
பாரதி பாஸ்கர் உடல்நலன் பற்றிய தகவல் இல்லையே?
– ச. சிவசங்கரி சரவணன், செம்பனார்கோவில்
இதோ, உங்களுக்காக, அவரது நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்துவிட்டேன். பாரதி பாஸ்கரின் உடல்நிலை நன்கு தேறி வருகிறது. தற்போது வீட்டில் ஓய்வில் இருக்கிறார். விரைவில் பொது மேடைகளை அலங்கரிப்பார். அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களின் உளமார்ந்த பிரார்த்தனைகள் வீண் போகுமா என்ன? ஜம்மென்று வரப் போறாங்க பாருங்க! ஞானமங்கை பாரதியின் புன்னகையுடன் கூடிய அறிவார்ந்த பேச்சைக் கேட்க நானும் உங்களைப் போலவே ஆவலாகக் காத்திருக்கிறேன்… எழுந்து வாங்க பாரதி மேடம்!
உங்களை அசத்திய ஐ.பி.எல். மேட்ச் எது?
– வாசுதேவன், பெங்களுரு
செப்டெம்பர் 22ல் நடந்த பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஐ.பி.எல் மேட்சின் கடைசி ஓவர்… பஞ்சாப் வெற்றி பெற நான்கே நான்கு ரன்கள் மட்டுமே தேவை…
ராஜஸ்தான் பெளலர் தியாகி, தீயாகி பந்து வீசுகிறார். நம்ப முடியுமா பாருங்க…
ஒரே ஒரு ரன் மட்டுமே கொடுத்து, 2 விக்கெட் எடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன் வித்யாசத்தில் வெற்றி பெற வைத்த அதிசய மேட்ச்தான், நான் இதுவரைப் பார்த்திராத த்ரில் ஐ.பி.எல். மேட்ச்!!
கடவுள் உங்க முன்னால வந்து ஏதாவது ஒரு விஷயத்துல சமுதாயத்துல நிரந்தர மாற்றத்தைக் கொண்டு வர உங்களால முடியும்னு ஒரு சக்தி கொடுத்தா, எந்த விஷயத்தை மாத்துவீங்க?
– தி. வள்ளி, திருநெல்வேலி
சாமி, என் முன்னால வந்து நின்னதும், ஒரு பாட்டு பாடுவேன்.
"இறைவன் உலகத்தைப் படைத்தானா…
ஏழ்மையை அவன்தான் படைத்தானா?
ஏழையைப் படைத்தவன் அவன் என்றால்…
இறைவன் என்பவன் எதற்காக?
பசி வர அங்கே மாத்திரைகள்
பட்டினியால் இங்கே யாத்திரைகள்
இரு வேறு உலகம் இது என்றால்
இறைவன் என்பவன் எவர்க்காக?"
கடவுள் உடனே புரிஞ்சுக்குவார்.
"கண்ணதாசன் பாட்டா? / 'நல்லா இருக்கு… இந்தா சக்தி"
உடனே உலகம் முழுக்க ஏழைகள், ஊனமுற்றவர்கள் இல்லாத புத்தம்புது பூமி மலர்ந்து விடும்!
ஆர்வக் கோளாறில் இன்னொரு பாட்டு வந்து விழும்!
"காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது;
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது.
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே
உலகில் பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே
அமைதி நிலவுமே"
"புலமைப்பித்தன்தானே? ஒ.கே. பிடி!"
ஏழ்மையும் போய், ஜாதி, மத, இன, பாகுபாடும் போய்விட்டால்,
"ஹேப்பி… இன்றுமுதல் ஹேப்பி! என்று பாட ஆரம்பிப்பேன்.
'ஏது… லிஸ்ட்டு பெருசா போகுது'ன்னு சாமியும் டென்ஷனாகி பதிலுக்கு "ஆறு மனமே ஆறு… இந்த ஆண்டவன் கட்டளை ஆறு" எசப்பாட்டு பாடிட்டு சிவாஜி மாதிரி சிரிச்சுக்கிட்டே போயிடுவார்.
'அண்ணாத்த' – பாடல் கேட்டீங்களா?
– செல்வகுமாரி, திண்டுக்கல்
இரண்டு தபா கேட்டேன். ஓப்பனிங் சாங்குக்கான ஒரு அடையாளமும் இல்ல. எஸ்.பி.பி.யின் கம்பீரமான குரல் மட்டுமே மனசுல நிக்குது. ட்யூன் போகப் போகப் பிடிக்குமோ என்னவோ?!
ஷாருக்கான் மகன் கைது?
– ராதிகா, சென்னை
ஊரான் வீட்டுப் பசங்கள 'பைஜுஸ்'ல படிக்கச் சொல்லிட்டு, உங்கப் புள்ளைய கண்டுக்காம விட்டுட்டீங்களே ஷாருக்? அபரிமிதமான செல்வம், எல்லை மீறிய செல்லம், கட்டுப்பாடற்ற சூழ்நிலை, அலட்சியமான பெற்றோர்கள், பெரும்பாலான 'ஸ்டார் கிட்ஸ்'களின் நிலமை இதுதான்! சட்டப்படி நீருபிக்கப்பட்டால், ஆரியன் எப்பவோ மாட்ட வேண்டியவர். போகட்டும். அவருக்கு இன்னும் 23 வயசுதான். ஷாருக் செய்ய வேண்டியது இதுதான். இப்போதாவது ஷாருக், நல்லதொரு தந்தையாகி, போதை மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தி, மகனை மீட்டெடுக்கலாம்.