0,00 INR

No products in the cart.

அண்ணலின் புதிய பார்வை

காந்திஜி அரையாடைக்கு மாறிய நிகழ்வின் நூற்றாண்டுச் செய்தி
ரமணன்

ஒரு இயக்கத்துத் தலைவனாக இருப்பவரின் சிந்தனையும் பார்வை களும் தான் அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அடிப்படை. இன்று அண்ணல் காந்தியடிகளின் உடை அரையாடையாக மாறிய நிகழ்வின் 100வது ஆண்டை ஒரு கொண்டாட்டமாகக் கொண்டாடுகிறோம். இந்த ஆடை மாற்றம் ஒரு சாதாரண நிகழ்வல்ல. இது அந்தத் தலைவனுடைய ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் எழுந்த ஒரு புதிய பார்வையின் விளைவு. அந்தச் சிந்தனையும் அதன் விளைவாக அவருடைய நோக்கில் எழுந்த ஒரு புதிய பார்வையையும் குறித்து இன்று நினைவு கொள்வோம்.

நம் தேசத் தந்தை மகாத்மா காந்தி என்றதும், நம் நினைவில் நிற்பது எளிமையான உடையில் வலம்வந்த அவரின் உருவம்தான். இந்தத் தோற்றத்தின் பின் ஒரு வரலாறே அடங்கியுள்ளது. அது தமிழரோடு தொடர் புடையது என்பது நமக்குக் கிடைக்கும் பெருமை. காந்தியின் வாழ்க்கையில் என்றுமே தமிழருக்கென ஒரு தனி இடம் உண்டு.

அரையாடை என விமர்சிக்கப்பட்ட தமிழின் வேஷ்டி முதலில் காந்திக்கு அறிமுகமான இடம் தென் ஆப்பிரிக்கா என்பது நம்பில் பலர் அறியாத செய்தி. தென்னாப்பிரிக்காவில் காந்தி தங்கி சமுதாயப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அப்போது, அந்தத் தமிழர்களின் உடையான வேட்டி இவருக்கு அறிமுகமானது. மேல்நாட்டுப் பாணியிலான தன் கோட்டுக்கும் சூட்டுக்கும் முன்னால், தன்னை நாடி வரும் ஏழை மக்களின் உடையில் உள்ள பெரும் வேறுபாட்டை உணர்ந்தார். உதவி செய்பவருக்கும் பெறுபவருக்கும் இடையில் நல்ல புரிதல் உருவாகத் தன் உடை பெருந்தடையாக இருப்பதாக உணர்ந்தார். அவ்வப்போது இந்த உடை வேறுபாட்டைக் குறித்து உடனிருப்போரிடம் பேசவும் செய்தார். அந்த அளவுக்கு மக்களின் மனவோட்டத்தைத் துல்லியமாக அவரால் உணர முடிந்தது.

1913-ல் ஒரு நாள் தன்னை வேட்டி ஜிப்பாவுக்குத் திடீர் என மாற்றிக் கொண்டார். அன்று முதல் தென்னாப்பிரிக்காவில் தமிழர் அடையாளமான வேட்டியை அணிந்து வந்தார். ஆனால் இந்தியா திரும்பியவுடன் குஜராத்தி பாணி உடைக்கு மாறினார்.

காந்தி என்றால் இன்றைய இளம் தலைமுறையினர் நினைவுக்கு வருவது அவர் சிரிப்பும் கண்ணாடி அணிந்த முகமும்தான். அவர் ஏன் மேலாடை அணிவதில்லை என்று பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. மகாத்மா காந்தி தான் அணிந்திருந்த ஆடைகளைத் துறந்து நான்கு முழம் மட்டும் இடுப்பில் கட்டிக்கொண்ட அந்த வரலாற்றுச் சம்பவம் நிகழ்ந்தது மதுரையில்தான்

எப்படி நிகழ்ந்தது இது?

காந்தி, பன்முகத்தன்மை கொண்ட இந்தியா முழுவதும் ஒருமுறை யேனும் சுற்றிப் பார்த்தால்தான் தன் நாட்டை நன்கு புரிந்துகொள்ள இயலும் என்று முடிவு செய்தார். அதன் விளைவாக காந்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணத்தில் 1921-ல் அவர் தமிழகத்துக்கும் வந்தார். வழி நெடுகிலும் அவர் பார்த்த சராசரி மக்களின் உடை அவர் மனத்தில் ஆழப் பதிந்தது.

மணப்பாறை வழியாக மதுரை வந்து சேர்ந்த இம்மகானின் மனதில் தொடர் போராட்டம் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஒருபுறம் செல்வச் சீமான்கள் இங்கிலாந்து பாணியில் மிடுக்கோடும், மறுபுறம் ஏழைகள் மானம் காக்க இடுப்பில் ஒற்றை ஆடையோடு வலம் வருவதையும் கண்டு அவரது மனம் வருந்தியது. பெரும்பான்மை மக்களிடையே கோரத்தாண்டவம் ஆடிய ஏழ்மையைக் கண்டு காந்தியின் நெஞ்சம் வேதனைப்பட்டது

ரயில் நிலையத்தில் அவரைக் காணவந்த மக்கள் கூட்டத்தில் பெரும் பான்மையோர் நான்கு முழ வேஷ்டி அதுவும் மேல்துண்டு எதுவுமில்லாமல் அணிந்திருந்தைக் கண்டார். மதுரைக்கு வரும் முன்பு வரை காந்தியின் ஆடை எப்படி இருந்தது.? இந்தியாவில் வேஷ்டி உடுத்தும் முறை மாநிலத்துக்கு மாநிலம் வேறு படும். ஏன் ஒரே மாநிலத்திலேயே கூட இனத்தினரிடையே வேறுபாட்டைக் காணலாம். குஜராத்திகளில் பனியாக்கள், அந்த நீண்ட வேஷ்டியைப் பிரித்து இரண்டு கால்களின் கணுக்காலிருந்து சுற்றி இடுப்பில் அதை இடுப்பில் முடிப்பார்கள். மொத்த நீளம் 10 முழம். இதன்மேல் சட்டை அல்லது கோட்டு. தலையில் தலைப்பாகை அல்லது அழகான தொப்பி. கோட்டின்மேல் அங்கவஸ்திரம். இந்தத் தலைப்பாகை சமூகத்தில் அவர் களது அடையாளத்தைக் காட்டும் சின்னம்.

இந்தப் பயணங்களில் காந்தி செல்லும் இடங்களில் காங்கிரஸ் பிரமுகர்களின் வீடுகளில்தான் தங்குவார். மதுரையில் அப்படி மேலமாசி வீதியில் காங்கிரஸ் பிரமுகர்கள் ராம்ஜி, கல்யாண்ஜி வீட்டில் தங்கியிருந்த போது அவரைப் பார்க்கப் பலரும் வந்திருந்தார்கள். அவர்களில் பலர் சட்டை போட்டிருக்கவில்லை. அந்தக் காட்சி அவரை மிகவும் தாக்கியிருந்தது. அன்றிரவு சரியான உறக்கமில்லை. காலை மூன்று மணிக்கு அவருக்கு மனதில் எழுந்த ஒரு புதிய பார்வைதான் உடையில் அவர் ஏற்படுத்திக்கொண்ட திடீர் அடையாளம். தான் அவரை இன்றும் நமக்கு அடையாளப்படுத்தும் நான்கு முழ வேட்டி.

இந்த முடிவைப் பற்றி அவர் எழுதியிருப்பது, “அன்று அதிகாலை 3 மணிக்குத் தூக்கம் விழிப்பாக இருந்த நிலையில் தோன்றிய எண்ணம் அது. அது என் அந்தராத்மாவின் கட்டளை. மீறமுடியாது என்பதை உணர்ந்தேன்.முடிவெடுத்தபின் அவர் அதைச் செயலாக்கிய விதம் நம்மைப் பிரமிக்க வைக்கிறது. உள்ளூர் காங்கிரஸ்காரர்களிடம் ‘எனக்கு ஒரு நான்கு முழ வேஷ்டி கொடுங்கள்’ என்று கேட்கவில்லை. தன்னுடைய 10 முழ வேஷ்டியைக் கிழித்து நாலு முழத்தை வேஷ்டியாகவும் மீதியை மேலாடையாகவும் போட்டுக்கொண்டார். அதையும் அவர் தமிழ் தொழிலாளி காட்டுவது போல் குறுக்குப்பாச்சியாக அணிந்துகொண்டார். அவரது உயரத்துக்கு அது அவரது முழங்கால்களைக்கூட மறைக்க வில்லை. இந்த உடையுடன்தான் அன்றைய கூட்டங்களில் பேசினார். “இனி இதுதான் என் உடை” என்றார். அன்று முதல் அது அவரது அடையாள மாயிற்று.

இந்த முடிவைப் பற்றி அவர் எழுதியிருக்கிறார்.

“மனப் போராட்டத்துக்குத் தன் குறிக்கோளை அடைய எழுந்த ஒரு புதிய பார்வைதான் இந்த முடிவு. எடுக்கப்பட்ட இந்த முடிவைப் பற்றி அவர் சொல்லியிருப்பதைப் பாருங்கள்.

அவர் சொன்னபடியே அவர் தன் இறுதிநாள் வரையிலும் கொண் டிருந்தார். தன் எளிய கோலத்திலேயே மக்களை மட்டுமன்றி நாட்டை ஆண்ட ஆங்கிலேய அதிகாரிகள் வரை சந்தித்தார். அவரின் மிகப் பெரிய முடிவுகளையும் இந்த எளிய ஆடையுடனே சாதித்தார். கடும் குளிரிலும் பனி பொழிந்து கொண்டிருந்தபோதிலும் இந்த ஆடையை மாற்றவில்லை. ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் காந்தியை ஒரு தேநீர் விருந்துக்கு அழைக்கிறார். அதற்குச் செல்லும் வழியில் கோட்டு தொப்பி எல்லாம் அணிந்த ஒரு பத்திரிகை நிருபர், “மிஸ்டர் காந்தி. மன்னரைச் சந்திக்க நீங்கள் தகுந்த ஆடைகள் அணிந்திருக்கிறீர்களா?” என்று கேட்கிறார் அவருக்கு காந்தி சொன்ன பதில் “என் உடையைப் பற்றிக் கவலைப்படா தீர்கள். மன்னர் எங்கள் இருவருக்குமான உடையை அவரே அணிந்திருக்கிறார்”

இன்று அரசியல்வாதிகளின் உடைகள் ஒரு ஆடம்பர அணிகல னாகவே மாறியிருக்கிறது. பல லட்சங்களில் கோட்டு உடையலங்காரத் தைக் கவனிக்கத் தனி ஸ்டைலிஸ்ட். நானும் விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதி ஆயிரம் ரூபாய் வேஷ்டி அணிகிறார். ஆனால் காந்தியின் எளிய உடை மக்களைக் கவர்ந்ததே அன்றி விலக்கவில்லை. சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லையானால் ஆடை ஒரு தடை அல்ல என்பதை காந்தி வாழ்ந்து நிரூபித்தார். இதுதான் காந்தியின் ‘மேக் இன் இந்தியா’.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

அப்பா, அம்மாவைத் தேடியபோது கிடைத்த அக்கா

1
- மோகன்   கோவையில் 1970களில் ப்ளூ மௌண்டேன் என்கிற ஆதரவற்றோர் இல்லத்தை மேரி காத்தரீன் என்பவர் நடத்தி வந்துள்ளார். அங்கு விஜயா, ராஜ்குமார் என்கிற இரு குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். விஜயாவும் ராஜ்குமாரும்...

ஆழ்ந்த அஞ்சலி என்று எளிதில் விலகிவிட முடியாது …

3
அஞ்சலி  குமுதம் குழுமத்தில் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வந்த அதன் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அண்மையில் காலமானார்.  அவரைக் குறித்து அவரது நண்பரும் எழுத்தாளாருமான பாரதிபாலன்...   பாரதி பாலன்  அது 1987 குமுதம் ஆசிரியர்...

இந்த  நாற்காலி மட்டும் ஏன் இவ்வளவு உயரம்?

0
  வினோத்   டென்மார்க் நாட்டில் கோபன்ஹேகன் நகரில் பார்க்குகளில், பெரிய  தெருக்களில் இப்படி உயரமான பெஞ்சுகளை  அமைத்திருக்கிறது  ஒரு டி.வி சானல் நிறுவனம். முதலில் ஏதோ டிவி  ஷூட்டிங் என்று பலர் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால், அருகில் சென்று...

‘ இசைக்கருவிகள் எழுப்பும் இனிய ஓசையே என் சுவாசம்’

1
நேர் காணல் ''எதைச் செய்தாலும் அதை ரசித்து, நேர்மையாகச் செய்தால் மக்கள் தங்கள் ஆதரவைத் தரத் தயாராக உள்ளனர்''   ஸ்வர்ண ரம்யா   ‘திருவிளையாடல்’  திரைப்படத்தில் “பாட்டும் நானே-பாவமும் நானே” என்ற பாடலில்  சிவாஜி பாடும்...

வட்டத்துக்குள் சதுரம்

- செல்லம் சேகர்   இப்படியும் சேமிக்கலாம்...! செலவை சுருக்காமல் வருமானத்தை பெருக்குவதன் மூலம் சேமிக்கலாம். நம் தந்தை காலத்தில் எதை அனாவசியம் என்று நினைத்தோமோ அதெல்லாம் இன்று அத்தியாவசியம் என்று நினைக்க தோன்றுகிறது ... அது நம்மை...