0,00 INR

No products in the cart.

கார்ட்டூன்களுக்கும் உண்டு தடை

-ஜி.எஸ்.எஸ்.

கார்ட்டூன் திரைப்படங்களும் கார்ட்டூன் தொடர்களும் யாருக்கானவை? ‘இதில் என்ன சந்தேகம்? குழந்தைகளுக்கானவை’என்று பதில் சொல்வதற்கு முன் கொஞ்சம் யோசியுங்கள். இளைஞர்களும் வயதானவர்களும்கூட ஒருசேர கார்ட்டூன்களை/காமிக்ஸ்களை ரசிப்பதுதான் உண்மை. நோயாளிகளின் மன இறுக்கத்தைப் போக்க மனவியல் மருத்துவர்கள்கூட கார்ட்டூன் படங்களைப் பார்க்கும்படி ஆலோசனை கூறுவதுண்டு. அப்படியாயின் மனதை மாற்றக்கூடிய சக்தி கார்ட்டூன்களுக்கு உண்டு என்றாகிறது.

மனநிலை சீர்குலைவு (mood disorders)என்பதற்கான சிகிச்சையாக, ‘நடத்தைச் செயலூக்கம்’(behavioral activation) என்ற சிகிச்சை முறையை மனவியல் மருத்துவர்கள் பயன்படுத்துவதுண்டு. பொதுவாக, நோயாளிகளின் ஆழ்மனதில் சிறுவயதில் இருந்தே புதைந்திருக்கும் தவிப்புகளையும் அதிர்ச்சிகளையும் அவர்களுடன் பேசி, சரி செய்யும் வழிமுறையை மருத்துவர்கள் பின்பற்றுவார்கள். ஆனால், நடத்தைச் செயலூக்க சிகிச்சையில் நோயாளியின் மனதுக்கு இன்பமளிக்கும் செயல்களில் அவர்களை ஈடுபடச் செய்வார்கள். அதாவது, இருகோடுகள் தத்துவம். உற்சாகம் மேலும் அதிகமாக ஆக, ஆழமனச் சிக்கல்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஒரு கட்டத்தில் மறைந்துபோக வாய்ப்பு உண்டு. இந்த உற்சாகத்தை கார்ட்டூன் தொடர்களும், கார்ட்டூன் திரைப்படங்களும் அளிக்கும். தனிமையில் வாழ்பவர்களுக்கு கார்ட்டூன்கள் பார்ப்பது சரியான வடிகாலாக இருப்பதுண்டு. ஆனால், எதிர்பாராத கோணங்களிலும் கார்ட்டூன்கள் செயல்பட வாய்ப்பு உண்டு.

‘கார்ட்டூன் தொடர்களும் திரைப்படங்களும் உங்கள் மனதை பாதிக்குமா? தவறான பாதையைக் காட்டுமா? ஒருபடி மேலே போய்கூடக் கேட்கலாம். அவை குற்றங்கள் புரியத்தூண்டுமா?’ திகைக்க வைக்கும் இந்தக் கேள்விகள் பலர் மனதிலும் எழுந்ததால்தான் சிரிப்பையும் உற்சாகத்தையும் மட்டுமே உண்டுபண்ணும் என்று பொதுவாக கருதப்படும் சில கார்ட்டூன்கள் கூட சில நாடுகளில் தடை செயப்பட்டதுண்டு. 1978ல் வெளியான திரைப்படம் சூப்பர் மேன். இதன் கதாநாயக நடிகர் கிறிஸ்டோபர் ரீவ்ஸ் இந்தப் பாத்திரத்தால் புதுவாழ்வு பெற்றார்.

நீதியையும் நேர்மையையும் ‘அமெரிக்க வழியில்’நிலைநாட்டும் கதாநாயகப் பாத்திரம் சூப்பர் மேன். பலரது உயிர்களைக் காப்பாற்றும் நாயகன் என்றாலும், இந்தத் திரைப்படத்தைத் தங்கள் நாட்டில் திரையிட சீன அரசு பெரிதும் தயங்கியது. அந்தக்காலகட்டத்தில் சீன மக்கள் சுதந்திரம் குறித்து பேசத் தொடங்கிவிட்டார்கள். அரசு குறித்த விமர்சனங்களும் கொஞ்சம் வெளிப்படையாகவே வரத்தொடங்கிவிட்டன. தவறுகளைத் தட்டிக்கேட்கும் நாயகனைக் கொண்ட இந்தப் படம், 1986ல் சீனாவில் ஒருவழியாக 25 திரையரங்குகளில் மட்டுமே வெளியாக அனுமதிக்கப்பட்டது. இந்தப் படத்தைக்காண, பலரும் முண்டியடித்துக்கொண்டு கூட்டம் கூட்டமாகத் திரண்டதைக் கண்ட சீன அரசு, ஒரே நாளில் அந்தத் திரைப்படத்துக்கு தடை விதித்தது. அந்தத் தடைக்கான காரணத்தை அரசு வெளிப்படையாகக் கூறவில்லை.

ஈரானில், ‘300’என்ற கார்ட்டூன் திரைப்படத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. காரணம், இதில் பாரசீகத்தைச் சேர்ந்தவர்கள் ஒழுக்கம் கெட்டவர்களாகவும் காட்டுமிராண்டி களாகவும் வில்லன்களாகவும் சித்தரிக்கப்பட்டதுதான். ‘இதெல்லாம் அமெரிக்க சதி’ என்று கூறியது ஈரானிய அரசு. ‘பாரசீகத்தைச் சேர்ந்தவர்களை தவறாக சித்தரித்தால், ஈரான் அரசு ஏன் கோபிக்க வேண் டும்?’என்று கேட்டுவிட மாட்டீர்கள் தானே? அன்றைய பாரசீகம்தான் இந்நாளில் ஈரான் என்றழைக்கப்படுகிறது.

இவையெல்லாம் அரசியல் காரணமாக கார்ட்டூன்கள் ஏற்படுத்தக்கூடிய மன மாற்றங்கள் எனலாம். ஆனால், அரசியல் கலப்பில்லாத மனமாற்றங்களை உண்டாக்கும் தன்மையும் கார்ட்டூன் களுக்கு உண்டு. ‘கார்ட்டூன் குழந்தைகளுக்கானது’என்பவர்கள், ‘பிளேடு’ என்ற கார்ட்டூன் தொடரைப் பற்றி அறியாதவர்களாக இருக்க வாய்ப்பு அதிகம். ‘மார்வெல் காமிக்ஸா’க வெளிவந்த கதை இதுதான். எரிக் ப்ரூக்ஸ் என்பவன் லண்டனின் புறநகர்ப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பிறக்கிறான். அது விலைமாதருக்கான பகுதி. அவனது அம்மாவும் அப்படிப்பட்டவள்தான். பிரசவத்துக்காக அழைக்கப்படும் டாக்டர் உண்மையில் ஒரு ரத்தக்காட்டேரி! அது அந்த அம்மாவின் ரத்தத்தைக் குடித்து, அவளை இறக்க வைக்கிறது. ஆனால், தற்செயலாக அந்த ரத்தக்காட்டேரியின் உடலிலுள்ள ரத்தத்தின் ஒரு பகுதி குழந்தையின் உடலுக்குச் சென்றுவிடுகிறது. எனவே, எரிக் ‘மனிதன் பாதி ரத்தக் காட்டேரி பாதி’ என்று மாறி விடுகிறான்.

விலைமாதுக்களால் வளர்க்கப்படும் அவன் பின்னாளில் ரத்தக் காட்டேரிகளை ஒடுக்குகிறான். இது, ‘மார்வெல் காமிக்ஸா’க வெளிவந்தத் தொடர். பின் திரைப்படமான போது, ‘ஸ்பைடர்மேன்’ படங்களை விட வசூலில் அதிகம் சம்பாதித்துக் கொடுத்தது என்கிறார்கள்.

ஆனால், இந்தக் கதை எதிர்மறை உணர்வுகளை அல்லவா மேலோங்கச் செய்யும்?

மலேசியாவில் இந்தத் திரைப்படத்துக்குத் தடை விதிக்கப்பட்டது வியப்பில்லை. எப்போதுமே மலேசியா அதிக வன்முறை கொண்ட படங்களுக்குத் தடை விதித்து வந்திருக்கிறது. இதைக்காரணம் காட்டித்தான் இந்தத் தடையும். சுயபாலின உறவு, ஆழ்ந்த அரசியல் காரம் போன்றவற்றைக் கொண்ட படங்களைத் திரையிட எப்போதுமே மலேசிய அரசு யோசிக்கும்.

பெப்பா பிக் என்ற கார்ட்டூன் தொடரின் பல எபிசோடுகள் ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்டன. காரணம் மிக வித்தியாசமானது. இந்தத் தொடரில் சில பன்றிகள் ஒரு சிலந்தியோடு மிக நட்பாக இருக்கும். பிற உயிரினங்களிடம் நட்பு பாராட்டுவது என்பதை குழந்தைகளுக்கான கார்ட்டூன்களில் காண்பிப்பது நல்ல விஷயம்தான். ஆனால், ஆஸ்திரேலியாவில் பத்தாயிரத்துக்கும் அதிகமான சிலந்தி வகைகள் உள்ளன. இவற்றில் சில கடுமையான விஷம் கொண்டவை. எனவே, சிலந்தியுடன் நட்பாக இருப்பது என்ற கார்ட்டூன் பகுதிகளை ஆஸ்திரேலிய நாட்டில் அனுமதிக்கவில்லை. ஏனென்றால், கார்ட்டூன்களின் தாக்கம் அப்படிப்பட்டது. (‘இந்திய சூப்பர்மேனாக சித்தரிக் கப்பட்ட’ சக்திமான் தொடரைப் பார்த்துவிட்டு ஒரு சிறுவன் சாகச நோக்கில் மேல்மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்தது நினைவிருக்கலாம்.)

உலகெங்கும் குழந்தைகளின் மனம் கவர்ந்த, ‘டாம் அண்ட் ஜெர்ரி’ கார்ட்டூன் தொடரின் பல பகுதிகள் உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன என்பது உங்களுக்கு வியப்பான தகவலாக இருக்கலாம். ஆனால், அது உண்மை. வன்முறை அதிக அளவில் இதில் காணப்படுகிறது என்பது ஒரு காரணம். தவிர, டாம் என்ற பூனை கொஞ்சம் தவறாக நடந்து கொண்டாலே அதற்கான தண்டனையை அனுபவிக்கிறது. ஜெர்ரி என்ற எலி அந்தப் பூனைக்கெதிராக எத்தனையோ அராஜகங்களை நடத்தினாலும், அதற்கு தண்டனை கிடைப்பதில்லை. ஓர் எதிர்மறைப் பாத்திரத்தை குழந்தைகளை ரசிக்க வைப்பது தவறான மனநலப் போக்கை உருவாக்கும் என்பதும் தடைக்கு ஒரு காரணம்.

‘டொனால்டு டக்’ என்ற வால்ட் டிஸ்னியின் வாத்து தொடர்பான சில கார்ட்டூன் பகுதிகளை இங்கிலாந்து தடை செய்தது. காரணம், ‘இதன் கதை குடும்ப அமைப்பை சிதைக்கும்படியாகவும், ஒழுக்கக்கேட்டை பரப்புவதாகவும், பணத்தின் மீது பேராசை கொள்வதை ஆதரிப்ப தாகவும் இருக்கிறது’என்று தடைக்கான காரணங்களை அடுக்கியது.

இனி, உங்கள் வீட்டுக் குழந்தைகள் ‘எந்தக் கார்ட்டூன் தொடரையும் பார்க்கட்டுமே’ என்று அலட்சியமாக இருந்துவிட மாட்டீர்கள்தானே?

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

விநாயகச்சதுர்த்தி விதவிதமான கொழுக்கட்டைகள்

0
-வாசகர் ஜமாய்க்கிறாங்க கோன் கொழுக்கட்டை தேவையானவை : பச்சரிசி மாவு-3 கப், கனிந்த செவ்வாழைப்பழம் - 1, தேங்காய் துருவல் - 2 கப், ஏலக்காய் தூள்-அரை ஸ்பூன், வெல்லம்-3 கப், வாழையிலை-தேவைக்கேற்ப. செய்முறை : முதலில்...

உதடுகள் பராமரிப்பு

0
வாரத்தில் இரு நாட்கள் உதடுகளில் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் உதடுகள் ரோஜா பூ போல் மென்மையாகும். முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் பூசிவந்தால், உதடுகள்...

கர்ப்பிணிப் பெண்களுக்கு கோவிட் தடுப்பூசி

0
தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கடந்த ஒன்றரை வருடங்களாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட் தொற்றுநோய் குறித்து எத்தனையோ சந்தேகங்கள், கேள்விகள் இன்றும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.இந்த நிலையில், ‘கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி எப்போது போட...

பெண்களைப் புரிந்துகொள்வோம்

0
-வாசகர் ஜமாய்க்கிறாங்க ஆர்.கெஜலட்சுமி, லால்குடி பெண் - ஆணை விட இருபது சதவீதம் எடை குறைவு. ஆணைப்போல வேகமாக ஓடவோ, தாவவோ முடியாது. கால்களில் பலம் குறைச்சல். இதயமும், சுவாசப்பையும் அவளுக்குக் கொஞ்சம் சின்னது. வியர்வை...

சொல்ல விரும்புகிறோம்!

0
‘மனம் மட்டுமே மருந்து. மனதை தயார்படுத்துவதன் மூலமே எந்த நோயையும் குணப்படுத்த முடியும்’என்று சொன்ன கும்பேவின் வழியைப் பின்பற்றி பயனடையலாம். ஜி.எஸ்.எஸ். பல வித்தியாசமான செய்திகளைச் சொல்வதில் ஜித்தன். - ஆர்.ஜானகி, சென்னை ‘கண்ணாடி......