
சரவணனுக்கு (நடிகர் சூர்யா) மேக்-அப் டெஸ்ட் நடந்தது. அப்போதுகூட அவர் ரொம்பவும் பயந்தபடிதான் இருந்தார். ஒரு புகழ்பெற்ற நடிகருடைய மகன், நடிப்பதற்கு இவ்வளவு பயப்படுகிறாரே என்று எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
ஒரு பக்கம் 'நமக்கு நடிப்பு வராது; சினிமா நமக்கான இடமில்லை' என்று அழுத்தமான எண்ணம் அவருக்கு இருந்தது. இன்னொரு பக்கம் 'சும்மா ஏதோ மேக்-அப் டெஸ்ட் எடுக்கறாங்க! கடைசியில இவன் சினிமா வுக்குச் சரிப்படமாட்டான்னு விட்டுவாங்க' என்ற எண்ணம் இருந்தது. கஷ்டப்பட்டு அந்த நினைப்பை போக்கினார் வஸந்த்.
அவராலும் நடிக்கமுடியும் என்ற நம்பிக்கையை ஊட்டினார். சினிமாவுக்காக சரவணன் என்ற சொந்தப் பெயரை சட்டென்று அனை வரையும் கவரக்கூடிய சூர்யா என்று மாற்றினார். அன்று ஒரு ஒளிப்பதிவாளராக 'நேருக்கு நேர்' படத்தில் பார்த்த சூர்யாவுக்கும், ஒரு இயக்குநராக 'அயன்' படத்தில் பார்த்த சூர்யா வுக்கும்தான் எவ்வளவு வித்தியாசம்? வாவ்! அது பற்றி பின்னர் விரிவாகப் பேசலாம்.
'நேருக்கு நேர்' படத்தில் அறிமுகமான இன்னொரு ஸ்டார் சிம்ரன். படு சிம்பிளாகத் தோற்றமளித்த அவரை முதல் தடவையாகப் பார்த்தபோது, எனக்குப் பெரிதாக ஒரு அபிப்பிராயம் வரவில்லை. ஆனால் வஸந்த், 'இவங்களுக்கு நல்ல திறமை இருக்கு; கேரக்டருக்குப் பொருத்தமாக இருப் பார்' என்று ரொம்ப ஸ்ட்ராங்காகச் சொன்னார்.
முதல் சில நாட்களுக்கு ஷூட்டிங் சூழ்நிலை சிம்ரனுக்குப் பிடிபடவே இல்லை. ரொம்ப அப்பாவியாக நடந்துகொண்டார். உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.
'மனம் விரும்புதே' பாடல் காட்சியில் கையில் விளக்கு ஒன்றை வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடவேண்டும். அந்தக் காட்சியை எடுத்து முடித்துவிட்டு, நானும் வஸந்த்தும் அடுத்த காட்சியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்து, எதேச்சையாக நான் திரும்பிப் பார்த்தபோது, சிம்ரன் எடுத்து முடித்த காட்சியில் அவரிடம் கொடுக்கப்பட்ட விளக்கை இன்னமும் தன் கைகளிலேயே வைத்துக் கொண்டிருந்தார்.
'நேருக்கு நேர்' படத்தில் அறிமுக மான இன்னொருவர் கௌசல்யா. ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகளான அவர் மாடலிங் செய்து கொண்டிருந்தார். அவர் மாடலாக இடம் பெற்ற ஒரு விளம்பரத்தை நான் படம் பிடித்திருக்கிறேன். நானும் வஸந்த்தும் பெங்களூர் சென்று அவரைப் பார்த்துப் பேசி, நடிக்க வைத்தோம். ஆக 'நேருக்கு நேர்' படத்தின் மூலமாக சூர்யா, சிம்ரன், கௌசல்யா ஆகிய மூன்று நட்சத்திரங் களை வஸந்த் தமிழ் சினிமா உலகுக்கு வழங்கி இருக்கிறார்.
'விரும்புகிறேன்'. இது இயக்குநர் சுசி. கணேசனுக்கு முதல் படம். அவர் எனக்குப் படத்தின் கதையைச் சொன்னபோது ரொம்ப பிடித்துப் போய், உடனே ஒப்புக்கொண்டேன்.
அந்தப் படத்தின் ஹீரோயின் தேடுதல் 'குமுதம்' பத்திரிகை மூலமாக நடந்தது. துபாயில் வசித்துவந்த ஸ்நேகா, படத்தின் ஹீரோயினாகத் தேர்வு செய்யப்பட்டார். அவரது புகைப்படம் குமுதம் அட்டையில் வெளியானது. அடுத்த சில நாட்களில் பிரபல தெலுங்கு ஹீரோவான மோகன்பாபுவிடமிருந்து எனக்கு போன் வந்தது. (நான் ஒளிப்பதிவு செய்த முதல் தெலுங்குப் படத்தின் ஹீரோ மோகன்பாபுதான்).
'என்ன கே.வி! நீங்க ஒர்க் பண்ணற தமிழ் படத்துக்கு சூப்பரா ஒரு ஹீரோயின் செலக்ட் பண்ணி இருக்கீங்களாமே?' என்று கேட்டார்.
ரஜினி, மோகன்பாபுவிடம் பேசும் போது, குமுதம் அட்டையில் தான் பார்த்த புதுமுகம் பற்றிச் சொல்ல, அது பற்றி விசாரிக்க எனக்கு போன் பண்ணிவிட்டார் மோகன் பாபு.
'காக்கி' ஒரு பிரம்மாண்டமான சூப்பர் ஹிட் இந்திப் படம். அதை முடித்துவிட்டு, 'கனா கண்டேன்' படத்துக்கான ஸ்கிரிப்டை நான் விவாதித்துக் கொண்டிருந்த சமயத்தில் இயக்குநர் காந்தி கிருஷ்ணா என்னைச் சந்தித்தார். நான் இயக்குநர் ஷங்கரின் 'முதல்வன்' படத்துக்கு ஒர்க் பண்ணியபோது, காந்தி கிருஷ்ணா ஷங்கரிடம் அசிஸ்டன்டாக இருந்தவர் என்பதால், எனக்கு ஏற்கெனவே அவரைத் தெரியும்.
அவர் என்னிடம் 'செல்லமே' படத்தின் கதையைச் சொன்னார். பெரிய ஸ்டார்கள் இல்லாத, சின்ன பட்ஜெட் படம் என்றாலும் உடனே தயங்காமல் நான் ஒப்புக்கொண்டேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் கதை ரொம்ப வும் இம்ப்ரசிவ்வாக இருந்ததுதான்.
இயக்குநர் காந்தி கிருஷ்ணா, 'பாய்ஸ்' படத்தில் நடித்த பரத், ரீமாசென் தவிர இன்னொரு புதுமுகம் நடிப்பதாகச் சொன்னார். ஒருநாள் அவரது அலுவலகத்துக்குச் சென்ற போது, தன் அசிஸ்டன்ட்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
நான் அவரிடம் பேசிவிட்டுப் புறப்படும் போது, அங்கே அசிஸ்டன்ட் டைரக்டர்களுக்கு மத்தியில் உட்கார்ந்திருந்த ஒரு இளைஞரைக் காட்டி, 'ஆனந்த், இவர்தான் நம்ம படத்தில் அறிமுகமாகிற விஷால்!' என்று அறிமுகப் படுத்தினார். ரவுண்டு கழுத்து கொண்ட பனியன், ஜீன்ஸ் அணிந்து, படு கேஷுவலாக உட்கார்திருந்த அந்த இளைஞரைப் பார்த்தபோது, அதிரடியான வருமானவரித் துறை அதிகாரி ரோலுக்கு இவர் பொறுத்தமாக இருப்பாரா என்றுதான் எனக்குத் தோன்றியது.
ஆனால், குளோஸ் ஹேர்கட், மீசை, முழு கை ஷர்ட் கெட்அப்பில் கேமரா முன்னால், அவர் நின்றபோது, அவருடைய தோற்றத்தையும் நடிப்பையும் பார்த்துவிட்டு, நான் ஆச்சர்யப்பட்டேன். அந்தப் படத்துக்குப் பிறகு விஷால் எனக்கு நெருங்கிய நண்பராகிவிட்டார்.
மும்பையில் இருந்த நான், அந்த நடிகருக்கு போன் செய்து 'நான் இயக்கும் முதல் படத்தில் நீங்கள் நடிக்கவேண்டும் என்று விரும்புகிறேன். அது பற்றிப் பேச உங்களைச் சந்திக்க வேண்டுமே' என்று சொன்னவுடன், மும்பை மிலிடரி கிளப்பில் தங்கள் குடும்ப நண்பர்களுக்காக ஏற்பாடு செய் திருந்த ஒரு கெட்-டு-கெதருக்கு வந்துவிடுங்கள்' என்றார். அங்கே தான் நான் அவருக்குக் கதை சொன்னேன்.
பிரிதிவிராஜ் பிரபல மலையாள நடிகர் சுகுமாரனின் மகன். ஆஸ்திரேலியா வில் படித்துவிட்டு சினிமாவில் நடிக்க வந்தவர். அவருடன் பேசும்போது, அவரு டைய பேச்சுஸ்டைல், குரல் எல்லாம் கேட்பவர் களை உடனே இம்ப்ரஸ் செய்துவிடும்.
'காதலுக்கு மரியாதை' படத்தை இந்தியில் 'டோலி சஜா கே ரக்னா' என்ற பெயரில் எடுத்தார் இயக்குநர் பிரியதர்ஷன். அதற்காக ஹீரோயினைத் தேடிக்கொண்டிருந்த நேரத்தில், ஒருநாள் அவரிடமிருந்து அழைப்பு வந்தது. உடனே சென்று அவர் குறிப்பிட்ட இளம் பெண்ணை, நிறைய புகைப்படங்கள் எடுத்தேன்.
ஓரிரு துணை இயக்குநர்கள் அந்தப் புதுமுகத் தின் மூக்கை குறை சொன்னாலும், 'இவருடைய முகத்தில் உள்ள அப்பாவித்தனம் மிக இயற்கை யாக இருக்கு; அதுதான் இந்தக் கேரக்டருக்கு மிக முக்கியம்' என்று என் கருத்தைச் சொன்னேன். பிரியனும் அதை ஆமோதித்து, அவரையே நடிக்கச் செய்தார். அவர்தான் ஜோதிகா.
மணிரத்னத்தின் 'இருவர்' படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்வதற்கு முன்னரே ஐஸ்வர்யா ராய் ஒப்புக் கொண்ட இந்திப் படம் 'அவுர் பியார் ஓகையா'. அந்தப் படத்தின் ஹீரோ பாபி தியோல். ஐஸ்வர்யா ராய் முதன்முதலாக கேமரா முன் நின்ற போது அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராகப் பெருமையாகப் படம்பிடித்த நான் பத்தே நாளில் பெரிய கும்பிடு போட்டு விட்டு, ஆளை விடுங்கள் என்று ஓடி வந்து விட்டேன்.
(தொடரும்)