கேள்வி நேரம்

கேள்வி நேரம்
Published on

ஞானகுரு

கோயிலில் சாமி கும்பிடும்போது கைகளைக் கட்டிக்கொள்ளக் கூடாது என்பது ஏன்?

– சி.மகாதேவன், சென்னை

இரண்டு கைகளையும் கட்டிக்கொள்வது என்பது, இறைவழிபாடு ஆகாது. கைகளைக் கூப்புவதற்கும் மனதில் இறை வடிவத்தை நினைத்து பூஜிப்பதற்கும்தான் கைகள். கோயிலுக்குச் சென்றடைந்ததும் கை, கால்களைச் சுத்தம் செய்கிறோம். பூஜைப் பொருட்களை வாங்குகிறோம். கோயிலுக்குள் நுழைந்ததும் விநாயகர் சன்னிதி முன்பு நின்று குட்டிக் கொள்கிறோம். கோயிலில் கைகளைக் கட்டாமல் இயங்கியவாறு செயல்பட வேண்டும். மனிதனுக்கு உள்ள பத்து விரல்களும் பத்து வகை வித்யாக்கள் எனும் செயல்களைச் செய்வதற்கே என்று அறியுங்கள்.

எங்கும் இறைவன் நிறைந்திருக்கும் இவ்வுலகில் பில்லி, சூனியம், ஏவல் எல்லாம் கட்டுக்கதைதானே?

– சி.நிர்மலா, காட்டுமன்னார்குடி

'இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான்' என்று நம்பி வாழ்பவர்களுக்கு வாழ்வில் எந்தவிதமான இடையூறுகளும் வராது காப்பாற்றப்படுவார். அவர்களின் மனதுக்குள் இருக்கும் நம்பிக்கைகளே அவர்களின் வாழ்க்கையை உயர்த்தும். நம்பாதவர்களுக்கு உலகத்தில் இருக்கும் காலனே நேரில் வந்து, 'உன் வாழ்க்கைக் காலம் முடிந்துவிட்டது. குறுகிய காலத்திலாவது இறைவனை வழிபட்டு நலம் பெறு' என்று சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.

இறைவனை நம்பி, சான்றோர் சொல்படி நடந்தவர் இந்த உலகில் அரச வாழ்வைப் பெற்றனர். 'நம்பலாமா? வேண்டாமா?' என்று அவநம்பிக்கையுடன் இருப்பவர்க்கு காய்ந்த, பயனற்ற, நுகர முடியாத ரோஜா இதழ்களே கிடைக்குமாம். 'இறைவன் என் பக்கம்' என்று துதித்திருப்பவர்க்கு சூன்யங்கள் பற்றிய நினைவே வரக்கூடாது. வீண் பயம் கொள்வோர் தான் இவற்றுக்கு பயப்பட வேண்டும். மன தைரியம் இருந்தால் எதுவும் அருகில் வராது.

பட்டினத்தடிகள் கையில் உள்ள கரும்புக்கான தத்துவம் என்ன?

– ஏ.மலர்விழி, சென்னை

மனித வாழ்க்கையில் வரும் இடர்களையும், அதைப் போக்கும் வழிகளையும் எடுத்துச் சொன்னவர் பட்டினத்தடிகள். இவரது கையில் உள்ள கரும்பு நமது உறவுகள், நட்புகளைப் பற்றிச் சொல்கிறது. வாழ்வில் எதையோ குறிக்கோளாக வைத்துக்கொண்டு
பயணப்படுகிறோம். இங்கே நமது வாழ்க்கைப் பயணக் காலத்தில் இனிப்பான அனுபவங்களும் கசப்பான நிகழ்வுகளும் வரக்கூடும். அவற்றை எதிர்கொண்டு, படிப்பினையாக எடுத்துக்கொள்வது முக்கியம். கரும்பு, மூன்று பாகங்களாகப் பிரிக்கப்படுகிறது.

அடிக்கரும்பு – மிகவும் சுவையாக இருக்கும். மகிழ்ச்சியை அதிகமாகத் தரும். இது, ஆழ்ந்த அன்புமிக்க உறவைப் போன்றது.

நடுக்கரும்பு – சுவை அதிகமாகவும் சற்று உப்பு கலந்தது போலவும் இருக்கும்.
நட்பு பாராட்டும் பிரியமான நண்பன் போன்றது. கொடுத்தால் சிரிப்பது, கொடுக்காமல் நிறுத்திவிட்டால் புறம் பேசி விலகுவது.

நுனிக்கரும்பு – சுவை இல்லாதது. எதற்கும் பயன்படாமல் வந்து செல்வது. தற்செயலான நட்பைப் போன்றது.

மூவகையான பாகங்களைச் சுவைக்கும்போது கவனமாக இருப்பது போன்று, உறவு, நட்பு, எதிர்ப்போர் இவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கரும்பின் சாற்றைப் பிழிந்துகொண்டு சக்கையைத் தூக்கி எறிவதுபோல, நாமும் படுகுழியில் விழுந்து விடுவோம் என்று விளக்கம் தரவே, பட்டினத்தடிகள் கரும்பை கையில் வைத்துக் கொண்டுள்ளார்.

சிரார்த்த பலன்களை எப்படி அறிவது?

– கே.குணசேகரன், திருமழப்பாடி

'உத்தர காலாமிர்தம்' என்ற கவி காளிதாசனின் நூல் திதிகளைச் செய்வதன் பலன்களை விவரித்துக் கூறி உள்ளது. கிருஹஸ்தன் என்னும் குடும்பஸ்தன் அமாவாசையில் பித்ரு தர்ப்பண திதி முறையைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். பிரதமையில் பித்ருக்களை பூஜிப்பதால் அழகான மனைவியையும் குழந்தைகளையும் பெறலாம்.

துவாதசியில் திதி செய்வதால் எதிர்காலத்தில் பயனாகிற பெண் பிள்ளைகளைப் பெறுவதோடு, உலகில் பிரபலம் ஆவார்கள். திருதியையில் திதி செய்வதனால் குதிரைகளும் பசுக்களும் பெருகும்.

சதுர்த்தியில் செய்வதனால் ஆடு, மாடுகளும், நான்கு கால் மிருகங்களும் பெருகும்.  பஞ்சமியில் சிரார்த்தம் செய்வதனால் செல்வமும் செல்வாக்கும் பெருகும். சஷ்டியில் திதி செய்வதால் புத்திர லாபம் கிடைக்கும். சப்தமியில் திதி செய்வதால் நவதான்யங்கள் அதிகமாகக் கிடைக்கும்.

நவமியில் திதி செய்வதால் ஒற்றைக் குளம்பிருக்கும் பிராணிகள் சேர்க்கை ஏற்படும். தசமியில் செய்வதால் தான்ய பெருக்கமும், ஏகாதசியில் செய்வதால் வீட்டு உபயோகப் பொருட்கள் அதிகமாவதும், துவாதசியில் திதி செய்வதால் நால் வகை சொத்துகள் சேர்க்கையும், திரயோதசியில் திதி செய்வதால் வழக்குகளில் வெற்றியும், அமாவாசையில் செய்வதால் மன விருப்பங்கள் நிறைவேறுவதும் ஆகிய நற்பலன்களைக் கொடுக்கும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com