
முதல் மரியாதை
வறண்ட நிலத்தில் விழும் ஒரு துளி நீரில், தன் ஈரத்தைத் தேடும் நடுத்தர வயதின் ஏக்கங்களை உணர்த்தும், அந்த முதிர்ந்த நடிப்பு. அதகளம்… அட்டகாசம்! அசத்தல்… அநாயசம்!!
– ரவிகுமார் கிருஷ்ணசாமி
அன்றும் என்றும் காணக்கிடைத்த பொக்கிஷம். அந்தப் படத்துல அவர் நடித்தார் என்பதை விட, வாழ்ந்தார். அதை யாராலும் மறக்க, மறுக்க முடியாது. காலத்தால் அழியாத காவியம். அவர் படங்களில் எதுவுமே சோடை போகாது.
– கணபதி லதா
எத்தனை முறை பார்த்தாலும் ஒரு கிராமத்து மனிதனின் பல்வேறு அம்சங்கள் புதிது புதிதாகத் தோன்றும். 'சின்னப் பெண்ணின் மனதில் சலனம் உண்டாகக் காரணமாகி விட்டோமே' எனும் குற்ற உணர்வு. அந்த சின்னப் பெண்ணின் தியாகத்தால் அவள் நினைவில் அல்லாடும் இறுதி மூச்சு… அடேங்கப்பா!
– மங்களா கௌரி
ஆயிரம் தடவை பார்த்தாலும் சலிக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம். வடிவுக்கரசி அவர்களின் ஆவேசமான கதாபாத்திரத்துக்கு சிவாஜி அவர்களின் பொறுமையான நடிப்பு, நம்மை அறியாமல் கண் கலங்க வைத்து விடும்.
– சிவம் சரவண சிவம்
'முதல் மரியாதை' திரைப்படத்தில் சிவாஜி அவர்கள், தனக்கு எந்த விதத்திலும் பொருந்தாத மனைவியை சகிப்புத் தன்மையுடன் நடத்துவது, இளவட்டக்கல்லை தூக்கி, தனது முதுமையை மறைக்க முயற்சிப்பது, ராதா அவர்கள் சமைத்துப்போடும் மீன் குழம்பை முள் குத்தாமல் நாசூக்காக சாப்பிட்டு, தனது அம்மாவின் கைப்பக்குவத்துடன் ஒப்பிடுவது என அனைத்து காட்சிகளும் டாப்.
– என்.ஜெகதாம்பாள்
தில்லானா மோகனாம்பாள்
சிவாஜி கணேசன் நாதஸ்வர வித்வானாகவே மாறி விட்டார். கையில் கத்திக்குத்து பட்டு ரத்தம் சிந்த, அவர் உணர்ச்சிபூர்வமாக வாசிக்கும் காட்சி அபாரம்.
– ராதிகா ரவீந்திரன்
தில்லானா மோகனாம்பாள் படம் அச்சேறியபோதே சண்முகமாக சிவாஜியை உருவகப்படித்தித்தான் படித்தோம். அந்தக் காவியத்தை திரையுலகில் காணச் செய்தவராயிற்றே!
– ராஜலக்ஷ்மி கௌரிசங்கர்
எதிரொலி
கே.பாலசந்தர் இயக்கத்தில் செம… பணத் தேவையின்போது, அனாமத்தாய் வந்த பணத்தை என்ன செய்வது எனத் தவிக்கும் தவிப்பு நம்மையும் டென்ஷனாக்கும். 'எப்படி வந்ததுன்னு தெரியாது'ன்னு கே.ஆர்.விஜயாவிடம் மருகுவது மெர்சல். வாழை இலைக் கட்டுக்குள் பணத்தை மறைத்துச் செல்லும்போது, மெய்யாலுமே நடிகர் திலகம் விருது பொருந்தும்.
– கோமதி சிவாயம்
வாழ்க்கை
'பெற்ற பிள்ளைகளை எந்தளவிற்கு நம்பி, காலம் தள்ள வேண்டும்' என தனது அற்புதமான நடிப்பில் விளக்கம் தருவார்.
– ஸ்ரீவித்யா பிரசாத்
ராஜபார்ட் ரங்கதுரை
உடன் பிறந்த தம்பியின் மாமனார் வீட்டில் அண்ணன், கண்ணனாக நடிக்க வேண்டிய சூழ்நிலையில் அழகாக நடித்தது.
– உஷா முத்துராமன்
வீரபாண்டிய கட்டபொம்மன்
காதலும், கடமை உணர்ச்சியும், ராஜ தந்திரங்களும், வீரமும், கருணை உள்ளமும் கொண்ட, கம்பீரம் மிகுந்த கட்டபொம்மனாக நடித்த, இல்லையில்லை… கட்டபொம்மனின் உருவமாகவே காட்சி தந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான் என் மனம் கவர்ந்தவர். `வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா? என் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணி புரிந்தாயா?` வசனம் இன்றும் கல்வெட்டாய் நெஞ்சில் இருக்கிறது!
– வசந்தா கோவிந்தன், பெங்களூரு
பாச மலர்
`இப்படி ஒரு அண்ணன் நமக்கு இருந்தால்…' என்று படம் பார்க்கும் ஒவ்வொரு பெண்ணும் நினைக்கும் விதத்தில், அருமையாக நடித்து இருப்பார் சிவாஜி.
– ஜெயா சம்பத்
நவராத்திரி
எதைச் சொல்ல? எதை விட? அனைத்துமே அருமை. எனினும், நவரஸங்களையும் அட்டகாசமாக, அநாயசமாக தனது நடிப்பின் மூலம் ஒவ்வொரு நாளும் வெளிப்படுத்திய 100ஆவது படமாகிய நவராத்திரி திரைப்படமே எனது சாய்ஸ்.
– மீனலதா
ஒன்பது விதமான கதாபாத்திரங்களில், நவரசம் என்று சொல்லப்படும் ஒன்பது வித குணங்களையும் அழகாக வெளிப்படுத்தி, அருமையாக நடித்து அசத்தியிருப்பார்.
– லலிதா பாலா
ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் மற்ற கதாபாத்திரத்தை பிரதிபலிக்காத வண்ணம், ஒருவரையே மீண்டும் மீண்டும் பார்க்கிறோம் என்ற சலிப்பு இல்லாதபடி ஒப்பனை முதல், நடிப்பு வரை முழுவதும் வேறுபட்டு அசத்தலான நடிப்பு நவராத்திரி திரைப்படத்தில்.
– விஜய் வீரா
பரீட்சைக்கு நேரமாச்சு
பிள்ளைகளின் அருமை, பெற்றோரின் அருமை, குற்றவுணர்ச்சி, மனசாட்சி மற்றும் கர்மா இவை அனைத்திற்கும் ஒரே விளக்கம் இந்தப் படம்.
– ஜெயஸ்ரீ நாகராஜன்
தெய்வ மகன்
வயதான அப்பா, அனாதையென நினைத்து தனது தோற்றம் குறித்து வருந்தும் மகன், பொறுப்பில்லா இளங்காளையாக அதற்கேற்ற குறும்பான உடல்மொழியுடன் இளைய மகன்… மூன்றுமே மூன்று விதமாக…! அட்டகாசம்!
– செல்லம் ஜெரினா
இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் நடித்து அசத்தி இருப்பார். அதிலும், அப்பாவாக பிள்ளையின் குறும்புத் தனமான செயல்களை ரசிப்பது போன்ற காட்சிகள் சிறப்பாக இருக்கும்.
– வாணி கணபதி
கௌரவம்
இந்தப் படத்தில் சிவாஜியின் நடிப்பு அபாரம். `பாலூட்டி வளா்த்த கிளி' என்ற பாடலில், என்ன அருமையான முகபாவம். தன் மனைவியிடம் காட்டும் பாசம், கண்டிப்பு அருமை. மகனிடம் வாதாடுவது எல்லாம் சூப்பா்.
– சாமுண்டேஸ்வரி பன்னீர்செல்வம்
கர்ணன்
கர்ணனாக அவர் ஏற்றிருந்த கதாபாத்திரத்தில் தத்ரூபமாய் நடித்திருப்பார். அதுவும் அந்தக் கடைசிக் கட்டத்தில், `உள்ளத்தில் நல்ல உள்ளம்' பாடலின்போது அவரின் முக பாவனைகள்… அப்பப்பா, உண்மையாகவே கர்ணன் இவர்தானோ என்று வியக்க வைத்து, நம்ப வைத்தது. அந்த அறியாப் பருவத்தில் கர்ணன் என்றால் இவர்தான் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
– தீபா தீபிகா
பாத்திரத்துக்கு ஒரு கம்பீரம்… துரியோதனனோடு நட்பு… மனைவியுடனான காதல்… துரியோதனன் மனைவி பானுமதியுடன் சொக்கட்டான் விளையாடுவது… கண்ணனுக்கு கவச குண்டலத்தை தானம் செய்வது… அன்னை குந்திக்கு வரங்களைக் கொடுப்பது… என கர்ணன் ஆகவே வாழ்ந்திருப்பார் சிவாஜி கணேசன்.
– வள்ளி சுப்பையா
சுமதி என் சுந்தரி
படத்தின் ஆரம்பமே ட்விஸ்ட்டோடதான் இருக்கும். கல்லூரி மாணவன் போன்று கட்டம் போட்ட அரைக்கை சட்டையுடன் சிவாஜியின் மெலிந்த தோற்றம். ஜெயலலிதாவுடனான காதல் / டூயட் காட்சிகள், நாகேசுடன் காமெடி, கடைசியில் உண்மையறிந்து ஆவேசப்படுவது என அனைத்துக் காட்சிகளிலும் அதகளம் பண்ணியிருப்பார்.
– ஜெயகாந்தி மகாதேவன்
திருவிளையாடல்
சிவபிரானே தத்ரூபமாக வந்தது போல் ஒவ்வொரு காட்சியிலும் நடித்து, அசத்தி இருப்பார் சிவாஜி கணேசன். நாகேஷோடு நடிக்கும் காட்சி, கடலில் மீன் பிடிக்கும் காட்சி, ஹேமநாதரை பாண்டிய நாட்டை விட்டு வெளியே அனுப்பும் காட்சி, 'பாட்டும் நானே, பாவமும் நானே…' என்ற பாடலில் உள்ள ஒவ்வொரு அசைவும், நடிப்பும் அழகு. மிக அருமை.
– கலைமதி சிவகுரு
சிவாஜி சார் ஒரு என்சைக்ளோபீடியா. அவர் ஏற்காத பாத்திரமும் இல்லை, காட்டாத முகபாவமும் இல்லை. ஒரு படத்தை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வது என்பது இயலாத காரியம். அவர் நடிக்கும் படத்தில் பாடல்களும் அருமையாக அமைந்து விடும். நடிப்பில் சிகரத்தைத் தொட்ட அந்தச் செம்மலுக்கு ஈடு இணை இவ்வுலகில் யாரும் இல்லை.
– கிருஷ்ணவேணி
என் கையில் ஆயிரம் வைரங்களைக் கொடுத்து எது பிடிக்கும் என்றால் எதைச் சொல்வது?! ஒவ்வொரு படத்திலும் அவர் ஏற்ற கதாபாத்திரம் நம் மனதில் ஆழப் பதிந்து உள்ளது. நாம் பார்த்திராத கட்டபொம்மன், வா.உ.சி., பாரதியார், கர்ணன், வீர சிவாஜி, அப்பர் ஆகியோர் இப்படித்தான் இருந்து இருப்பார்கள் என்று நமக்கு அறிமுகம் செய்தவர். Acting is nothing but exaggeration of expression, என்று அவர் தனது சுயசரிதையில் கூறி இருப்பார். சிலர் அவர் நடிப்பு மிகையானது என்று கூறினாலும், அந்தந்த கதாபாத்திரம் நம் மனதில் இன்றும் ஆழ நிலைத்து இருப்பது அதனால்தான். அவர் போல் இன்னொருவர் பிறக்க வாய்ப்பே இல்லை. ஒரு நிலா, ஒரு சூரியன் போல், ஒரே ஒரு சிவாஜி கணேசன்தான்.
– செல்வி மாதேஸ்வரன்