0,00 INR

No products in the cart.

சிஷ்யன் பெற்ற மந்திரம்!

பக்திக் கதை

பா.கண்ணன்

நமது இதிகாச மகாபுராணங்களில் முக்கியமாக மகாபாரதம் ஆதி பர்வத்தில் குரு – சிஷ்ய பரம்பரை பற்றியச் சிறுசிறு கதைகள் பல விரவிக் கிடக்கின்றன. அவற்றுள், அறியாமை என்னும் இருளை நீக்கி, சத்திய ஒளியைத் தரிசிக்க உதவும் குருவைப் போற்றும் ஒரு கதையைப் பார்ப்போம்.

பரம காரியத்தில் விருப்பமுள்ளவனும், ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு கொண்டவனும், ஆத்ம சுத்தியில் கண்ணும் கருத்துமாக இருந்தவனுமான ஒரு முனிகுமாரன், தன்னை ஒரு குருநாதரின் குருகுலத்தில் இணைத்துக்கொள்ள விரும்பி முனிவர் ஒருவரை அணுகினான். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க ஒரு சிறப்பு வாய்ந்த மந்திரத்தைத் தனக்கு உபதேசிக்க வேண்டினான். முனிவர் அதற்குச் சொன்னார்:

“நற்சிந்தனை பெற்ற குமாரா! அதை அவ்வளவு எளிதில் அடைவதற்கு முடியாது. இக்குருகுலத்தில் நீ பன்னிரெண்டு ஆண்டு காலம் என் சீடனாக இருந்து, ஆசிரமப் பணிகளைச் சரிவரச் செய்து வருவாயானால் அதன் முடிவில் நினைத்தது சித்திக்கும்!” என்று. தன் நோக்கத்தில் உறுதியாய் இருந்த அந்த மாணவன் அதற்குச் சம்மதித்து முனிவர் இட்டப் பணிகளைக் குறைவின்றிச் செய்து வந்தான்.

பன்னிரெண்டு வருடங்கள் கடந்த நிலையில், தன் அந்திமக் காலம் நெருங்கி விட்டதை உணர்ந்த முனிவர், தான் வாக்களித்தபடி சீடனுக்கு மந்திர தீட்சை அளித்துவிட விரும்பினார். “சீரிய குணமிக்கச் சிஷ்யனே! உடனே சென்று ஒரு நல்ல பனையோலையை எடுத்து வா. அதில் அந்த மந்திரத்தைக் குறித்துத் தருகிறேன், நேரத்தை வீணாக்காமல் விரைந்துச் சென்று வா!” என்று கட்டளை இட்டார். அன்றையப் பூஜை, புனஸ்காரங்களை விரைந்து முடிக்க எண்ணியவர் நீராட ஆற்றங்கரைச் சென்று விட்டார்.

பனையோலையைத் தேடி எடுத்து வர நாழிகை ஆகிவிட்ட அந்த இடை வெளியில் நதிக்கரை ஓரமாகவே முனிவர் சித்தியடைந்து விட்டார். முனிவருடன் கூட இருந்த மற்றொரு சீடன் இதைத் தெரிவிக்க, மனம்  இடிந்துப் போனான் இளைஞன். பன்னிரெண்டு வருடக் காத்திருப்புக்குப் பலனில்லாமல் போய்விட்டதே என்ற வருத்தம் இருந்தாலும், அவன் மனதில் ஒரு நப்பாசை!

அந்தச் சீடனிடம் தயங்கியவாறு கேட்டான் ’’ஆச்சாரியார் எனக்கு ஏதாவது செய்தி சொல்லச் சொன்னாரா!” என்று.

“ஆம், நண்பா! இங்கே இவ்விடத்தில் சில வார்த்தைகளை மணலில் எழுதிவிட்டு, நீ திரும்பியதும் காட்டச் சொன்னார். ஆனால் என்ன துரதிருஷ்டம்! நானும் மற்றவர்களும் குருஜியின் மீது கவனமாய் இருக்கையில், அங்கு வந்த துணி துவைக்கும் பெண் ஒருத்தி, முனிவர் எழுதியதைத் தன் தொள்ளைக் காதில் செருகியிருந்தப் பனைக் காதோலையில் குச்சியால் கீறிக்கொண்டு, மணலைக் கலைத்து விட்டாள் என்றுச் சொன்னான். மாணவன் பொறுமை இழக்காமல் அந்தத் துணி துவைக்கும் பெண்ணைக் கண்டுபிடிக்க அலையலானான்.

ஒருநாள் துணிதுவைக்க ஆற்றங்கரைக்கு வந்த அந்தப் பெண்ணிடம் மெதுவாக விவரம் கேட்டு, அது அவள்தான் என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டான். தான் காதோலையில் கீறிக் கொண்டது ஒரு சக்தி வாய்ந்த மந்திரம் என்பதும், அதைத்தான் அந்த மாணவன் தேடுகிறான் என்பதையும் அறிந்துக் கொண்டவள், தன் சாமர்த்தியத்தைக் காட்ட ஆரம்பித்தாள்

“இளைஞனே! ஒரு மந்திரத்தையடைய பன்னிரெண்டு ஆண்டுகள் காத்திருந்தும் பயனில்லாமல் போய்விட்டதே! உனக்கு அந்த மந்திரம் தான் வேண்டுமென்றால் என்னிடமும் நீ விசுவாசமாய் அடுத்து பன்னிரெண்டு வருடங்கள் என் சொல்படி பணியாற்ற வேண்டும், செய்வாயா?” என்று வினவினாள். எப்பாடுபட்டாலும் மந்திரத்தை அடைந்து விட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இருந்தவன் அவள் சொன்னதை ஏற்றுக்கொண்டான். துணிகளைத் துவைப்பதில் அவளுக்கு உதவினான்,கழுதைகளை மேய்த்துப் பராமரித்தான். அவள் தரும் உணவு சிறிதளவே இருந்தாலும் பொறுமைக் காத்தான். ஒரு நாள் பசி மிகுதியால் அருகிலிருந்த நகருக்குள் சென்று, பசியார ஏதாவது கிடைக்குமா எனத் தேடினான்.

அங்கிருந்த ஊர் மக்களிடமிருந்து அவன் கேள்விப்பட்டது இதுதான் – அந்த ஊர் ராஜாவுக்கு வெகு நாட்களாக வாரிசு இல்லாமல் இருக்க, ராஜகுருவின் யோசனைப்படி மன்னன் தினமும் ஏழைகளுக்கு அன்னதானமிட்டு வந்தான். என்றைக்கு ஒரு உண்மையான ஆஸ்திகவாதியும், விடாமுயற்சியுடன் தன் இலக்கையடைவதில் உறுதியுடன் இருப்பவன் அந்த அன்னத்தை உண்பானானால், உடனே அரண்மனை வாயிலில் இருக்கும் ஆராய்ச்சி மணி தானாகவே ஒலியெழுப்பும் என்றும், அதுவே வாரிசு உண்டாவதற்கு முன் அறிவிப்பு என்றும் அவர் கூறியிருந்தார். அந்நாள் வரை அப்படியேதும் நிகழாததால் மன்னன் வெறுத்துப் போய் அன்றையிலிருந்து அன்னதானம் வழங்குவதை நிறுத்தி விட்டான் எனவும் கேள்வியுற்றான். இளைஞன் மிகவும் நொந்துப் போனான். போஜனம் போடும் இடம் சென்று பார்ப்போம், மிச்சம் மீதி ஏதாவது இருந்தால் சாப்பிடலாமே என்ற எண்ணத்தில் சென்றவனுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.

பாத்திரங்களைக் கழுவிச் சுத்தம் செய்ய ஆற்றங்கரைக்கு எடுத்துச் சென்று விட்டனர். அங்கும் ஓடோடிச் சென்றவன் பாத்திரங்களில் ஒட்டிக் கொண்டிருந்தச் சோறு மற்றும் ருசியானப் பதார்த்த வகைகளைச் சுரண்டி ஆவலுடன் சாப்பிட்டான். அதேசமயம் அரண்மனை ஆராய்ச்சி மணியும் ஒலியெழுப்ப ஆரம்பித்தது!

நம்பிக்கையை எல்லாம் இழந்து மனவருத்தத்துடன் அந்தப்புரத்தில் இருந்த அரச தம்பதியின் காதுகளில் அந்தத் திடீர் மணியோசை இன்ப அதிர்வைத் தந்தது. வெட்டவெளியில் சுற்றித் திரிகையில் தாகசாந்தி செய்துகொள்ள முனையும்போது ஒரு நீர்க்குட்டை கண்களில் பட்டால் எவ்வளவு மகிழ்ச்சி உண்டாகுமோ அதே நிலையில் தான் அவர்களும் இருந்தனர். அன்னதானம் முடிந்து வெகுநேரம் கடந்து விட்டபின் இப்போது மணி அடிக்கிறது என்றால், பாத்திரங்கள் கழுவுமிடத்தில் அவற்றிலிருந்த மிஞ்சிய உணவை யாரோவொரு புண்ணியாத்மா சாப்பிட்டிருக்க வேண்டும், அது யாராயிருக்கும் என்பதைக் கண்டறிய ஏவலாளர்களை ஏவினான் மன்னன். நதிக்கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சீடனை அவர்கள் முறைப்படி விசாரித்த பின் மன்னனிடம் அழைத்து வந்தனர். அறிவொளி வீசும் அந்த இளைஞனின் முகத்தைக் கண்டதும் தனக்கும் அம்மாதிரி ஒரு மகன் பிறப்பான் என்பது உறுதியாகி விட மன்னன் மகிழ்ச்சியில் திளைத்தான்.

“குமார தேவா! நீ யார், எங்கிருந்து வருகிறாய்,அதைச் சொல். உன்னால் என் வம்சம் தழைக்கப்போகிறது. அதற்குக் கைமாறாக உனக்கு என்ன வேண்டுமோ அதைக் கேள், கொடுக்கிறேன். நாட்டின் ஒரு சிறியப் பகுதியைக் கூடத் தருகிறேன். வேண்டாம் என்றுச் சொல்ல மட்டும் செய்யாதே!” என்றான்.

சீடன் தன் கதையை முழுவதும் கூறினான். “அரசே! எனக்கு மண், பொன் சேர்க்கும் ஆசை இல்லை. நிரந்தரமற்ற அவற்றையெல்லாம் விட, வாழ்வை உயர்த்தும் சாசுவதமான என் குருநாதர் கொடுத்த ‘மந்திரம்’ தான் வேண்டும். அதுவோ இப்போது ஒரு துணி துவைக்கும்  பெண்ணிடம், அவள் அணியும் காதோலையில் உள்ளது. அவள் ஒரு கழைக் கூத்தாடியும் கூட. அவளிடம் விசுவாசமாக ஊழியம் பார்த்து வந்தேன். ஆகையால் அவளை நிர்பந்திக்காமல் அதைப் பெற்றுத் தருவீர்களானால் அதுவே போதும்! அதுவரை நகரில் தங்கிக்கொள்ள அனுமதிக்க வேண்டும்!” என்று கோரிக்கை வைத்தான்.

சம்மதம் தெரிவித்த மன்னன், அந்தப் பெண்மணியைத் தேடி அழைத்து வரப் பணித்தான். நாட்கள் கடந்தன. சீடன் கொடுத்த விவரங்களின் அடிப்படையில் அந்த துணி துவைக்கும் பெண்ணைக் கண்டுபிடிப்பதில் சிரமப்படாமல் அழைத்து வந்து விட்டனர். அதேசமயம் ராணி கருவுற்றச் செய்தியும் வெளியாக நாடு மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தது. ராணியைச் சந்தோஷப்படுத்த மன்னன் கழைக் கூத்தாடியின் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தான்.

பார்ப்பவர்களின் மனதைக் கலவரப்படுத்தும் வண்ணம் அந்தரத்தில் கயிற்றின் மீது நடந்தும், நடனமாடியும் பலவித வித்தைகளைச் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினாள். சமயம் பார்த்து மன்னர், “பெண்ணே! ராணி மிகவும் சந்தோஷமாக இருக்கிறார். ராணியார் உனக்கு இரு வைரத்தோடுகள் பரிசளிக்க நினைக்கிறார். அவற்றை உன்னிடம் தூக்கிப் போடுவேன். கயிற்றில் நடந்தவாறே அதைப் பிடித்து காதில் அணிந்துக் கொள்ள வேண்டும், முடியுமா?” என்று வினவ, அவளும் உடனே ஒப்புக் கொண்டாள்.

வீசி எறியப்பட்ட தோடுகளை மேலேயிருந்தபடியே கைப்பற்றி, காதோலைகளை எடுத்துக் கீழே போட்டுவிட்டுத் தோடுகளை அணிந்தாள். காதோலையை அறவே மறந்து விட்டாள்! அதைவிட வைரத்தோடு மிக்க மதிப்புடையது அல்லவா!

அந்த நேரத்தையே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் காதோலைச் சருகை எடுத்துப் பிரித்துப் படித்தான். மிகவும் பழையது ஆகி விட்டதால் படிக்கச் சற்றுக் கடினமாய் இருந்தது. “குமாரதேவா! நீ அடைய வேண்டிய மந்திரம் இதுதானா?” என்று கேட்டான் அரசன்.

“ஆம், மன்னா! குருநாதர் இதை விடாமல் சொல்லிக் கொண்டிருப்பார். இதன் பொருளையும் விவரித்திருக்கிறார். தெரிந்திருந்தும் அறியாமல் இருந்துவிட்டேனே!” என அங்கலாய்ந்தான்.

“குமாரா! விசனப்படாதே. இது என்ன மந்திரம் எனக்குச் சொல்வாயா, இல்லை பன்னிரெண்டு ஆண்டுகள் நானும் காத்திருக்க வேண்டுமா?” என்று புன்முறுவலுடன் வினவினான் அரசன்.

“அரசே, இது என்ன வேடிக்கை! இந்த இரு சொற்கள் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமம் முதல் ஸ்லோகத்தில் அமைந்தவை. ‘பூதக்ருத்,பூதப்ருத் பாவஹ’ என்பதே அவை. தூணிலும், துரும்பிலும் இருக்கும் பரம்பொருள் எல்லா உயிரினங்களின் படைத்தலுக்கும் ஆதாரமாய் இருந்தாலும், அவற்றைக் காத்தருளும் பெருங்கடமையையும் தானே ஏற்றுக் கொள்கிறான். அவன் நாமங்களையே சொல்லிக் கொண்டிருப்போமானால் எதிர்பார்க்கும் பலன்களை நாம் அடைந்து விட முடியும்! குருநாதரின் கருணை பார்வை இன்று என் மீது விழ என்ன பாக்கியம் செய்து விட்டேன்!” என்றுரைத்தான் சீடன்.

“உண்மை, உண்மை! அவர் இன்னொரு பாதையையும் காட்டியுள்ளார் என நினைக்கிறேன். முனிகுமாரா, அமைதி சூழ்ந்த சோலை ஒன்றில் பர்ணசாலை அமைத்துத் தருகிறேன். மாணவர்கள் கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற நீங்கள் பாடுபட வேண்டும். இந்த எங்கள் அன்பான கோரிக்கையை மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்!” என்றார் மன்னர்.

“24 வருடங்களுக்குப் பின் குருநாதர் எனக்களித்தப் பெரும் பாக்கியமாக எண்ணி தங்கள் வேண்டுகோளைத் தட்டாமல் ஏற்றுக் கொள்கிறேன். ஆச்சாரியாரின் அருள் என்னைக் காக்கட்டும்!” என வினயமுடன் பதிலுரைத்தான் முனிகுமாரன்.

கடமை, கட்டுப்பாடு, பொறுமை, சகிப்புத் தன்மை, விடாமுயற்சி எல்லாவற்றுக்கும் மேல் குருநாதரின் அருளும் சேர்ந்து விட்டால் எதையும் சாதிக்கலாம் என்பதை இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

ஆச்சரியத்தின் உச்சமாக குறுக்குத்துறை முருகன் கோயில்!

0
ஆலயம் கண்டேன் - ஸ்வாமி தமிழகத்தில் எண்ணிலடங்கா கோயில்களில் சொல்லித் தீராத பலப்பல அதிசயங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் ஆண்டுக்கு ஒரு முறை நீரில் மூழ்கி காணாமல் போகும் அதிசய முருகன் திருக்கோயில்...

பலிபீடத்தைத் தொட்டால் தோஷமா?

0
அறிவோம் தெளிவோம் - கவிதா பாலாஜிகணேஷ் எல்லா ஆலயங்களிலும் கொடி மரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் அமைத்து இருப்பார்கள். கொடி மரத்தை வழிபட்டு முடித்ததும் பலிபீடத்தை வழிபட வேண்டும். பொதுவாக, பலிபீடங்கள் மூன்று அடுக்கு பீடம் மீது தாமரை...

பரமேஸ்டிக்கு அருளிய பரந்தாமன்!

0
அருளாடல் - ஸ்ரீதர் பூரி திருத்தலத்தில் பரமேஸ்டி என்ற தையற்காரர் வசித்து வந்தார். புற அழகில் அவலட்சணமான கூன்முதுகர். ஆனால், அக அழகில் ஸர்வ லஷ்ணத்துடன் எல்லா நற்பண்புகளும் பெற்ற சிறந்த விஷ்ணு பக்தர்! தையற்...

வாழ்வின் அர்த்தம்!

0
படித்ததில் பிடித்தது - ஏ.எஸ்.கோவிந்தராஜன் போர்க்களத்தில் மகன் அபிமன்யு தனது கண் முன்னே இறப்பதைப் பார்த்து கேவிக் கேவி கண்ணீர் விட்டு அழுதான் அர்ஜுனன். அதைப் பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும் கேவிக் கேவி கண்ணீர்...

அழகு சுந்தரனாக அருளும் வரதராஜ பெருமாள்!

0
ஆலயம் கண்டேன் - ஆர்.வி.பதி காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர்  தாலுகாவில் அமைந்த ஆலப்பாக்கம் என்ற சிறிய கிராமத்தில் அமைந்துள்ள அழகு சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழைமையான திருக்கோயிலாகும்....