புது உடைகளும் பொருட்களும் எப்போதுமே மனதிற்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் அளிப்பவை. ஷாப்பிங் செய்வது எல்லோருக்குமே மிகப் பிடித்தமான விஷயம், குறிப்பாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்.
முன்பெல்லாம் பண்டிகை, விழாக்காலங்களில் மட்டும் துணிக்கடைகள், நகைக்கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சாதனப் பொருட்களுக்கு தள்ளுபடி என அறிவிப்பு செய்வர்கள். அங்கே கூட்டம் குவியத்தொடங்கும். ஆனால், தற்போது வருடத்திற்கு பல முறை தள்ளுபடி அறிவிக்கின்றனர்.
இப்போதும் கூட்டம் ததும்பி வழிகிறது. அதோடு ஆன்லைனிலும் கடைகளை விட கூடுதல் தள்ளுபடி தருகிறார்கள். விளைவு, மக்கள் பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர்.ஒரு சிலர் அதிகமாகவும் அடிக்கடியும் ஷாப்பிங் செய்வர். பொருளாதார ரீதியாக வசதி படைத்தவர் என்றால் பிரச்சனையில்லை.
ஆனால் சிலர் எந்தப் பொருளைப் பார்த்தாலும், அது அவர்களுக்கு தேவையே இல்லை என்ற போதும் அதை வாங்கியே ஆகவேண்டும் என்று நினைப்பர். அந்தத் தீவிர மனஅழுத்தத்தின் ஆங்கிலத்தில் ‘கம்பெல்சிவ் பையிங் டிஸ்ஆர்டர்’ (Compulsive buying disorder (CBD) என்று பெயர்.
இது நோயில்லை என்றாலும் ஒரு வகை மன. இதில் நான்கு முக்கியமான நிலைகள் உண்டு.
புதிய பொருட்களை எதிர்பார்த்தல், வாங்கத் தயாராகுதல், ஷாப்பிங்கில் ஈடுபடுதல், பணம் செலவழித்தல்.
CBD எனப்படும் இந்த மனநிலையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பதின்பருவ முடிவில் இருப்பவர்கள் மற்றும் இருபதுகளின் தொடக்கத்தில் இருப்பவர்களே.
CBD ஆண்களை விட பெண்களையே அதிகம் தாக்குகிறது. இவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகவும், தங்களைப் பற்றிய மோசமான கணிப்பும் இருக்கும். சுயகட்டுப்பாடு அறவே இல்லாமல் இருக்கும்.
இந்தக் CBD மனஅழுத்தத்தின் பாதிக்கப்பட்டவர்களை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
1. தன்னிடம் பணமே இல்லை என்றாலும் பொருட்களை வாங்கத் துடிப்பது.
2. அளவுக்கு மீறிய நேரத்தை ஷாப்பிங்க்கில் செலவிடுவது
3. பலநாட்களாக பொருட்கள் வாங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருப்பது, ஆனால் வாங்காமலேயே இருப்பது.
அளவுக்கதிகமான ஷாப்பிங் பழக்கமானது ஒருவரின் பொருளாதார, தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையை பாதிக்கிறது.
மேலும் அவரை உணர்வுரீதியான பிரச்சனைகளையும் எதிர்கொள்ளச் செய்கிறது. இவர்களுக்கு தகுந்த சிகிச்சையளித்து சரிப்படுத்த வேண்டும்.
மனதிற்கு உற்சாகம் அளிக்கும் செரோடொனின் அதிகமுள்ள பாதாம்பருப்பு, சோயா, அன்னாசி மற்றும் வாழைப்பழங்களை உட்கொள்ள வேண்டும். மேலும் தினமும் அரைமணிநேரம் நடைபயிற்சியில் ஈடுபடவேண்டும் என அறிவுறுத்துகிறார்கள் மனநல ஆலோசகர்கள்.