0,00 INR

No products in the cart.

அசுரனுக்கும் அருளிய ஆராவமுதன்!

விஸ்வரூப தரிசனம்

கே.அம்புஜவல்லி

பிரஹலாதனுடைய மகன் விரோசனன். விரோசனனின் மகன் மஹாபலி. இவன், இந்திரனோடு போர் புரிந்தான். மஹாபலியின் ஆச்சார்ய குரு சுக்கிராச்சாரியார். இவர் மிருத்யுஞ்சய மந்திரம் அறிந்தவர். இம்மந்திரத்தை உபயோகப்படுத்தி, மஹாபலியின் இறந்துபோன போர் வீரர்களை உயிர்ப்பித்தார். படை பலம் குறையாது ஒரே மாதிரியாக இருக்கவே, இந்திரனை தோற்கடித்தார் மஹாபலி. எனவே, இந்திரன் இந்திர லோகத்தை விட்டு ஓடிப்போய் விட்டான்.

இந்திரன், தன் தாய், தந்தையான கஷ்யபர் – அதிதியிடம் சென்று, தனக்கு நேர்ந்த நிலையை தெரியப்படுத்தினான். தாய் அதிதி. கவலை கொண்டு விஷ்ணுவை பிரார்த்தித்தாள். பகவான் அவள் முன் தோன்றி, தானே அவளுக்கு மகவாகத் தோன்றி இந்திரனுக்கு உதவுவதாகத் தெரிவித்தார்.

கஷ்யபர் – அதிதிக்கு மகனாகப் பிறந்த பகவான், மிகவும் குள்ளமாகப் பிறந்ததைக் கண்ட அதிதி, வருந்தினாள். ஆனால், கஷ்யபர் பகவானின் சங்கல்பத்தை அதிதிக்கு தெரிவித்து, அவள் வேதனையை நீக்கினார். இந்திரனுக்கு தம்பி முறையாவதால், பிறந்த குழந்தைக்கு உபேந்திரன் (உப இந்திரன்) என்று பெயர் சூட்டினார். உபேந்திரனுக்கு தகுந்த வயதில் பிரம்மோபதேசம் செய்வித்தார் கஷ்யபர்.

மஹாபலி யாகம் ஒன்றைச் செய்தான். யாகம் முடிந்ததும் அந்தணர்களுக்கு தானம் அளிப்பதாக ஏற்பாடு. தக்க சமயத்திற்காகக் காத்திருந்த பிரும்மச்சாரி உபேந்திரன், மஹாபலியின் யாகசாலைக்குச் சென்றார். பிரும்மச்சாரியான உபேந்திரன், பகவானின் அவதாரமாக வந்தாலும் மஹாலக்ஷ்மியும் அவருடன் சேர்ந்தே வந்து விட்டாள்.  உபேந்திரன் தன் திருமார்பினில் இருக்கும் லக்ஷ்மி தேவியை, மேல் துண்டினால் மறைத்தபடி வந்தார். உபேந்திரனுக்கு குடையாகவும் பாத ரக்ஷையாகவும் உடன் இருந்தார் ஆதிசேஷன்.

யாகசாலையில் நுழைந்த குள்ளமான பிரும்மச்சாரி அந்தணனைக் கண்டு வியந்தார்கள் மஹாபலியும், சுற்றி இருந்த வேத விற்பன்னர்களும். ’’வாரும் வாமனரே” என்று வரவேற்ற மஹாபலி, ’’தாங்கள் வேண்டுவதை தானம் அளிக்க சித்தமாய் இருக்கிறேன்’’ என்றான்.

’’மிக்க சந்தோஷம் அரசனே. என் காலால் அளந்து, மூன்று அடி  நிலம் வேண்டும். அவ்வளவே’’ என்றார் வாமனன்.

வாமனரே, மூன்றடி உயரமுள்ள நீர், உமது காலால் மூன்று அடி நிலம் கேட்பது விந்தையாக உள்ளது. நீர் எது கேட்டாலும் தருகிறேன். பொன்னாகவும் பொருளாகவும் பசுக்களும் கொடுக்கிறேன்… கேளும்’’ என்றான் மஹாபலி.

’’உன் செம்மையான மனம் எனக்கு மிகுந்த உவப்பை அளிக்கிறது. என் இந்த சிறிய வேண்டுகோளை நிறைவேற்றினால் போதும்’’ என்றார் வாமனன்.

அப்போதுதான் வெளியே சென்றிருந்த மஹாபலியின் ஆச்சாரியார் குரு சுக்கிராச்சாரியார், மஹாபலி அருகில் வந்து, அவர் முன் நிற்கும் வாமனரைக் கண்டார். தன் யோக சக்தியால் வந்திருப்பது எம்பெருமான் நாராயணன் என்று அறிந்தார். பெருமானை நோக்கி கரம் தொழுது சேவித்தார். வீழ்ந்து வணங்கிய குரு கூறினார், ’’மஹாபலி, வந்திருப்பவன் எம்பெருமான் வைகுந்தப் பெருமாள் நாராயணன்’ என்றதும் அதிர்ந்தான் மஹாபலி.

’மூன்று அடி நிலம் அவர் திருவடியால் அளந்து வேண்டுமாம்’ என்ற வாமனரின் கோரிக்கையைச் சொன்னதும், சற்று நேரம் கண் மூடி இருந்த சுக்கிராச்சாரியார், பகவானின் லீலைகளைப் புரிந்து கொண்டார். தன் சிஷ்யன் மஹாபலியை காப்பாற்றுவது, குருவாகிய தம் கடமை என்றுணர்ந்து, தானம் கொடுக்க வேண்டாம் என்றும், மீறினால் யாவற்றையும் இழந்து விடுவாய் என்றும் கூறினார்.

வேதம் கூறும் அந்தணனுக்கு, தானம் கொடுப்பதை தடுப்பது பாவம் என்பதை அறிவார் சுக்கிராச்சாரியார். அதற்கு, தமக்கு உரிய தண்டனை கிடைக்கும் என்பதனையும் அறிந்தே மஹாபலிக்கு எச்சரிக்கை விடுத்தார்.

’’குருவே, உங்கள் பேச்சை நான் இதுவரை மீறியது இல்லை. உங்களின் ஆலோசனைகளைக் கேட்டே இதுவரை அரசாட்சி செய்து வந்துள்ளேன். ஆனால், வந்திருப்பது பகவானே ஆனாலும், நான் தருவதாக வாக்களித்து விட்டதை, என்னால் ஒருபோதும் மாற்றிக் கொள்ள முடியாது’’ என்று கூறி, மனைவியை கூப்பிட்டு நீரால் அர்க்கியம் விட்டு, தானத்தை சமர்ப்பிக்க ஆரம்பித்தார்.

’’மூடனே, நான் பெறப்போகும் தண்டனையையும் பொருட்படுத்தாது உன்னை எச்சரிக்கிறேன். என் ஆணையை மீறுகிறாயே?’’ என்று கூறியவர், உடனடியாக ஒரு வண்டு ரூபம் எடுத்து, பலியின் மனைவியிடம் இருந்த நீர் விடும் பாத்திரமான கெண்டியின் துவாரத்தை அடைத்துக்கொண்டார்.

வாமனர், தர்பைப்புல் ஒன்றை எடுத்து, கெண்டியின் துவாரத்தை குத்தவே, வண்டு ரூபத்தில் இருந்த சுக்கிராச்சாரியாரின் ஒரு கண் பழுதானது. பின் தடங்கலின்றி வந்த தண்ணீர் கெண்டியிலிருந்து விழ, மஹாபலி தானத்தை மந்திர ரூபமாக தாரை வார்த்தான்.
அதேசமயம், வாமன ரூபத்தில் பெருமாளை தரிசித்தவர்கள் மஹாபலியும் சுற்றி நின்ற அந்தணர்கள் மற்றும் சுக்கிராச்சாரியார் மட்டுமே.

வாமன ரூபம் மறைந்து, உலகளந்த பெருமாளாக நெடிது உயர்ந்து வளர்ந்தார். பெருமானின் திருப்பாதங்கள் பாதாள லோகத்தில் பதிந்தது. கால்களோ, பிரும்ம லோகம் வரை உயர்ந்து இருந்தது. அவரின் திருமுடி சத்யலோகத்துக்கும் மேலே சென்று விட்டது.

மஹாபலியும் சுற்றி இருந்தோரும் பெருமானின் பாதத்தின் மேல் பகுதியை ஒரு மலை போலக் கண்டார்கள். ஒரு குகையின் வாயிலில் நிற்பது போல நின்றனர். தலை நிமிர்ந்து பார்த்தால், மலையின் பகுதியாகத்தான் தெரிகிறதேயொழிய, வேறெதுவும் காண முடியவில்லை. ஒரு மலையின் கீழ் அன்று தோன்றிய சிறு எறும்பு போல நின்றான் மஹாபலி.

மஹாபலி அதிர்ந்தான். தன் நிலை அறிந்தான். பகவான் மூன்று அடி நிலம் கேட்டாரே? அது யாருடையது? மஹாபலியுடையதா? எதுவரை மஹாபலியுடையது?

பகவான் மூன்று அடி நிலம் கேட்டதும், ‘பெருமானே, அனைத்தும் உன் சொத்து. இதில் என்னுடையது என்று எதுவும் இல்லை. உன் விருப்பம் போல நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ள உனக்கு உரிமை உள்ளது. சகலமும் உன்னுடையது’ என்று கூறியிருந்தால், பகவானின் வாமன அவதார நோக்கமே நிறைவேறி இருக்காதே.!

இப்படி கற்பனை செய்வோம். ஒரு அறையில், குதிகால் ஒரு சுவரை தொட்டும், விரல்களின்  நுனி எதிர் சுவரை தொட்டும், கால் நீளமாக இருந்தால் அளப்பது என்பது எப்படி சாத்தியம்? அப்படித்தான் இருந்தது பகவானின் பாதம். பாதாளம் மற்றும் பூமி முழுதும் ஆக்கிரமித்து இருந்தது.

எல்லா லோகத்தையும் நிறைத்து விட்டவர், எதை அளப்பது? எப்படி அளப்பது? அவருடையதில் அவர் இருக்கிறார். இப்போது என்னுடையது எது? எங்கிருந்து மூன்று அடி கொடுப்பது? குழம்பியவன், தெளிவு பெற்றான்.

’மூன்று அடி என்று கேட்டு எனது அறியாமையையும், அகம் பாவத்தையும், போர் குணத்தையும் அழித்துவிட்டார். இனி, சரணாகதி மட்டுமே நான் செய்ய வேண்டியது. பெருமானே… என் தவறுகளை மன்னிப்பாய்’ என்று கண்ணீர் சிந்தினான். திருமுடி காணாதபடி இருந்த பெருமான் குறுகி, உலகளந்த பெருமாளாய் நின்று, அருளை எதிர்நோக்கி இருக்கும் மஹாபலியின் சிரசில் தன் திருவடியை வைத்து அவனது சரணாகதியை ஏற்றுக்கொண்டார்.

’’மஹாபலி, உன் சத்யமான வார்த்தையில் மகிழ்ந்தேன். நீ தற்போது உன் பாட்டனாரோடு பாதாளத்தில் உள்ள சுதலோகத்திற்குச் சென்று அங்கு உன் ஆட்சியைத் தொடர்வாய். அடுத்து வரும் இந்திர பதவியை வகிக்க, நானே வந்து உன்னை அழைத்து வருகிறேன்’’ என்று கூறி, மஹாபலிக்கும் ஏனைய அசுரர்களுக்கும் விடை கொடுத்து அனுப்பி வைத்தார்.

ஹிரண்யகசிபு சம்ஹாரத்தின்போது, பிரகலாதனுக்கு பகவான் அளித்த சத்தியத்தின்படி, ’அவர் வம்சத்தில் யாரையும் சம்ஹரிக்க மாட்டேன்’ என்ற உறுதிமொழியை காப்பாற்றியது தவிர, தன் தாய் அதிதிக்குக் கொடுத்த வாக்கையும் காப்பாற்றி, இந்திரனின் ஆபத்தை விலக்கி அருளினர். அதேசமயம் பலியின் ஆசையான இந்திர பதவியையும் அடுத்து அவனுக்குப் பெற்றுத் தர சங்கல்பித்தார் பகவான்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

சூல வடிவில் துர்கை!

0
- டி.எம்.இரத்தினவேல் உத்தர்கண்ட் மாநிலத்தின் இயற்கையெழில் சூழ்ந்த பசுமையான பகுதி உத்தரகாசி. இத்திருத்தலத்தில் பாயும் புண்ணிய நதியான பாகீரதி நதிக்கரையில் அற்புதமாக அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோயில். தேவபுரி, தேவபூமி என புராணங்கள்...

பார்வதி மைந்தனுக்கு பாவாடை நைவேத்யம்!

0
- எஸ்.ஸ்ருதி சென்னை அருகே அமைந்த புகழ்மிக்க முருகப்பெருமான் திருத்தலம் திருப்போரூர். முருகன் அசுரர்களோடு மூன்று இடங்களில் போரிட்டார். திருச்செந்தூரில் கடலில் போரிட்டு மாயையை அடக்கினார். திருப்பரங்குன்றத்தில் நிலத்தில் போர் புரிந்து கன்மத்தை அழித்தார்....

மாமணிக் கோயிலில் மாதவப் பெருமாள்!

0
- இரா.சுரேஷ் நூற்றியெட்டு வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது தஞ்சை மாமணி கோயில். தஞ்சாவூர் பள்ளி அக்ரஹாரம் அருள்மிகு ஶ்ரீ வீரநரசிம்ம சுவாமி ஆலயம், நீலமேகப் பெருமாள் ஆலயம் மற்றும் மணிக்குன்ற பெருமாள் ஆலயம்...

அருங்கலைகளின் ஆசான் அகத்தீஸ்வரர்!

0
- பழங்காமூர் மோ கணேஷ் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறுக்கும் வந்தவாசிக்கும் இடையே அமைந்துள்ளது புரிசை திருத்தலம். அகத்தியரால் வழிபடப்பெற்ற சிறப்புடைய இந்தத் தலத்தில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் அருள்பாலிக்கிறார். ‘தென்னூர் கைம்மைத் திருச்சுழி...

கதவுகளே காணாத சனி சிக்னாப்பூர்!

0
- லதானந்த் ஓர் ஊரில் எந்த வீட்டுக்கும் கதவுகளே இல்லை என்பது ஆச்சரியமான விஷயம்தானே! கதவுகளே இல்லாத அந்த ஊரில் களவுகளே நடைபெறுவதில்லை என்பதும் ஆச்சரியம்தானே! அப்படிப்பட்ட ஓர் ஊர் இருக்கிறது. அதுதான் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில்...