
சிறுபுத்தி
மாமிச
விலையேற்றத்தை
மௌனமாய்
ஏற்றுக்கொண்டவன்,
கீரை விற்கும்
பாட்டியிடம்
பேரம் பேசுகிறான்!
சில்லரை
கால்கள்
கயிற்றின்
மேல் நடந்தாலும்,
கண்கள்
சாலையின் மேல்
இருக்கிறது
வித்தை காட்டும்
சிறுமிக்கு!
பச்சோந்திகள்
அடிக்கடி
நிறம் மாறும்
மனிதர்கள்
கோழிக் குஞ்சுக்கும்
கலர் கலராய்
வண்ணம் பூசி
மகிழ்கிறார்கள்!
மது
கண்ணாடி புட்டிக்குள்
இருக்கும் காலன்!
ஆயுளைக் கொஞ்சம்
கொஞ்சமாய் அபகரிக்கும்
ஆல்கஹால் அரக்கன்!
பேராண்மை
புயலில்
கூடிழந்த பறவைகள்
நிவாரணம் கேட்டு
இறைவனிடம்
கையேந்தி நிற்பதில்லை!
பாடம்
கட்டும்போதே
இடிந்து விழும்
பாலம் எழுப்பும்
மனித குலம்!
புயலிலும்
கலையாத கூடு கட்டும்
தூக்கணாங்குருவி முன்
மண்டியிட்டு
தலை குனிய வேண்டும்!