அழகு சுந்தரனாக அருளும் வரதராஜ பெருமாள்!

அழகு சுந்தரனாக அருளும் வரதராஜ பெருமாள்!
Published on

ஆலயம் கண்டேன்

ஆர்.வி.பதி

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர்  தாலுகாவில் அமைந்த ஆலப்பாக்கம் என்ற சிறிய கிராமத்தில் அமைந்துள்ள அழகு சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழைமையான திருக்கோயிலாகும். இத்திருக் கோயில் மிகவும் சிறியது. ஆனால், சக்தி மிக்கத் தலமாக விளங்குகிறது. கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள கோயிலை அடைந்ததும் நுழைவாயிலில் இரண்டு யானைச் சிற்பங்கள் நம்மை வரவேற்கின்றன. கோயிலுக்குள் நுழைந்ததும் முன்மண்டபத்தில் விளக்குத்தூண் மற்றும் பலிபீடம் காட்சி தருகின்றன.  இத்தலத்தில் அமைந்துள்ள விளக்குத் தூண் இத்தலம் மிகப்பழைமையானது என்பதை நமக்குத் தெரிவிக்கிறது. பலிபீடத்தை ஒட்டி கருடாழ்வார் சன்னிதி அமைந்துள்ளது.

முன்மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என்ற அமைப்போடு திகழும் இத்தலத்தில் அர்த்த மண்டபத்தின் முன்னால் ஜயன், விஜயன் ஆகியோர் துவாரபாலர்களாக சுதைச்சிற்ப வடிவத்தில் காட்சி தருகின்றனர். அர்த்தமண்டபத்தில் விஷ்வக்சேனர், ராமானுஜர் முதலான வைணவ மகான்களின் சிலா ரூபங்களும் உத்ஸவ மூர்த்தங்களும் காட்சி தருகின்றன. ஆஞ்சனேயருக்கும் இத்தலத்தில் ஒரு சிறிய சன்னிதி காணப்படுகிறது.

கருவறையில் அழகு சுந்தர வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக நின்ற திருக்கோலத்தில் சதுர்புஜனாக காட்சி தருகிறார். உத்ஸவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகு சுந்தர வரதராஜ பெருமாள். கருவறைக்கு வலது புறத்தில் ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். உத்ஸவரின் திருநாமம் ஸ்ரீ ஆனந்தவல்லித் தாயார்.

இந்தத் திருக்கோயிலில் புரட்டாசி மாதத்தில் ஸ்வாமிக்கு லட்சார்ச்சனை, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாண உத்ஸவம், சித்ரா பௌர்ணமி ஸ்வாமி புறப்பாடு மற்றும் பெருமாளுக்குரிய உத்ஸவங்கள் அனைத்தும் நடத்தப்படுகின்றன.

அமைவிடம் : செங்கற்பட்டிலிருந்து சாலவாக்கம் மார்க்கத்தில் 12 கி.மீ. தொலைவில் ஆலப்பாக்கம் என்ற கிராமத்தில் இத்தலம் அமைந்துள்ளது. சென்னை மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கற்பட்டை தாண்டியதும் வரும் பாலாற்றுப் பாலத்தைக் கடந்து வலதுபுறம் செல்லும் சாலையில் சுமார் ஒன்பது கி.மீ. பயணித்து ஆலப்பாக்கத்தை அடையலாம்.

தரிசன நேரம் : காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com