் வளர்ச்சிக்கு மேம்படும் என்பதை புரிந்துக்கொண்டு தன்னம்பிக்கையோடு குழந்தைகள் செயல்படுவார்கள்.