0,00 INR

No products in the cart.

கடையை மூடும் கார் கம்பெனிகள்

சிறப்புக் கட்டுரை
எஸ். சந்திரமௌலி

சில ஆண்டுகளுக்குமுன் கல்கி தீபாவளி மலரில் “இந்தியாவின் டெட்ராய்ட்” என்று ஒரு கட்டுரை வெளியானது. தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரும், மறைமலை நகரும் இந்தியாவின் பிரதான கார் உற்பத்தி மையங்களாக முக்கியத்துவம் பெற்று வருவதை சிலாகித்து எழுதப்பட்டது அந்தக் கட்டுரை. ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது. கொரோனாவால் உற்பத்தி பாதிப்பு, விற்பனை சரிவு, வேலை இழப்புகள், சம்பளக் குறைப்பு, மக்களின் வாங்கும் சக்தியில் கடுமையான பாதிப்பு என்று பெரும் பொருளாதாரத் தாக்கத்தை நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்தியாவில் கால் பதித்த அமெரிக்காவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் தன் உற்பத்தியை நிறுத்திக்கொண்டு, இங்குள்ள இரண்டு கார் தொழிற் சாலைகளையும் மூடப்போவதாக அறிவித்துள்ளது பல்வேறு தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒன்று சென்னைக்கு சமீபத்தில் உள்ள மறைமலைநகரிலும் இன்னொன்று குஜராத் மாநிலத்தில் சனந்த் என்ற இடத்திலுமாக ஃபோர்டு நிறுவனத்துக்கு இந்தியாவில் இரண்டு தொழிற்சாலைகள் உண்டு. மறைமலைநகர் தொழிற்சாலையில் ஆண்டுக்கு இரண்டு லட்சம் கார்கள் உற்பத்தி செய்யலாம்; கார்களுக்குத் தேவையான மூன்றரை லட்சம் இன்ஜின்களைத் தயாரிக்கலாம். குஜராத் தொழிற்சாலையில் ஆண்டுக்கு இரண்டு லட்சத்து 40 ஆயிரம் கார்களையும், 2 லட்சத்து 70 ஆயிரம் இன்ஜின்களையும் உற்பத்தி செய்யலாம். ஆனால், ஃபோர்டு, தனது உற்பத்தித் திறனில் 20% அளவுக்கே உற்பத்தி செய்து வந்தது. அதிலும் பாதி ஏற்றுமதி செய்யப்பட்டது.

இந்திய கார் மார்க்கெட்டில் ஃபோர்டின் சந்தை மதிப்பு வெறும் ஒன்றரை சதவிகிதம்தான். இன்னும் சொல்லப்போனால், இந்த வருடம் ஜனவரி தொடங்கி ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் ஃபோர்டு கம்பெனி வெறும் 2800 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. கடைவிரித்தேன்; கொள்வாரில்லை என்பது போல, ஃபோர்டு நிறுவனத்தின் கார்கள் விற்பனையில் பெரும் தேக்கத்தைச் சந்தித்த சூழ்நிலையில், குஜராத் தொழிற்சாலையில் வரும் டிசம்பருடனும், சென்னை தொழிற் சாலையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடனும் உற்பத்தியை முழுவது மாக நிறுத்தி, தொழிற்சாலைகளை மூடுவதாக ஃபோர்டு அறிவித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த பத்து வருடங்களில் மொத்தத்தில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் அடைந்துள்ளதாகக் கூறும் ஃபோர்டு கம்பெனியின் இந்த முடிவினால் நேரடியாகச் சுமார் 4000 பேர்கள் வேலை இழப்பார்கள். மறைமுக பாதிப்பு எத்தனை என்பது குறித்து ஆதாரபூர்வமான புள்ளிவிவரம் இல்லை என்றாலும், 25 ஆயிரம் என்று சொல்கிறார்கள்.

ஃபோர்டுக்கு முன்பாக, நஷ்டம் காரணமாக இந்தியாவில் தாக்குப் பிடிக்க முடியாமல் கடையைக் கட்டிய இன்னொரு அமெரிக்க கார் கம்பெனி ஜெனரல் மோட்டார்ஸ். 2017ல், குஜராத்தில் செயல்பட்டு வந்த கார் தொழிற்சாலையை மூடிவிட்டு, மகாராஷ்டிராவில் இருந்த தொழிற் சாலையை கிரேட் வால் மோட்டார்ஸ் என்ற சீன கார் கம்பெனிக்கு விற்றுவிட்டது ஜி.எம். என்னும் ஜெனரல் மோட்டார்ஸ். கார் கம்பெனி களின் கதைதான் இப்படி என்று இல்லை. பிரபல மோட்டார் சைக்கிள் நிறுவனமான ஹர்லி டேவிட்ஸன் இந்தியாவில் ஹரியானாவில் தொழிற் சாலையை ஆரம்பித்தாலும், 2017ல், கடையைக் கட்டிவிட்டது. இப்போது, ஹர்லி டேவிட்ஸன் பைக்குகளை இறக்குமதி செய்து, இந்தியாவில் விற்க ஹீரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது.

கொரோனாதான் ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சிக்குக் காரணமா? என்றால் இல்லை என்றே சொல்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். கடந்த சில ஆண்டுகளாகவே, இந்திய ஆட்டோமொபைல் துறையில் சுணக்கம் நிலவுகிறது. சில மாதங்களுக்கு முன்பு, அகில இந்திய அளவில் இந்திய ஆட்டோமொபைல் துறையினரது கருத்தரங்கம் ஒன்று நடந்தது. அதைக் கருத்தரங்கம் என்பதைவிட “கவலை அரங்கம்” என்றே சொல்ல வேண்டும். காரணம், அதில் கலந்துகொண்டு பேசிய அனைவருமே, ஆட்டோமொபைல் துறை சந்தித்துக் கொண்டிருக்கும் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தனர்.

மாருதி சுசுகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா, “ஆட்டோ மொபைல் துறையின் பிரச்னைகள் குறித்து பலரும் பேசுகிறார்கள். ஆனால், அதனைத் தீர்த்துவைக்க தீர்க்கமான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை” என்று வருத்தப்பட்டார்.

டி.வி.எஸ். நிறுவனத்தின் வேணு ஸ்ரீனிவாசன், “அரசு, சொகுசுக் கார்களுக்கு 28% ஜி.எஸ்.டி. போட்டிருக்கிறது. சாமானிய மக்கள் பயன் படுத்தும் இரண்டு சக்கர வாகனங்களுக்கும் அதே அளவு ஜி.எஸ்.டி. வரி விதிப்பது எப்படி நியாயம்?” என்று கேள்வி எழுப்பினார். “வேலை வாய்ப்பு, வரியின் மூலமான வருவாய், அன்னிய செலாவணி என்று பல வழி களிலும் ஆட்டோமொபைல் துறை பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்களிக்கிறது. ஆனால், அதற்கு ஏற்ப, இந்தத் துறையில் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு அரசாங்கம் கைதூக்கிவிட முன்வரவில்லை!” என்பது இவரது அழுத்தமான கருத்து.

“மாநில அரசாங்கங்கள் பன்னாட்டுத் தொழில் துறை நிறுவனங்களை ஈர்க்க முதலீட்டாளர் மாநாடுகளை நடத்துகிறார்கள்; இத்தனை ஆயிரம் கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக சாதனை பேசுகிறார்கள். அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், நிலம், மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தரப்படும் சலுகைகளை மட்டும் குறிப்பிட்டால் போதாது. தொழிலாளர் நலன் போன்ற விஷயங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அதற்கும் மேலாக, இத்தகைய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்த வெளிப்படைத் தன்மை மிகவும் அவசியம்.

இதற்கு முன்பு நோக்கியா, ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற கம்பெனி கள் தொழிற்சாலையை மூடிவிட்டு போனபோது, தொழிலாளர்கள் வேலை இழந்து, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை மறக்கமுடியுமா? ஒரு பெரிய தொழிற்சாலையை மூடினால் அதன் மூலமாக பாதிப்புக்குள் ளாவது அங்கே நேரடியாகவோ, ஒப்பந்த அடிப்படையிலோ வேலை செய்யும் ஊழியர்கள் மட்டுமில்லை. அவர்களுக்கு உதிரி பாகங்கள் உற்பத்தி செய்து கொடுக்கும் சிறு தொழில் நிறுவனங்கள் முதல், தொழிற் சாலை பகுதியில் டீக்கடை, சிறு ஓட்டல், பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள் வரை பலரும் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

இதையெல்லாம் மனதில்கொண்டு, பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க வரும்போது, கூடுதலான பாதுகாப்பு அம்சங்களையும் சேர்க்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது!” என்று சொல்கிறார் மார்க்ஸிஸ்ட் கம்யூனிட் கட்சியின் மூத்த தொழிற்சங்கவாதியும், முன்னாள் ராஜ்யசபை உறுப்பினருமான ரங்கராஜன். அவர், மேலும் கூறுகையில், “பிரதமர் மோடி அமெரிக்கா செல்லும்போது, மற்ற விஷயங்களோடு சேர்த்து, இந்தியாவுக்கு வரும் அமெரிக்க கம்பெனிகள் இப்படி திடீரென்று தொழிற்சாலைகளை மூடுவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் அமெரிக்க அதிபரோடு பேசவேண்டும்” என்கிறார்.

“கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்டிருக்கும் பொருளாதாரத் தேக்க நிலையில், கீழ்த்தட்டு, லோயர் மற்றும் அப்பர் மிடில்கிளாஸ் மக்கள்தான் பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் ஒரு மிடில்கிளாஸ் மனிதர், சாமானிய மனிதர்களுக்கான கார் ஒன்றை வாங்குவது என்றால்கூட மாதம் 15 ஆயிரம் ரூபாய் ஈ.எம்.ஐ. கட்டவேண்டும். இன்று பெட்ரோல் லிட்டர் நூறு ரூபாய் விற்கிறது. மாதத்துக்கு பெட்ரோலுக்கே மூவாயிரம் ரூபாயாவது வைக்கவேண்டும். இதெல்லாம் அவருக்கு இன்றைய சூழ்நிலையில் கட்டுப்படியாகுமா? மாருதியின் சாமானிய மனிதர்களுக்கான ஆல்டோ மாடல் கார் இந்தியாவில் அமோகமாக விற்றுக் கொண்டிருந்தது. ஆனால், இன்று அந்த மாடல் காரை வாங்கும் சக்திகூட மத்திய தர வர்க்கத்தின ருக்கு இல்லை என்பதுதான் யதார்த்தம்! அதே சமயம் சொகுசு கார்கள் விற்பனையில் பாதிப்பு இல்லை. காரணம், அத்தகைய கார்களின் வாடிக்கையாளர்களான மேல்தட்டு மனிதர்களுக்குப் பெரிசாய் பாதிப்பு கிடையாது. கார் மீதான வரியையும், பெட்ரோல் விலையையும் குறைத் தால்தான் சாமானிய மக்கள் வாங்குவார்கள். ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி அடையும்” என்று கருத்து தெரிவிக்கிறார் நிதி ஆலோசகரான ஆனந்த் ஸ்ரீனிவாசன்.

கார் கம்பெனிகள் இந்தியாவில் கடையைக் கட்டுவது தொடருமா? என்று கேட்டால், ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் அணுகுண்டு பதில்: “நிச்சயம் தொடரும்! லிஸ்ட்டில் அடுத்த நிறுவனம் ஹோண்டா. அவர்கள் ஏற்கெனவே உத்தரப்பிரதேசத்தில் நொய்டா தொழிற்சாலையை மூடிவிட்டார்கள். ராஜஸ்தானில் உள்ள தொழிற்சாலை மட்டுமே செயல்படுகிறது.”

பாக்ஸ் மேட்டர்

ஃபோர்டு செய்த தவறு என்ன?

“இந்திய கார் மார்கெட்டை ஆக்கிரமிக்கும் திட்டத்துடன் இந்தியா வுக்கு வந்த ஃபோர்டு கம்பெனி இன்று மூடும் நிலைக்கு வந்திருக்கிறது என்றால் அதற்கு என்ன காரணம்? ஃபோர்டு செய்த தவறு என்ன?” என்ற நமது கேள்விக்கு மோட்டார் தமிழ் மாத இதழின் ஆசிரியர் கிருஷ்ணன் அளித்த பதில்:

சென்னையில் நிறுவிய முதல் தொழிற்சாலையே முழு திறன் உற்பத்தியில் செயல்படாதபோது, ஃபோர்டு நிறுவனம் ஒரு பில்லியன் டாலர் முதலீட்டில் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலையை தொடங்கியது தேவையற்றது. ஃபோர்டின் தோல்விக்கு மூன்று முக்கிய காரணங் கள். 1.அவர்கள் அறிமுகம் செய்த கார் மாடல்கள், 2- விலை நிர்ணயம், 3. சந்தையில் நிலைப்படுத்துதல் (பொசிஷனிங்). புரியும்படியாகச் சொல்லவேண்டுமானால், ஃபோர்டு, இந்திய கார் சந்தை நிலவரத்தை, இந்திய கார் வாடிக்கையாளர்களின் மனோபாவத்தைப் புரிந்துகொள்ளாமல், இங்கே காலை வைத்ததுதான். இந்திய கார் சந்தையில் மாருதியும், ஹுண்டாயும் கோலோச்ச முடிகிறது என்றால், அதற்கு அவர்கள் சிறு ரக கார்கள் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்துவதுதான் முக்கிய காரணம். ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் ஆகியோர் சிறிய ரக கார்கள் தயாரிக்க வில்லை.

150க்கும் அதிகமான ஃபோர்டு கார் விற்பனையாளர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களை கம்பெனி குறித்த ரகசியங்களைக் காக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வற்புறுத்தி வருகிறது ஃபோர்டு. ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத விற்பனையாளர்களுக்கு நஷ்டஈடு கிடைக்காது.

இந்திய கார் சந்தையில் ஃபோர்டின் சந்தை பங்கு மிகச் சொற்பம் என்பதால், அதன் மூலம் மற்ற கார் தயாரிப்பாளர்களுக்குப் பெரிய அளவில் விற்பனை உயர்வு இருக்க வாய்ப்பில்லை. சென்னை துறைமுக வருவாயில் சிறு பாதிப்பு இருக்கும்.

பரிதாபத்துக்குரியவர்கள் ஃபோர்டு தொழிலாளர்கள்தான். சராசரியாக 30 வயது கொண்ட ஊழியர்கள் பலர் அண்மையில்தான் பணி நிரந்தரம் பெற்றனர். அதன் பயனாகப் பல்வேறு காரணங்களுக்காகவும் கடன் பெற்றிருக்கிறார்கள். அவர்களின் எதிர்காலம் பெரிய கேள்விக்குறிதான்! பாவம்! கம்பெனியின் இந்த அறிவிப்பினால், ஒரு தொழிலாளரது திருமண நிச்சயதார்த்தம் ரத்தாகிவிட்டது.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

இந்தச் சிறுமி எதிர்காலத்தில்  இந்தியாவிற்காக செஸ் ஆடுவார்

0
வினோத்   அசத்தலான ஆரம்ப விழா, சிறப்பான ஏற்பாடுகளுக்காக அனைத்து நாட்டு வீர்களின் பாராட்டுகளைத்தாண்டி  இந்த ஒலிம்பியாட்டில் கவர்ந்த விஷயங்களில் ஒன்று சிறுவர் சிறுமியர் பெருமளவில் பங்கேற்பாளர்களாகவும் பார்வையாளர்களாகவும் கலந்து கொண்டனர். இதுவரை நடந்த எந்த...

சுதந்திர தினம் : இந்தியாவுக்கு ஆகஸ்ட் 15; பாகிஸ்தானுக்கு ஆகஸ்ட் 14. என்ன காரணம்

1
  சுதந்திர தின ஸ்பெஷல்   – எஸ். சந்திரமௌலி இந்திய சுதந்திர சட்டத்தின்படி,  பிரிட்டிஷ் அரசாங்கம் 1947ஆம் வருடம் ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவில் அதாவது, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவை, இந்தியா, பாகிஸ்தான்...

வாசகர்களைக் கதைக்குள் அழைத்துச் செல்லும் ஒரு குரல் .

2
கா.சு.வேலாயுதன்   ‘‘நான் ஒரு குரல் கலைஞர்!’’ - ஆடியோ புத்தகங்களில் கலக்கும் மீனா கணேசன் சென்னை புழலிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் ரெட்ஹில்ஸ். இங்கே ஓர் ஒதுக்குப்புறமான இடத்தில் இருக்கிறது அந்த வீடு. சின்னதாக ஒரு ஹால்,...

அண்டார்டிக்காவிலிருந்து 5000 கி.மீ., பறந்து வந்த பறவை

0
  இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடம் கடற்கரை பகுதிகளில் மாதந்தோறும் பறவைகள் கணக்கெடுக்க  ஆராய்ச்சி மாணவர்கள் செல்வது வழக்கம். அண்மையில் தங்கச்சி மடம் அந்தோணியார்புரம் மீன்பிடி இறங்குதளம் அருகே வனத்துறையைச் சேர்ந்தவர் மீனவருடன்...