0,00 INR

No products in the cart.

சிவாஜி பாலிசி

ஸ்டார்ட்…கேமரா…ஆனந்த்-13

மன்சூர் கான் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்த இன்னொரு படம் ‘காக்கி’.  அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் என்று பல பெரிய நட்சத்திரங்கள் நடித்த படம். அமிதாபுக்கு  வயசான போலிஸ் துணை கமிஷனர்  பாத்திரம். காடு மற்றும் வறண்ட பகுதியின் வழியாக ஒரு தீவிரவாதியை மும்பைக்கு அழைத்துச் செல்லும்போது அவர் சந்திக்கும் சவால்கள் பற்றிய கதை. மகாராஷ்டிராவில் நாசிக் பகுதியில் மிக வறட்சியான ஏரியாவில்  படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

ஒரு ரோடு. வலப்புறத்தில்  அதை ஒட்டினாற்போல அடர்ந்த சப்பாத்திக் கள்ளி முட்புதர்கள்.  அதைத் தாண்டினால் நாற்படி ஆழச் சரிவு. அப்படி ஒரு இடத்தில், ஒரு நாள் மாலை படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. வேகமாக ஒரு ஜீப் வந்து, திடீரென்று சடர்ன் பிரேக் போட்டு நிறுத்தவேண்டும். இதுதான் காட்சி. அதன் ஒத்திகை நடந்தது. ஒரு ஸ்டன்ட் நடிகர் தூரத்தில் ஜீப்பில் தயாராக இருந்தார். நானும், ஸ்டன்ட் டைரக்டர் அமீன் அலியும்  நடு ரோட்டில் நின்று கொண்டிருக்க, ஐஸ்வர்யா ராய்  முட்புதருக்குச் சற்று தள்ளி ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். மற்றவர்கள் ஆங்காங்கே நின்று தங்கள் வேலையில் ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். சிக்னல் கொடுத்தவுடன், ஸ்டன்ட் நடிகர் ஜீப்பை கிளப்பிக்கொண்டு ஃபுல் ஸ்பீடில் வந்துகொண் டிருந்தார். நிறுத்தவேண்டிய இடத்துக்குச் சற்று முன்பாக ரோடில் லேசாக மண் இருந்ததால், ஜீப்பை ஓட்டிக்கொண்டு வந்தவர் சற்றே நிலைதடுமாறி, ஜீப் எங்கள் மீது மோதிவிடுமோ என பயந்து, உடனே  சமாளித்துக் கொண்டு, ஸ்டியரிங்கை வளைக்க, அது முட்புதரை நோக்கிப் பாயந்தது.

என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ளவே சில வினாடிகள் ஆயின. நாற்காலியில் உட்கார்ந்துகொண்டிருந்த ஐஸ்வர்யா ராயைக் காணோம்! நாற்காலி உடைந்து கிடந்தது. எல்லோரும் புதரை நோக்கி ஓடினோம். சப்பாத்திக்கள்ளி முட்புதருக்குள் விழுந்து கிடந்தார் ஐஸ். அவரைத் தூக்கி, வெளியில் கொண்டுவந்தபோது, அவரால் நடக்க முடியவில்லை. உடலில் பல இடங்களில் முள் கீறல்கள். உடனடியாக அவரை நாசிக்கிற்கு அழைத்துக் கொண்டுபோய் ஆரம்பக் கட்ட சிகிச்சை  அளித்து அங்கிருந்து மும்பைக்கு அழைத்துக்கொண்டு போனோம். ஐஸ்வர்யா ராயின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. சிகிச்சையளித்த டாக்டர் மூன்று மாதம் அவர் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். அடுத்த மூன்று மாதங்களுக்குப் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அதனால், கையிலிருந்த மற்றவர்கள்  கால்ஷீட்களையும் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போனது.

ஐஸ்வர்யா ராய் பூரண குணமடைந்து, படப்பிடிப்புக்கு ரெடியானபோது, வேறு விதமான பிரச்னை ஏற்பட்டது. வறட்சியாக இருந்த நாசிக் பகுதியின் பூமி, மழை காலத்துக்குப் பின் பச்சைப் பசேலென்று ஆகிவிட்டது. ஏற்கெனவே வறண்ட பூமியில் எடுத்த காட்சிகளுடன் இது பொருந்தாது. ராஜஸ்தானில் ஏதாவது ஒரு வறண்ட பகுதியில் படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என்றால் அதற்கு அமிதாப் ஒப்புக்கொள்ளவில்லை. காரணம், ஏற்கெனவே,  அவர் அந்தத் தேதிகளில் கால்ஷீட் கொடுத்த படத்தின் ஷீட்டிங் மும்பையில் நடந்துகொண்டிருந்தது.எங்களுக்காக அட்ஜஸ்ட் செய்துகொண்டு, இரவும், பகலுமாக இரண்டு ஷூட்டிங்குகளிலும் கலந்து கொள்ளச் சம்மதித்திருந்ததால், ராஜஸ்தானுக்கு வரமுடியாத சூழ்நிலை.

அடுத்த வறண்ட சீசன் வரை படப்பிடிப்பைத் தள்ளிப்போட்டால், படம் வெளியாவதே கேள்விக்குறியாகிவிடுமோ என்ற சிக்கல். டைரக்டரும் நானும் இந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்தோம். அப்போது ஹாலிவுட் படங்களில் பயன்படுத்திய  டி.ஐ. என்கிற டிஜிட்டல் இன்டர்மீடியட் என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் இந்தப் பிரச்னை யைத் தீர்க்க முடியும் என்ற என் நம்பிக்கையைத் தெரிவித்தேன். அது என்ன டி.ஐ.?

ஒரு காட்சியை ஃபிலிமில் படம்பிடித்து, அதை ஸ்கேன் செய்து,  டிஜிட்டல் மீடியத்துக்கு மாற்றி, அதன் பிறகு, கலர் திருத்தங்கள், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் என்று என்னென்ன விதமான மாற்றங்கள் அவசியமோ, அவற் றைச் செய்து, மீண்டும் ஃபிலிமுக்கு மாற்றுகிற தொழில்நுட்பம்தான் டி.ஐ.

ஆனால், அந்தத் தொழில்நுட்பம் அப்போது இந்தியாவுக்கு வரவே யில்லை. மும்பை பிரசாத் ஸ்டூடியோவில் விசாரித்தபோது,  இன்னும் ஒரு வருடத்தில் அதை இங்கே கொண்டுவர திட்டமிட்டிருக்கிறோம் என்றார்கள். எங்கள் பிரச்னையையும், அவசரத்தையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்லி  அவசரப்படுத்தினோம். அடுத்த சில மாதங்களில் சாய் பிரசாத் (திரு. எல்.வி. பிரசாத்தின் பேரன்) முயற்சியில் மும்பை  பிரசாத் லேபில் டி.ஐ. டெக்னாலஜி கொண்டுவரப்பட்டது. நாங்களும், மும்பை ஃபிலிம்சிடிக்குள்ளேயே ஒரு பகுதி யைத் தேர்ந்தெடுத்து, அங்கே படப்பிடிப்பை நடத்தி, டி.ஐ. டெக்னாலஜி மூலமாக, தரையிலிருந்த பச்சைப்பசேலென்ற புல்தரையை மட்டும் வறண்ட  புல் தரையாக மாற்றிவிட்டோம். அதற்காக ஐம்பது லட்சம் ரூபாய் அதிகப்படி யாகச் செலவானது என்றாலும், படம் தடைபடாமல் முடிந்து ரிலீசானது பெரிய சாதனைதான்! இந்தியாவில் டி.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட முதல் படம் ‘காக்கி’தான். இப்போது பல  தமிழ்ப் படங்களில் பத்து லட்சம் ரூபாய் செலவிலேயே டி.ஐ. டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது.

‘காக்கி’யில் அமிதாப்புடன் பணியாற்றியது மறக்கமுடியாத அனுபவம் என்றால், தேவர் மகனில் சிவாஜியின்  அருகில்  இருந்து பணியாற்றியதும் அப்படிப்பட்டதுதான். கமல் தயாரித்து, பரதன் இயக்கிய ‘தேவர் மகன்’ படத் துக்கு  பி.சி. ஒளிப்பதிவாளர். சிவாஜி, கமல் இருவரும் நடிக்கும் ஒரு  படத் தில் நாமும் பணியாற்றப் போகிறோம் என்பதே எனக்கு திரில்லிங்காக இருந்தது.

பொள்ளாச்சியில் சிங்காநல்லூர் வீடு என்கிற பெரிய வீட்டில் தேவர் மகன் ஷூட்டிங். வழக்கமாக பி.சி.சார் ஒர்க் பண்ணும் படங்களில் அவரு டைய அசிஸ்டன்ட்களான நாங்கள் வெகுசீக்கிரமாக ஸ்பாட்டுக்குப் போய்விடு வோம்.  முதல் நாளன்று   காலை ஒன்பது மணிக்கு ஷூட்டிங். ஏழு மணிக்கு நானும் இன்னும் இரண்டு அசிஸ்டன்ட்களும் அந்த வீட்டை அடைந் தோம். வீட்டுக்காரர் வந்து வீட்டைக் கூட திறந்து விடவில்லை.  கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த எங்களுக்குப் பெரும் அதிர்ச்சி! வீட்டின் திண்ணையில் சிவாஜி கம்பீரமாக, கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்துகொண்டிருந்தார். அவரை எப்படி எதிர்கொள்வது என்று மிரண்டு போனோம்.  சிரிது நேரத்தில் வீடு திறக்கப்பட்டது. கொஞ்ச நேரம் கழித்து, பி.சி.சார் வந்தார். அவரும் சிவாஜியைப் பார்த்தவுடன் கொஞ்சம் டென்ஷனாகி விட்டார். அப்புறம் கமல் வந்தபோது அவருக்கும் டென்ஷன்! மறு நாளி லிருந்து பார்க்க வேண்டுமே, சிவாஜி வருவதற்கு முன் வந்துவிடவேண்டும் என்று ஆளாளுக்கு ஒரே பரபரப்பு!

தான் ஒரு மிகப் பெரிய நடிகராக இருந்தாலும், டைரக்டர் சொல்லு வதுபோலத்தான் நடிக்க வேண்டும் என்ற சிவாஜியின் பாலிசியை நான் புரிந்துகொண்ட சம்பவம் இது. “போற்றிப் பாடடி பெண்ணே” பாடல் காட்சிக்கு முன்பாக சிவாஜி குழந்தைகளுடன் ஜாலியாக விளையாடியபடி இருப்பார். அப்போது சிவாஜி வசனம் பேசியது சற்றே ஓவர் ஆக்டிங்காக இருப்பதாக நினைத்தார் இயக்குநர் பரதன், ஆனால், சிவாஜியிடம் நேரடியாகச் சொல்ல மிகவும் தயங்கினார். ஆனாலும் அந்தக் காட்சியில் சிவாஜியின் நடிப்பு யதார்த்தமாகத்தான் இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். எனவே,  மெதுவாக சிவாஜியிடன் காதருகில் சென்று, மெல்லிய குரலில், ’’குழந்தை களோட நீங்க நடிக்கிறதால கொஞ்சம் சாஃப்ட்டாக பேசினீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்’’ என்று வெகு நாசூக்காகச் சொல்லவும், சிவாஜி டைரக்டரை அர்த்தம் பொதிய பார்த்தபடியே, “டைரக்டரே! என்னை ஓவர் ஆக்டிங் பண்ண வேணாம்னு சொல்லறே! அவ்வளவுதானே!” என்று சொல்லிவிட்டு, பரதன் விருப்பப்படியே நடித்தார்.

சிவாஜி பற்றிய பிரமிப்பு ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் தயாரிப்பாளர்  என்பதால் செலவில் சிக்கனம் பார்க்காமல் காட்சியில் நிஜத் தன்மை வேண்டும் என்று கமல் செய்த காரியம் என்னை வியக்க வைத்தது.

(தொடரும்)

 

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

லைஃப்பாய் சோப்

0
அது ஒரு கனாக்காலம் 9 ஒரு காலத்தில் லைஃப்பாய் சோப் இல்லாத வீடே இல்லை என்னும் நிலை இருந்தது! வட இந்தியாவில் சர்வ சாதாரணமாக கடைகளில் வந்து அடித்தட்டு மக்கள் “லால்வாலி சாபூன்” (லால்...

இன்பத்த தேன் வந்து பாயுதே

0
மகாகவி, தேசியக்கவி,  என்று பரவலாக  அறியப்பட்ட பாரதி கடுமையான இலக்கிய நடைகளை உடைத்து, பாமரனுக்கும் புரியும் வகையில் புதிய கவி நடைகளைப் படைத்தவன். ஆனால், பாரதியார் ஒரு கவிஞராக மட்டுமல்லாமல் எழுத்தாளர், பத்திரிகையாளர்,...

ஆலயமும் வித்தையும்

0
கோயில்களில் போதனை என்று சொன்னேன். இதைக் கொஞ்சம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணவேண்டும்! ஏறக்குறைய ஆயிரம் வருஷத்துக்கு முந்தி பல்லவ, பாண்டியர்களுக்கு மேலாகப் பிற்காலச் சோழர்கள் எனப்படுபவர்களின் ஆதிக்கம் பரவிற்று. விஜயாலயன் என்பவன் இப்படி மறுபடி...

சட்டை

0
கடைசிப் பக்கம்  சுஜாதா தேசிகன் முழுக்கை, அரைக்கை என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல், நான் ஒரு சட்டை பைத்தியம். சினிமா ஹீரோ எப்படிப்பட்டவர் என்று ஆரம்பிக்கும் ஆரவாரமான முதல் காட்சி போல ஒரு சம்பவத்தைச் சொல்லுகிறேன். வேலைக்கு...

 செய்தி வசிப்பாளர்களின் தேர்தல் செய்தி

0
கோபாலகிருஷ்ணன் பல்வேறு தமிழ் செய்தி ஊடகங்களில் செய்தி வாசிப்பாளர்களாகப் பணி புரிந்த / பணிபுரியும்  செய்தியாளர்களின் நலனுக்காக கடந்த ஆறு ஆண்டு களாகத் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டுவருகிறது தமிழ் செய்தி வாசிப்பாளர் கள் சங்கம்....