online@kalkiweekly.com

செம்பா

கதை : ஜெயகாந்தி, ஓவியம் : தமிழ்

ஞாயிற்றுக்கிழமை – காலை சிற்றுண்டி முடித்து, ஹாலில் வந்து அமர்ந்தாள் செம்பா என்கிற செண்பகம். வயது 70. நல்ல வேலையிலிருந்து பணி ஓய்வு பெற்றவள். கணவர் கடைத்தெரு பக்கம் போயிருந்தார். மகனும் மருமகளும் ஏதோ வேலையாய் வெளியில் போய்விட, கல்லூரி மாணவியான பேத்தி அவிரா, டிவி பார்த்துக்கொண்டிருந்தாள். டிவியில், `நீயா நானா’ ஓடிக்கொண்டிருந்தது.

இரண்டு அணியில் ஒரு அணி, கேரியருக்காகக் காதலை விட்டவர்கள். இன்னொன்று காதலுக்காகக் கேரியரைத் துறந்தவர்கள். கோபிநாத் கேள்விகளாய் கேட்டுக் கொண்டிருக்க காரசாரமா விவாதம் போய்க்கொண்டிருந்தது.

திடீரென பேத்தி அவிரா, பாட்டியிடம், “இந்த மாதிரி அனுபவம் எதுவும் சின்ன வயதில் உனக்கு இருந்ததா பாட்டி?’’ எனக் கேட்டாள். செண்பகம் சிறிது நேரம் எதுவும் பேசாமல் பேத்தியையே உற்றுப் பார்த்தாள். நினைவு மின்னலாய் பின்னோக்கிச் சென்றது.

அது ஒரு அழகான சின்ன கிராமம். அங்கு எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படிக்கக்கூடிய ஒரு எலிமெண்டரி ஸ்கூல். ஆண் பிள்ளைகள் அதற்குமேல் படிக்க, நான்கு கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்று அங்குள்ள பெரிய ஊரில் ஹைஸ்கூல் படிப்பை முடிப்பதுண்டு.

பெண்களை எட்டாம் வகுப்போடு நிறுத்திவிடுவார்கள். அப்படித்தான் செண்பகத்துக்கும் நேர்ந்தது. பத்து வயதில் தந்தையை இழந்து, தாய் மற்றும் ஒரு மூத்த சகோதரனுடன் வசித்து வந்தாள். அண்ணன் ஹைஸ்கூல் முடித்து, வேலை தேடி வெளியூர் சென்று விட்டான். படிப்பில் அதீத ஆர்வம் கொண்ட செம்பாவுக்கு, ’நிறைய படித்து வேலைக்குப் போகணும், கை நிறைய சம்பாதிக்கணும்’ என்ற ஆர்வம் நிறைய இருந்தது.

தாயிடம், ’’அம்மா, நானும் வெளியூர் சென்று படிக்கிறேன். என்னால் முடியும்மா’’ என்றாள்.

தாய் அனுமதிக்கவில்லை.

அழுது அடம் பிடித்தும் பிரயோஜனமில்லாமல் போனது. பிறகென்ன, மற்ற பெண்களோடு ஆற்றில் குளிப்பது, குடத்தை எடுத்துட்டு போய் கிணற்றிலிருந்து குடிநீர் எடுத்துட்டு வருவது, அம்மாவோடு சேர்ந்து அவர்களுக்கு சொந்தமான தோட்டத்துக்குப் போய் அங்கு பருத்தி, மிளகாய் சேகரிக்கும் பெண்களோடு வாயாடுவது, திரும்பும்போது பச்சைப் பசேல் கீரை, பிஞ்சு சுரைக்காய்களைப் பறித்து வருவது என ஆனந்தமாய்த்தான் நாட்கள் பறந்துகொண்டிருந்தன; அவன் வரும் வரை.

செம்பா குடியிருந்த அதே தெருவில் அவர்களின் உறவுக்காரக் குடும்பம் ஒன்று வசித்து வந்தது. குடும்பத் தலைவர் சிறிது காலம் மிலிட்டரியில் வேலை பார்த்துவிட்டு வந்திருந்தவர். எனவே ஊர்க்காரர்கள், ’பட்டாளத்தார்’ என அவரை அழைப்பதுண்டு. நான்கு குழந்தைகள் அவருக்கு. மூத்த மகன் வெளியூரில் ஹோமியோபதி மருத்துவம் படித்துவிட்டு, அங்கு வந்து கிளினிக் ஒன்றைத் தொடங்கினான்.

அரும்பு மீசையோடு, சிவப்பா ஆள் பார்க்க அழகாயிருந்தான். அவனுக்கு இணையான அழகோடு பட்டாம்பூச்சி போல் இங்குமங்கும் திரிந்து கொண்டிருந்த செம்பாவைப் பார்த்த நாள் முதல் அவனுக்குத் தூக்கம் தொலைந்தது. அவ்வப்போது அவளோடு பேச முயல்வான். அவள் வெட்கத்தோடு ஓடி விடுவாள். அவளுக்கும் அவனைப் பிடித்திருந்தது. ஆனால், பேசுவதற்கு துணிவில்லாமலிருந்தாள்.

’இது வேலைக்கு ஆகாது’ என்று டாக்டர் தனது அம்மாவை பெண் கேட்டு அனுப்பினான். அப்போதெல்லாம் பெண் பிள்ளைகளை 15, 16 வயதுகளில் மணம் செய்து கொடுப்பது சாதாரண நிகழ்வு. செம்பாவின் தாயும் கல்யாணத்துக்கு மனப்பூர்வமாக சம்மதித்தாள். விஷயம் ஊரெங்கும் பரவியது. செம்பா போகுமிடமெல்லாம் அவளைச் சுட்டிக்காட்டி, ‘’இதோ இந்தப் பெண்ணைத்தான் நம்ம டாக்டர் ஐயா கட்டிக்கப்போறார்’’ என்றும், ’‘இந்தப் பொண்ணுதான் பட்டாளத்தார் வீட்டுக்கு மருமகளா போகப்போகுது’’ என்றும் பெண்கள் பேசிக் கொள்வது சகஜமானது. டாக்டர் – செம்பா இருவரும் ஒருவர் கனவில் மற்றவர் தேனிலவு கற்பனைகளில் மிதந்து கொண்டிருந்தனர். கனவுகளும் கற்பனைகளும் அவ்விதமே போய்விடும், நிஜமாகப்போவதில்லை என்று அப்போது இருவருக்குமே தெரியவில்லை.

’ஒன்றிரண்டு மாதங்களில் திருமணம்’ என்று இருக்கையில் ஒருவருக்கு பேரதிர்ச்சியாகவும் இன்னொருவருக்கு மகிழ்ச்சியூட்டுவதுமான அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

ஒரு விழாவுக்காக அந்த ஊர் பள்ளிக்கு வந்த கல்வி அமைச்சரிடம் ஊர் மக்கள் அப்பள்ளியை ஹைஸ்கூலாக உயர்த்தும்படி மனு ஒன்றைக் கொடுத்தனர். அதில், ’பெண்கள் எட்டாவதுக்கு மேல் படிக்க முடிவதில்லை’ எனவும், பையன்கள் வெகு தூரம் நடந்து சென்று சிரமப்பட்டு படிப்பதையும் எடுத்துச்சொல்லி இருந்தனர்.

‘விரைவில் நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று கூறிச்சென்ற அமைச்சர், அத்தனை விரைவில் உத்தரவு பிறப்பிப்பார் என எவரும் எதிர்பார்க்கவில்லை.

மள மளவென காரியங்கள் நடந்தன. ஒன்பதாம் வகுப்புக்கு மாணவர்களைத் திரட்டினர். நடந்ததை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த செம்பா, நிலைகொள்ளாமல் தவித்தாள். ’கல்யாணமா? உயர் கல்வியா?’ன்னு மனசு தவித்தது. திடமான முடிவுடன் பள்ளிக்குச் சென்று முதல் ஆளாக அப்ளிகேஷனை நிரப்பிக் கொடுத்தாள். எவர் சொல்லியும் கேட்கவில்லை. டாக்டர் வீட்டாருக்கு அதிர்ச்சி. ‘மேல படிக்கப்போறாளாம். விட்டுத் தள்ளு’ன்னுட்டு பேசுவதைக் கூட நிறுத்தி விட்டனர். டாக்டர் பாவம், ‘அவள் பறந்து போனாளே… என்னை மறந்து போனாளே’ன்னு சோகப் பாட்டு பாடிட்டு ரெண்டு மாதத்தில் பெற்றோர் பார்த்த பெண்ணை மணந்து கொண்டு செட்டில் ஆயிட்டான்.

பள்ளி சென்று நன்கு படித்தாள் செம்பா. பள்ளி இறுதி ஆண்டில் பள்ளியிலேயே முதல் மாணவியாகத் தேறினாள். கல்லூரிக்காக குடும்பம் பட்டணத்துக்கு மாறியது. பட்டம் பெற்று அரசாங்க உத்தியோகத்திலும் சேர்ந்து விட்டாள்.

கல்யாண வயசு வந்து விட, வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை கட்டிக்கொண்டாள். மகன் பிறந்தான். சகல வசதியோடும் வாழ்க்கை நன்றாகத்தான் போனது, ஒன்றைத் தவிர.

கணவன் அவளை மதிப்பதே இல்லை. பெண்ணடிமையாகத்தான் நடத்தினான். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டாள், மகனுக்காகவும் குடும்ப கெளரவத்துக்காகவும்.

‘’பாட்டீ, நான் உன்ன என்ன கேட்டேன்… நீ எங்க பாத்துட்டு இருக்க?’ கைகளைப் பிடித்து உலுக்கினாள் பேத்தி.

அவளிடம் என்ன சொல்ல… ‘‘ஆமாம்டா, கேரியருக்காகக் காதலை விட்டவள்தான் நான். இப்படி ஒரு கணவன் கிடைப்பான்னு முன்பே தெரிஞ்சிருந்தா, காதலுக்காகக் கேரியரை விட்டிருப்பேன். காதல், கல்யாணம் எல்லாம் நம்ம கையில் இல்லடா’’ன்னு பொதுவாகக் கூறிவிட்டு, சோபாவில் சாய்ந்து கொண்டாள் செம்பா.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

அலைபாயுதே!

2
கதை      : சகா ஓவியம் : ரமணன் எதிர்வீட்டு மகாலிங்கத்திற்கு ஷாக் அடித்துவிட்டது என்று கேள்விப்பட்டு மருத்துவமனைக்கு ஓடினேன் நான். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்திருப்பார்கள். செயற்கை சுவாசத்தில் மூச்சுத் திணறிக் கொண்டிருப்பார் என்றெல்லாம்...

துன்பம் தொலைந்த திருநாள்!

0
புராணக் கதை : ஆர்.பொன்னம்மாள் ஓவியம்             : வேதா “தேவேந்திரன் தங்களைக் காண வந்திருக்கிறானாம்!” என்று சத்தியபாமா கூற, வெளியே எழுந்து வந்தார் கிருஷ்ணர். கிருஷ்ணரை வணங்கிய இந்திரன், “மதுசூதனா!...

“என்னை மன்னிச்சுடு பார்வதி!”

ஜெயஸ்ரீராஜ் நினைவு சிறுகதைப் போட்டி பரிசுக்கதை - 3 கதை       : இராம. பாலஜோதி ஓவியம்  : தமிழ் ‘எனது மாமியார் பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டார்’ என்ற தகவலை என் கணவர் போன் பண்ணி, சொன்னதும்...

ஜெயஸ்ரீராஜ் நினைவு சிறுகதைப் போட்டி பரிசுக்கதை – 2

அவர் பொருட்டு பெய்யும் மழை! கதை      : ஆதலையூர் சூரியகுமார் ஓவியம் : லலிதா சின்ன வரப்பில் இருந்த நுனா மரத்தின் நிழலில் அமர்ந்து இருந்தார் கதிர்வேல் தாத்தா. 'தன் நாற்றங்காலுக்கு நீர் பாய்ச்ச...

நிழலும் நிஜமும்!

0
கதை : மாதவி ஓவியம் : பிரபுராம் ஏற்கெனவே சினிமாவுக்கு லேட்! ரசிகர் ஷோ! ஆயிரம் ரூபாய் டிக்கெட். சிவா, ரவி, மணி ஓடும் பஸ்ஸில் ஏறினர். “ஏய்யா தம்பிகளா... ஃபுட்போர்டில் நிக்காதீங்க. உள்ளே வாங்க.” கண்டக்டரின்...
spot_img

To Advertise Contact :