கனவுகளோடு தொடங்கி கனவாய் முடிந்துபோனது!

கனவுகளோடு தொடங்கி கனவாய் முடிந்துபோனது!
Published on
ஜெயராமன் ரகுநாதன்

அப்படி ஹாய்யாக நாலு மணி வாக்கில் பொடி நடையுடன் கற்பகா காபி சென்டரைத் தாண்டி, அதான் அந்த புஸ்தி மீசை வைத்த பரமேச்வரன் மலையாளப் புஸ்தகம் படித்துக் கொண்டே இருப்பாரே அந்தக் காபி கடை யைத் தாண்டி பாரத் மெட்ரிக்குலேஷனைக் கடந்து சிக்னலில் தாமதித்து ரோடைக் கிராஸ் பண்ணி சாஸ்திரி நகரில் முன்னேறினால் ஆறு டெஸ்டுக்கு மேல் பண்ணினால் பத்து பர்சண்ட் டிஸ்கவுண்ட் தரும் டையக்னோஸ்டிக் சென்டரையும் கடந்து இருக்கும் கிராண்ட் ஸ்வீட்டை அடைந்து அந்த ரவா லாடு மணக்கும் ஏ.ஸி. ரூமில் போய் 'முந்திரி பக்கோடா 200 கிராம்' என்று கேட்டால் பதிலுக்கு,

'அசோகா ஹல்வாவும் சூடா வந்திருக்கு சார்' என்று பதில் வந்தால்…

அது மாதிரி நடிகர் மோகன் ராம் கோடம் பாக்கம் ஸ்டூடியோக்கள் பத்திப் பேசப்போறார் என்றாலே குஷிதான். ஆனால் இந்த முறை கூடவே ஸ்ரீராமும் உரையாடுவார் என்பது அசோக ஹல்வாவுடன் சேர்த்து சாப்பிடும் முந்திரிபக்கோடா என்பதை ஒத்துக்கொள்வீர் கள் தானே!

கோடம்பாக்கம் பிரிட்ஜ் இல்லாத ஆற்காட் ரோடும், அங்கே ரயில்வே கேட்டும், கொஞ்ச தூரம் வரை மட்டும் தார் ரோடும், பிற்பாடு மணல் கப்பி ரோடும் நினைத்துப் பாருங்கள்.

மோகன் ராம் அங்கேயிருந்து தொடங்கி இன்று இருந்த இடம் கூட மாறிப்போய் அடையாளம் காணாமல் போன பல ஸ்டூடியோக்கள் பற்றிப் பேசினார்.

தென்னிந்திய சினிமாவின் பிதாமகரான ஹெச்.எம்.ரெட்டியின் வீடு இருந்த இடமான இப்போதைய பாம்குரோவ் ஹோட்டலில்தான், தான் அனந்துவுடன் பேசி, பின்னர் பாலசந்த ருடன் இணைந்து பணியாற்றிய அனுபவத் துடன் மோகன் ராம் தொடங்கியது பொருத் தமே – ஆற்காட் ரோடு என்னும் கோடம்பாக்க ஜரிகைக் கனவுலகத்தின் ஆரம்பத்தில்தானே பாம்குரோவ் இருக்கிறது.

தமிழ் சினிமாவின் பணக்கார வீட்டில் எப்போதும் ஏன் மாடிக்குப்போக சிவப்புக் கம்பளம் விரித்த இரட்டை மாடிப்படிகள் என்று கேட்டு மெல்லீசான கேலி அடித்த கையோடு பொருத்தமாக fiddler on the roofபாடல் 'எங்கோ செல்லும் மூன்றாவது படிக்கட்டை' நினைவுபடுத்தியது, மோகன் ராமைப் போன்ற விற்பன்னர்களுக்கே சாத்தியம்!

பிரசாத் ஸ்டூடியோவை அடையும் முன் இருந்த அருணாசலம் ஸ்டூடியோவில் குளமும் கிராமத்து வீடுகளும் எப்படி அக்கால கிராம சீன்களுக்குத் தோதாய் இருந்தன என்பதும் ராஜராஜ சோழன் படத்துக்காகப் போடப்பட்ட பிரஹதீஸ்வரர் ஆலய செட்டைப் பார்த்து பஸ்ஸில் போகும் ஜனம் கன்னத்தில் போட்டுக் கொண்ட சமாச்சாரமும் அதீத சுவாரஸ்யத்தில் தான் சேர்த்தி.

நாம் கேள்வியே படாத பொன்னுனூரி பிரதர்ஸின் ஸ்டூடியோ மற்றும் கோடம்பாக்கத்தில் முதன்முதலில் தொடங்கப்பெற்ற ஸ்டார் கம்பைன்ஸ் ஸ்டூடியோவும் அதன் உரிமை யாளர் ஏ. ராமையா பற்றியும் மோகன்ராம் சொன்னவை தென்னிந்திய சினிமா பற்றிய சரித்திரத்தில் ஆவணப்படுத்தப்பட வேண்டிய சமாச்சாரங்கள்.

ஏ.எல்.எஸ். படங்களில் டைட்டிலில் வரும் ஸ்டூடியோ பெயர்கள் எதுவுமே நிஜம் இல்லையாம். ஏனென்றால் ஏ.எல்.எஸ். எந்த ஸ்டூடியோவையும் வைத்திருக்கவில்லை. ஆனால் அவர் அப்போதைய கோடம்பாக்க ஸ்டூடியோக்களை லீஸுக்கு எடுத்துப் படம் பிடித்தாராம். அதனால் டைட்டிலில் சாரதா ஸ்டூடியோ என்றெல்லாம் பேர் வந்தாலும் அவை உண்மையில் வேறு ஸ்டூடியோவாம்!

ஸ்டூடியோக்களின் மவுசு ஏன் குறைந்து போனது என்பதற்கு மோகன் ராம் கூறிய காரணம் அபாரமானது. ஏதோ படங்களில் ரியலிஸம் காட்ட வேண்டும் என்பதற்காக நிஜ சூழலிலே எடுக்கப் போய்விட்டதால் என்பது மட்டுமே காரணம் இல்லை. ஒரு காலகட்டத் தில் தெலுங்கு சினிமா தயாரிப்பு சென் னையை விட்டு இடம் பெயர்ந்ததும் ஒரு காரணம் என்பதை அழகாக விளக்கினார்.

இதற்காக பாரதிராஜாவிடம் எம்.ஜிஆர். சொன்ன செய்தியும் அசாதாரண சுவாரஸ்யத் தில்தான் சேர்த்தி!

இன்னொரு அதி சுவாரஸ்யமான விஷயம்!

ஏன் தென்னிந்திய சினிமா கோடம்பாக்கத்தில் முகாமிட்டது என்பதற்கு ஸ்ரீராமும் மோகன் ராமும் பேசின அருமையான காரணத்தை நான் இங்கே சொல்லப்போவ தில்லை. அது மோகன் ராமின் லெக்சருக்கு நியாயம் செய்வதாகாது. அடுத்த முறை அவர் பேசும்போது தேடிப்போய் கேட்டு ரசியுங்கள்.

Nostalgia என்னும் வார்த்தைக்குத் தமிழில் என்ன என்று கேட்டால் கச்சிதமாக 'ஏக்கம்' என்கிறது இணையதளம். ஆங்கிலத்தை நாடினால் ஆக்ஸ்ஃபோர்ட் டிக்‌ஷனரிகூட இதை விளக்கும்போது 'Nostalgia is associated with a yearning for the past, its personalities,possibilities, and events, especially the good HYPERLINK Good old days` or a `warm childhood`

என்கிறது.

நோஸ்டாஜியாவைப் பற்றிச் சொல்லும் போது கிரேக்க இலக்கியத்தின் ஹோமரை நினைவுகொண்டு இந்த நோஸ்டால்ஜியாவை '`Homeric word`' என்பார்களாம்.

எத்தனையோ சந்தோஷ மணித்துளிகளை நமக்கு வழங்கிய கோடம்பாக்கம் ஸ்டூடியோக் களின் ஒரு காலத்திய உன்னதமும் இன்றைய ஷீணமான நிலைமையையும் நினைத்துப் பார்த்து ஏக்கப்பட வைக்கிற சமாச்சாரமாகவே இருப்பதை வி. ஸ்ரீராம் முத்தய்ப்பாக 'கனவு களோடு தொடங்கி இன்று கனவாகவே முடிந்து போனது' என்று சொன்னதைவிட நான் என்ன சொல்லிவிட முடியும்.

இனி, வேறென்ன? அடுத்த வருட மெட் ராஸ் தின ஸ்ரீராம் மற்றும் மோகன் ராமின் நிகழ்ச்சிகளுக்காகக் காத்திருக்கலாம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com