0,00 INR

No products in the cart.

உங்கள் நூலகத்துக்குப் பெருமை சேர்க்கும்!

நூல் அறிமுகம்,நறுக்குத் தெறிப்புகள்
அனுராதா கிருஷ்ணசாமி,திருமூலன்

தி.ஜானகிராமன் நூற்றாண்டை ஒட்டி, அவர் எழுதிய சிறுகதைகளில், சிறந்த இருபது கதைகளடங்கிய தொகுப்பு ஒன்றை சாகித்ய அகாடமி வெளியிட்டிருக்கிறது. இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கதைகளின் தேர்வையும் தொகுப்பையும் மாலன் செய்திருக்கிறார்.

தொகுப்பில் உள்ள எல்லா கதைகளுமே மிகச் சிறந்தவை மட்டுமல்ல, நாம் எப்போதாவது அல்லது மறுபடியும் மறுபடியும் படித்திருக்கக் கூடியவை.

நான் இங்கு இருபது கதைகளையும் பற்றிப் பேசப்போவதில்லை. எனக்குப் பிடித்த, என்னைப் பாதித்த கதைகளைப் பற்றிப் பேசலாம் என நினைக்கிறேன்.

தி.ஜா. ‘ரசிகனும் ரசிகையும்’ கதையை 1950ல் ‘மணிக்கொடி’ இதழில் எழுதியிருக் கிறார். கதையின் நாயகி ஞானாம்பாள். தி.ஜா. தன் சிறுகதைகளில் சித்திரிக்கும் மற்ற பெண்களைப் போலவே தீர்க்கமானவள். மாலன் தன் தொகுப்புரையில் குறிப்பிடுவது போல, ‘பெண்கள், தாங்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவமானத்திற்குள்ளாகும் போது, சினந்தோ, சாமர்த்தியமாகவோ பழி தீர்த்துக் கொள்கிறவர்கள். ஞானம்பாளும் அப்படித்தான்.’

“போன வருஷத்துல இருந்துதானே நீங்க நெஜமா பாட ஆரம்பிச்சு இருக்கீங்க?”

“அதுக்கு முன்னாடி?”

“சும்மா சத்தம் போட்டுக்கிட்டு இருந்தீங்க.”

முகத்தில் அறைகிற மாதிரி உண்மையை பேசுபவள் ஞானாம்பாள். இசைக் கலைஞன் மோகவயப்பட்டு ஏதேதோ உளறுகிறார். ஞானாம்பாளை தியாகையருடன் ஒப்பிட முயல்கிறார்.

“இது பூச்சி அரிக்கப்போற உடம்பு. எவ்வளவோ மனுஷப் பூச்சிகள் எல்லாம் மனம் போனபடி அரிச்ச உடம்பு. இதுக்கும் தியாகையர் பாட்டுக்கும் சரிகட்ட வேணாம்.”

தன்னால் முடிந்த அளவு பேச்சை இசையின் பக்கம் திருப்ப முயற்சி செய்கிறாள். தோற்றுப் போகிறாள். தான் பாடிய பாடலுக்கும், அதன் பொருளுக்கும், வாழ்கிற வாழ்க்கைக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிற இசைக்கலைஞனின் அசட்டுத்தனம் அவளைச் சீண்டுகிறது. இரவென்றும் பாராமல் கறாராக அவரை வீட்டைவிட்டு விரட்டிவிடுகிறாள்.

மனதையும் செவிகளையும் உயிரையும் நிறைக்கும் ஆற்றல் கொண்டது இசை. அந்த இசையில் சர்வமும் மறந்து போகிறது. உடலும் உயிரும்கூட இல்லாமல் போய்விடுகிறது. இந்த விஷயத்தை நிறுவுவதற்காக, ஒரு பின்புலத்தைப் புனைந்து மிகவும் நுட்பமாகக் கதையை நகர்த்துகிறார் தி.ஜா.

வேறொரு வகையிலும் இந்தக் கதை சிறப்பு வாய்ந்தது. கதை முழுவதும் வழக்கமான தி.ஜா. டிரேட்மார்க் வர்ணனைகள் எதுவுமே கிடையாது. வெறும் உரையாடல் களால் மட்டுமே கதையை நகர்த்திக்கொண்டு போய், மனித மனத்தின் ஆழத்தில் உறைந்து கிடக்கும் வக்கிரங்களை வெளிக்கொண்டு வந்து, சொல்லவந்த விஷயத்தை மிகவும் நுட்பமாக வாசகனுக்குக் கடத்திவிடுகிறார் தி.ஜா.

செய்தி என்றதும் ஞாபகம் வருகிறது. ‘செய்தி’களும் இந்தத் தொகுப்பில் இருக்கிறது. ‘சாந்தமுலேகா’ என்ற கீர்த்தனையின் வழியே இசையைக் கையாளும் இசைக் கலைஞர்களை அறிமுகப்படுத்துவதோடல் லாமல், சொல்லவந்த விஷயத்தையும் கீர்த்தனையின் மூலமாகவே வாசகர்களுக்கு உணர்த்துகிறார். இதுவும் மிகவும் அருமையான கதை.

“என் வடநாட்டுத் தோழிக்கு இந்தக் கதையை வரிக்கு வரி படித்துப் புரியவைத்தேன். மறுமுனையில் நீண்ட மௌனம். பிறகு தோழி விசும்பும் சத்தம் கேட்டது. அதுதான் இந்தக் கதையின் வெற்றி.”

மாலன் தன் தொகுப்புரையில் குறிப்பிட்டிருப்பது போல, தி.ஜா.வின் ஆளுமையைச் செதுக்கிய இன்னொரு அம்சம் அவரது இசைப் பயிற்சி. அது அவரது மேற்கூறிய கதைகளைத் தவிர வேறு பல கதைகளிலும் காணப்படும். முறையாக இசையைக் கற்றுக் கொண்டவர். ‘கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாள்’ என்ற கட்டுரை ‘திசைகளி’ல் பிரசுரிக்கப்பட்டது. அதில் கடைசி நாளன்று கல்லூரியில் தான் பாடிய பாடல்களைப் பற்றிக் குறிப்பிட் டிருப்பார். ‘சேவாசதனம்’ படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய எல்லா பாடல்களும் நெட்ரூ என்றும் சொல்லி இருப்பார்.

பள்ளிக்கூட வாத்தியாராக வாழ்க்கையைத் தொடங்கியதாலோ என்னவோ, தி.ஜா.வின் கதைகளில் ஆசிரியர்களும் குழந்தைகளும் அதிகம் தென்படுவார்கள். அந்த வகையில், இந்தத் தொகுப்பில் சிலிர்ப்பும், கள்ளியும் முள்முடியும் இடம்பெற்றிருப்பது பொருத்தமானதே.

‘சிலிர்ப்பு’ தி.ஜா. ரசிகர்கள் அனைவருக்குமே சிலிர்ப்பை ஏற்படுத்திய ஒரு கதை. குழந்தைகளின் உலகம், அவர்களிடையே ஏற்படும் சிறு நேர உறவில் கூட, மானுடக் கரிசனம், குழந்தைகளிடையே துளிர்ப்பதை வெகு சிறப்பாகச் சித்திரித்த கதை ‘சிலிர்ப்பு’.

‘கள்ளி’ கதையில் வரும் சிறுமி, தகப்பன் சாமியாய் அப்பாவுக்குப் பாடம் கற்பிக்கிறாள். கதையின் முதல் வரியில் இருந்தே, புழுக்கம் தொடங்கிவிடுகிறது. கடன் கேட்டு வரும் சுப்பண்ணாவை கிருஷ்ணன் சாக்குப்போக்கு சொல்லி திருப்பி அனுப்பிவிடுகிறார். இல்லாமல் இல்லை. கொடுக்க மனம்தான் இல்லை. இதற்கு நடுவேதான் மனித மனதின் மூலையில் ஒளிந்து கிடக்கும் கீழ்மை குணங்களை லேசாகத் தட்டுகிறார் தி.ஜா.

மழை பெய்கிறது. மின்னலும் இடியும் கூடிய மழை. மொட்டைமாடியில் அழகுக்காக வைத்திருந்த கள்ளிச்செடி, மழை தண்ணீர் பட்டால் அழுகி விடும் என்று கிருஷ்ணனுடைய மகள் ஓடிவந்து தொட்டிகளை உள்ளே கொண்டுபோய் வைக்கிறாள். கிருஷ்ணன் யோசனையில் ஆழ்கிறார்.

“இதுவரை ஒன்றும் கொடுக்கவில்லை. கொடுக்காது. இருந்தால்தானே கொடுக்க?”

“எது அழகில்லை? மழை, வெயில், மின்னல், எருமை, மரவட்டை எல்லாமே அழகுதான். பரம்பரையாகக் கால் வயிற்றுக்கு வழி இல்லாமல் எலும்பும் தோலுமாய் துந்தண முமாய் வளர்ந்த பிச்சைக்காரனும் அழகு தான்.”

“இனிமே ஞாபகமா மழை வந்தா உள்ளே எடுத்து வைத்துவிடுப்பா” என்கிறாள் குழந்தை. கிருஷ்ணனுக்கு உள்ளே மின்னல் வெட்டுகிறது. பணத்தை எடுத்துக்கொண்டு, மழையைப் பாராமல், சுப்பண்ணாவிடம் கொடுப்பதற்கு ஓடுகிறார். இவரது மனிதாபி மானம் தாங்காமல் சுப்பண்ணா கதறுகிறார். அவர் வாயிலிருந்து வீசும் கள்ளி வாடை இவருடைய பட்டணத்து வாடைக்கு ஏற்றதுதான் என்று நினைக்கிறார் கிருஷ்ணன்.

இப்படி தொகுப்பில் இருக்கிற எல்லா கதைகளைப் பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம். எதை விட? எதை எடுக்க? மொத்தத்தில், தி.ஜா.வின் மிகச் சிறந்த கதைகளைக் கொண்ட தொகுப்பு இது.

மாலனின் தொகுப்புரையைப் பற்றி என்ன சொல்ல? தில்லியில் இருக்கும்போது, கனாட் பிளேஸில், ஒரு தூணுக்குக் கீழே வாட்ச் ரிப்பேர் கடை வைத்திருந்த சர்தார்ஜி ஒரு வரிடம், கடிகாரம் ரிப்பேர் செய்வது வழக்கம். தலைக்குமேல், வெளிச்சமாக விளக்கு ஒன்று தொங்கிக் கொண்டிருக்கும். ஒரு கண்ணில் சிறியதாகக் கொப்பு போன்ற ஒன்றை பொருத்திக்கொண்டு, சின்ன கருவி ஒன்றால் கடிகாரத்தின் மிகச்சிறிய உதிரிபாகங்களை வைத்து ரிப்பேர் செய்து கொண்டிருப்பார். பக்கத்தில் வெடி வெடித்தாலும் கவனம் சிதறாது. அதே மாதிரி, மாலன் ஒவ்வொரு வார்த்தையையும் தேடி எடுத்து தன் தொகுப் புரையை இழைத்திருக்கிறார்.

ஒவ்வொரு வார்த்தையும் வைரக்கல்லுக்குச் சமம். மனதுக்குள் பெரும் கும்பிடு போட்டுக் கொண்டு இருப்பவருக்கு, இப்படி வார்த்தைகளைத் தேடி எடுத்து இழைப்பது தானே சரி? அதைத்தான் மாலன் மிகக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்.

தி.ஜா. ரசிகர்கள், சாகித்ய அகாடமி வெளியிட்டிருக்கும் இந்தத் தொகுப்பை கண்டிப்பாக வாங்கிப் படிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் நூலகத்துக் குப் பெருமை சேர்க்கும் தொகுப்பு இது.

‘என் இருபதாண்டு காலக் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது. சிறு வயது முதலே கவிதை எழுதும் ஆர்வம் இருந்தது. வெளிச்சொல்ல கூச்சமாக இருந்தது. அந்த வெளிப்பாடுதான் இந்தப் புத்தகம்’ என்கிறார் கவிஞர் எம்.சோலை. முன்னுரையில் சுப.வீரபாண்டியன் எழுதும்போது, “வாழ்வாதாரத் துக்காக சோலை ஒரு பணியில் இருக்கிறார் என்றாலும் அவர் வாழ் வின் ஆதாரமாக இருப்பது இந்தக் கவிதை ஏக்கம்தான் என்பதை நான் உணர்ந்தேன்.

நூல்கள் எழுதுவது, திரைப்படப் பாடல்கள் எழுதுவது, தொலைக் காட்சிகளில் தோன்றுவது என்று அவருக்குள் பல் வகையான வேட்கைகள் இருக் கின்றன. அவற்றுள் முதல் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இந்தக் கவிதை நூல் வெளிவருவதற்குத் துணை புரியவேண்டும் என்று எண்ணினேன். அதன் விளைவே ‘தேன் சிந்துதே ஞானம்’ என்னும் இக்கவிதை நூல்” என்றெழுதுகிறார் சுப.வீ.

சின்னச் சின்னதாய் ஏறத்தாழ 100 கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அவருடைய அனுபவங்கள், மனச்சுமைகள், கற்பனைகள் ஆகியன இங்கே கவிதை வரிகளாக உருமாற்றம் பெற்றிருக்கின்றன. சில கவிதைகள் நறுக்கென்று மனதில் தைக்கின்றன, சில கவிதைகளோ துணுக்குகளாய்ச் சிரிக்கின்றன. கவிதைகளைவிட படங்களே அதிகம் உள்ளன. இருந்தாலும் ரசித்துப் படிக்க வேண்டிய புத்தகம்.

 

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

அருள்வாக்கு

0
விநாயகர் வழிபாடு ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள் ‘தமிழ்நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப் பதேயாகும். ‘கோயில்’ என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டடம் எழுப்பவேண்டும் என்பதுகூட இல்லாமல்,...

நீர் சூழ்ந்த சிவலிங்கமும் நிகரில்லா அர்ச்சகரும்…

0
முகநூல் பக்கம் எழுத்தும் ஓவியமும் ராஜன் ஒரு ஓவியனின் டைரியிலிருந்து... பல நாட்களாக அழகிய சிவலிங்கம் ஒன்றை ஓவியமாக வரைய வேண்டும் என்று ஆசை. இதற்காக ஒரு நல்ல மாடல் படம் ஒன்றை எணிணிஞ்டூஞு Google imagesல் தேடும்போது,...

பாலாபிஷேகம்

0
தமிழ் ஹெச்.என்.ஹரிஹரன் “மெய்யாலுமா சொல்றே..?” காலி பிளாஸ்டிக் குடங்களின் கழுத்திற்குள் கையை நுழைத்து பிடித்தபடி ஓட்டமும் நடையுமாக திரேசாவைப் பின் தொடர்ந்தாள் கண்ணம்மா. “ஆமாக்கா.. விடிகார்த்தால டமார்னு ஏதோ சத்தம் கேட்டுச்சு. அப்பத்தான் நானும் புரண்டு படுத்தேனா... எப்பவும்...

நியாயமா அய்யா?

0
விஜய்டாலி ஜெகநாதன் வெங்கட் “வாடா... வா...” என்று அவனை வரவேற் றேன். அவனுடைய மகனைப் பார்த்து, “மதன், நல்லாப் படிக்கிறியா?” என்று வினவினேன். அவன், “ஆமாம்” என்று தலையாட்டினான். “என்ன சுப்பு, திடீர் வருகை?” என்று வினவினேன். “ஒரு...

ஒரு பாடல் செட்டுக்கு 2 கோடி செலவு செய்யப்பட்டது

0
ஸ்டார்ட்...கேமரா...ஆனந்த்...!12 எஸ்.சந்திரமௌலி ஐஸ்வர்யா ராயின் முதல் படமான ‘அவுர் பியார் ஓகையா’விலிருந்து விலகி, இரண்டு வாரங்கள் இருக்கும், மும்பையிலிருந்து மிகப் பிரபல மான வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ரத்தன் ஜெயின் டெலிபோன் செய்தார். அடுத்து அவர்கள்...