தடுமாறுகிறதா காங்கிரஸ் கட்சி?

தடுமாறுகிறதா காங்கிரஸ் கட்சி?

-ஜாசன் ( மூத்த பத்திரிகையாளர்).

மத்தியில் காங்கிரஸ் கட்சி தேசிய அந்தஸ்தை இழக்கத் தொடங்கி விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு சமீபத்திய நிகழ்வுகள் காணப்படுகின்றன.

காங்கிரஸில் என்றுமே கோஷ்டி பூசலுக்குப் பஞ்சமில்லை. ஆனால், இப்போது அது பல மாநிலங்களில் உச்சமடைந்துள்ளது. பஞ்சாபில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் அங்கு காங்கிரஸ் தலைமையிலான முதல்வராக இருந்த அமரிந்தர்சிங் அதிரடியாக தன் பதவியை ராஜினாமா செய்தார். அதற்குக் காரணம் காங்கிரஸ் உடகட்சிப் பூசல்தான். அங்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப் பட்டார். அதுமுதல் அங்கு கோஷ்டி பூசல் உச்சத்தை அடைந்து அமரிந்தர்சிங் தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்குப் போனது. 'சித்து பாகிஸ்தான் அனுதாபி. நமது எல்லையை அச்சுறுத்தும் தீவிரவாதிகளுடன் அவர் தொடர்பில் உள்ளார்' என்ற ஒரு குற்றச்சாட்டை வெளிப்படையாக சொன்னார் அமரிந்தர் சிங்.. அதற்கு காங்கிரஸ் கட்சி இன்றுவரை எந்த விளக்கமும் மறுப்பும் சொல்லவில்லை. காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் என்றுமே வெளிப்படையாக இருக்கும். அது பஞ்சாப், ராஜஸ்தான், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், கேரளா, தமிழ்நாடு என்று கோஷ்டி சண்டைக்கு பஞ்சம் இல்லாத கட்சி காங்கிரஸ் கட்சி.

அதேசமயம் மற்றொரு விஷயம் அரசியல் விமரிசகர்களைக் கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது. அதாவது – பாரதிய ஜனதா கட்சியும் சமீபத்தில் நான்கு மாநில முதல்வர்களை ராஜினாமா செய்ய வைத்து அதிரடியாக மாற்றம் செய்தது. ஆனால், அந்தக் கட்சிக்குள் எந்த சலசலப்பும் இல்லை. கட்டுக்கோப்பான கட்சி என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்களே பாரதிய ஜனதாவை சொல்லுமளவுக்கு அந்த கட்சியின் ஆளுமை வளர்ந்திருக்கிறது.

பஞ்சாப் கோஷ்ட் பூசல்..
பஞ்சாப் கோஷ்ட் பூசல்..

காங்கிரஸுக்கு ஏன் இந்த நிலைமை? அக்கட்சி படிப்படியாக தன் செல்வாக்கை இழந்து வருகிறதா என்ற கேள்வி பலர் மனதில் எழுந்துள்ளது.

இப்போது காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். காங்கிரஸ் என்றதுமே நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என்றுதான் நினைவில் வரும் அளவுக்கு அக்கட்சியில் மற்ற தலைவர்கள் யாரும் சோபிக்கவில்லை! ராஜீவ்காந்தி மரணத்துக்குப் பின் 'அரசியலே வேண்டாம்' என்று ஒதுங்கிய சோனியா காந்தியை மூத்த தலைவர்கள் வற்புறுத்தி அரசியலுக்கு இழுத்து வந்ததற்கும் இந்த வாக்கு வங்கி அரசியல்தான் காரணம். சோனியா தலைமையில் இரண்டு முறை காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், சோனியா பிரதமர் ஆகவில்லை. ராகுல்காந்திக்கு 'தேசிய பொதுச்செயலாளர்' என்ற கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் ராகுல்காந்தி ஆளுமையுள்ள தலைவர் இல்லை என்ற விமர்சனம் அப்போதே வரத் தொடங்கியது. அதன் பிறகு சோனியா காந்தி தற்காலிக தலைவராக இன்றுவரை தொடர்ந்து இருந்து வருகிறார். மீண்டும் ராகுல்காந்தியை தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று சிலர் வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால், ராகுல்காந்தி இதுவரை மௌனம் சாதிக்கிறார். பிஜேபி-க்கு நரேந்திர மோடி போன்று காங்கிரஸுக்கு ஆளுமையான திறமை மிக்க தலைவர் இல்லாதது பெரும் குறைபாடு என்றே சொல்லலாம்.

மோடி vs மம்தா.
மோடி vs மம்தா.

சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நடத்தும் பிரச்சார நாளிதழில் ''மோடிக்கு எதிராக மாற்று தலைவராகும் தகுதி, ராகுல்காந்திக்கு இல்லை. அதற்கு மம்தா பானர்ஜிதான்தான் சரியான போட்டி'' என்ற கருத்தை முன்வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்கு ராகுல்காந்தி பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநிலங்கள் அளவிலும்கூட இதே நிலைமைதான் அக்கட்சிக்கு நிலவுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள கார்த்தி சிதம்பரம், கட்சியை வளர்க்க இதுவரை எதுவும் செய்யவில்லை. தன் மனம் போன போக்கில் கருத்துக்களைச் சொல்லி வருகிறார். மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவரான பீட்டர் அல்போன்ஸ் ''ஸ்டாலின்தான் பிரதமராக தகுதி உடையவர்'' என்று பேசி வருகிறார். ராகுல்காந்தியை பிரதமராக ஏற்க யோசிக்கிறார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை 1967-ல் இழந்தபின், ஏதாவது ஒரு திராவிடக் கட்சியின் முதுகில் ஏறி, சில தொகுதிகளை பெற்று வெற்றி பெறுவதிலேயே திருப்தி அடைகிறது, அரை நூற்றாண்டை கடந்த காங்கிரஸ் கட்சி! இதுதான் தமிழக காங்கிரஸ் தலைமை.

சென்ற மாதம் 19 கட்சிகளுடன் காணொளி மூலம் சோனியா காந்தி பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை எப்படி ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை செய்தார். அந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்துகொண்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், 'காங்கிரஸ் கட்சி வாழ்ந்து கெட்ட ஒரு மிராசுதார் போல் இருக்கிறது' என்று வர்ணித்திருக்கிறார் மேலும் ராகுல் காந்தி தந்த மதிய உணவு விருந்தில் சரத்பவார் கலந்து கொள்ளாமல், தனது மகள் சுப்ரியாசுலேவை அனுப்பி வைத்தார். ஜி 23 என்று வர்ணிக்கப்படும் காங்கிரஸ் கட்சியில் கலகக் குரல் எழுப்பும் மூத்த தலைவர்களின் கோரிக்கையே – தேசிய அளவில் தொடங்கி, மாவட்ட அளவில் உட்கட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான். ஆனால், இதற்கு சோனியாகாந்தி எந்த கருத்தும் சொல்லவில்லை. அதேசமயம் சோனியா காந்தியை, 'காங்கிரஸ் தியாகிகளின் பிரதிநிதி' என்று வர்ணிக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி.

''பாரதிய ஜனதாவுக்கு மாற்றுக் கட்சியாக காங்கிரஸோ ராகுல்காந்தியோ இல்லை, காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சிகளும் தோழமை கட்சிகளுமே'' என்று பேசத் தொடங்கி விட்டது. காங்கிரஸ் கட்சியின் தடுமாற்றத்திற்குக் காரணம், வலுவான தலைமை இல்லாததும், மூத்த தலைவர்கள் தொண்டர்களுடன் தொடர்பு எல்லையில் இல்லாததும்தான் என்பதே உண்மை. அதுதான் பாரதிய ஜனதாவுக்கு தற்போது சாதகமான விஷயமும்கூட!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com