0,00 INR

No products in the cart.

அந்தரங்க சுத்தம் அவசியம்

அருள்வாக்கு
காஞ்சி மகா சுவாமிகள்

‘அனைத்து அறன்’, அதாவது சர்வ தர்மமும் என்னவென்றால் அவரவரும் ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்’, அதாவது, தங்கள் மனசைத் தாங்களே துளிகூட அழுக்கில்லாமல் நிர்மலமாகச் சுத்தம் செய்துகொள்வதுதான் என்கிறார் திருவள்ளுவர். கர்மானுஷ்டானத்தால் அவரவரும் சித்தசுத்தி ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற வைதிக சம்பிரதாயத் தைத்தான் இங்கே திருக்குறளும் சொல்கிறது. முதலில் இவன் தன்னைத்தானே சுத்தம் பண்ணிக்கொள்ள வேண்டும். இது இல்லாமல் பரோபகாரம், சோஷியல் சர்வீஸ் என்று கிளம்பினால் அது வெற்றுக் காரியம்தான்.

தான் அடங்கியிருக்க வேண்டும்; பக்தியோடு ஈஸ்வர சேவை என்று நினைத்து சமூக சேவை செய்ய வேண்டும். அப்போதுதான் அது பலனளிக்கும். அந்தரங்க சுத்தமில்லாமல் செய்கிற காரியங்கள் வெறும் படாடோபமாகவும், ‘ஷோ’வாகவுமே முடிந்துபோகும். இந்தப் படாடோபத்தால் ‘சேவை’ என்று செய்கிறவனுக்கு அகங்காரம் மேலும் ஜாஸ்தி யாகத்தான் செய்யும். அகங்காரம் தொலைவதற்கு உதவவேண்டிய சேவையை அடக்கமும் பணிவும் பக்தியும் அன்பும் இல்லாமல் செய் தால் அகங்காரத்தை அதிகமாக்கிவிடும். குளிக்கவேண்டும் என்று போய்ச் சேற்றை வாரிப் பூசிக்கொண்டதாகிவிடும்.

‘தான் சுத்தமாவதுதான் சர்வ தர்மமும்’ என்றால் இது சுயநலம் மாதிரி அல்லவா இருக்கிறது என்று தோன்றலாம். ஆனால் இது நாம் லோகரீதியில் நினைக்கிற மாதிரியான சுயநலம் இல்லை. பிறத்தி யாரைக் கஷ்டப்படுத்தியாவது நம் இந்திரிய சுகங்களை பூர்த்திபண்ணிக் கொள்வதுதான் தப்பான சுயநலம். மனசை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டுமானால் நாம் கஷ்டப்பட்டாவது நல்லதே பண்ண வேண்டிய தாகிறது. இது இந்திரிய செளக்கியங்களிலிருந்து நம் மனசை மீட்டு சாசுவதமான பேரின்பத்தில் சேர்ப்பதற்கு உதவுகிறது. ‘உபகாரம்’ என்றால் பிறத்தியாருக்குச் செய்தால் மட்டும் போதுமா? இதோ நமக்கென்று ஈஸ்வரன் ஓர் உயிரைக் கொடுத்த மாதிரி கொஞ்சம் வெளியே அவிழ்த்துவிட்டிருக்கிறானே, மனசு என்ற ஒன்றைக் கொடுத்து அதை நல்லது, கெட்டது இரண்டிலும் ஆடுகிற மாதிரி விட்டிருக்கிறானே! இந்த நம் உயிருக்கு ஜீவாத்மா என்கிறார்களே, அதற்கு மட்டும் நாம் உபகாரம் பண்ணாமல் இருக்கலாமா? மனசை நல்லதிலேயே செலுத்தி, பகவான் தந்திருக்கிற வாக்கு, சரீரம் எல்லாவற்றையும் நல்ல பேச்சு, நல்ல காரியங்கள் இவற்றிலேயே பிரயோஜனப்படுத்தி இந்த உயிரைப் பேரின்ப நெறியில் சேர்க்க நாம் கடமைப்பட்டிருக்கவில்லையா? சின்ன தான சுயநலத்தை விட்டு, இந்தப் பெரிய ‘சுயநல’த்துக்கு எல்லோரும் பாடுபடத்தான் வேண்டும்.

இப்படிச் செய்வதற்குப் பரநலப் பணிகளே ரொம்பவும் சகாயம் செய்கிறது. இதிலே ஒரு வேடிக்கை – இவன் மனசு சுத்தமாக இருந்தால்தான் பரோபகாரம் நிஜமாக நடக்கிறது, பலன் தருகிறது; பரோப காரத்தால்தான் இவன் மனசே சுத்தமாகத் தொடங்குகிறது என்றால் Contradiction (முரண்) மாதிரித்தானே இருக்கிறது? ஆனால் முரண்பாடு இல்லை. முதலில் இவனுக்கு மனசு சுத்தமாக இருக்க வேண்டும் என்ற தாபம் இருந்தாலே போதும். மனசு லேசில் கட்டுப்பட்டு வரத் தான் வராது. இந்திரிய செளக்யத்தையே நினைத்து அது திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டுதான் இருக்கும். அப்போது, ‘ஐயோ, இது திருந்த வேண்டுமே!’ என்ற உண்மையான கவலை இருந்தால் இந்த விசாரத் துக்கே ஒரு நல்ல சக்தி (Effect ) உண்டு. இப்படி ஒரு தாபத்தோடு பரோபகார காரியங்கள் என்ற லகானைப் போட்டு அப்போதப்போதும் ஓடுகிற மனசை இழுத்து ஒரு பொதுத் தொண்டில் செலுத்த வேண்டும். ஒன்றுக்கொன்று போஷித்து இட்டு நிரப்புவது, Complementary என்கிறார் களே, அப்படிப், பரோபகாரப் பணி மனசைக் கொஞ்சம் கொஞ்சமாக சுத்தம் பண்ணப் பணண, அந்தச் சித்தசுத்தியால் நாம் செய்கிற தொண்டும் கொஞ்சம் கொஞ்சமாக சுத்தமாகிக்கொண்டு சக்தியோடு பலன் தர ஆரம்பிக்கிறது. இப்படிப் பரோபகாரமும் ஆத்மாபிவிருத்தியும் ஒன்றுக்கொன்று கைகோத்துக் கொண்டு, பரஸ்பரம் பலம் தந்து கொண்டு வளர்கின்றன.

என்ன சொன்னாலும் வெளி உலகத்தை நாம் முழுக்க சரி பண்ணுவது நம் கையில் இல்லை. பல பேர் பல தினுசான கர்மாவால் கஷ்டப்படும்போது நாம் எத்தனை சேவை செய்தாலும், அவர்கள் கர்மா குறுக்கே நின்று வெளியிலே பலன் இல்லாமலும் போகலாம். ஆனால் பிடிவாதமாக நாம் இந்தக் காரியத்தைச் செய்துகொண்டே வந்தால், அது நிச்சயமாக நம் கர்மாவைக் கழுவத்தான் செய்யும்; கர்ம வாசனை யால் ஏற்பட்ட நம் உள் அழுக்குகளை அலம்பத்தான் செய்யும். இதனால்தான் திருவள்ளுவர், ‘வெளியில் உன் தொண்டு பலன் தந்ததா என்று Proof (நிரூபணம்) தேடாதே! உன் மனசிலே அழுக்கு போச்சா, மனத்துக்கண் மாசிலன் ஆனாயா என்று பார்த்துக்கொள். இந்த உள் Proof – இதை யாரும் உன்னிடமிருந்து ஒளிக்கமுடியாது – கிடைத்து விட்டால் நீ பண்ணின தர்மம், அறன் பலித்துவிட்டது என்று அர்த்தம்’ என்று சொல்கிற மாதிரி குறளைப் பண்ணியிருக்கிறார்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

நாய் ஜென்மமா? மனித ஜென்மமா?

4
அருள்வாக்கு ஸ்ரீ சிருங்கேரி சங்கராச்சாரியார்   எந்த விவகாரத்தை எடுத்துக்கொண்டாலும் முதலாவது வயிற்றுப்பசியைப் போக்கிக் கொண்டால்தான் முடியும். பசியை நீக்க முடியவில்லை என்றால் சந்தியாவந்தனம் செய்யத் தோன்றாது. ஆகவே, பசியையும் போக்கிக்கொள்ள வேண்டும், பக்தியையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்....

சரீர தாத்பரியம்

1
  அருளுரை காஞ்சி மகாபெரியவர்   ’தண்டம்’ என்றால் ‘ஒன்றுக்கும் உதவாதது’ என்ற அர்த்தத்தில் சொல்கிறோம். தாய் மரத்திலிருந்து பிரிந்து தனியாக வந்த பாகந்தானே தண்டம்? மரத்தில் அது பாகமாக இருக்கும்போதுதான் அதற்கு உயிர் இருந்தது. அப்போதுதான் அது...

இறைவனிடம் கொள்ளும் அன்பே நித்தியமானது

2
அருள்வாக்கு சுவாமி ராமதாஸர்   மகிழ்ச்சி என்பது நம்முடைய அனுபவத்தினாலேயே வருகிறது. ஒரே பொருள் நமக்கு ஒரு சமயம் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இன்னொரு சமயம், அளவு கடந்த வேதனையைக் கொடுக்கிறது. ஒரு பெண் ஒரு வாலிபனை மிகவும்...

தன்னை இழந்து சரணாகதி அடைந்து விடுகிறான்.

3
அருள்வாக்கு - சுவாமி சின்மயானந்தர்   ஓர் உதாரணமாக “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை எடுத்துக்கொள்வோம். ‘நமோ’ என்று சொல்லுவது ‘காலில் விழுந்து வணங்குகிறேன்’ என்பதைக் குறிப்பதாகும். காலில் விழுந்து வணங்குவது என்பது இரண்டு தத்துவங்களைக்...

அகமும் புறமும்

3
அருளுரை காஞ்சி மகாப்பெரியவர்   மனுஷ்யனாகப் பிறந்த ஒவ்வொருத்தனும் ஓயாமல் அலைச்சலான அலைச்சல் அலைந்து கொண்டிருக்கிறானே, எதற்காக? ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்குத்தான். வெளியிலிருக்கிற வஸ்துக்களிடம் இவனுக்கு ஆசை. அவற்றைப் பெறவே அலைகிறான். ஒன்று கிடைத்துவிட்டாலும் போதவில்லை. அதனால்...