0,00 INR

No products in the cart.

கல்கி வார இதழ் 1941

திருச்சி ஜெயிலில்தான் கிருஷ்ணமூர்த்தியும், சதாசிவமும் முதல் முறையாகச் சந்தித்துக் கொண்டார்கள். ”சுதந்திரப் போராட்டக் கைதிகளாக! அந்தச் சந்திப்பு ஆழமான நட்பாக மலர்ந்தது. இருவரும் சேர்ந்து முதலில் ஆனந்த விகடனில் பணியாற்றி, அதன்பின்னர் ‘கல்கி’ பத்திரிகையைத் தொடங்குவதற்கு பிள்ளையார் சுழி போட்ட வரலாற்றுச் சிறப்பு கொண்டது திருச்சி சிறைச்சாலை.

நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தியும், சதாசிவமும் சேர்ந்து புதிய பத்திரிகை ஒன்றைத் தொடங்க முடிவு செய்தார்கள். கிருஷ்ணமூர்த்தியின் சில பல புனை பெயர்களுள் ஒன்றான ‘கல்கி’ என்பதையே புதிய பத்திரிகைக்குச் சூடுவது என்றும் முடிவானது. ஆனால் போதிய மூலதனம் இல்லை. எப்படி பணம் புரட்டுவது என்று நண்பர்கள் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், புதிய பத்திரிகையின் மூலதனப் பிரச்னைக்குத் தீர்வு தம் கையில் இருப்பதாக உணர்ந்து எம்.எஸ். தமக்கு அளிக்கப்பட்ட ‘சாவித்திரி’ பட வாய்ப்பினை ஏற்க சம்மதம் தெரிவித்தார். ராஜாஜி, கல்கி, சதாசிவம், எம்.எஸ்., டி.கே.சி. என்ற ஐவர் கூட்டணி, தமிழ் பத்திரிகை உலகில் கல்கியின் வெற்றிக்கு பலமான அடித்தளமிட்டது.

கல்கி பத்திரிகைக்கு வினாயகர் காவல் தெய்வம் என்பது எல்லோருக்கும் தெரியும். கல்கியின் முதல் சந்தாதாரர் வினாயகர்; இரண்டாவது சந்தாதாரர் முருகன் என்றால் ஆச்சர்யப்படுவீர்கள். ஆம், பிரபல காங்கிரஸ்காரரான விநாயகம்தான் கல்கிக்கு முதலில் சந்தா செலுத்தியவர்; அடுத்தது க.நா.சுப்ரமணியம். இரண்டணா விலையில், 1941 ஆகஸ்ட் முதல் வாரம் வெளியான முதல் இதழில், கல்கி பத்திரிகைக்கு மூன்று நோக்கங்கள் உண்டு என்று ஆசிரியர் கல்கி குறிப்பிட்டார். ஒன்று: தேச நலன்; இரண்டு தேச நலன்; மூன்று? அதுவும் தேச நலன்தான்! அதனை நிரூபிக்கும் வகையில் முதல் இதழின் அட்டையில் இடம்பெற்றது மூவண்ண காங்கிரஸ் கொடி! அடுத்த இதழ் அட்டையில் ராஜாஜி.

தொடக்கத்தில் மாதம் இருமுறையாக வெளியான ‘கல்கி’, 1942ல்,மாதம் மும்முறை இதழாகி, பின்னர் 1944 ஏப்ரல் முதல், வார இதழ் ஆனது. உபரியாக, ராஜாஜியின் அரசியல் கருத்துக்களைத் தாங்கி, செய்தித்தாள் வடிவில் ‘துணை கல்கி’ வெளியானது. 1952ல், தமிழ் பத்திரிகை உலகில் சாதனை படைத்தது ‘கல்கி’. ஆடிட் பீரோ ஆஃப் சர்குலேஷன் (ஏபிசி) அமைப்பின் சான்றிதழின்படி 63,555 பிரதிகள் விற்று, அகில இந்திய அளவில் பிராந்திய மொழிகளில் மிக அதிகமாக விற்பனையாகும் பத்திரிகை என்ற பெருமையும், இந்தியாவின் டாப் 10 வரிசையில் ஆறாம் இடம் என்ற கௌரவமும் பெற்றது.

1954 டிசம்பர் ஐந்தாம் தேதி கல்கி காலமானார். கல்கியின் மறைவுக்குப் பின், பத்திரிகையின் ஆசிரியர் யார்? என்ற கேள்விக்கு சதாசிவம் கண்ட தீர்வு: மீ.ப.சோமு. அகில இந்திய வானொலியில் பணியாற்றிக் கொண்டிருந்த சோமு, மத்திய அரசின் பிரத்யேக அனுமதியின்பேரில் கல்கியின் ஆசிரியர் பொறுப்பையும் கவனித்துக் கொண்டார். பிற்பகல் வரை ரேடியோ அதன் பின் பத்திரிகை அலுவலகம் என்று சுழன்று வந்து அவர் பணியாற்றினார். அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி 1955ல் ஆரம்பமானது. 1956ல், சதாசிவம் ஆசிரியர் பொறுப்பினை ஏற்றார்.

1965 புத்தாண்டு இதழில், ஆசிரியர் சதாசிவம், “மக்களுக்குப் பிடித்த விஷயங்கள் எவை என்று பாராமல், மக்கள் நலனுக்கு உகந்த விஷயங்கள் எவை என்பதை சீர்தூக்கிப் பார்த்து அந்த விஷயங்களை தீரமாக எடுத்துச் சொல்லி, அவற்றில் மக்களுக்கு பிடித்தம் ஏற்படுத்துவதே பத்திரிகை தர்மம்” என்று அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டார்.

1966 கல்கிக்கு வெள்ளிவிழா ஆண்டு. அன்றைய ஆளுனர் சர்தார் உஜ்ஜல்சிங் தலைமையில் வெள்ளி விழாக் கொண்டாட்டம். பி.டி.ராஜன் வெள்ளிவிழா மலரை வெளியிட, ராஜாஜி நாவல், சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். விகடன் அதிபர் எஸ்.எஸ்.வாசன் ‘கல்கி’ வெள்ளிவிழா பற்றி ‘தம்பி வீட்டுக் கல்யாணம்’ என்று சிறப்புக் கட்டுரை எழுதினார். (பின்னாளில், விகடன் பொன் விழாவின்போது, கல்கி ராஜேந்திரன் ‘அண்ணன் வீட்டுக் கல்யாணம்’ என்று கல்கியில் சிறப்புக் கட்டுரை எழுதினார்)

1974 தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் ‘கல்கி’யின் ஆசிரியர் பொறுப்பேற்றார் கி.ராஜேந்திரன். ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்த அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி மூலமாக தமிழ் நாட்டில் பல எழுத்தாளர்கள் அறிமுகமாயினர். பலரது எழுத்துக்களுக்கு அங்கீகாரம் கிட்டியது. போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் பலர் தங்கள் எழுத்தால் பேரும், புகழும் பெற்று பிற்காலத்தில் சிறுகதைப் போட்டிக்கு நடுவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1977 ஏராளமான ஊழியர்கள், அபரிமிதமான நிர்வாகச் செலவு காரணமாக பத்திரிகையைத் தொடர்ந்து நடத்தலாமா? வேண்டாமா என்று சதாசிவம் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், தொழிலாளர் வேலை நிறுத்தமும் சேர்ந்துகொள்ள, கல்கி பத்திரிகை நிறுத்தப்பட்டது. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கல்கி பத்திரிகையை நிறுத்தும்படி ஆகிவிட்டாலும் கி.ராஜேந்திரனும் பரதன் பப்ளிகேஷன்ஸின் மற்ற இயக்குனர்களான வி.முரளி, ஆத்மநாதன், வி.வைத்யநாதன், சந்திரமௌலி போன்றோரும் கல்கியை மறுபடி ஆரம்பித்து நடத்த ஆர்வம் கொண்டனர்.

சதாசிவம்-எம்.எஸ். தம்பதியரின் ஆசியுடன், 1978 ஜூன் மாதம் கிண்டியில் வாடகைக் கட்டடத்தில் புதிய அலுவலகத்தில் இருந்து மறுபடி ‘கல்கி’ வெளி வரத் தொடங்கியது. அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். அனுப்பிய வாழ்த்துக் கடிதமும் ‘கல்கி’யில் வெளியானது. 80ஆம் ஆண்டில் பிரபலங்களின் தயாரிப்பில் மாதம் ஒரு சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. திரைக்கதை சிறப்பிதழ் தயாரித்தவர் செல்வி ஜெயலலிதா!

வானொலியில் விவிதபாரதி வர்த்தக ஒலிபரப்பில் கல்கி வழங்கிய நிகழ்ச்சி ‘நேரம் நல்ல நேரம்’. வாசகர்கள் கேள்விக்கு, பிரபலங்கள் கூறும் பதில்களை ஒலிப்பதிவு செய்து, 52 வாரங்கள் வியாழன் தோறும் ஒலிபரப்பப்பட்ட அந்த நிகழ்ச்சி, நேயர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றது மட்டுமில்லாமல், வர்த்தக ஒலிபரப்பு உயர் அதிகாரிகளின் பாராட்டையும் பெற்றது. வைரமுத்து, மு.மேத்தா, ம.பொ.சி., இயக்குனர்கள் கே.பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன் என பல பிரபலங்களும் மகிழ்ச்சியோடு பங்கேற்றனர்.

இதன் அடுத்தகட்டமாக 1986 மற்றும் 87ல் ‘கல்கி’ எடுத்த ஒரு புதிய முயற்சியினை இதழியலின் சிகரம் என்றே சொல்லலாம். அதுதான், ‘மாதம் ஒரு மாவட்டம்’ என்ற கல்கியின் சமுதாயப் பணி.

சாதனை படைத்த திரையுலகப் பிரபலங்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை கல்கி மூலம் பகிர்ந்துகொள்ளும் தொடர்கள் பின்னர் தனிப் புத்தகங்களாக வெளியாகி இன்றும், தமிழ் சினிமா உலகின் சரித்திர ஆவணங்களாகப் படித்துப் பாதுகாக்கப்படுகின்றன.

1992ல் கல்கி பொன்விழா, மதிப்புக்குரிய ஆர். வெங்கடராமன் தலைமையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் கவிப்பேரரசு வைரமுத்து. சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம்.

1993ல், கல்கி குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த சீதா ரவி ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 1998ல் அமரர் கல்கியின் நூற்றாண்டு விழாவினை ஜி.கே.மூப்பனார் தலைமையில் அமைந்த நூற்றாண்டு விழாக் குழு சீரிய முறையில் திட்டமிட்டு, பிரம்மாண்டமான முறையில் ஆண்டு முழுவதும் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது. அமரர் கல்கியின் உருவம் பொறித்த தபால் தலை மற்றும் நூற்றாண்டு விழா மலர் நிறைவு விழாவில் வெளியிடப்பட்டன.

2002ல், ‘கல்கி’யின் வைரவிழாக் கொண்டாட்டம். தமிழக ஆளுனர் ராமமோகன்ராவ், நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், ப.சிதம்பரம், கவிப்பேரரசு வைரமுத்து, ஏவி.எம்.சரவணன், ‘ஹிந்து’ ராம் போன்றவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

2013 பிப்ரவரி முதல் ‘பெரிதினும் பெரிதுகேள்’ என்ற முழக்கத்துடன் கல்கி பெரிய வடிவத்தைப் பெற்றது, 2011 முதல் கல்கி ராஜேந்திரனின் இரண்டாவது மகள் லக்ஷ்மி நடராஜன் ஆசிரியராக பொறுப்பேற்றார்.

கோவிட் 19 பெருந்தொற்றின் தாக்கத்திற்குப்பிறகு ஏற்பட்ட பொருளாதார சரிவு காரணமாக பரதன் பப்ளிகேஷன் நிறுவனத்திலிருந்து வெளியிடப்பட்ட அச்சு இதழ்கள் நிறுத்தப்பட்டு மின்னிதழ்களாக வெளிவரத் தொடங்கின.

செப்டெம்பர் 2021 முதல் பத்திரிகைகளின் களஞ்சிய உரிமங்கள் அனைத்தையும் கல்கி குழுமம் பெற்றுக்கொண்டது. லக்ஷ்மி நடராஜன் மற்றும் அவரது குழுவினரால் www.kalkionline.com இணையதளத்தில் இன்று இந்த பத்திரிகைகள் மின்னிதழ்களாகத் தோன்றுகின்றன. தற்போது, வி.ரமணன் கல்கி மின்னிதழின் பொறுப்பாசிரியராக இருந்து கல்கி பத்திரிகையின் கொள்கை களைக்கட்டிக் காத்து வருகிறார்.

 

காலமாற்றத்தின்கூறுகளைஉள்ளடக்கியபோதிலும்தேசநலகொள்கையைக்கைவிடாமல்பயணிக்கிறதுகல்கியும், கல்கிகுழுமமும்.

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In
   
New User Registration
*Required field

Related Articles

தீபம்’ – இல்லத்தின் அருள் வெளிச்சம் – 2011

0
‘கல்கி’ குழுமத்திலிருந்து வெளியிடப்படும், ‘தீபம்’ ஆன்மிக இதழுக்கு ஒரு தனிப் பெருமை உண்டு. ‘நா.பா.’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் நா.பார்த்தசாரதி அவர்கள் ஆரம்ப காலத்தில் நமது, ‘கல்கி’ குழுமத்தில் பணிபுரிந்தவர் என்பது ஒரு சிலருக்கு...

Gokulam – Celebrating childhood – 1988

1
Here is an excerpt From the First Editorial of Gokulam (July 1988 Vol.1 No.1) Dear Children, We warmly welcome you into our circle of readers. Our...

கோகுலம் – குழந்தைகளின் குதூகலம் – 1983

0
திரு. சதாசிவம் - திருமதி எம்.எஸ். தம்பதி காஞ்சி மஹாசுவாமிகளிடம் மிகுந்த பக்தி கொண்டவர்கள் என்பது யாவரும் அறிந்ததே. அவர்கள் ஒரு முறை மஹா பெரியவாளை தரிசிக்கச் சென்றிருந்த சமயம், “இன்றைக்குப் பெரியவர்களுக்கென்று...

யாதுமாகி நிற்பாள் மங்கையர் மலர் – 1981

0
1981-ல் சப்தமின்றி நடந்த புரட்சி அது. தமிழகத்தில் பெண்கள் பத்திரிகைகள் அதிகமாக இல்லாதிருந்த அந்தக் காலகட்டத்தில், சிறிய அளவில் வெளிவந்து கொண்டிருந்த மங்கையர் மலரை ‘கல்கி’ குழுமம் எடுத்து நடத்த முடிவு செய்தது....

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In
   
New User Registration
*Required field