0,00 INR

No products in the cart.

கொல்கத்தாவில் மம்தா துர்கா பானர்ஜி

பொலிடிகல் பிஸ்ஸா
கௌதம் ராம்

அரசியல் கிரிக்கெட்!

 

அரசியல்வாதிகள், கட்சி மாறும்போது, ஏன் கட்சி மாறினேன்? என்று விளக்கம் கொடுப்பது சகஜம்தான்! அண்மையில் மேற்கு வங்காளத்தில் பிரபல பாடகராக இருந்து அரசியலில் குதித்து, இப்போது பா.ஜ.க.வில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஜம்ப் செய்த பாபுலால் சுப்ரியோ ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். என்ன தெரியுமா? “நான் ஒரு கிரிக்கெட்டர் மாதிரி. களமிறங்கி ஆடும் டீமில் பதினோரு பேரில் ஒருவராக இருக்கவே விரும்புகிறேன். என்னுடைய கோச், நான் சரியில்லை என்று டீமிலிருந்து என்னைத் தூக்கினால், கேலரியில் உட்கார்ந்து, என் டீம் ஆடும் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருக்க நான் தயாரில்லை. என் திறமையில் நம்பிக்கை வைத்து டீமில் சேர்த்துக் கொள்ளும் இன்னொரு கோச்சின் அணியில் சேர்ந்து ஆடுவதையே விரும்புகிறேன்.” ஆக, பாபுலால் சுப்ரியோவை கோச் மோடி தூக்கினாக! கோச் மம்தா தன் டீமில் சேர்த்துக்கிட்டாக!

அப்பா ராஜினாமா; மகன் தலைவர்!

பஞ்சாப் அரசியலில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கேப்டன் அம்ரிந்தர் சிங் பரபரப்பூட்டிய சமயத்தில் அவருடைய மகன் ரனீந்தர் சிங், தான் போட்டியிட்ட தேர்தலில் ஜெயிக்க வியூகம் வகுத்துக் கொண்டிருந்தார். ஆம்! தேசிய துப்பாக்கிக் கழகத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார் ரனீந்தர். அப்பாவின் ராஜினாமாவை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக்கொண்ட சமயத்தில் மகன் துப்பாக்கிக் கழகத் தேர்தலில் ஜெயித்துவிட்டார். ஆனால், ரனீந்தருக்கும், மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கும் இடையில் ஏதோ லடாய் என்று கேள்வி! நம்ம ஊர்ல பாலிடிக்ஸ்னா பூந்து விளையாடுவாங்க! விளையாட்டுன்னா உள்ளே புகுந்து பாலிடிக்ஸ் பண்ணுவாங்க! இதுதானே வழக்கம்!

தோழர் ராகுல் காந்தி

கேரளாவில் கம்யூனிஸ்டுகள் ஒருவரை ஒருவர் தோழர் (காம்ரேட்) என்று அழைத்துக்கொள்வது மரபு! அதை காங்கிரஸ்காரர்களும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார் ராகுல்காந்தி! சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி கண்ட காங்கிரசை அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குள் வலுப்படுத்த வேண்டும் என்று சீரியசாக நினைக்கிறார் ராகுல். அதற்காக கேரள காங்கிரஸ்காரர்களுக்கு புத்துயிர் ஊட்ட சில நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதில் ஒன்றுதான் இந்த காம்ரேட்! அது மட்டுமில்லை, போராட்டக்காரர்கள் பயன்படுத்தும் “இன்குலாப் ஜிந்தாபாத்!” (புரட்சி ஓங்குக! என்று அர்த்தம்) என்பதையும் அரசுக்கு எதிராகப் பயன்படுத்தவேண்டுமாம்! காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் ஒரு கோஷ்டி மெம்பர்கள் இன்னொரு கோஷ்டியினரையும் காம்ரேட் என்றுதான் கூப்பிடணுமா மிஸ்டர் ராகுல்?

மேடம் மாயாவதி

உத்திரப்பிரதேசம் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகிவருகிறது. “இந்த தடவை யாரோடும் கூட்டணி இல்லை; என் வழி தனிவழி” என்று அறிவித்திருக்கிறார் பகுஜான் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி. கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சி 22% வாக்குகளைப் பெற்றும் ஜெயித்தது என்னவோ 19 எம்.எல்.ஏ.க்கள்தான். நாளடைவில் கட்சியிலிருந்து விலக்கியது, விலகியது என்று எண்ணிக்கை இன்னமும் குறைந்துபோனது. இப்போது அதிரடியாக, “மாஃபியாக்களுக்கு டிக்கெட் இல்லை” என்று அறிக்கை விட்டிருக்கிறார். தன் உறவு வட்டத்தில் இருந்து தனது அரசியல் வாரிசை தயார் செய்துகொண்டிருக்கிறார் மாயாவதி என்றும் சொல்கிறது ஒரு லக்னௌ பட்சி. ஆல் தி பெஸ்ட் ஃபார் வாரிசு அரசியல் மேடம்!

துர்கா பானர்ஜி

இன்னொரு மேற்கு வங்காள நியூஸ். அங்கே இந்த வருட துர்கா பூஜா ஸ்பெஷல் என்ன தெரியுமா? கொல்கத்தாவில் பகுயாட்டி என்ற இடத்தில் நடக்கவிருக்கும் துர்கா பூஜை விழாவில் பத்து கைகளுடன் துர்க்கையாக மம்தா பானர்ஜியின் சிலையை வைக்கப்போகிறார்கள்! பத்து கைகளிலும், மம்தா அரசின் மக்கள் நலத் திட்டங்கள் சிம்பாலிக்காக இருக்குமாம்! இதைப் பார்த்துக்கொண்டு பா.ஜ.க.வினர் சும்மா இருப்பார் களா? “இது துர்கா மாதாவுக்கு அவமானம்! மம்தா கடவுளையே கேவலப் படுத்துகிறார்” என்று குரலெழுப்புகிறார்கள்! அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்கிறீர்களா?

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

வானில் ஒலித்த பாரதியின் பாடல்கள்

0
பாரதி நினைவு நாள் நூற்றாண்டு சாந்தி ஜெகத்ரட்சகன் செப்டெம்பர் 18, காலை 5 மணி. பரபரப்பாக இயங்கத் தொடங்கிய சென்னை விமான நிலையத்தின் புறப்பாடு மையம் திடும் மென்று குழந்தைகளின் குரலில் பாரதியார் பாடல்கள் ஒலித்தன....

400 ஆண்டுகால வியாபாரம்

0
வாசகர் கேள்வியும் வல்லுநர் பதிலும் சோம.வள்ளியப்பன் பங்குச்சந்தை ஒரு வகை சூதாட்டம் தானே! பத்திரிகைகள் பணம் பெற்றுக்கொண்டு பரிந்துரைகள் எழுதுவதாகவும் அறிகிறேன். பங்கு சந்தை கள் ஏன், எப்படி, எங்கு. என்று தோன்றின?   - திருவரங்க வெங்கடேசன்,...

ஷங்கரிடமிருந்து நான் கற்றுக்கொண்டது

0
ஸ்டார்ட்...கேமரா...ஆனந்த்-15 எஸ்.சந்திரமௌலி "டைரக்டர் ஷங்கர் ரொம்பவும் அதிர்ஷ்டசாலி. அவருக்கு மக்களைக் கவரும் வகையில் பாடல் காட்சிகளையும், சண்டைக் காட்சிகளையும் எடுக்கத் தெரிந்திருக்கிறது. எல்லாவற்றையும் மிகப் பிரம்மாண்டமாகக் காட்டி அவர் மக்களை மிரட்டிவிடுகிறார். அதனால் அவரது படங்கள்...

அஞ்சலி

0
ஓவியம் : ராஜன்

கொலுவில் ‘அப்பூச்சி’

0
கடைசிப் பக்கம் சுஜாதா தேசிகன் கல்கி கடைசிப் பக்கம் படிப்பவரா? நீங்கள் எந்த ராசியாக இருந்தாலும் இந்த வாரம் உங்கள் ராசி பலனைக் கணிப்பது சுலபம். இந்தப் பக்கத்தைப் படித்துக்கொண்டு இருக்கும் ராசிக்காரர்களே! நீங்கள் உங்கள்...