0,00 INR

No products in the cart.

சட்டை

கடைசிப் பக்கம்

 சுஜாதா தேசிகன்

முழுக்கை, அரைக்கை என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல், நான் ஒரு சட்டை பைத்தியம். சினிமா ஹீரோ எப்படிப்பட்டவர் என்று ஆரம்பிக்கும் ஆரவாரமான முதல் காட்சி போல ஒரு சம்பவத்தைச் சொல்லுகிறேன்.

வேலைக்கு சென்னைக்கு வந்த புதிது. அதன் ஜியாகரபியை முழுவதும் அறிந்துகொள்ளாத ஒருநாள் பேருந்தில் பக்கத்தில் இருந்தவரிடம் “திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் வந்துவிட்டதா?” என்றேன்.

“இது பாண்டி பஜாரு! இன்னும் டைம் இருக்கு, இங்கே குந்து” என்று அவருடைய ஜன்னல் சீட்டை எனக்குக் கொடுத்துவிட்டு இறங்கினார்.

ஜன்னல் சீட் கிடைத்த ஆனந்தத்தில் வெளியே வேடிக்கை பார்த்த போது  ’நாயுடு ஹால்’ தெரிந்தது. கூடவே எஸ்.வி.சேகர் ஜோக் நினைவுக்கு வந்தது. பஸ் நாயுடு ஹாலைக் கடந்து செல்கையில் இன்னொரு கடை வாசலில் மொட்டை பிளாஸ்டிக் மேனெக்வின் டிஸ்ப்ளே டம்மி  (கடைகளில் இருக்கும் பொம்மை) ஒன்று அழகான நீல நிறத்தில், சிவப்பு, வெள்ளைக் கோடுகளுடன் ஒரு சட்டை போட்டிருந்தது கண்ணில் பட்டது.

யோசிக்கவே இல்லை ஸ்பிரிங்கிலிருந்து எழும்பிய பந்து போலக் குதித்து எழுந்து சாவுகிராக்கியை வாங்கிக்கொண்டு நடத்துநரிடம் ”இங்கே இறங்க வேண்டும்!” என்றபோது பஸ் டாப் கீர்க்கு  சென்றது.

“இது ஐஸ் அவுஸ் இல்லப்பா! வரும்போது சொல்றேன்” என்றார்.

“நாயுடு ஹாலில் முக்கியமான வேலை இருக்கு!” என்று உளறினேன்.  அவர் பார்வை இப்ப நிறுத்தமுடியாது என்றது.

அடுத்த நிறுத்தம் வரக் குதித்தேன். நாயுடு ஹால் நோக்கி திக் விஜயத்தை ஆரம்பித்து அந்த ஒரு கடையில் நீல நிற மொட்டை பொம்மையைக் கண்டுபிடித்தேன். கடைக்குள் சென்று “அந்தப் பொம்மை போட்டிருக்கும் சட்டை வேண்டும்” என்றேன்.

“நிறைய இருக்கு” என்று அதே டிசைனில் பச்சை, கறுப்பு என்று அள்ளிப் போட்டார். “எனக்கு அந்த நீல நிறச் சட்டைதான் வேண்டும்” என்றேன் தீர்மானமாக. “அதே கலர்ல இருக்கா பார்க்கிறேன்” என்று கலைத்துத் தேடி,  “இல்லை!” என்றார்.

”அந்தப் பொம்மை போட்டிருக்கும் சட்டை?” “உங்க சைஸ்?” “39” “அது பெரிசு XL ” “பரவாயில்லை போட்டு பார்க்கிறேன்” என்று அடம்பிடித்தேன். ”இப்ப கழற்ற முடியாது!” “எப்ப முடியும்?” “வேற வேலை இருந்தா பார்த்துட்டு வாங்க, கழட்டி வைக்கிறேன்.” “எனக்கு வேற வேலை இல்லை, வெயிட் பண்ணுகிறேன்.” என் பிடிவாதம் ஜெயித்து, பொம்மையை நிர்வாணமாக்கி சட்டையைக் கழட்டி எனக்குக் கொடுத்தார். போட்டுப் பார்த்தபோது அந்தச் சட்டைக்கு  ஹாங்கர் போல இருந்தேன்.

“இது உங்க சைஸ் இல்லை சார்” என்றார். “ஆல்டர் செய்ய முடியுமா?” என்றேன். “நாங்க செய்வதில்லை, ஆல்டர் செஞ்சா ஃபினிஷிங் போய்விடும்!”

“பரவாயில்லை. பில் போடுங்க” என்று பர்ஸை திறந்தபோது பத்து ரூபாய் குறைவாக இருந்தது. “பத்து ரூபாய் கம்மியாக இருக்கு!” என்றேன். “பரவாயில்லை சார்.” மொபைல், கிரடிக் கார்ட் எதுவும் இல்லாத அந்தக் காலத்தில் கையில் பணம் இல்லாமல் பாகுபலி சட்டையுடன் திருவல்லிக்கேணிக்கு நடந்து சென்று, சட்டையை டைலரிடம் கொடுத்து என் அளவுக்கு அதைச் செதுக்கிப் போட்டுக்கொண்டேன். இப்படி நான் வாங்கிய சட்டை கதைகள் பல இருக்கின்றன.

என்னைச் சட்டை செய்து எனக்காகச் சட்டை வாங்கித் தந்தவர்கள் இருக்கிறார்களா என்று இந்தப் பிறந்த நாளுக்கு யோசித்தேன். கொடுக்கப்பட்ட சட்டைகளைப் பட்டியலிட்டேன். அவை எதுவும் எனக்காக வாங்கப்பட்ட சட்டைகள் இல்லை. திருமண விழாக்களில் வெற்றிலை பாக்கு துண்டுடன் ‘வைத்து கொடுத்த’ சட்டைகள் கைமாறிச் சென்றுவிட்டன. வெளிநாட்டிலிருந்து வந்த குவியல்களில் ‘இது சரியாக இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள்’ சில்க்சுமிதா முழங்கால் வரை போட்டுக் கொண்ட வகை. சொந்தங்கள் ‘பை ஒன் கெட் ஒன்னில் வாங்கினேன். நீங்க ஒன்று எடுத்துக்கொள்ளுங்கள்’ என்ற ஹோல்சேல் வகை. ‘உங்க சைஸ் தெரியவில்லை’ என்று  கடமைக்குக் கொடுத்த பணமுடிப்புகள் வெண்டைக் காய்க்குச் செலவு செய்யப்பட்டுவிட்டது.

எனக்காக வாங்கப்பட்ட சட்டைகள் சில இருந்தது. அவை அனைத்தும் என் அம்மா ‘இந்தக் கலர் உனக்கு நல்லா இருக்கும். உனக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ என்று பயந்துகொண்டு வாங்கினேன்’  என்று வாங்கிக்கொடுத்த பிறந்த நாள் சட்டைகள். அவற்றை எனக்குக் கொடுத்தபோது ‘ஜோபி இல்லை’, ‘பட்டன் சரியில்லை’ என்று நொள்ளை, நொட்டை சொல்லியிருக்கிறேன். அம்மா போன பிறகு எனக்கான சட்டைகள் நின்றுவிட்டது.

இந்த பிறந்த நாளுக்கு அம்மா கொடுத்த ஒரு சட்டையைத் தேடி எடுத்து உடுத்திக்கொண்டேன். எனக்காக வாங்கிக்கொடுத்த சட்டைகள் மட்டுமே உடம்பில் படும்போது மென்மையாக இருக்கிறது.

 

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

லைஃப்பாய் சோப்

0
அது ஒரு கனாக்காலம் 9 ஒரு காலத்தில் லைஃப்பாய் சோப் இல்லாத வீடே இல்லை என்னும் நிலை இருந்தது! வட இந்தியாவில் சர்வ சாதாரணமாக கடைகளில் வந்து அடித்தட்டு மக்கள் “லால்வாலி சாபூன்” (லால்...

இன்பத்த தேன் வந்து பாயுதே

0
மகாகவி, தேசியக்கவி,  என்று பரவலாக  அறியப்பட்ட பாரதி கடுமையான இலக்கிய நடைகளை உடைத்து, பாமரனுக்கும் புரியும் வகையில் புதிய கவி நடைகளைப் படைத்தவன். ஆனால், பாரதியார் ஒரு கவிஞராக மட்டுமல்லாமல் எழுத்தாளர், பத்திரிகையாளர்,...

ஆலயமும் வித்தையும்

0
கோயில்களில் போதனை என்று சொன்னேன். இதைக் கொஞ்சம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணவேண்டும்! ஏறக்குறைய ஆயிரம் வருஷத்துக்கு முந்தி பல்லவ, பாண்டியர்களுக்கு மேலாகப் பிற்காலச் சோழர்கள் எனப்படுபவர்களின் ஆதிக்கம் பரவிற்று. விஜயாலயன் என்பவன் இப்படி மறுபடி...

 செய்தி வசிப்பாளர்களின் தேர்தல் செய்தி

0
கோபாலகிருஷ்ணன் பல்வேறு தமிழ் செய்தி ஊடகங்களில் செய்தி வாசிப்பாளர்களாகப் பணி புரிந்த / பணிபுரியும்  செய்தியாளர்களின் நலனுக்காக கடந்த ஆறு ஆண்டு களாகத் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டுவருகிறது தமிழ் செய்தி வாசிப்பாளர் கள் சங்கம்....

 தலைவி விமர்சனம்

1
- ராகவ்குமார் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சினிமா, அரசியல் பயணத்தை வைத்து ‘தலைவி’ என்ற பெயரில் திரைப்படமாகத் தந்திருக்கிறார் டைரக்டர் விஜய். படத்தில் எந்த ஒரு ரியல் கேரக்டர் பெயரையும் மாற்றாமல், அப்படியே தந்திருப்பதும், ஒரு...