குறமகள் குழம்பு

குறமகள் குழம்பு
Published on
சங்ககால சமையல்
ப்ரியா பாஸ்கர்

அருவி தந்த பழம்சிதை வெண்காழ், வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை, முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப்பிளவை, பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ, வெண்புடைக் கொண்ட துய்த் தலைப் பழனின் இன்புளிக் கலந்து மா மோர் ஆக, கழைவளர் நெல்லின் அரி உலை ஊழ்த்து, வழை அமை சாரல் கமழத் துழைஇ, நறு மலர் அணிந்த நாறு இரு முச்சிக்குறமகள், ஆக்கிய வால் அவிழ் வல்சி, அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ, மக முறை தடுப்ப, மனைதொறும் பெறுகுவிர்'

மலைபடுகடாம் சுமார் 583 அடிகளைக் கொண்டது. இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனாரால் இயற்றப்பட்டது. இப்பாடல், 174-184 வரியில் உள்ளது. 'மலையில் உண்டாகும் ஓசையின் எதிரொலி நன்னன் நாட்டில் கேட்கும்' என்கிறார் புலவர். நன்னனுடைய மலையில் வாழ்ந்த குறிஞ்சி நில மக்கள், கடமான் இறைச்சியையும், பெண் நா கடித்துக் கொண்டு வந்த உடும்பின் இறைச்சியையும் உண்டுள்ளனர். சைவத்துக்குப் பலாக்கொட்டை, மா, புளிநீர், மோர் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட புளிப்புச் சுவையுடைய குழம்பை, குழைய சமைத்த மூங்கிலரிசியுடன் சேர்த்து உண்டுள்ளனர் என்பதை இப்பாடல் மூலம் அறிய முடிகிறது. குறமகள் சமைக்கும் உணவு மலைச் சாரலெங்கும் மணக்குமாம்.

உடல் சூட்டைக் குறைக்கும் மோரைக் கொண்டு மா, பலாக்கொட்டை, மோர் குழம்பை எப்படிச் செய்திருப்பார்கள் எனப் பார்ப்போம்…

தேவையான பொருட்கள்: பலாக்கொட்டை-5, நறுக்கிய மாங்காய் – 1, உப்பு – தேவையான அளவு, மூங்கிலரிசி – 200 கிராம், கொத்துமல்லி – 1 டீஸ்பூன், நெ – 2 டீஸ்பூன், புளிக்காத மோர்-1 கப், புளிச்சாறு – 2 மேஜைக்கரண்டி, சீரகம் – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, மிளகுத்தூள் – தேவையான அளவு, தண்ணீர் – தேவை யான அளவு, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்.

செய்முறை : தனியே வேகவைத்த பலாக்கொட்டையைத் தோல் உரித்து நறுக்கிக் கொள்ளவும். கடாயில் நெய் சேர்த்து கடுகு, சீரகம் பொடித்த மல்லியைச் சேர்த்து வதக்கவும். அதனுடன் கறிவேப்பிலை, மஞ்சள்தூள் மிளகுத்தூளைச் சேர்த்து வதக்கவும். கூடவே நறுக்கிய பலாக்கொட்டை, மாங்காயைச் சேர்த்துப் பிரட்டவும். உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கூடவே கரைத்த புளிநீர் மோரைச் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். சுவையான மா, பலாக்கொட்டை மோர்க் குழம்பு தயார். மூங்கிலரிசியுடன் சுமார் மூன்று மடங்கு தண்ணீர் சேர்த்து குழைய வேகவைக்கவும். தயார் செய்த குழம்புடன் குழைய வேகவைத்த அரிசியைச் சேர்த்து சுவையான குறமகள் குழம்பைச் சுவைக்கவும்.

குறிப்பு :

* தமிழகத்தில் கன்னியாகுமரி, ஊட்டி, கூடலூர், பாபநாசம் மற்றும் கேரளா, குஜராத்தில் மூங்கில் அரிசி உணவு சிறப்பானது.

* சங்க காலத்தில் குறிஞ்சி நில மக்கள் தேனையும் கிழங்கையும் உண்டார்கள்.

* பண்டைத்தமிழர் புளிப்புக்கு புளித்த தயிர், மோர், புளி, மாங்காய், நாள்பட்ட தேன் போன்றவற்றை அதிகமாகப் பயன்படுத்தினர். மலைவாழ் பெண்களை, 'குறமகள்'என்று அழைத்தனர். பெருமளவு சங்க காலத்தில் அரிசி உணவைப் பெரிதும் விரும்பி உண்டுள்ளனர்.

தொகுப்பு : சேலம் சுபா

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com