online@kalkiweekly.com

ஒரு தண்ணீர்க் கதை

சிறுகதை
நந்து சுந்து
ஓவியம் : தமிழ்

ஒரு காலை மட்டும் நீட்டி அடி முதுகுக்கு ஒரு தலை யணையை முட்டுக்கொடுத்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தார் ராமாமிர்தம். தலையணையின் மிருதுவான ஆதரவு இதமாக இருந்தது. திடீரென ஒரு விக்கல். கையில் பிடித்திருந்த புத்தகம் மேலே எழும்பி கீழே இறங்கியது. படித்துக் கொண்டிருந்த பாரா தவறிப் போனது. அதைத் தேடிப் படிக்க ஆரம்பிக்கும்போது மீண்டும் ஒரு விக்கல். அருகில் இருக்கும் தண்ணீர் பாட்டிலைப் பார்த்தார். ஒரு கண்ணாடிச் சில்லு மாதிரி பாட்டில் அடியில் லேசாக தண்ணீர்ப் படலம் தெரிந்தது.

பாட்டிலை எடுத்து வாயில் கவிழ்த்தார். அந்த நீரும் பாட்டில் கழுத்துப் பகுதியில் கரை கட்டி நின்றது. வரவில்லை. விக்கல் மறுபடியும் வந்தது. இப்போது கொஞ்சம் அதிக மாகவே. மார்பைத் தூக்கிப் போட்டது.

கூடத்தில் தண்ணீர் இருக்கிறது. வீட்டுக்குள்ளேயே வாட்டர் டிஸ்பென்சர். சுடுநீரும் குளீர் நீரும் வரும். பணக்காரத்தனத்தின் வெளிப்பாடு. மெதுவாக எழ முயன்றார். முடியவில்லை. கால் மரத்துப் போயிருந்தது. அம்மிக்குழவி மாதிரி கனத்தது. ஒரே இடத்தில் அமர்ந்திருந்ததில் ரத்த ஓட்டம் இல்லாமல் வெறும் ஜடப் பொருளாக மாறியிருந்தது.

ஐந்து நிமிடத்தில் சரியாகிவிடும்தான். ஆனால் விக்கல் நின்ற பாடில்லை. இடை வெளியில்லாமல் வந்து வந்து படுத்தியது.உடனடியாகத் தண்ணீர் வேண்டும். தொண்டையில் ஊற்ற வேண்டும். விக்கலின் அத்துமீறலை அடக்க வேண்டும். அவர் இருக்கும் இடத்துக்கு யாரேனும் வந்து ஒரு டம்ளர் தண்ணீர் நீட்ட வேண்டும்.

கூடத்தில் நிழலாடியது. சோபாவில் யாரோ அமரும் சத்தம். மருமகள் வர்ஷிணியாகத்தான் இருக்க வேண்டும். டூட்டி முடிந்து வந்துவிட்டாள் எனப் புரிந்தது. அவளுக்கு சோபாவில் அமரத் தெரியாது. விழத்தான் தெரியும். ஒரு அலட்சியம். மெல்லிய வன்முறை.

இரண்டு வருடம் முன்பு மருமகளாக வீட்டில் நுழையும் போதே அவளின் குணம் தெரிந்து விட்டது. நினைத்த நேரத்துக்கு வெளியே போவாள். பாரிஸ் திரைப்பட விழாவுக்குப் போகும் நடிகை போல உடுத்துவாள். எட்டு முழ வேட்டி கட்டிய ராமாமிர்தத்தை நியாண்டர்தால் மனிதன் போல் பார்ப்பாள்.

வர்ஷிணி வேலையிலிருந்து திரும்பி வந்ததும் கைப்பையை விட்டெறிவாள். பிறகு நேராகத் தன் அறைக்குப் போய் விடுவாள். ராமாமிர்தத்தின் அறைக்குள் எட்டிப் பார்க்கும் பழக்கம் இல்லை. ராமாமிர்தமும் அவளிடம் பேசுவதைத் தவிர்த்தார். இப்போது வேறு வழியில்லை. அவளிடம் பேசவேண்டும். உடனடியாகத் தண்ணீர் வேண்டும்.

“அம்மா… வர்ஷிணி” என்றார். பதில் இல்லை. கூடத்தில் விர்ரென்று சத்தம் கேட்டது. ஏ.சி.யை ஆன் செய்து விட்டாள் என்று தெரிந்தது. இந்நேரம் சோபாவில் காலை நீட்டியிருப்பாள். “அம்மா…வர்ஷிணி…கொஞ்சம் குடிக்கத் தண்ணி கொண்டுவந்து கொடுக்க முடியுமா?” இப்போதும் பதில் இல்லை. விக்கல் இப்போது அதிகமாயிற்று. விக்கல் சத்தம் கண்டிப் பாகக் கூடத்திற்குக் கேட்டிருக்கும். கூடத்திலிருந்து எந்த சமிஞ்சையும் வரவில்லை.

மெதுவாக எழுந்தார். கட்டிலைப் பிடித்துக்கொண்டார். கால் களை உதறினார். ரத்தம் ஜிவ்வென்று காலில் பாய்ந்தது. மின்சாரத்தை மிதித்தது போல இழுத்தது. ஒரு நிமிடம்தான். கால் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

காலை இழுத்துக்கொண்டு நடந்தார். சோபாவைக் கடந்துதான் வாட்டர் கேன் இருக்கும் இடத்துக்குப் போக வேண்டும். வர்ஷிணி யின் நீட்டிய கால் அப்படியேதான் இருந்தது. அவள் கால்களை மடக்க மாட்டாள் என்று தெரியும். சோபாவைச் சுற்றிக்கொண்டு போனார். இன்னொரு முறை விக்கியது. டம்ளரில் தண்ணீர் பிடிக்கும் போது பேச ஆரம்பித்தார்.

“ரொம்ப நேரமா விக்கிகிட்டிருக்கேன்.” “தண்ணி எடுத்துக் குடிங்க.” திரும்பிப் பார்க்காமல் பதில் கூறினாள். தண்ணீர் குடித்துவிட்டு டம்ளரை வாட்டர் கேன் மேல் வைத்தார். தன் அறைக்குப் போனார்.

வர்ஷிணி டி.வி.யை அணைத்தாள். தலையைக் கலைத்து விட்டுக்கொண்டு உள்ளே போனாள். சிறிது நேரத்தில்அவளுடைய பாத்ரூமிலிருந்து ஷவர் சத்தம் கேட்டது. அரை மணி நேரம் கழித்து வாசலுக்கு வந்தாள். போன் செய்தார்.

“மித்திலா.” “என்னப்பா?” “நான் மறுபடியும் கொல்கத்தாவுக்கே வந்துடட்டுமா?” “என்ன ஆச்சுப்பா? வர்ஷிணி ஏதாவது சொன்னாளா? மரியாதை குறைவா நடந்துகிட்டாளா?” “நான் அவகிட்டே மரியாதை எதையும் எதிர்பார்க்கல்லே. எதிர்பார்த்தாலும் கிடைக்காது. ஆனா ஒரு டம்ளர் தண்ணிகூட கொண்டுவந்து கொடுக்கல்லே. அதான் மனசைப் பிசையுது.” “நான்தான் அங்கே போகவேணாம்னு சொன்னேன் இல்லே. உனக்கு என் வீட்ல என்ன குறைச்சல்?” “மாப்பிள்ளைக்கு பாரமா…” “அவர் உனக்கு மாப்பிள்ளை இல்லே. மகன் மாதிரி. நீ புறப்பட்டு வா.”

“ம்ம்ம்… ரெண்டு வாரம் கழிச்சு வரட்டுமா? உடனே கிளம்பினா ஆதித்யா தப்பா நினைச்சுப்பான்.” “அங்கே இருக்க வேணாம். அடுத்த வாரம் புறப்பட்டு வா.” அடுத்த நாள். மகன் ஆதித்யாவிடம் மெதுவாகப் பேச ஆரம்பித்தார். “உன் தங்கச்சி மறுபடியும் கொல்கத்தாவுக்கு வரச் சொல்லி தினமும் போன் பண்றா…போய் இருந்துட்டு வர்ரேனே.” “இப்போதானே வந்தே. உனக்கு இங்கே நான் என்ன குறை வைச்சேன்? உனக்குன்னு தனி ரூம். உன் விஷயத்துல யாரும் தலையிடறதில்லே. முழு சுதந்திரம்.” ‘உன் பெண்டாட்டி குடிக்க தண்ணிகூட எடுத்துக் கொடுக்க மாட்டேங்கறாடா’ என்று சொல்ல நினைத்தார். சொல்லவில்லை.

“இல்லேடா… நான் போறேன்.” “அதான் எதுக்கு?” “எனக்கு இந்த ஊர் என்னமோ ஒத்துக்கல்லே. ஏதோ அலர்ஜி. அப்பப்போ மூக்கடைக்குது.” ஆதித்யா யோசித்தான். “சரிப்பா. கோரமண்டல் எக்ஸ்பிரஸ்ல டிக்கெட் போட்டுடட் டுமா? நானே சென்டிரல் ஸ்டேஷன்ல டிராப் பண்றேன்.” “உன் தங்கச்சியே டிக்கெட் வாங்கி அனுப்பறதா சொல்லி யிருக்கா.”

“தப்புப்பா” “நான் அவளுக்குப் பணம் கொடுத்திடுவேன்டா. பென்சன் பணத்தை வைச்சிகிட்டு என்ன செய்யப் போறேன். மாசம் அம்பதாயிரம் வருதில்லே.” மித்திலா டிக்கெட் அனுப்பிவிட்டாள். இரண்டு நாட்கள் கழித்து மகன் ஆபிசிலிருந்து போன் செய்தான். “அப்பா… நான் அவசரமா ஆபிஸ் வேலையா வெளியூர் கிளம்ப றேன். இப்படியே ஆபிஸ்லேந்தே போறேன். வர ஒரு வாரம் ஆகும்”

அவன் அப்படித்தான். திடீர் திடீரென புறப்படுவான். ஆபீஸில் ஒரு பெட்டி எப்போதும் தயாராக இருக்கும். “நீ தனியா கொல்கத்தா போயிடுவியா?” “போயிடுவேன். எனக்கு ஒண்ணும் புதுசு இல்லையே” “என்னைக்குப் போறே?” “வியாழக்கிழமை” “டிக்கெட்?” “வந்துடுச்சு” “வர்ஷிணிகிட்டே சொல்லிட்டியா?” “அவளை பார்த்தா சொல்லிடறேன்.” “அவ ஏதோ பிஸி போல இருக்குப்பா. நான் சொல்லிடறேன்.”

வியாழக்கிழமை. ராமாமிர்தம் ஊருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். ஆதித்யா கேம்ப் போயிருந்தான். வர்ஷினியும் வேலைக்குப் போக அலங்காரம் செய்து கொண்டிருந்தாள். அவருடைய அறையின் கதவை டொக் டொக்கென்று தட்டும் சத்தம். திரும்பிப் பார்த்தார். வர்ஷிணிதான் நின்று கொண்டிருந் தாள். ஒப்பனை சற்று தூக்கலாக இருந்தது.

“கதவு திறந்துதான் இருக்கு. உள்ளே வரலாம்” “பரவாயில்லே. ஆதித்யா போன் செஞ்சு சொன்னாரு. நீங்க ஏதோ ஊருக்குப் போறீங்களாம்.” “ஆமா” “எப்போ?” “இன்னைக்கு” “ஓ…நான் இப்போ டூட்டிக்குக் கிளம்பறேன்.” “சரி.” “போறப்ப வீட்டை பூட்டிக்கிட்டு போங்க. வீட்டு சாவியை கார் ஷெட்ல வைச்சிடுங்க.”

 

“சரி.” “போன் பண்ணுங்க.” “கிளம்பறப்ப போன் செய்யறேன்.” “போய் சேர்ந்ததும் போன் பண்ணுங்க.” “பண்றேன்.” “பத்திரம்.” “பத்திரமா போயிடுவேன்.” “வீட்டு சாவி பத்திரம்.” அரை மணி நேரத்தில் வர்ஷிணி கிளம்பி போய் விட்டாள். ஒரு மணி நேரத்தில் மித்திலா போன் செய்தாள். “அப்பா..ஏர் போர்ட்டுக்கு டாக்ஸி புக் பண்ணிக்கறியா இல்லே நான் பண்ணட்டுமா?” “தெரியும். நானே போட்டுக்கறேன்.” அரை மணி நேரத்தில் விமான நிலையத்தில் இருந்தார். மித்திலாவே ஆன்லைனில் செக் இன் செய்திருந்தாள். போர்டிங் பாஸ் சுலபமாகக் கிடைத்துவிட்டது.

போன் வந்தது. மித்திலாதான் பேசினாள். “அப்பா..இறங்கினவுடனே போன் பண்ணுங்க. நான் வெளீல காத்துக்கிட்டிருப்பேன்.” செக்யூரிட்டி செக் முடிந்து சில காத்திருப்புகள். கேட் திறந்த பிறகு மக்களின் அனாவசிய பரபரப்புகள். பள்ளியில் ப்ரேயர் முடிந்து வகுப்பறைக்குப் போகும் மாணவர்கள்போல வரிசை மெதுவாக நகர்ந்தது. தன் இருக்கையைத் தேடிப் போய் அமர்ந்தார். சீட் நடைபாதை ஓரமாக இருந்தது. ஒரு விதத்தில் செளகரியம். பாத் ரூமுக்குச் சுலபமாகப் போகலாம். விமானம் புறப்பட்டு ஆகாயத்தில் மிதக்க ஆரம்பித்தது. விமானத்துக்குள் வலிந்து திணித்த அமைதி இருந்தது.

பெல்டை தளர்த்திவிட்டுக் கொண்டார். விமானப் பணிப் பெண்ணை அழைக்கும் பொத்தானை அமுக்கினார். சில நொடிகளில் நீல நிறத்தில் மஞ்சள் பூ போட்ட புடைவை யுடன் விமானப் பணிப்பெண் பக்கத்தில் வந்து நிற்பதை உணர்ந்தார்.

“குடிக்க தண்ணி வேணும்.” “யெஸ். வித் ப்ளஷர்” இரண்டு நிமிடங்கள் போயின. “வாட்டர் ப்ளீஸ்.” அவரிடம் பவ்யமாகத் தண்ணீர் டம்ளரை நீட்டிக் கொண்டிருந் தாள் விமானப் பணிப்பெண் சீருடையில் இருந்த மருமகள் வர்ஷிணி.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

அலைபாயுதே!

2
கதை      : சகா ஓவியம் : ரமணன் எதிர்வீட்டு மகாலிங்கத்திற்கு ஷாக் அடித்துவிட்டது என்று கேள்விப்பட்டு மருத்துவமனைக்கு ஓடினேன் நான். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்திருப்பார்கள். செயற்கை சுவாசத்தில் மூச்சுத் திணறிக் கொண்டிருப்பார் என்றெல்லாம்...

துன்பம் தொலைந்த திருநாள்!

0
புராணக் கதை : ஆர்.பொன்னம்மாள் ஓவியம்             : வேதா “தேவேந்திரன் தங்களைக் காண வந்திருக்கிறானாம்!” என்று சத்தியபாமா கூற, வெளியே எழுந்து வந்தார் கிருஷ்ணர். கிருஷ்ணரை வணங்கிய இந்திரன், “மதுசூதனா!...

“என்னை மன்னிச்சுடு பார்வதி!”

ஜெயஸ்ரீராஜ் நினைவு சிறுகதைப் போட்டி பரிசுக்கதை - 3 கதை       : இராம. பாலஜோதி ஓவியம்  : தமிழ் ‘எனது மாமியார் பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டார்’ என்ற தகவலை என் கணவர் போன் பண்ணி, சொன்னதும்...

ஜெயஸ்ரீராஜ் நினைவு சிறுகதைப் போட்டி பரிசுக்கதை – 2

அவர் பொருட்டு பெய்யும் மழை! கதை      : ஆதலையூர் சூரியகுமார் ஓவியம் : லலிதா சின்ன வரப்பில் இருந்த நுனா மரத்தின் நிழலில் அமர்ந்து இருந்தார் கதிர்வேல் தாத்தா. 'தன் நாற்றங்காலுக்கு நீர் பாய்ச்ச...

நிழலும் நிஜமும்!

0
கதை : மாதவி ஓவியம் : பிரபுராம் ஏற்கெனவே சினிமாவுக்கு லேட்! ரசிகர் ஷோ! ஆயிரம் ரூபாய் டிக்கெட். சிவா, ரவி, மணி ஓடும் பஸ்ஸில் ஏறினர். “ஏய்யா தம்பிகளா... ஃபுட்போர்டில் நிக்காதீங்க. உள்ளே வாங்க.” கண்டக்டரின்...
spot_img

To Advertise Contact :