0,00 INR

No products in the cart.

ஆவினுக்கு முன்னால் பாட்டிலில் பால்

அது ஒரு கனாக்காலம் – 3

மெரிக்கா போனபோது ஒரு முறை க்ரோகர்ஸ்டோரில் போய் பால் மற்றும் காய்கறி வாங்கினோம்.

அப்பா! நீங்க அதோ அந்த காபினெட்லேர்ந்து 2% பால் எடுத்துண்டு வந்துடுங்க. நானும் அம்மாவும் காய்கறி எடுக்கறோம்!”

பிள்ளை சொன்னதும் நான் போய் அந்த காபினெட் கதவைத்திறந்தால் ஏதோ வட துருவம் போல் சில்லிட்டது. 2% பால் தேடும்போதுதான் கவனித்தேன். ஓரத்தில் வரிசையாக சோயா பால் பாட்டிலில், ஆம் பாட்டிலில்தான் அடுக்கி வைத்திருக்க அவற்றின் மூடி……..

அந்நாளையக் கதைகளில் போல என் நினைவு கால வெள்ளத்தில் ஐம்பது வருடங்கள் பின்னோக்கிச் சுழன்றது.

அந்த வசீகர நியாயவிலைக் கடையைத்தாண்டி விச்ராந்தியாக கிண்டி ரோடில், அதான் இன்றைய சர்தார் பட்டேல் ரோடில், மேற்குப்பக்கம் நடந்தால், பத்மனாப சுவாமி கோவில் இருக்குமே, அந்த திசையில், சற்றுத் தொலைவில் ஒரு பங்க் கடைபோல இருக்கும்.

எதிர்ப்பக்கம் காந்தி நகர் முதல் மெயின் ரோடு ஓரத்தில் ஒரு லம்பாடிக் கூட்டம் குடியிருந்த காலம். சளசளவென எப்போதும் புரியாத பாஷையில் பேசிக்கொண்டிருப்பார்கள்.. தாடி வைத்த இடுங்கின கண்களுடைய கிழவரை நான் வருஷத்திற்கு ஓரிரு முறை தேடுவேன். அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி நாப்பது பைசா வாங்கி அவனிடம் உண்டி வில் வாங்குவதற்காக! இரண்டு மூன்று நாள் விளையாடிவிட்டு அதை பரணில் வீசிவிடுவேன். அடுத்த லீவுக்கு எடுத்தால் அதில் கட்டியிருக்கும் சைக்கிள் ட்யூப் ரப்பர் நொய்ந்து போய் திப்பிரி திப்பிரியாக வரும்.

மறுபடி அம்மாவிடம் நாப்பது பைசாவுக்கு கெஞ்சுவேன். கிட்டத்தட்ட ஆறேழு வருஷத்துக்கு கிழவர் பண வீக்கத்தால் பாதிக்கப்படாமல் அதே விலைக்கு விற்றார். விலை என்னவோ முப்பத்தைந்து பைசாதான். மீதி அஞ்சு காசுக்கு அதே தெருவில் சைக்கிள் டயர் வைத்த வண்டியில் விற்கும் இலந்தைப்பழம் வாங்கித்தின்றுக்கொண்டே நடந்து வீட்டுக்கு வருவேன். எப்பவாவது வயித்து வலி வந்தால், “கடங்காரா! ஸ்கூல்ல இலந்தைப்பழம் தின்னியா?” என்று கரெக்டாகக் கண்டுபிடித்து சவட்டுவாள்.

தெருமுனை பங்க் கடை பற்றி ஆரம்பித்தேனா?அதில் ஒரு சின்ன கதவு வைத்திருப்பார்கள். அதன் வழியாக சிப்பந்தி உள்ளே போய் ஒரு தகர அட்டையை எடுத்துவிட்டானானால், அதுதான் கவுண்ட்டர். அங்கேதான் பாட்டிலில் பால் விற்பார்கள். காலையும் மாலையும் மட்டுமே திறந்திருக்கும்.

புஷ்டியான பாட்டில்களில் வரிவரியாகக் கோடு போட்ட சில்வர் பேப்பர் மூடி வைத்து பால் தருவார்கள். நீலக்கோடு போட்ட மூடியென்றால் எருமைப்பால்சிகப்புக்கோடென்றால் பசும்பால். சைக்கிள் காரியரில் அகலமாக கம்பி கட்டி பாட்டில்களைச் சொருகுவதற்குத் தோதாக இருக்கும். அதில் பாட்டில்கள் நிரப்பி சில “அந்தஸ்தான” வீடுகளுக்கு மட்டும் டோர் டெலிவரியாகும். காலைநேரத்தில் ரோடின் மேடு பள்ள உபயத்தில் கேட்கும் அந்த அந்த சைக்கிள் பாட்டில்களின் ”க்ளிங் க்ளிங்” சத்தம் ரம்யமாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன்.

அம்மா பாட்டில் மூடியைத் திறந்தவுடன் அதன் பின்பக்கத்தை வாங்கி நாவினால் சுவைக்க ஒவ்வொரு வீட்டுக் குழந்தைகளும் போட்டி போட்டுக் காத்திருக்கும்!

எங்கள் தெருக்கோடியில் இருந்த விஜய வினாயக்” பங்களாவுக்கு மட்டும் தினமும் வந்து பால் பாட்டில் போடும் ஆள் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் எல்லா வீடுகளிலும் இனாம் வாங்க வருவதும், விஜய வினாயக் வீடு தவிர மற்றவர்கள் முகம் சுளிக்காமல் இனாம் தருவதும் எந்தவித சித்தாந்தம் என்றால், “மனிதன் என்பவன் முரண்பாடுகளும் நிரந்தர தடுமாற்றங்களு ம் உள்ள உயிரினம் என்று ஜல்லியடிப்பான், என் ஸைக்காலஜி டாக்டர் நண்பன் நடராஜன்.

சுற்றுவட்டார பால் வியாபாரிகளிடம் தினமும் கறந்த பால் வாங்கிக்கொண்டிருந்த எல்லாவீடுகளுக்கும் ஆவினாக மாறின பின் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் நுழைந்துவிட, மாடுகளைப் பராமரிக்க முடியாமல் நஷ்டப்பட்டு, ஒவ்வொன்றாக விற்றுவிட்டு குடும்ப சுமை தாங்காமல் பல வீடுகளுக்கு பால் ஊற்றிக்கொண்டிருந்த எங்கள் வீட்டுப்பால்கார கோவிந்தசாமி. ஒரு மழை நாளில் குடித்துவிட்டு ரோடில் விழுந்து மூச்சுத் திணறி செத்துப்போனதும், தமிழ்நாடு பால் வளம் ஆவினாக மாறிபாட்டில்களெல்லாம் வழக்கொழிந்து போய் பிளாஸ்டிக் சாகரத்தில் மூழ்கினதும் முன்னேற்றமா? இழப்பா? என்பதை என் போன்ற நோஸ்டாஜியா ஆசாமிகளிடம் கேட்டால் மிகப்பெரிய இழப்பு என்றுதான் தயங்காமல் சொல்லுவோம்.

முன்னேற்றம் என்பது ஒன்றைக்கொடுத்துவிட்டு இன்னொன்றைப் பிடுங்கிக்கொள்வது என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள்!

 

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

கடைசிப் பக்கம்

1
தமிழ்த்தாத்தாவின் கம்பராமாயணம் ! -சுஜாதா தேசிகன் கல்கியால் ‘ரசிகமணி’ என்று அழைக்கப்பட்ட டி.கே.சிதம்பரம் முதலியார் அவர்கள் கல்கியில் ‘கம்பர் தரும் ராமாயணம்’ என்ற தொடரை எழுதினார் (அந்தக் காலத்தில் இலக்கியம் என்ற ஒரு பகுதி கல்கியில்...

என்னை ஒரு பெண் கவிஞர் என அழைக்காதீர்கள் !

0
முகநூல் பக்கம் இந்த ஆண்டு கலைஞர் பொற்கிழி விருதுபெருபவர்களில் ஒருவர் கவிஞர் நிகத் சாஹிபா.  யார் இவர்? ”என்னை ஒரு பெண் கவிஞர் என்று அழைக்காதீர்கள்.என்னைப் பொதுவாக ஒரு கவிஞர் என்று அழையுங்கள்” – என்று...

நாளை வெகுதூரம் (சிறுகதைகள் தொகுப்பு)

0
நூல் அறிமுகம் சரவணன் சுப்ரமணியன் (வாசிப்போம் - தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழு) திருப்தியான மனநிலைக்கு எடுத்துச் செல்லும் தொகுப்பு 'எனது இன்மையின் மூலம் மட்டுமே நான் அங்கீகரிக்கப்பட விரும்புகிறேன்' என்ற தொமினிக் விதால்யோவின் கூற்றை வழிமொழியும்...

பத்திரிகை நிருபர் பணி என்பது வரம்

0
கா.சு. வேலாயுதன்  நிருபர் பணிக்கு வந்து 24 ஆண்டுகள் முடிந்து 25 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். 1997- செப்டம்பர் கடைசி வாரத்தில் எனக்கு கல்கி வார இதழ் தன் அலுவலகத்திற்கு வரவழைத்து,...

வாசகர் கேள்வியும் வல்லுநர் பதிலும்

0
விதியை மதியால் வெல்லலாம் என்கிறார்களே?  ஜோசியத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா?     -சரவணன்,வேலூர் ஜோதிடக்கலை வல்லுநர் திருமதி வேதா கோபாலன் அளிக்கும் பதில்  நம்முடைய விதி என்ன என்பதை  நிச்சயமாக அறிந்துகொள்ள முடியும் சரவணன்...