ஆனந்த பிரியா
தமிழக ஊடகங்களில் அண்மைக் காலத்தில் அதிகம் பேசப்பட்ட ஒரு விஷயம் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்தப் படம் பற்றி ஓர் அலசல். மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல் வன்’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியிருக்கிறது. ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் தமிழ் சினிமா வட்டாரத்திலும் பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது ‘பொன்னியின் செல்வன்’.
இந்தக் கதை இதற்கு முன்பு, நாடக வடிவம், அனிமேஷன் என பல வடிவங்களிலும் வந்திருந்தாலும் சினிமா வடிவில் இப்போதுதான் சாத்தியமாகி இருக்கிறது. எம்.ஜி.ஆர்., கமல்ஹாசன் எனப் பலரும் சினிமாவாக சாத்தியப்படுத்த நினைத்த ‘பொன்னியின் செல்வன்’ கதை, தமிழ் சினிமா வரலாற்றில் எதனால் தவறவிடப்பட்டது?
பொன்னியின் செல்வன்
சோழ தேசத்தில் விரிவடையும் ‘பொன்னி யின் செல்வன்’கதையில் வரும் வந்தியத்தேவன், அருள்மொழி வர்மன், பழுவேட்டரையர், நந்தினி, குந்தவை என ஒவ்வொரு கதாபாத்திர மும் அந்த நாவலைப் படித்த ஒவ்வொருவருக்கும் பரிச்சயம். 1950ல் ஆரம்பித்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ‘கல்கி’வார இதழில் தொடராக எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தி எழுதி இருந்தார். பின்பு 2000க்கும் அதிகப் பக்கங்களைக் கொண்டு ஐந்து பாகங்கள் கொண்ட நாவலாக வெளியாகி இன்றுவரை விற்பனையில் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
எம்.ஜி.ஆரின் ‘பொன்னியின் செல்வன்’
கடந்த 1958-ஆம் வருடத்தில் ‘பொன்னியின் செல்வன்’கதையைத் திரைப்படம் ஆக்குவதற்கான உரிமத்தைப் பெற்றார் எம்.ஜி.ஆர். பின்பு, அதனைத் தானே தயாரித்து, இயக்குவது என முடிவெடுத்தார். பத்மினி, சாவித்ரி, ஜெமினி கணேசன், நம்பியார் உள்ளிட்ட பலரையும் தேர்வு செய்து படத்திற்கான அறிவிப்பும் அப்போது வந்தது. இதில் வந்தியத்தேவன் மற்றும் அருண்மொழி வர்மன் கதாபாத்திரங்கள் இரண் டுமே எம்.ஜி.ஆரே நடிக்க முடிவு செய்திருந்தார். ஆனால், அதற்குப்பிறகு ஏற்பட்ட விபத்து ஒன்றில் இருந்து குணமாக எம்.ஜி.ஆருக்குப் பல மாதங்கள் ஆனது. இதனால், அந்தச் சமயத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த பல படங்களை முடித்துக் கொடுக்க வேண்டிய சூழலில் இருந்ததால், இயக்குநராக ‘பொன்னியின் செல்வன்’ படத்தை எம்.ஜி.ஆரால் சாத்தியப்படுத்த முடியாமல் போனதற்கு முக்கிய காரணம். அதன் பிறகு 1990களில் கமல்ஹாசன் ‘பொன்னியின் செல்வன்’னைப் படமாக்க நினைத்தாலும் ‘மருதநாயகம்’ போலவே அதுவும் கனவாகப் போனது.
நாடக வடிவில் ‘பொன்னியின் செல்வன்’
‘திரைப்படமாகச் சாத்தியப்படுத்த முடியாவிட்டாலும் நாடக வடிவில் சென்னை YMCA மைதானத்தில் அரங்கேறியது ‘பொன்னியின் செல்வன்’.1999-ல் வந்த இந்த நாடகத்தில் நடிகர் நாசர், பசுபதி உள்ளிட்ட பலரும் நடித் திருந்தனர். அதன் பிறகு, தற்போது ‘பொன்னி யின் செல்வன்’ வெப்சீரிஸாகத் தயாராகிறது. இதனை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்க இருப்பதாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்தார். தற்போது நாடகம், தொலைக்காட்சித் தொடர், வெப்சீரிஸ் என்பதை எல்லாம் தாண்டி, அனிமேஷன் தொடராகவும், பாட்காஸ்ட், யூடியுப் வீடியோக்களில் தொடர் என இப்போதுள்ள தலைமுறை வரை ‘பொன்னியின் செல்வன்’ வெவ்வேறு வடிவங்களில் பயணப் பட்டுக் கொண்டேதான் இருக்கிறது.
மணிரத்னம் வசமான ‘பொன்னியின் செல்வன்’
இப்படி எம்.ஜி.ஆரில் இருந்து கமல்ஹாசன் வரை பலரும் சினிமா வாக்க முயன்ற ‘பொன்னியின் செல்வன்’ கதையை மணிரத்னம் கையில் எடுத்திருப்பதாக 2010-ல் தகவல் வெளியானது. இதில் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, நடிகர் விஜய், அனுஷ்கா உள்ளிட் டோர் நடிக்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. ஆனால், அப்போது தயாரிப்புச் செலவு உள்ளிட்ட சில காரணங்களால் அதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில்தான் கடந்த 2019ல் இயக்குநர் மணிரத்னம் லைகா புரொடக்ஷனுடன் இணைந்து தனது மெட்ராஸ் டாக்கீஸ் படத்தைத் தயாரிக்க இருப்பதாக அறிவித்தார்.
இதில் கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், த்ரிஷா, ஐஷ்வர்யாராய் பச்சன், ‘ஜெயம்’ரவி, ஜெயராம், சரத்குமார், ஐஷ்வர்யா லஷ்மி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். வந்தியத்தேவனாக கார்த்தியும், ஆதித்தக் கரிகாலனாக விக்ரமும், அருள்மொழி வர்ம னாக ‘ஜெயம்’ ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஷ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா, பூங்குழலியாக ஐஸ்வர்ய லஷ்மி நடிக்கின்றனர். படத்தின் திரைக்கதையை இயக்குநர் மணிரத்னம், எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேலுடன் இணைந்து எழுதியிருக்கிறார். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு ரவிவர்மன், கலை இயக்கம் தோட்டாதரணி.
2019-ன் இறுதியில் இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது. இந்தியா முழுவதும் வெளியாகும் வகையில் திரைப்படமாக உருவாகும் இது தாய்லாந்து, ஹைதராபாத், சென்னை என பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள். தாய்லாந்தின் காட்டுப்பகுதிகளில் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில்தான் 2020-ல் கொரோனா முதல் அலை தலைதூக்கத் தொடங்கியது. அனைத்துத் துறைகளும் முடங்க, இதற்கு சினிமாத் துறையும் விதிவிலக்கில்லாமல் சிக்கிக்கொண்டது. வரலாற்றுப் புதினத்தைப் படமாக்க வேண்டும், அதுவும் 2000 பக்கங்களுக்கு மேல் கொண்ட நாவலைத் திரைவடிவமாக்குவது எளிதானதல்ல.
நடிகர்கள், துணை நடிகர்கள், தொழில்நுட்பக் குழு எனப் பலரது உழைப்பு இங்கே நடக்க வேண்டும். ஆனால், கொரோனா அச்சத்தில் இவை அனைத்தும் தடைப்பட்டது. இதற்குள் நடிகர்கள், தொழில்நுட்பக் கலை ஞர்களது தேதி, படத்திற்காக அவர்களது உருவமாற்றம் உள்ளிட்ட அனைத்தும் குழம்பி நின்றது. ‘எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே ‘பொன்னியின் செல்வன்’ திரையுலகினருக்குச் சாத்தியப்படாமலே இருக்கிறதே’ என ரசிகர்கள் மத்தியில் பேச்சு எழுந்தபோதுதான் கொரோனாவின் தீவிரம் குறைந்த பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பு
தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் சற்றே குறைந்திருப்பதால் கட்டுப்பாடுகளோடு படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில்தான் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்தது. இதற்கிடையில் சிறிது நாட்களுக்கு முன்பு படத்தின் முதல் பார்வையைப் படக்குழு வெளியிட்டது. அதில் படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் என்பதைத் தெரிவித்து, அதில் முதல் பாகம் அடுத்த வருடம் வெளியாகும் என்பதும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது படத்தின் அடுத்த கட்டப்படப் பிடிப்பு புதுவையில் நடந்து வருகிறது. இதற்காக நடிகை ஐஷ்வர்யாராய் பச்சனும் இணைந்திருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலானது.
நன்றி: பி.பி.சி தமிழ்
This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.