0,00 INR

No products in the cart.

“கடவுளில் லயிப்பதே கலை!”

அமரர் கல்கி பிறந்த நாள் விழா!

 எஸ். கல்பனா

படங்கள்: ஸ்ரீஹரி

“அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. சென்னை பாரதிய வித்யா பவனில் 1999ம் வருஷம் எனக்கு இளம் கலைஞருக்கான கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு விருது கிடைத்தது.  இப்ப இருப்பது மாதிரி சமூக வலைதளங்கள்,  ஊடக சாதனங்கள் எதுவும் அப்போது இல்லை. கார்ப்பரேட் ஸ்பான்ஸர்ஷிப் அப்போதுதான் அறிமுகமாகியிருந்தது. இளைஞர்கள் நிறைய பேர் கச்சேரி செய்து கொண்டிருந்தனர். அந்தச் சூழலில் கல்கி அறக்கட்டளை தகுதியான இளம் கலைஞர்களைத்  தேர்வு செய்து  விருது அளித்து பாராட்டியது” என்று தமது மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் வீணை விதுஷியான ஜயந்தி குமரேஷ்.

அமரர் கல்கியின் 122-வது பிறந்த தினத்தை முன்னிட்டு செப்டெம்பர்  9ம் தேதி கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை சார்பாக இளம் வித்வான்களுக்கு விருது வழங்கும் விழா, சென்னை ராகசுதா அரங்கில் நடந்தது. அந்த விழாவுக்குத் தலைமை ஏற்றுப் பேசும்போதுதான் இப்படி குறிப்பிட்டார் ஜயந்தி குமரேஷ். “கடவுளில் லயிப்பது கலை; கடவுள் என்பது நமக்குள் இருக்கும் ஆன்மா” என்று கலை பற்றிய வலிமையான கண்ணோட்டத்தை முன்வைத்து, அந்தக் கண்ணோட்டத்தைப் பின்பற்றி கல்கி விருது வழங்கப்பட்டு வருவதை அங்கீகரித்துப் பேசினார்.

இந்த வருட கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை விருதுக்குத் தேர்வானவர்கள்,  குரலிசைக் கலைஞர் பாலக்காடு ராம்பிரசாத் மற்றும் மோர்சிங் வாத்தியக் கலைஞர் ஸாய் சுப்பிரமணியம். இந்த வருடம்தான் முதல்முறையாக மோர்சிங்குக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது. இரு கலைஞர்களின் ஆற்றலையும் பாராட்டி, வாழ்த்தினார் ஜயந்தி குமரேஷ். அவர்கள் இருவருக்கும் கல்கி அறக்கட்டளை தயாரித்திருந்த விருதுப் பத்திரங்களோ கவிதை போல் இருந்தன.

“அமரர் கல்கி பன்முக ஆற்றல் படைத்தவர். விடுதலைப் போராட்ட வீரர். கூர்மையான அரசியல் விமரிசகர். ரசனை மிகுந்த கலை,  இலக்கிய விமரிசகர் மற்றும் படைப்பாளி. தலைசிறந்த பத்திரிகையாளர். அவர் பெயரால் இந்த விருது கடந்த கால்  நூற்றாண்டாகக்  கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை இந்த அறக்கட்டளை மூலமாக வழங்கப்படவில்லை. அதையும் சேர்த்து இந்த வருடம் ரூ.15  லட்சத்துக்கான உதவித் தொகைகள்  படிப்பில் சிறந்த – பொருளாதாரத் தில் பின்தங்கிய மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன” என்று அறங்காவலர் லக்ஷ்மி நடராஜன் முன்னதாக வரவேற்புரையில் குறிப்பிட்டார்.

விருது பெற்ற இசைக்கலைஞர் ராம்பிரசாத் பேசும்போது,  “எங்களைப் போன்ற கலைஞர்களை இதுபோன்ற விருதுகள் நின்று சிந்திக்க வைக்கின்றன. எங்களுக்குக் கற்றுத் தரப்பட்ட கலையை, விழுமியங்களை மேலும் மதிக்கச் செய்கின்றன. எங்களை இன்றைய வளர்ச்சியில் கொண்டு நிறுத்தியிருக்கும் பெரியோரை வணங்கச் செய்கின்றன.  என் பரிமளிப்புக்கு முழு காரணம் என் தந்தைதான். அவர் என் குருவும்கூட” என்று தன் தந்தை டி.ஆர். ராஜாராம் பற்றி;g பகிர்ந்துகொண்டார்.

மோர்சிங் வித்வான் ஸாய் சுப்பிரமணியமும் தன் வெற்றிக்குக் காரணங்களாகத் தன் தந்தையும் மோர்சிங் கலைஞருமான சி.எஸ். வேங்கடேஸ்வரன் மற்றும் குரு கலைமாமணி ஏ.எஸ். கிருஷ்ணன் ஆகியோரைக் குறிப்பிட்டார்.

குரு டி.ஆர்.ராஜாராம்,  குரு ஏ.எஸ். கிருஷ்ணன் ஆகியோருக்கும் நினைவுப் பரிசுகள் அளித்து கௌரவித்தது அறக்கட்டளை. கே.வி. பிரசாத் (மிருதங்கம்),  எல். ராமகிருஷ்ணன் (வயலின்),  வி.ஸாய் சுப்பிரமணியம் (மோர்சிங்) ஜமாவுடன் அற்புதமாய் பாலக்காடு ராம்பிரஸாத் பாடிய கச்சேரி அன்றைய மாலைக்கு மகுடம்!

மூலாதார மூர்த்தியான விநாயகப் பெருமான் மீது அமைந்த ‘லம்போதராய நமஸ்தே’  என்று முத்துசாமி தீக்ஷிதர்  கீர்த்தனையுடன் ஆரம்பித்தார் ராம்பிரஸாத். வராளி ராகத்தில் கண்டசாபு தாளத்தில் சமஷ்டி சரணத்துடன் மறுதினம் விநாயக சதுர்த்தி என்பதையும் நினைவூட்டி மிளிர்ந்தது பாடல்.

அடுத்ததாக – இந்த விழாவுக்குப் பொருத்தமாக கல்கி அவர்கள் இயற்றிய  ‘வண்டாடும் சோலைதனிலே’ ஹரிகாம்போதி ராகப் பாடலை ராம்பிரஸாத் அற்புதமாய்ப் பாடினார். இந்தப் பாடலை வெறும் கவிதையாய் படித்தாலே மனம் மயங்கும். இந்நிலையில் ராம்பிரஸாத்தின் காத்திரமான குரலில் பாடலும் அதற்கேற்ப கம்பீரமான மிருதங்கமும் அதற்கு இசைவாக மோர்சிங்,  வயலின்…  ‘மாதவன் மதுரை மைந்தன் மறைகள் பரவும் மாயன் அவனோ’  என்ற வரியில் விஸ்தாரமான நிரவல் செய்து ஸ்வரங்களும் பாடினார் ராம்பிரஸாத். ‘மறைகள் பரவும் மாயனுக்கு’  அவர் எழுப்பிய இசைக் கோயிலுக்கு, சிற்ப சித்திரங்களால் அழகு  சேர்த்ததுபோல் வாசித்தனர் சக கலைஞர்கள்.

அடுத்து  ‘சரணம் சரணம் ரகுராமா’  அசாவேரி ராகத்தில்  அருணாசலக் கவிராய ரின் உருக்கமான கீர்த்தனை. அதன் பாவத்தை ராம்பிரஸாத் அனுபவித்துப் பாட,
பக்கவாத்தியக் கலைஞர்களும் அதையொட்டியே வாசித்தனர்.   ‘தேவகி கந்த முகுந்தா’  புரந்தரதாஸர் பாடல். ஹம்சநாதம் ராகத்தில் கண்டசாபு தாளத்தில் அமைந்த இப்பாடலில் சிட்டை ஸ்வரத்தில் மட்டுமின்றி ராம்பிரஸாத் நிரவலிலும் வெளுத்து வாங்கியது மிகச் சிறப்பு.  மூன்று ஸ்தாயிகளிலும் ராம்பிரஸாத் சமமான சௌக்கியத் துடன் பாட வல்லவர் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாயிற்று.

அடுத்து ராம்பிரஸாத் விஸ்தாரமான ஆலாபனைக்கு எடுத்துக்கொண்டது பைரவி. ஜீவ ஸ்வர கார்வைகளில் நின்றபடி சாகஸ சங்கதிகளை உதிர்த்து பிரமிப்பூட்டினார். இரட்டைக் களை ஆதி தாளத்தில் அமைந்த, ‘நீ வண்டி தெய்வமு’ பாடல் தொடர்ந்தது. நிரவல் செய்தது மிகப் பிரமாதம். நின்று விளையாடி சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசினார்.

எல். ராமகிருஷ்ணனின் வயலின் பாட்டுடனேயே பயணித்து கச்சேரியை முழுமையடையச் செய்தது. கே.வி. பிரசாத் மிருதங்கத்தில் தனி ஆவர்த்தனம் பற்றிச் சொல்லவே வேண்டாம். அந்தத் துல்லியமான காலப்பிரமாணம், நிர்ணயம் அபாரம்.

மோர்சிங் வித்வானும் விருது நாயகனுமான சாய்சுப்பிரமணியன் மிருதங்கத்துடன் இணைந்தும் மிளிர்ந்தும் தனியாவர்த்தனத்துக்கு மதிப்புக் கூட்டினார். கீர்த்தனைகளின் அனுபல்லவி அல்லது சரணத்தை பாடகர் எடுக்கும்போது அழகாக கூட நுழைந்து உடன் வந்தார். கற்பனை ஸ்வர கணக்கு வழக்குகளுக்கு கவனத்துடன் ஈடு கொடுத்தார்.

தனியாவர்த்தனத்துக்குப் பிறகு குந்தளவராளியில் அமைந்த ‘பாரத புண்ணிய பூமி’ பாடல்! நம் நாட்டைப் பற்றி பெருமிதமாக உணரச் செய்யும் வகையில் கங்கை, யமுனை ஆகிய இமாச்சல நதிகளை விளித்து இறுதியாக பிரம்மா,  விஷ்ணு,  சங்கரன் என்று முப்பெரும் கடவுளரையும் போற்றும் வகையில் ‘தியாக பூமி’ திரைப்படத்துக் காக அமரர் கல்கி எழுத, டி.கே.பட்டம்மாள் பின்னணியாகப் பாடியது!

முத்திரை பதித்த இப்பாடல் ராம்பிரஸாத் பாடியது. அமரர் கல்கி பிறந்த தினத்துடன் இந்திய சுதந்திரத்தின் எழுபத்தைந்தாவது ஆண்டையும் கொண்டாடும் விதமாக அமைந்தது.

 

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

லைஃப்பாய் சோப்

0
அது ஒரு கனாக்காலம் 9 ஒரு காலத்தில் லைஃப்பாய் சோப் இல்லாத வீடே இல்லை என்னும் நிலை இருந்தது! வட இந்தியாவில் சர்வ சாதாரணமாக கடைகளில் வந்து அடித்தட்டு மக்கள் “லால்வாலி சாபூன்” (லால்...

இன்பத்த தேன் வந்து பாயுதே

0
மகாகவி, தேசியக்கவி,  என்று பரவலாக  அறியப்பட்ட பாரதி கடுமையான இலக்கிய நடைகளை உடைத்து, பாமரனுக்கும் புரியும் வகையில் புதிய கவி நடைகளைப் படைத்தவன். ஆனால், பாரதியார் ஒரு கவிஞராக மட்டுமல்லாமல் எழுத்தாளர், பத்திரிகையாளர்,...

ஆலயமும் வித்தையும்

0
கோயில்களில் போதனை என்று சொன்னேன். இதைக் கொஞ்சம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணவேண்டும்! ஏறக்குறைய ஆயிரம் வருஷத்துக்கு முந்தி பல்லவ, பாண்டியர்களுக்கு மேலாகப் பிற்காலச் சோழர்கள் எனப்படுபவர்களின் ஆதிக்கம் பரவிற்று. விஜயாலயன் என்பவன் இப்படி மறுபடி...

சட்டை

0
கடைசிப் பக்கம்  சுஜாதா தேசிகன் முழுக்கை, அரைக்கை என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல், நான் ஒரு சட்டை பைத்தியம். சினிமா ஹீரோ எப்படிப்பட்டவர் என்று ஆரம்பிக்கும் ஆரவாரமான முதல் காட்சி போல ஒரு சம்பவத்தைச் சொல்லுகிறேன். வேலைக்கு...

 செய்தி வசிப்பாளர்களின் தேர்தல் செய்தி

0
கோபாலகிருஷ்ணன் பல்வேறு தமிழ் செய்தி ஊடகங்களில் செய்தி வாசிப்பாளர்களாகப் பணி புரிந்த / பணிபுரியும்  செய்தியாளர்களின் நலனுக்காக கடந்த ஆறு ஆண்டு களாகத் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டுவருகிறது தமிழ் செய்தி வாசிப்பாளர் கள் சங்கம்....