உங்கள் குரல்

உங்கள் குரல்
Published on
பெருந்தன்மை போற்றத்தக்கது!

'பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு ஆயில் பாண்டுகள்தான் காரணமா?' என்ற கேள்விக்கு, 'முந்தைய அரசின் மீது பழி போடுவதுதான், மோடி அரசு ஏழு ஆண்டுகளாகச் செய்து வருகிறது' என்று ஒரு உண்மையைப் பகிரங்கமாகச் சொன்ன தராசுவின் தைரியத்திற்குப் பாராட்டுக்கள்.

– உஷா முத்துராமன், திருநகர்

தொடர்ந்து ஒரு தொடரைப் படிக்க வைப்பது என்பது எழுதுபவரின் திறமை என்று தராசார் கூறியுள்ளது நூறு சதவிகிதம் உண்மை. அதைச் செய்(சாதித்)தவர் அமரர் கல்கி என்பதே வரலாறு. கருத்தாழத்துடன், எளிமையான நடையில், கண்ணியமாக எழுதி வாசர்களைத் தொடர்ந்து தொடரைப் படிக்க வைத்த கல்கியின் பெயர் என்றும் வரலாற்றில் 'பொன்னாய்' ஒளிரும். அவர் எழுதியவை எல்லாம் நமக்குக் கிடைத்த 'செல்வம்'.

– கண்ணன், நெல்லை

'இவர்களால்தான் மழை பெய்து கொண் டிருக்கிறதோ' சிறுகதையில் 'இந்த இருபது ரூபாயில் என்ன வந்திடப் போகிறது' என்ற தற்கு 'ரொம்ப தூரத்தில் இருந்து வர்றீங்க. மறுபடியும் நீங்க வரணுமில்ல' என்ற தையல் காரரின் வார்த்தைகளில் உள்ள மனிதநேயம் நெஞ்சை நெகிழவைத்தது. அதேபோல் மற் றொரு சிறுகதையில் அண்ணன், தம்பி பாசத்தையும், மதியாதவர் வாசலை மிதிக்கவேண்டாம் என்பதையும் விளக்கியது. இன்று இப்படித்தான் பல 'விஸ்வம்'கள் இருக்கிறார்கள். மனதைத் தொட்ட பாத்திரப் படைப்புகள்.

– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்

'கர்மா பற்றி சொல்லும் இரண்டாவது தொடர்' என்ற அறிவிப்பைப் பார்த்ததும் மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. உண்மைதான். இயக்குநர் சிகரம் பாலசந்தரின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட சாணக்கியர் இந்தத் தொடரை எடுப்பது மிகவும் அருமையாக இருக்கும். இந்தத் தொடரை ஆவலுடன் எதிர் பார்த்திருப்பது உண்மையே. இரு வேறு தலைமுறைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் தொடர் வரவேற்பைப் பெற்றிருப்பது அதிசயமில்லை. அருமையான செய்தியை படித்ததும் நிச்சயம் இந்தத் தொடரைப் பார்க்காதவர்கள் கூட பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.

– ராதிகா, மதுரை

'தாலிபான் தலைவலி' தலையங்கம் தாலிபான் எப்படி வன்முறைகளை உண்டாக்கு கின்றனர் என்று புரிந்துகொள்ள வைத்தது. எந்தச் செயல்களைச் செய்தால் ஆப்கானிஸ்தானுக்கு மட்டுமல்ல, நமக்கும் நன்மை உண்டாகும் என்று தெளிவாகச் சொன்னது அருமை.

– பிரகதா நவநீதன், மதுரை

'இலங்கை – சீனா உறவு: இந்தியாவுக்கு ஆபத்தா?' கவர் ஸ்டோரி செம்ம அசத்தல். அண்டை நாடுகளின் நட்புறவைத் தக்க வைத்துக் கொள்ள முடியாத நம் வெளி நாட்டுக் கொள்கையில் கண்டிப்பாக மாற்றம் வேண்டும் என்று ஆணி அடித்தாற்போல் அடித்துச் சொன்ன விதத்தில் நுட்பம் நூறு சதவிகிதம் நங்கூரம் பாய்ச்சியிருந்தது.

– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நால்வர்க்கும் அருள் புரிந்த விநாயகர் பற்றி அருள்வாக்கில் படித்ததும், விநாயகரை நேரில் தரிசித்தது போல் இருந்தது. அப்பர், சுந்தரர் தகவல்கள் பக்திப் பரவசம் தந்தது.

– எஸ். ராஜம்

கடைசிப் பக்கத்தில் '80S கிட்ஸ், 2K கிட்ஸ்' தலைப்பில், கமர்கட், ஜவ்வு மிட்டாய், தேன் மிட்டாய், சூட மிட்டாய், இலந்தை வடை ஆகியவை பற்றிப் படித்ததும், பள்ளி யில் படித்த காலத்துக்கே மனம் பறந்து விட்டது. அவற்றின் சுவை இன்றும் மறக்க முடியாத அருஞ்சுவை. – ஆர். பிரசன்னா, ஸ்ரீரங்கம்

மலரும் மனிதநேயம் கட்டுரையில் போலந்து ஈட்டி எறிதல் வீராங்கனை மரியா, தன் வெள்ளிப் பதக்கத்தை ஏலம் விட்டு குழந்தையின் சிகிச்சைக்குப் பணம் தந்தது பாராட்டத்தக்கது. அதே வேளையில், அந்தப் பதக்கத்தை ஏலத்தில் எடுத்த சூப்பர் மார்க்கெட் நிறுவனமோ, அவரிடமே அந்தப் பதக்கம் இருக்கட்டும் எனத் திருப்பிக் கொடுத்த பெருந்தன்மையும் போற்றத்தக்கது.

– ஸ்ரீகாந்த், திருச்சி

கல்வி கற்பிக்க வேண்டிய ஆசிரியர்கள் கல் சுமந்து பிழைக்கும் நிலை குறித்து எழுதப் பட்டிருக்கும் கட்டுரை நெஞ்சைப் பிசைந்தது. கல்கியைத் தவிர மற்ற ஏடுகள் இதைச் சுட்டிக் காட்டவில்லை.

– டாக்டர் செல்வராஜ், கரூர்

கே.வி.ஆனந்த் தொடரில் இந்தியாவில் ஐஸ்வர்யாதான் டாப் அழகி எனக் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை.

– மணிகண்டன், சென்னை

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com