ஐந்தறிவு ஷெர்லாக் ஹோம்ஸ்!

ஐந்தறிவு ஷெர்லாக் ஹோம்ஸ்!
Published on
– ஜி.எஸ்.எஸ்.

அமெரிக்காவில் உள்ள மத்திய டெக்ஸாஸ் பகுதி. அதன் மேயர் அலுவலகத்தில் ஒரு பிரிவு உபச்சார விழா. ஓய்வு பெற்றவருடன் சக ஊழியர்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். பின் பணிக்காலத்தில் அவர் செய்த மாபெரும் சாதனைகளை ஒரு அதிகாரி படித்துக்காட்டினார். அனைவரும் கை தட்டினார்கள். 'ஐந்தரை வருட பணிக்காலத்தில் இவ்வளவு சாதனைகளா?' என்று வியந்து பாராட்டினார்கள்.

'என்னது வெறும் ஐந்தரை வருட பணிக்காலமா?' என்ற வியப்பு தோன்றுகிறதா? அன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றது மனிதரல்ல; ஒரு நாய். ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்த கருப்பு நிற, 'பியர்' என்ற பெயர் கொண்ட நாய்.

2015 ஏப்ரல் மாதத்தில் அது காவல் துறையில் சேர்ந்தது. காணாமல்போன குழந்தைகள் மற்றும் முதியவர்களைக் கண்டுபிடிப்பதில் பெரும் பங்காற்றியது. முக்கியமாக, மனநிலை பிரச்னை கொண்டவர்கள், தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் ஆகியவர்களைக் கண்டுபிடிப்பதில் அதற்கு நிறைய தேர்ச்சி இருந்தது. அதுமட்டுமல்ல, போதைப் பொருட்களைக் கண்டுபிடிப்பதற்கும் அதற்குத் தனித் திறமை இருந்தது. இதன் காரணமாகப் பல குற்றவாளிகள் பிடிபட்டார்கள்.

ஓய்வு பெற்ற பிறகு தனது ஆயுட்காலம் முழுவதும் அது கர்னல் அபௌட் என்பவரின் பாதுகாப்பில் இருக்கும்.

துப்பறியும் நாய்களின் சேவை கொஞ்சநஞ்சமல்ல; ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவராக விளங்கியவர் அபூபக்கர் பாக்தாதி. இவரைக் கண்டுபிடிக்க கோனன் என்ற துப்பறியும் நாய்தான் அமெரிக்க ராணுவத்துக்கு உதவியது.

அந்தத் தீவிரவாதத் தலைவரை ஒரு சுரங்கத்துக்குள் துரத்திச் சென்று அவரைச் செயலிழக்க வைத்தது கோனன். மின்சாரக் கம்பிகளைத் தொட்டதால் உடல் நலம் குன்றியிருந்த நிலையிலும் அது தனது கடமையைச் செய்தது. இந்த நாயின் புகழ் பெரிதும் பரவ அதற்கு, 'பர்பிள் ஹார்ட்' என்ற விருதை வழங்கியது அமெரிக்க அரசு. (இது போரில் காயமடைந்தவர்கள் அல்லது இறந்தவர்களுக்கு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் வழங்கும் உயரிய விருது.)

'என் இனிய இயந்திரா' என்ற தொடரில் எழுத்தாளர் சுஜாதா அறிமுகப்படுத்திய, 'ஜீனோ' என்ற ரோபோட் நாய் மிகவும் பிரபலம். அதுபோலவே, பிரிட்டிஷ் ஆஸ்திரேலிய தயாரிப்பான கே-9 என்ற தொலைக்காட்சித் தொடரும் பிரபலம். (ஆங்கிலத்தில், 'கேனைன்' என்பது நாய்கள் தொடர்பான என்ற பொருளைத் தரும்.) ஃபில்மோர் மற்றும் மாக்ஸ் என்ற இரண்டு லேப்ரடார் இன நாய்கள் போதைப் பொருட்களைக் கண்டுபிடிப்பதில் தலைசிறந்து விளங்கின.

சில வருடங்களுக்கு முன் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது அந்த வழக்கு. 'ஃப்ளோரிடா வெர்ஸஸ் ஹாரிஸ்' என்று குறிப்பிடப்பட்ட அந்த வழக்கில், 'ஒரு துப்பறியும் நாயின் நடவடிக்கையை வைத்துக்கொண்டு, தனது வண்டியில் போதைப்பொருட்கள் இருந்திருக்கலாம் என்று அவநம்பிக்கைப்பட்டு, அதை சோதனையிடும் உரிமை காவல் துறைக்குக் கிடையாது' என்றார் வண்டியின் உரிமையாளர். ஒரு துப்பறியும் நாயின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கிய முதல் உச்சநீதிமன்ற வழக்கு அதுதான்.

அந்த வழக்கில், 'ஒரு நாய்க்கு துப்பறியும் திறமை இருப்பதாக நம்பத்தகுந்த ஒரு அமைப்பு சான்றிதழ் அளித்திருந்தால் அதற்கு அங்கீகாரம் உண்டு. அப்போது அந்த நாய் சந்தேகத்துக்குரிய வண்டி அல்லது நபர் என்று தன் உடல்மொழியால் சுட்டிக் காட்டும் போது, அந்த வண்டி அல்லது நபரை சோதித்துப் பார்க்க காவல் துறைக்கு உரிமை உண்டு' என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

காவல்துறையில் முதன் முதலாக நாய்கள் பயன்படுத்தப்பட்டது 1888ல். 'ஜாக் த ரிப்பர்' என்ற தொடர் கொலைகாரனைக் கண்டுபிடிக்க இவை பயன்பட்டன. அரசுக்கு எதிரான பெரும் எதிர்ப்பு ஊர்வலங்கள் நடக்கும்போது மக்களை சிதறடிக்கவும் நாய்கள் பயன்படுத்தப்பட்டன. முழு அளவில் நாய்களுக்குத் துப்பறிவதற்கான பயிற்சிகளை முதலில் கொடுத்தது ஜெர்மானியர்கள் மற்றும் பெல்ஜியம் நாட்டினர் என்று கூறலாம்.

'அல்சேஷன்' என்று அழைக்கப்படும் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் துப்பறிவதற்கு மிகவும் உகந்தவை. அடுத்த இடம், 'டாபர்மேன்' இன நாய்களுக்கு.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com