online@kalkiweekly.com

spot_img

உத்தான சயன திருக்கோல பெருமாள்!

புரட்டாசி தரிசனம்

– லதானந்த்

பன்னிரு ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலங்களை, ‘வைணவ திவ்ய தேசங்கள்’ என்பர். அவை மொத்தம் 108. அவற்றுள் பரமபதமும் பாற்கடலும் பூவுலகில் தரிசிக்க இயலாதன. எஞ்சிய 106 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கத்துக்கும், திருப்பதிக்கும் அடுத்ததாக வரிசைப் படுத்தப்படுவது கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ சார்ங்கபாணி திருக்கோயில் ஆகும். தற்போது, ‘சாரங்கபாணி’ என மருவி அழைக்கப்பட்டாலும் கோயில் ஆவணங்களில், ‘சார்ங்கபாணி’ என்றே இத்தல பெருமாள் குறிப்பிடப்படுகிறார். ‘சார்ங்கம்’ என்றால் வில்; ‘பாணி’ என்றால் ஏந்தியிருப்பவர் எனப் பொருள்.

பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மற்றும் நம்மாழ்வார் ஆகிய ஏழு ஆழ்வார்களாலும் 51 பாசுரங்களால் மங்களா சாசனம் செய்விக்கப்பட்ட பெருமை இந்தத் திருத்தலத்துக்கு உண்டு. ‘பஞ்சரங்க
திருத்தலங்கள்’ என்பன திருவரங்கனின் புகழ் கூறுபவை. அவற்றுள் இந்தத் தலமும் ஒன்று.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது இந்தத் திருக்கோயில்.
‘திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே, தமது பிரணவாகார விமானத்தில் இருந்து பிரிந்து வைதீக விமானமாகக் காட்சியளிக்கிறார்’ என்று புராணங்கள் சொல்கின்றன. இங்கே அருளும் பாதாள சீனிவாசன் வரலாறு, ‘வேங்கடவனும் இங்கே வாசம் செய்கிறார்’ என்பதைக் குறிக்கிறது.

கோயிலின் நடுப்பகுதி தேர் ஒன்றின் அமைப்பைக் கொண்டிருக்கிறது. அதில் பொறிக்கப் பட்டிருக்கும் குதிரைகள், யானைகள், சக்கரங்கள் போன்றன கல்லினாலேயே வடிக்கப் பட்டிருக்கின்றன.

இந்த திவ்ய தேசத்துக்கு, ‘உபயப்ரதான திவ்ய தேசம்’ என்ற பெயரும் உண்டு. சிருஷ்டிக்கு வேண்டிய மூலப்பொருட்கள் அடங்கியிருக்கும், ‘அமிர்த கும்பம்’ என்னும் குடம் இங்கே இருப்பதால் இத்தலத்துக்கு, ‘திருக்குடந்தை’ எனப் பெயராயிற்று. மேலும், பாஸ்கர க்ஷேத்ரம், குடமூக்கு, கல்யாணபுரம், சிவவிஷ்ணுபுரம், சாரங்கராஜன் பட்டணம், தண்டகாரண்யம் ஆகிய பெயர்களும் இத்தலத்துக்கு உண்டு. பன்னிரெண்டு ஆண்டுகளுக் கொருமுறை வரும் சிம்ம ராசி மாசி மகத்தன்று பல்லாயிரக்கணக்கான மக்கள், குடந்தை மஹாமகக் குளத்தில் நீராடிப் புண்ணியம் பெறுகின்றனர்.

இந்த திவ்ய தேசத்தின் மூர்த்தி, தேர், வடக்குப் பிராகாரமான திருமுற்றம், திருக்குளம், திருவாபரணம் ஆகிய அனைத்துமே பாடல்களால் போற்றப்பட்டிருப்பது இன்னொரு சிறப்பாகும்.

இத்தல பெருமாளுக்கு சார்ங்கபாணி என்ற பெயருடன், ஆராவமுதன், அபர்யாப்தாம்ருதன்,

சார்ங்கராஜா, சார்ங்கேசன் ஆகிய திருநாமங்களும் உண்டு. ஆழ்வார்கள் பாடிய நாலாயிரம் பாசுரங்களையும் நிலைநிறுத்திய ஸ்ரீ ஆராவமுதப் பெருமாளுக்கு ஸ்ரீமந் நாதமுனிகள், ‘ஆராவமுதாழ்வான்’ என்ற நாமத்தையளித்து மகிழ்ந்திருக்கிறார். ‘அருமறையை
வெளிப்படுத்திய அம்மான்’ எனவும் பக்தர்களால் பெருமாள் கொண்டாடப்படுகிறார்.

மூலவர் பாம்பின் மீது பள்ளிகொண்ட கோலத்தில் காட்சியளிக்கிறார். கிழக்கே இவரது திருமுக மண்டலம் அருள் பொழிகிறது. இரு கரங்களுடன் திகழும் மூலவரின் வலக்கை திருமுடியின் கீழ் அமைந்திருக்கிறது. திருமழிசையாழ்வார் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளை பார்க்கிறார் :

நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்

இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால்வரைச்சுரம்

கடந்த கால் பரந்த காவிரிக்கரைக் குடந்தையுள்

கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே’

என்று பாடுகிறார். உடனே பள்ளிகொண்ட பெருமான் எழுந்திருக்க முயலுகிறார். இப்படி பாதி எழுந்த நிலையில் இருக்கும் திருக்கோலத்தை, ‘உத்தான சயனம்’ என்பார்கள். திருமழிசை ஆழ்வாருக்காக, ‘கிடந்தவாறெழுந்திரிக்க’ முயலும் கோலம் காண்பித்த எம்பெருமானை, ‘உத்தானசாயி’ என்று பக்தர்கள் கொண்டாடுகிறார்கள்.

உத்ஸவரின் நான்கு திருக்கரங்களில் சங்கு, சக்கரம், கதை, வில், உடைவாள் ஆகிய ஐந்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறார். வலது கை அபய முத்திரை காட்டி அருள் தருகிறது. உத்ஸவரை, ‘நற்றோளெந்தாய்’ எனப் பாடிப் பரவசமாகிறார் நம்மாழ்வார்.

‘பொற்கொடி’ எனப் பொருள்படும் கோமளவல்லி அம்மைதான் இங்கே தாயார்.
இவர் பொற்றாமரைக் குளத்தில் அவதரித்தார் என்பது ஐதீகம். இவர் ஹேம ரிஷியின் மகள். தவம்புரிந்து பெருமாளின் கரம் பிடித்தவர் என்கிறது புராண வரலாறு.
நான்கு திருக்கைகளுடன்  பெருமாள் சன்னிதிக்குப் பக்கத்திலேயே தனிக்கோயிலில் எழுந்தருளி இருக்கிறார்.

தீராவினைகள் தீர்க்கும் மேட்டு ஸ்ரீனிவாசன், ஸ்ரீராமர் மற்றும் தேசிகன் ஆகியோருக்கும் சன்னிதிகள் இருக்கின்றன. புகழ்பெற்ற சிவ தலங்களான ஆதிகும்பேசுவர் ஆலயமும், நாகேசுவர் சுவாமி ஆலயமும் பக்கத்திலேயே இருக்கின்றன.

இந்தத் தலத்தில் இறைவனை நேரில் கண்ணால் கண்டு மகிழ்ந்தவர்கள் ஹேம ரிஷி, திருமங்கையாழ்வார், காமதேனு போன்றோர்.

இந்தத் திருத்தலத்தின் சிறப்புமிக்க தீர்த்தங்களாக, ‘ஹேம புஷ்கரணி’ எனப்படும் பொற்றாமரைக் குளம், ‘அரிசொல் ஆறு’ எனப்படும் அரசலாறு, காவிரி ஆகியன குறிப்பிடப் படுகின்றன. வைதீக (வேத) விமானமே இத்தலத்தின் விமானமாகும். பெருமாளின் கண்கவர் சித்திரைத் தேர் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மஹேந்திரவர்ம பல்லவனால் கட்டப்பட்ட மண்டபம் ஒன்றும் உள்ளது.

அமைவிடம் : கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது கோயில்.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

ஆச்சரியத்தின் உச்சமாக குறுக்குத்துறை முருகன் கோயில்!

0
ஆலயம் கண்டேன் - ஸ்வாமி தமிழகத்தில் எண்ணிலடங்கா கோயில்களில் சொல்லித் தீராத பலப்பல அதிசயங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் ஆண்டுக்கு ஒரு முறை நீரில் மூழ்கி காணாமல் போகும் அதிசய முருகன் திருக்கோயில்...

பலிபீடத்தைத் தொட்டால் தோஷமா?

0
அறிவோம் தெளிவோம் - கவிதா பாலாஜிகணேஷ் எல்லா ஆலயங்களிலும் கொடி மரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் அமைத்து இருப்பார்கள். கொடி மரத்தை வழிபட்டு முடித்ததும் பலிபீடத்தை வழிபட வேண்டும். பொதுவாக, பலிபீடங்கள் மூன்று அடுக்கு பீடம் மீது தாமரை...

பரமேஸ்டிக்கு அருளிய பரந்தாமன்!

0
அருளாடல் - ஸ்ரீதர் பூரி திருத்தலத்தில் பரமேஸ்டி என்ற தையற்காரர் வசித்து வந்தார். புற அழகில் அவலட்சணமான கூன்முதுகர். ஆனால், அக அழகில் ஸர்வ லஷ்ணத்துடன் எல்லா நற்பண்புகளும் பெற்ற சிறந்த விஷ்ணு பக்தர்! தையற்...

வாழ்வின் அர்த்தம்!

0
படித்ததில் பிடித்தது - ஏ.எஸ்.கோவிந்தராஜன் போர்க்களத்தில் மகன் அபிமன்யு தனது கண் முன்னே இறப்பதைப் பார்த்து கேவிக் கேவி கண்ணீர் விட்டு அழுதான் அர்ஜுனன். அதைப் பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும் கேவிக் கேவி கண்ணீர்...

அழகு சுந்தரனாக அருளும் வரதராஜ பெருமாள்!

0
ஆலயம் கண்டேன் - ஆர்.வி.பதி காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர்  தாலுகாவில் அமைந்த ஆலப்பாக்கம் என்ற சிறிய கிராமத்தில் அமைந்துள்ள அழகு சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழைமையான திருக்கோயிலாகும்....
spot_img

To Advertise Contact :