0,00 INR

No products in the cart.

காதலுக்கு மரியாதை

 டாக்டர் ஜெயஸ்ரீ சர்மா

2016 மார்கழி மாதம்.  காலை 11 மணி. நான் போட்ட கோலத்தை நானே பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தேன். பள்ளி ஆசிரியர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றதால் பொறுமையாகக் கோலம் போட முடிகிறது.

என் மகன் கோகுலின் நண்பன் பிரபு  பைக்கில் பறந்து வந்தான். “காயத்ரி ஆன்டி! காயத்ரி ஆன்டி! கோகுல் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக் கிட்டான். உங்க வீட்டுக் காய்காரம்மா பொண்ணு செண்பகத்தை. எனக்கே இப்பத்தான் தெரியும்.” நான் சுதாரிப்பதற்குள், வேறு கேள்வி கேட்க வழியில் லாது  சென்றுவிட்டிருந்தான். அதிர்ச்சியில் ராட்சத ராட்டினத்தில் மேலே இருந்து கீழே தள்ளியதுபோல நிலைகுலைந்தேன்.

மகன் கோகுல் நம்பரை அழைத்தேன். “உண்மையாடா? கேள்விப்பட்டது?”  மௌனம் எதிர்முனையில். “சொல்லித்தொலைடா? பொய்னு சொல்லுடா?” என் குரல் அழுகையாக வெடித்துச் சிதறியது.

“ஸாரி! ஸாரிம்மா!  எனக்கு வேற வழி தெரியலம்மா! வந்து சொல் றேம்மா! ப்ளீஸ்.” கெஞ்சினான் மகன்.

“உன்னய இனிமே பாக்க விரும்பலடா!!”. பட்டென்று போனை வைத்தேன். விரக்தி, வெறுப்பு, கோபம், அழுகை என்று எல்லா எதிர்மறை எண்ணங்களும் ஒன்று திரண்டு பெரும்புயலாக மனதை துவம்சம் செய்து கொண்டிருந்தன.

கண்கள் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன. மகன் கோகுலை பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டு முதல் நாளில் கோகுலை விடவும் அதிகமாக அழுது புலம்பிய அந்த நாள் நினைவுக்கு வந்தது.

வேகம் வேகமாக ஒரு வாளித் தண்ணீரைக் கொண்டுபோய் கோலத்தில் கொட்டி துடைப்பத்தை வைத்து வெறுப்புடன் கோலத்தை அழிக்க ஆரம்பித்தேன். அழிக்கும்போதே கோலத்தை வியந்து கோகுல் பேசும் வார்த்தைகள் என் நினைவில் வந்து போயின.

‘எப்படிமா? உனக்குப் புள்ளி ஸ்டெரெய்ட் லைன்ல வருது? ஸ்கேல் வைத்து அளந்த மாதிரி கரெக்ட்டா போடுறியேமா?’ என்று வியப்பான்.

என்னைக் கேட்காமல் எப்படி இவ்வளவு பெரிய முடிவெடுத்தான்? நம்பவே முடியவில்லை. நடப்பதெல்லாம் நிஜம்தானா? இல்லை கனவா? இறைவா! கனவாக இருந்துவிடக்கூடாதா? என்று ஆதங்கப்பட்டது மனம்.

என் மருமகளுக்கு என்று எவ்வளவு ஆசை ஆசையாய் நகைகளைச் சேர்த்து வைத்திருக்கிறேன். எப்படி எல்லாம், என் மருமகளுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறேன். அவளுக்குத் தலைசீவி விடவேண்டும். மருதாணி வைக்கவேண்டும். அவள் நிறத்திற்கு தகுந்தாற் போல உடைகள் வாங்க வேண்டும். கோலம் போடவும், பூ தொடுக்கவும் தெரியாவிட்டால் சொல்லிக்கொடுக்க வேண்டும். வீட்டுப் பண்டிகைகளைக் கொண்டாடக் கற்றுத்தர வேண்டும். எத்தனை எத்தனை எண்ணங்கள்! எல்லாவற்றிலும் மண்.

கோகுல்! எப்படிடா? என்னைவிட்டு இப்படி விலகிப்போனாய்? நான் என்ன தவறு செய்தேன்? உன் திருமணத்தைக் காண்பதற்குக்கூட எனக்குக் கொடுத்து வைக்கவில்லையா? உரிமை இல்லையா? அந்த அளவுக்கு அம்மா வேண்டாத வளா ஆகிட்டேனா?

கோகுல் சின்னஞ்சிறு குழந்தையாய் இருந்தபோது, திடீரென்று  ஒரு கிராமத்திற்கு என்னை மாற்றல் செய்துவிட்டார்கள். கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு அலுவலகத்திலேயே தொட்டிலில் குழந்தையையும், அலுவலக வேலையையும் மாறி மாறி கவனித்துக்கொண்ட கஷ்டமான காலங்கள் கண்முன்னால் காட்சிகளாக ஓடின.  வருத்தத்தில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

எதற்கெடுத்தாலும் அம்மா! அம்மா! என்று ஓடிவந்த குழந்தை இந்தக் கோகுல் தானா? தாங்க முடியவில்லையே!  எது வேண்டுமானாலும் என் காதில் வந்து ரகசியமாய் ஓதும் என் மகன் எப்படி இப்படி?

ஒரு நொடியில் உற்சாகத்தின் ஒளி குன்றி வீட்டில் இருள் வந்து சூழ்ந்தது. எந்த நேரமும் அழுகை , கண்ணீர்.

எங்கள் வீடும் பக்கத்து வீடும் மூன்று தலைமுறைகளாய் அதே வீடு களில் இருக்கிறோம். என் மாமியார் கொஞ்சம் அந்தக் காலப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றும் ஆசாமி. அதனாலேயே யாரும் வீட்டுக்குள் வர யோசிப்பார்கள்.. யாரும் வீட்டுக்குள் சட்டென்று வந்துவிடவும் முடியாது.  மாமியின் இந்தக் குணத்திற்குப் பயந்து, என்னுடன் வேலை பார்ப்பவர்களை, நான் ஒரு நாளும் வீட்டிற்கு அழைத்ததில்லை. எங்கள் பக்கத்து வீடானாலும் அவர்களுக்கும் அதுவே விதிமுறை. மாமியின் மறைவுக்குப் பிறகு நான் அழைத்தாலும் அவர்களால் மாற முடியவில்லை.

பக்கத்து வீட்டு தம்பதி ஜானகியும் அவள் கணவரும் வேகமாக வர, ‘என்ன?’ என்பதுபோல் பார்த்தார் என் கணவர்.

“கேள்விப்பட்டேன். காய் விக்குறாங்களே லட்சுமியம்மா அவங்க பொண்ணு செண்பகத்தை கோகுல் கல்யாணம் பண்ணிக்கிட்டானாமே, உண்மையா? ஐயையோ! பாட்டியம்மா, எங்களையே வீட்ல சேக்கமாட்டாங்க!  இப்ப மருமகளை என்ன செய்யப்போறீங்க! வெளியவே நிறுத்திடுவீங்களா? இல்ல, உங்க மகனையும் சேத்து ஒதுக்கிடுவீங்களா? ஆஸிட் வார்த்தைகள், எங்களைப் பொசுக்கும் நோக்கோடு வெளிவந்தது.

“அம்மா! அம்மா!” தலையில் அடித்துக்கொண்டு அழுதேன். அந்த அம்மாள் கணவரை இழுத்துக்கொண்டு போக, என் கணவர் என்னை கைத்தாங்கலாக உள்ளே அழைத்துக்கொண்டு வந்தார். கோபத்தில் அவன் அலமாரிகளைத் திறந்து உடைகளையும் அவன் பயன்படுத்திய பொருட்களையும் வாசலில் வீசி எறிந்தேன்.

தேவையில்லாமல் ‘ஈன்றபொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்’ என்று நினைவில் வந்தது. என்னை நாலு பேரிடம் சுடுசொல் கேட்கும்படி பண்ணிட்டானே பாவி! அழுது தீரவில்லை துக்கம்.

ஒரு வாரமானது. நடுவில் கோகுல் தன் தந்தையிடம் பேசி இருக்கிறான். அந்தப் பெண் செண்பகத்தின் திருமண நிச்சயம் நின்றுபோனதால், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து இருக்கிறாள். இவனுக்கும் அவளைப் பிடித் திருக்கிறது. அவளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுத்ததாகவும், அந்த நேரத்தில் இதன் பின்விளைவுகளை யோசிக்காமல் முடிவெடுத்துவிட்டதாகவும் தந்தையிடம் தெரிவித்திருக்கிறான்.  அவளைக் காப்பாற்ற என் மனதை ரணமாக்கிவிட்டானே பாவி! ஆற்றாமை பொங்கி எழுந்தது.

நடந்ததை என் நெருங்கிய தோழிகளுடன் புலனத்தில் (what’s app) பகிர்ந்தேன். வாட்ஸ் அப்-பில் ஆளாளுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார்கள். அவையெல்லாம் எழுத்துக்களாகத் தெரிந்தனவே தவிர, மனசுக்குள் ஏறவே இல்லை. ஒரு தோழி சென்ற வருடத்தில் கல்லூரியில் படிக்கும் மகனை  விபத்தில் இழந்துவிட்டிருந்தாள். “எனக்கு மகனே இல்லை! உன் மகன் உன் மனதை நோகடித்தாலும் உயிரோடுதான் இருக்கிறான்” என்று எழுதி இருந் தாள்.  “இப்படிப்  பெற்றவரின் மனதை நோகடித்து  வாழும் மகனைவிட இல்லாமல் இருப்பதே மேல்” என்று கொந்தளித்து விட்டேன்.

பல நண்பர்களிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் தொலைபேசி  அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. அவை மேலும் மேலும் என் காயத் தைக் கிளறுவதாகவே இருந்தன. யார் நம்மிடம் உண்மையான அனுதாபத் தோடு பேசுகிறார்கள் என்று என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை. முடிந்தவரை எல்லா அழைப்புகளையும் என் கணவரே சமாளித்துக் கொண் டிருந்தார். ஏதாவது ஒன்று இரண்டு அழைப்புகளை எடுக்க நேர்ந்தாலும் மகன் மீது உள்ள கோபம் பன்மடங்காகி எரிமலை போலக் கொதித்தது மனது.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் என்னுடைய தோழி கமலா மொபைலில் என்னை விளித்தாள். எங்கள் இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவருக்கும் திருமணம் ஆனது ஒரே மாதம், வருடம்.

அவளுக்கு வெளிநாட்டிலும் எனக்கு உள்நாட்டிலும், இருவரும் ஒன்றாக பணியில் சேர்ந்தோம். இருவருக்கும் ஒரே மகன். பிறந்ததும் ஒரே வருடத்தில். அலைபேசியில் வந்த அழைப்பை ஏற்க மனமில்லை.

ஐந்து நிமிடங்களில் மீண்டும் ஆஸ்திரேலியாவில் இருந்து அழைப்பு வந்தது. மீண்டும் புறக்கணித்தேன்.

அரைமணியில் வீட்டுத் தொலைபேசி அழைத்தது. வேண்டாவெறுப்பாக எடுத்தேன். என் ஆஸ்திரேலியத் தோழி கமலாதான் பேசினாள். “ஏய் காயத்ரி! இப்போ என்ன ஆகிடுச்சுனு இடிஞ்சு போய் உட்கார்ந்து இருக்க. உன் பையன் செண்பகத்தைக் கட்டிக்கிட்டான், அவளோதானே! நான் சொல்வதை கொஞ்சம்  கேள்” என்றாள்.

என் மௌனத்தைச் சம்மதமாக எடுத்துக்கொண்டு தொடர்ந்தாள் கமலா.

“உன் மகன் கல்யாணம் பண்ணிக்கிட்டதால சட்டப்படி அவள் உன் மருமகள். அதை மாற்றமுடியாது. என்ன விஷயம் உன்னை வெறுப்படையச் செய்கிறது? உன்னை மதிக்காமல், தெரிவிக்காமல் உன்னுடைய ஒப்புதலைப் பெறாமல் உன் மகன் செய்தது தவறு. அதுதான் உன்னை அதிகம் பாதிச் சிருக்கு. எப்ப குழந்தை நம் வயிற்றிலிருந்து வெளியே வருகிறதோ அந்த நிமிடத்திலிருந்து அது ஒரு தனி மனிதன். அதற்கென்று விருப்பு வெறுப்புகள் உண்டு. அந்தக் குழந்தையின் மீது பாசத்தைக் கொட்டுவதற்குத்தான் நமக்கு உரிமை இருக்கே தவிர உரிமை கொண்டாடுவதற்கு உரிமை இல்லை.  இது தான் உண்மை.

உன் மருமகளுக்கு நிறைய செய்யணும்னு  ஆசைப்பட்ட!  வசதி குறைவான பெண் நீ செய்றதை  மகிழ்ச்சியோடு ஏத்துப்பா! நன்றியோடு பாசம் காட்டுவா! உன் மனசில இடம்பிடிக்க நீ சொல்லித் தர்றதை ஆவலாய் கத்துப்பா.  உன் மனதை மாற்றிக்கொள்.  மருமகளை ஏற்றுக்கொள்.”  என்றாள்

இப்பொழுது எனக்குக் கோபம் தலைக்கு ஏறியது. நெருப்பு வார்த்தை களைக் கொட்டினேன். “இத சொல்வதற்குத்தான் இத்தனை தடவை போன் பண்ணியா?  ‘கோகுல் என் மகனே இல்லை’ என்று தலை முழுகிட்டேன். ‘எனக்கு ஒரு மகன் பிறக்கவில்லை’ என்று நினைச்சிக்கறேன். தலைவலியும் பல் வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்! உனக்கும் மகன் இருக்கான்ல? வெளிநாட்டில தானே இருக்க! இது மாதிரி உனக்கு நடந்தாத் தெரியும், என் மனசு படுற பாடு. ஒரு தாயின் மன வலி இது.”

எதிர்முனையில் அரை நிமிட மௌனம். “எனக்கு அந்த வலி தெரியும் காயத்ரி” தொடர்ந்தாள் கமலா. என் மகனும் காதல் திருமணம்,  செஞ்சுக் கிட்டான்.   உன் மகன் கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணாவது உன் எதிர்பார்ப்பைவிட அந்தஸ்தில் படிப்பில் அழகில் ஜாதியில் குறைவு. இதெல் லாமே சரி செஞ்சறலாம். என் மகன்! என் மகன்!” என்று விம்ம ஆரம்பித்தாள்.  எனக்கே பாவமாக இருந்தது. ரொம்ப கடுமையாகப் பேசிட்டமோ!

“சாரி! சொல்லு கமலா!” என்றேன்.

“உன் பையன் ஒரு பொண்ணத்தானே கல்யாணம் செஞ்சுக்கிட்டான். உனக்குப் பேரன் பேத்தி பிறக்கும்.”

என் மனம் ‘திக்’ ‘திக் ‘என்று அடித்துக் கொண்டது. என்ன சொல்ல வருகிறாள் இவள்?

“இந்தப் பாழாய்ப்போன ஆஸ்திரேலியாவில் சட்டமெல்லாம் ஆணும் ஆணும் திருமணம் செஞ்சுக்கலாம்னு இருக்கு. என் மகன் இன்னொரு ஆணை  செய்துகிட்டான்டி! எல்லாம் என் தலையெழுத்து. என் விதி! வெளியே யார்க் கிட்டயும் சொல்லக்கூட முடியல காயத்ரி! என் தலைமுறை இத்தோடு முடிஞ்சு போச்சுடி!” உடைந்து அழ ஆரம்பித்தாள்.

இப்போது எப்படித் தேற்றுவது?? என்று தெரியாமல் நான் தவிக்க ஆரம் பிச்சேன். வார்த்தை தொண்டைக்குழியிலேயே சிக்கிக்கிட்டு வெளியே வர மறுத்தது!!.

வாசலில் அழைப்பு மணி. எட்டிப் பார்த்தால், கோகுலோட வாடிய முகம் கதவுக் கம்பிகளுக்கு இடையே தெரிஞ்சது. மனம் உருகியது.

“கமலா! மனசை தேத்திக்கோ! ப்ளீஸ்! கமலா! தைரியமா இரு!  நானும் நீ சொன்னதை யோசிக்கிறேன்!”  தொலைபேசியை வைத்துவிட்டு கோகுலை நோக்கி நடந்தேன்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

லைஃப்பாய் சோப்

0
அது ஒரு கனாக்காலம் 9 ஒரு காலத்தில் லைஃப்பாய் சோப் இல்லாத வீடே இல்லை என்னும் நிலை இருந்தது! வட இந்தியாவில் சர்வ சாதாரணமாக கடைகளில் வந்து அடித்தட்டு மக்கள் “லால்வாலி சாபூன்” (லால்...

இன்பத்த தேன் வந்து பாயுதே

0
மகாகவி, தேசியக்கவி,  என்று பரவலாக  அறியப்பட்ட பாரதி கடுமையான இலக்கிய நடைகளை உடைத்து, பாமரனுக்கும் புரியும் வகையில் புதிய கவி நடைகளைப் படைத்தவன். ஆனால், பாரதியார் ஒரு கவிஞராக மட்டுமல்லாமல் எழுத்தாளர், பத்திரிகையாளர்,...

ஆலயமும் வித்தையும்

0
கோயில்களில் போதனை என்று சொன்னேன். இதைக் கொஞ்சம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணவேண்டும்! ஏறக்குறைய ஆயிரம் வருஷத்துக்கு முந்தி பல்லவ, பாண்டியர்களுக்கு மேலாகப் பிற்காலச் சோழர்கள் எனப்படுபவர்களின் ஆதிக்கம் பரவிற்று. விஜயாலயன் என்பவன் இப்படி மறுபடி...

சட்டை

0
கடைசிப் பக்கம்  சுஜாதா தேசிகன் முழுக்கை, அரைக்கை என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல், நான் ஒரு சட்டை பைத்தியம். சினிமா ஹீரோ எப்படிப்பட்டவர் என்று ஆரம்பிக்கும் ஆரவாரமான முதல் காட்சி போல ஒரு சம்பவத்தைச் சொல்லுகிறேன். வேலைக்கு...

 செய்தி வசிப்பாளர்களின் தேர்தல் செய்தி

0
கோபாலகிருஷ்ணன் பல்வேறு தமிழ் செய்தி ஊடகங்களில் செய்தி வாசிப்பாளர்களாகப் பணி புரிந்த / பணிபுரியும்  செய்தியாளர்களின் நலனுக்காக கடந்த ஆறு ஆண்டு களாகத் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டுவருகிறது தமிழ் செய்தி வாசிப்பாளர் கள் சங்கம்....