online@kalkiweekly.com

இமயம் தொடும் ஷெர்ப்பாணிகள்!

நல்லரெத்தினம், ஆஸ்திரேலியா

சென்ட்ரல் ரயில் ஸ்டேஷனில் மூட்டை முடிச்சுகளுடன் வந்து இறங்குகிறீர்கள். ரயில் புறப்பட பத்து நிமிடங்களே உள்ளன. ஊறுகாய் பாட்டிலை எந்த சூட்கேசுக்குள் வைத்தேன் எனும் உங்கள் கேள்விக்கு விடைதேடும் முன்பே உங்களைச் சுற்றி ஒரு கூட்டம் சேருகிறது.

“சார், எந்த பிளாட்டாரம்னு சொல்லுங்க சார்… நா ஒத்தயா இம்புட்டு லகேஜையும் தூக்கிக்கினு வாறேனுங்க… பத்து ரூபா கூலி போதுமுங்க…” இந்த நடமாடும் சுமைதாங்கிகள் மட்டும் இல்லாவிட்டால் எமது பல பயணங்கள் பாய் போட்டுப் படுத்துவிடும்.

இவர்கள் பயணங்கள் ரயில் பெட்டி வாசல் வரையே. ஆனால் உங்கள் முழுப் பயணத்திலும் உங்கள் கூடவே ஒரு நண்பனாய் பயணித்து உங்கள் பளுவைச் சுமந்து உங்கள் சாதனைகளில் பங்கு கேட்காத ஜீவன்களும் உண்டு. அவர்கள்தான் நேபாளத்தின் ஷெர்ப்பாக்கள். இமயமலைப் பகுதியில் வாழும் இக்குடியினர் கிழக்கு திபேத்தில் இருந்து நேபாளத்திற்குக் குடியேறியவர்கள் என்பது பூர்வீகம். 1953ல் இமயத்தின் சிகரத்தில் முதலில் கொடி நாட்டிய எட்மண்ட ஹில்லரி யுடன் இணைந்து மலையேறிய டென்சிங் நோர்கே என்ற ஷெர்ப் பாவை மறந்திருக்கமாட்டீர்கள்.

ஷெர்ப்பாக்கள் வெறும் தூக்குத்தூக்கிகளோ போட்டர்களோ அல்ல. தாம் ஏறும் இமயத்தை ஒரு அன்னை பூமியாகப் போற்றி அவள் அருள் வேண்டி நிற்கும் தன்னலமற்ற ஜீவிகள். தம் வயிற்றுப் பிழைப்பிற்காய் வெளிநாட்டாரின் சாகச சாதனைகளுக்குத் தோள் கொடுக்கும் ஏணிப்படிகள். சரிவில் ஏறும் சாதனையாளர்களுக்குச் சுவாசக்காற்றைக் குப்பியில் அடைத்து பரிமாறும் தியாகிகள்.

பல மலையேறிகள் இமயத்தின் உச்சியை அடைந்ததும் தம் நாட்டின் தேசியக் கொடியுடன் பெருமையாக `போஸ்` கொடுக்கும்போது ஷெர்ப்பாக்கள் ஒரு ஆசிரியரின் அடக்கத்துடன் இந்த வெற்றியைத் தமக்குள் கொண்டாடி மெளனிப்பார்கள்! இந்த முகமிழந்த மனிதர்களின் தன்னலமற்ற சேவையே இமயத்தின் படிக்கற்கள்!

உடல் அமைப்பில் சாமானியனாய் தோன்றும் இவர்களுக்கு மலையேறும் வேட்கை எங்கிருந்துதான் வந்ததாம்?

ஷெர்ப்பாக்களுக்கு அவர்களின் உடல் கட்டமைப்பு இயற்கை யாகவே ஆக்ஸிஜன் கம்மியான சூழலில் வாழ திரிபடைந்துள்ளது. ஒரு சாதாரண மனிதனின் இரத்தத்தில் உள்ள செங்குருதி அணுக்களின் எண்ணிக்கையையும் விட ஷெர்ப்பாக்களின் குருதியில் இவை குறைவாகவே காணப்படும். இந்த அணுக்களே உங்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனைக் கொண்டு சுமக்கும் காவிகள்.

புரிகிறது… ஆனால் ஷெர்ப்பாக்கள் குறைந்த செவ்வணுக்களுடன் எப்படி ஆக்ஸிஜன் செறிவு குறைந்த இமய உச்சிக்குச் சுமைகளையும் சுமந்துகொண்டு பயணிக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா? இதற்கான பதிலை லண்டன் கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகம் 2017 ஆய்வு இப்படி பட்டியல் போடுகிறது :

“இவர்களின் உடல் சவாலான நேரங்களில் இரத்த நாளங்களை விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாறு கட்டமைக்கப் பட்டிருக்கிறது.ஆக்ஸிஜனை சிக்கனமாகவும் திறமையாகவும் செயல்பட வைக்கும் கட்டமைப்பைக் கொண்டது இவர்களின் DNA. உடல் கொழுப்பை திறனுடன் எரித்து சக்தியாக்கும் உடலின் திறன். உடலில் தேங்கியுள்ள சக்தியைக் கசிவின்றி பாவிக்கும் சிக்கனம் எனப் பட்டியல் நீழ்கிறது. எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று கூறி என் உயிரியல் பாடத்தை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். விஞ்ஞானம் விண்ணைத்தொடும் அளவிற்கு வளர்ந்துள்ள இந்நாட்களில் ஷெர்ப்பாக்களின் பங்களிப்பு தேவைதானா என நீங்கள் கேட்கலாம். ஹெலிக்காப்டர்கள் பறப்பதற்குக் காற்றின் அடர்த்தி தேவை. 6,400 மீட்டர் உயரத்திற்கு மேல் காற்றின் செறிவு வீழ்ச்சி யடைவதால் ஹெலியினால் வெற்றிகரமாக பறக்கமுடியாது. கடல் மட்டத்திலிருந்து 8,849 மீட்டர் உயரமுள்ள இமயத்தின் உச்சிக்கு ஏறுவதாயின் கால்நடையே ஒரே வழி.

சரி, இமயத்தில் ஏற இப்போது நீங்கள் தயார் தானே?

அதற்கு முன் ஒரு துணுக்குச் செய்தி: 1841ஆம் ஆண்டு சார்.ஜார்ஜ் எவரெஸ்ட் என்பவரே இந்தியாவின் தலைமை நில ஆய்வாளராக இருந்தார். இவர்தான் இமயமலையின் உயரத்தைத் துல்லியமாக அளவிடுவதற்கான முன்னெடுப்புகளுக்கு வித்திட்டவர். எனவேதான் இமயமலைக்கு இவர் ஞாபகார்த்தமாக Mount Everest எனப் பெயர் சூட்டினார்கள்.

இமயமலை நேபாள – திபெத்து எல்லையில் குந்திக்கொண்டிருக் கும் பனி மூடிய மலை. எனவே இம்மலையை நேபாள அல்லது திபெத்து நாடுகளின் பக்கமாக இருந்து ஏறமுடியும். ஆனால் திபெத்து பகுதியில் சீனாவின் கெடுபிடிகளுக்கும் மேலாக மலைச்சிகரத்தை அங்கிருந்து அடைய பல செங்குத்தான குன்றுகளையும் பனி மூடாத கற்பாறைகளையும் கடக்க வேண்டுமானதால் மலையேறிகள் இப்பாதையை அதிகம் விரும்புவதில்லை. மலையேறுவதற்கான பர்மிட் நேபாளத்தைவிடதிபெத்தில் மலிவானாலும் சீன அரசிடமிருந்து இதைப் பெறுவது கடினமே. இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் நேபாளத்தின் ஷெர்ப்பாக்களின் உயர்ந்த சேவை அங்கில்லை!

நேபாளம் வருடத்தில் மூன்று மாதங்களுக்கே (மார்ச் முதல் மே வரை) இமயத்தின் சிகரத்தில் ஏற அனுமதியளிக்கும். மற்ற வெப்பமான மாதங்களில் பனி உருகுவதால் மலையேறிகளுக்குப் பனிச் சரிவில் புதையும் ஆபத்து. அதிவேகப் பனிப்புயல் மற்றொரு எதிரி. எனவே வழமையாக மே மாத முடிவுடன் மலையேறும் சீசன் முடிவுக்கு வரும். நேபாள சுற்றுலாத்துறை அமைச்சே சீசன் தொடக்க – முடிவு நாட்களைத் தீர்மானிக்கும். மலையேறும் அனுமதிச் சீட்டின் விலை $11,000. ஒவ்வொருவரும் ஒரு ஷெர்ப்பாவையாவது தம்முடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது புதிய விதி. மேலும் மலையேறு வதில் ஏற்படும் அனர்த்தங்களுக்கு (மரணம் உட்பட) அரசு பொறுப்பல்ல என்று வேறு கையெழுத்திடவேண்டும். மலையேறும் முயற்சியின் போது நீங்கள் மரணித்தால் உங்கள் உடலை மீட்டெடுப்பது அரசின் பொறுப்பல்ல என்பதும் விதி.

அனுமதிச் சீட்டுக்கு மேலாக உயிர் / விபத்து காப்புறுதி, ஆக்சிஜன் குப்பிக்கான செலவும் வைப்புப் பணமும், கழிவுகளை அகற்றுவதற்கான கட்டுப்பணம், தொலைபேசி வசதிக்கான செலவு, camp உணவுக்கான செலவீனம் எனச் செலவுகளைப் பட்டியல் போடலாம்.

அனேகமான மேல்நாட்டினர் $100,000 வரை செலுத்தி தேர்ச்சியுள்ள மலையேறும் கம்பெனிகளால் ஒழுங்கு செய்யப்படும் `சுற்றுலா குழுக்களுடன்` இணைந்து தம் கனவுகளை நனவாக்குவதே பிரபலம். இக்கம்பெனிகள் இரண்டு அல்லது மூன்று மடங்கு சிறந்த ஷெர்ப்பாக் களை வேலைக்கு அமர்த்துவதால் இந்த இரண்டு மாதப் பயணம் பலருக்குச் சுகப் பயணமாகிவிடுகிறது.

என்ன….. `இரண்டு மாதம்` என்றதும் அச்சுப்பிழை என நினைத் தீர்களோ?

புரியும்படி சொல்கிறேன். 8,848.86 மீட்டர் உயரமான இமய மலையை மலையின் தெற்குப் பகுதி ஊடாக ஏறுவதே பிரபலம் எனி னும்தொடக்கப்புள்ளி என்னவோ நேபாளத்தின் தலைநகரான கட்மண்டுவில் இருந்துதான். கட்மண்டுவில் இருந்து உங்கள் மூட்டை முடிச்சுக்களுடன் ஒரு சிறிய விமானத்தில் பறந்து லுக்லா விமான தளத்தில் இறங்குகிறீர்கள். உலகிலேயே மிகக் குறைந்த நீளமுள்ள ஓடுபாதை உள்ள மலை சூழ்ந்த ஆபத்தான விமான நிலையம் இது! தரையிறங்கும்போது பைலட்டுகளுக்கே வயிற்றில் புளியைக் கரைக்கும். சரி, முதல் கண்டத்தில் இருந்து தப்பினீர்கள்!

இங்கிருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ள ‘எவரெஸ்ட் பேஸ் காம்ப்` – Everest Base Campஐ அடைய எட்டு நாள் நடை பயணம். கடல் மட்டத்தில் இருந்து 2,860 மீட்டர் உயரத்தில் இருக்கும் லுக்லாவில் இருந்து இந்த `பேஸ் காம்ப்` 5,380 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஏற்றத்தில் ஏறவே எட்டு நாட்கள் பயணம். மூச்சுத்திணறலும், உயர் ஏற்றத்தாழ்வு அமுக்கமும், தலையிடியும் உங்கள் தோளில் வந்து குந்திக்கொள்ளும். ஆனால் உங்கள் கண் முன்னே விரியும் ரம்மியமான காட்சிகளில் உங்கள் உடல் வாதைகள் கரைந்துபோகும். இமயத்தில் ஏறாமல் இந்த மலையேற்றத்தில் (Trekking) மட்டுமே பங்கு பற்றி வீடு திரும்பும் சுற்றுலாப் பயணிகள் அனேகம். வருடத்திற்கு 30,000 பேர் வரை இப்பயணத்தில் இணைந்து கொள்கின்றனர். செப்டம்பர் மாதமே இதன் உச்ச சீசன். இதற்கு விலை உயர்ந்த பர்மிட் கட்டணங்கள் இல்லை. மேலும் ஷெர்ப்பாக்கள் அல்லாத சாதாரண நேபாள போட்டர் களின் சேவையே இதற்குப் போதும். Yak என்றழைக்கப்படும் மலை மாடுகளும் உங்கள் சுமைகளை சுமக்கலாம். இவை ஆடி அசைந்து மலையேறுவதால் உங்கள் பொதியில் ஒளிந்திருக்கும் ஊறுகாய் பாட்டிலின் மூடியை இறுக்கமாய் மூடினீர்களா என உறுதி செய்து கொள்ளுங்கள்!

சரி, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகவும் நடந்து campக்கு வந்து சேர்ந்துவிட்டீர்கள். இனிமேல்தான் அசல் இமய ஏற்றமே ஆரம்பம்! இமயமலையேறிகள் இந்த Base Campல் இரு வாரங்கள் தங்கி தம் உடலை இந்தச் சூழ்நிலைக்குப் பழக்கப்படுத்திக் கொள்வது மிக அவசியம்.

அந்த இரு வாரத்திற்கும் ஹாய்யாக கால் மீது கால் போட்டுக் கொண்டு `பொன்னியின் செல்வன்` முழுவதையும் படிக்கும் எண்ணத் தில் நீங்கள் வந்திருந்தால் உங்கள் எண்ணத்தில் மண், சாரி பனி, அள்ளிப்போட்டு விடுவார்கள். உங்கள் உடலைத் தயார்ப்படுத்த அதி காலையிலே எழுந்து மலையேறியாக வேண்டும். அசாத்திய கால நிலை, உங்கள் உடல்நிலை போன்ற காரணங்களால் இந்த இரு வாரங் கள் மூன்று அல்லது நான்கு வாரங்களாக நீளவும் வாய்ப்புண்டு. எனவே வீட்டில் சொல்லிக்கொண்டு வருவது நல்லது!

உங்கள் சாதனை முயற்சியின் அடுத்த கட்டம்தான் Camp 1ஐ அடைவது. Khumbu Ice fall எனும் மிகவும் ஆபத்தான பனிப்பாறைகள் நகரும் பள்ளத்தாக்கை தாண்டி 5,545 மீட்டர் உயரத்தில் இருக்கிறது Camp1. இதன் மேல் படிந்துள்ள பெரிய பனிப்பாறைகள் தினமும் சூரிய வெப்பத்தில் உருகி உருமாறி மெதுவாய் நகரத் தொடங்கும். நேற்று இருந்த பனிப்பாறைகளின் உருவம் இன்றிருக்காது. மலையேறிகளுக்கு இதைவிட சிறந்த பயிற்சி முகாம் வந்து வாய்க்குமா என்ன?

சரி, இரு பனிப்பாறைகளின் இடையே உருவாகும் பெரிய இடை வெளியைக் கடக்க பாலம் போடுவது யாராம்? இங்குதான் ஷெர்ப்பாக் களின் அபார திறமை கைகொடுக்கிறது! நீங்கள் இரவில் நிம்மதியாக Base Campல் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது ஷெர்ப்பாக்கள் அலுமினிய ஏணிகளையும் மற்றும் மலையேறும் உபகரணங்களையும் சுமந்துகொண்டு மாலை யில் ஆரம்பித்து இருளில் மலையேறி உங்களுக்கான சிறந்த ஒரு பாதையை அமைத்துக் கொண்டிருப்பார்கள்.

இது மிக ஆபத்தான செயல். இச்சமயங்களில்தான் பனிச்சரிவுகள் ஏற்பட்டு பல ஷெர்ப்பாக்கள் மரணிப்பதுண்டு. 2014ம் ஆண்டு ஏப்ரல் 18 காலை 6.30 மணியளவில் ஏற்பட்ட பெரிய பனிச்சரிவில் 16 ஷெர்ப்பாக் கள் அகால மரணமடைந்தனர். 12 மாடிக் கட்டட உயரமுள்ள பனிப் பாறைகள் இவர்கள் மேல் இறங்கி மூடியது. இவர்களின் இழப்பினால் அந்த ஆண்டு நேபாள அரசு மலையேறும் சீசனையே ரத்து செய்தது.

1923 முதல் இன்று வரை சிகரத்தைத் தொடும் வேட்கையில் மொத்தம் 306 பேர் (நேபாளம் + திபெத் ஷெர்ப்பாக்கள்) மரணத்தைத் தழுவியுள்ளனர். இவர்களில் 185 வெளிநாட்டவர்களும் 121 ஷெர்ப்பாக் களும் அடங்குவர். இவர்களில் 13 பேர் பெண்கள். அனேகமானோர் பனிச்சரிவினாலும் அடுத்து உயரத்தில் இருந்து தவறி வீழ்ந்தும் மற்றும் தாழ்அமுக்க நோய் ஆகியவற்றாலும் மரணிக்கின்றனர். இறந்த மலையேறிகளின் உடல்களைக் கீழே கொண்டு வருவதில் பல சிக்கல்களும் ஆபத்தும் உள்ளதால் அவர்கள் உயிருக்கும் மேலாக நேசித்த இமயமே அவர்களின் துயிலுமிடமாகிறது. அப்படி இவர்கள் உடல்களைக் கொண்டுவரத்தான் வேண்டும் எனில் $70,000 வரை செலவாகலாம்.

`உடலை தயார்படுத்த` என்று முன்னர் சொன்னேனே…. அதன் விளக்கம் இது : நீங்கள் Base Campக்கும் Camp1க்கும் இடையே இரண்டு அல்லது மூன்று முறையாவது ஏறி இறங்க வேண்டும்! இதுவே மரபு. காரணம் இவ்வாறு நீங்கள் மூச்சு வாங்க மலையேறும்போது உங்கள் குருதியில் ஆக்சிஜனை காவிச்செல்லும் செங்குருதி அணுக்களின் எண்ணிக்கை இயற்கையாகவே அதிகரிக்கத் தொடங்கும். இது உங்கள் தசைகளுக்கு ஆக்சிஜன் சப்ளையை அதிகரிக்க அவை தளர்வடையா மல் `சூப்பர் மேன்` சக்தியுடன் இயங்கத் தொடங்கும். (பெண்மணிகள் `வண்டர் வுமன்` என மாற்றி வாசிக்கவும்).

இமயத்தின் உச்சியை நெருங்க (8,000 மீட்டருக்கு மேல்) ஆக்சிஜன் குப்பிகளின் பாவனை ஏன் அவசியம் என உங்களுக்கு இப்போது புரிந்திருக்குமே? ஆக்சிஜன் குப்பிகள் இல்லாமலேயே மலையேறும் ஷெர்ப்பாக்கள்தான் உண்மையான சூப்பர் மேன்கள் என்பதையும் இங்கு சொல்லித்தான் ஆக வேண்டும்!

ஷெர்ப்பாக்கள் இமயத்தைத் தாயாக நினைத்து Base Campல் இருந்து மலையேறத் தொடங்கும்முன் பூமித்தாய்க்கு விசேட பூஜைகள் செய்தே தம் பயணத்தை ஆரம்பிப்பார்கள். இவர்கள் திபெத்து நிங்மபா பெளத்த மதத்தைச் சேர்ந்தவர்கள். பூஜை நாட்களில் பல வர்ண கொடி நாடாக்களால் காம்ப் அலங்கரிக்கப்பட்டிருக்கும். பெளத்த துறவிகள் பூஜையின் பின் அனைத்து மலையேறிகளையும் அவர்கள் கொண்டு செல்லும் உபகரணங்களையும் ஆசிர்வதிப்பது மரபு.

இரண்டு அல்லது மூன்று வாரங்கள் Base Campல் இருந்து புத்துணர்ச்சியுடன் இனி கிடு கிடு என Camp 1, Camp 2 (6,400 மீ.), Camp 3 (7,163 மீ.), Camp 4 (8,016 மீ.) என ஏறி கடல் மட்டத்தில் இருந்து 8,849 மீட்டர் உயரத்தில் உள்ள சிகரத்தில் கொடி நாட்டி ஒரு செல்பியையும் எடுத்து முகநூலில் பதிய வேண்டியதுதான் பாக்கி!

Camp 2ல் இருந்து சிகரத்தை அடைய நான்கு நாட்கள் வரை எடுக்கலாம். ஆனால் பனிப்புயலும் அசாத்திய காலநிலை மாற்றங் களும் உங்கள் பயணத்தை நீடிக்கலாம். Camp 4ல் இருந்து சிகரத்தை அடையும் ஏற்றமே மிக மிக ஆபத்தானது. இதுவரை 107 பேர்வரை இங்கு மரணித்துள்ளனர். இதனால்தான் என்னவோ இப்பிரதேசத்திற்கு `ஆபத்து வலயம்` (Danger Zone) என்று பெயர் சூட்டியுள்ளனார். சில மலையேறிகளின் வாழ்வு இங்கு விளக்கின் ஒளி தேடி விரையும் விட்டில்பூச்சிகளின் வாழ்வாய் முடிவது ஒரு சோகமே!

7,000 மீ. உயரத்திற்கு மேல் ஆக்சிஜன் குப்பிகளை நீங்கள் திறந்தே ஆகவேண்டும். ஆனால் நீங்கள் `மடக், மடக்` என எல்லா ஆக்சிஜினை யும் `குடித்துவிடக்` கூடாது என்பதில் ஷெர்ப்பாக்கள் கண்ணாய் இருப்பார்கள். எல்லா ஆக்சிஜனும் தீர்ந்துவிட்டால் பரலோகம் சென்று தான் இரவல் வாங்க வேண்டும்! மேலும் சிகரத்தில் இருந்து கீழ் இறங்குவதற்கும் ஸ்டாக் தேவையல்லவா?

சிகரத்தில் ஏறிய உங்கள் சாதனையை அங்கீகரிக்கும் சான்றிதழ் ஒன்றை நேபாளச் சுற்றுலாத்துறை உங்களுக்கு வழங்கும். நீங்கள் சிகரத்தில் எடுத்த `செல்பியும்` உங்கள் குழு தலைவர் அளிக்கும் சாட்சியுமே இதைப் பெறுவதற்கான ஆதாரங்கள். போலி ஆதாரங்களைக் கொடுத்து மாட்டிக்கொண்டவர்கள் இமயத்தில் ஏறத் தடை செய்யப்பட்ட சரித்திரமும் உண்டு.

இனியென்ன, நீங்கள் சான்றிதழைப் பெருமையுடன் உங்கள் ஹாலில் மாட்டிவைத்து வருவோர் போவோரிடம் “நான் camp 3ல் இருந்தபோது ஒரு கரடி வந்தது” என கதையளக்க வேண்டியதுதான்!

இமயத்தில் ஏறும் அனுபவம் என்றும் இனிமையானது. அந்த நினைவுகள் உங்கள் கடைசி மூச்சு உள்ள வரை ஒரு பொக்கிஷமாய் உங்கள் மனப்பேழையில் துயிலும். இந்த அனுபவத்தை நீங்கள் முழுமையாக ருசிக்கத் தன்னாலான எல்லா முயற்சிகளையும் நேபாள மற்றும் திபெத் சுற்றுலாத் துறைகள் செய்கின்றன. இது மலையேறி களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் இருந்து இமயத்தைப் பாதுகாப்பான மாசற்ற சூழலாகப் பராமரிப்பது வரை நீள்கிறது. உதாரணமாக, 2019ல் நேபாளம் 772 (382 வெளிநாட்டவர் 390 ஷெர்ப்பார்கள்) மலையேறும் பர்மிட்களையும் திபெத் 364 பர்மிட்களை யும் வழங்கின. இந்த எண்ணிக்கை ஏனைய வருடங்களைவிட அதிகமானதால் சிகரத்தை அடைய மலையேறிகள் ஒரு கியூவில் நின்று நத்தை வேகத்தில் நகரவேண்டியதாயிற்று. இதில் ஆபத்து என்னவெனில் மலையேறிகள் சுவாசித்த ஒவ்வொரு மூச்சும் அவர் களின் ஆக்சிஜன் குப்பியில் இருந்தே வந்தது! ஆபத்து என்னவென்று புரிந்திருக்குமே?

தேர்ச்சிப் பெற்ற மலையேறிகள் மட்டுமே இமயத்தில் ஏறும் காலம் மலையேறிவிட்டது. பல கற்றுக்குட்டிகள் இமயத்தில் ஏறத் தொடங்கியுள்ள காலங்கள் இவை. இதனால் இவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சுமை நேபாளத்தினதும் திபெத்தினதும் தோள்கள் மீது. இதன் முன்னெடுப்பாக 6,500 மீட்டர் உயரமுள்ள மலைகளில் ஏறிய அனுபவம் உள்ள மலையேறிகள் மட்டுமே சிகரத்தில் ஏற முடி யும் எனும் கட்டுப்பாட்டை நேபாளம் அறிவித்துள்ளது. திபெத் இதை 8,000 மீட்டர் உயரம் என்று அறிவித்துள்ளதால் அனேக சீனர்கள் நேபாளத்தையே மலையேறத் தெரிவு செய்கின்றனர்.

மேலும் நேபாளத்தில் ஒவ்வொரு மலையேறியும் ஒரு ஷெர்ப்பாவையாவது தம்முடன் அழைத்துச்செல்ல வேண்டும் எனும் புதிய விதி வேறு. மலையேறிகள் Base Campல் கட்டாய சுகாதாரப் பரிசோதனையில் சித்தியடைய வேண்டும் எனும் விதியையும் அறிமுகப்படுத்தவுள்ளது.

இக்காலங்களில் ஷெர்ப்பாக்களின் வாழ்க்கைத்தரமும் சமுதாயக் கட்டமைப்பும் வேகமாக மாறிக்கொண்டு வருகின்றன. மேல்நாட்டவரின் கைவசம் இருந்த பயணக் கம்பெனிகளின் ஆதிக்கம் குறைந்து நேபாளி களும் போட்டியாக இவ்வகை சேவைகளை வழங்கி வருகிறார்கள். ஷெர்ப்பாக்கள் தம் குழந்தைகளை உயர் கல்விக்காக கட்மண்டு போன்ற நகரங்களுக்கு அனுப்பி கல்வியின் மகத்துவத்தை அறியத் தொடங்கி உள்ளனர். எத்தனை காலம் மற்றவர் சுமைகளைச் சுமப்பது என்ற விழிப்புணர்வு ஒரு நல்ல ஆரம்பமே. அமெரிக்கா, ஆஸ்ரேலியா, ஐரோப்பா நோக்கிப் புலம்பெயரும் நேபாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.

ஒரு மலையேறும் சீசனுக்கு $5,000 முதல் $8,000 வரை உழைத்த ஷெர்ப்பாக்கள் இப்போது மற்ற நேபாள இனத்தவரை வேலைக்கமர்த்தி வெற்றிகரமான சிறு தொழிலதிபர்களாக மாறிவருகிறார்கள். கொரோனாவின் தாக்கம் நேபாளத்தையும் விட்டுவைக்கவில்லை. இன்றுவரை 767, 271 கொரோனா நோயாளிகளில் 10,809 பேர் மரணித் துள்ளனர். 2020 மலையேறும் சீசன் இரு நாடுகளாலும் முழுவதுமாய் ரத்து செய்யப்பட்டது. 2021 சீசனுக்காய் இமயம் திறக்கப்பட்டாலும் பல பயணிகள் கொரோனா தொற்றுக்குள்ளானார்கள்.

வெளிநாட்டவர்களின் வருகை வீழ்ச்சியடைந்துள்ள இந்நாட்களில் பல ஷெர்ப்பாக்கள் சிகரத்தைத் தனியே ஏறி தம் தற்குறிப்பை (Resume) பலப்படுத்துவதில் முனைப்பாய் உள்ளனர். எத்தனை தடவை சிகரத் தைத் தொட்டேன் என்பது ஒரு விமானியின் பறக்கும் நேரம் (Flying hours) போல் எனலாம். இருபது தடவைக்கு மேல் சிகரம் தொட்டால் ஒரு மாஸ்டர்தான்!

ஷெர்ப்பாக்கள் மலையேறி சாதனை படைக்கும் வேளையில் ஷெர்ப் பானிகள் தன் கணவன் உயிருடன் வரவேண்டும் என்ற ஒரே பிரார்த் தனையுடன் நாட்களை நகர்த்துகின்றனர்.தம் கணவர் மாற்றார் சுமைகளைச் சுமந்து மலையேறும்போது முழு குடும்பச் சுமையையும் தாங்கித் தவிப்பது ஷெர்ப்பானிகளே. வாழ்வு கொடுத்த இமயமே பல ஷெர்ப்பாக்களை விழுங்கி இவர்களை விதவைகளாக்கிய வேதனைக் கதைகள் அனேகம். விதவைகளைத் தள்ளி வைக்கும் சமுதாயக் கொடுமைகள் இங்கும் உண்டு. இவர்கள் வண்ண ஆடைகள், நகைகள் அணியக்கூடாது, குடும்ப நிகழ்வுகளில் ஒதுங்கியிருக்க வேண்டும் போன்ற பிற்போக்குச் சமுதாய விதிமுறை களுக்குள் சிறைப்பட்டு வாழும் சோக வாழ்க்கையே இவர்களுக்கு காலம் தந்த வெகுமதி. அரசிடம் அகால மரணமடைந்த ஷெர்ப்பாக் களுக்கான நஷ்டஈடு வழங்கும் பெரிய திட்டங்கள் ஏதும் கிடையாது. காப்புறுதி கொடுப்பனவும் சிறிய (மாதம் $25) விதவைகள் ஓய்வூதிய முமே ஒரே விடிவு. இந்தச் சமுதாயச் சிக்கல்களில் இருந்து சிறை யுடைத்து பறக்கும் வெண்புறாக்களாகப் பல ஷெர்ப்பாணிகள் அண்மை யில் புறப்பட்டிருப்பது ஒரு வரவேற்கத்தக்க சமுதாய மாற்றமே.

இவர்கள் பல உள்ளூர் மலையேறும் பயிற்சிப் பள்ளிகளில் சேர்ந்து முறையாக மலையேறும் கலையைக் கற்று இமயத்தில் தடம் பதிக்க ஆரம்பித்துள்ளனர். 2012ல் சூரிம் எனும் 29 வயது ஷெர்ப்பாணி ஒரே சீசனில் இரு முறை சிகரத்தில் ஏறி கின்னஸ் சாதனை படைத்தார் இன்று வரை இமயத்தின் சிகரத்தைத் தொட்ட 219 பெண்களில் 21 பேரே ஷெர்ப்பாணிகள். எனவே சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் பல ஷெர்ப்பாணிகளை விசேடமாக ஷெர்ப்பாணி விதவை களுக்கு ஒரு விடிவை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை!

Related Articles

Stay Connected

264,228FansLike
1,875FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

வானமும் வசப்படும்

0
பயணம் ஹர்ஷா விண்வெளிப் பயணம் செய்ய கடுமையான தேர்வுகளுக்குப் பின் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்ட பின்னர்தான் வீரர்கள் அனுப்பப்படுவார்கள். கடந்த சில ஆண்டுகளாகப் பொது மக்களை விண்வெளிக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லும் வர்த்தகரீதியான பயணத்தைத் தொடங்க ரிச்சர்ட்...

உள்ளாட்சித் தேர்தல்களும் உடையும் கூட்டணிகளும்

0
கவர் ஸ்டோரி ஆதித்யா தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால் அரசியல் கட்சிகள் இடம் மாறி புதிய கூட்டணிகள் உருவாவது தமிழக அரசியலில் வாடிக்கை. ஆனால் இம்முறை கூட்டணியிலிருந்து வெளியேறிய கட்சிகள் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கின்றன. தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது...

மென்பேனாவில் எழுதுங்கள்…

0
புதிய படைப்புகளைப் படைக்கலாம். கல்கி, ‘மென்பேனா’ மூலம் உங்கள் படைப்புகளை உடனுக்குடன் கல்கி ஆன்லைன் மின்னிதழில் பதிவு செய்யலாம். www.kalkionline.com இணையதளத்தில் மென்பேனா பகுதியில் உங்கள் படைப்புகளைப் பதிவேற்ற : 1. www.kalkionline.com இணையதளத்தில் Sign in...

இனியொரு விதி செய்வோம்

0
தலையங்கம் ஒவ்வொரு ஆண்டும் புதிதாகப் பெரிய தொழிற்சாலைகள் தமிழ் நாட்டுக்கு வரவேண்டும். அதன்மூலம் தொழில் வளர்ச்சி, வரி வருவாய், புதிய வேலை வாய்ப்புகள் உயரும் என்ற எண்ணத்துடன் தமிழக அரசு பெரும் முயற்சிகளை எடுத்து...

அருள்வாக்கு

0
பாலாபிஷேகம் அல்ல; பாலபிஷேகம் ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள் ஒன்று கவனிக்க வேண்டும். ‘சந்தனாபிஷேகம்’ ‘க்ஷீராபிஷேகம்’ என்கிற மாதிரியே பல பேர் ‘பாலாபிஷேகம்’ என்கிறார்கள். அது தப்பு. ‘பாலபிஷேகம்’ என்று ‘ல’வைக் குறிலாகவே சொல்ல வேண்டும்....
spot_img

To Advertise Contact :