
கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலகளவில் பொருளாதாரத்தை கொரோனா தொற்று நோய் முடக்கியிருக்கும் பின்னணியில் எல்லா அரசுகளும் வருவாய் குறைந்த நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்த நிலையில் மு.க ஸ்டாலினின் தலைமையிலான தி.மு.க. அரசு தனது முதல் பட்ஜெட்டை சமர்ப்பித்திருக்கிறது. அந்தப் பட்ஜெட் எப்படி? ஒரு பார்வை.
சாமர்த்தியம்
அரசின் மோசமான நிதி நிலையை ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டதன் மூலம் புதிய வரி போடாமல் அரசால் என்ன செய்ய முடியும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து விட்டு வரியே இல்லாத ஒரு பட்ஜெட்டையும் அதில் பெட்ரோல் வரிக் குறைப்பையும் அறிவித்தது. ஆட்சியில் அமர்ந்தவுடன் கொரோனா பரவல் தடுப்புக்குப் போர்க்கால முக்கியம் கொடுத்து நிதிநிலை அறிக்கையை நூறு நாட்கள் கழித்து வெளியிட்டது.
சாதனைகள்
சாமானியனின் கனவான பெட்ரோல் வரிக் குறைப்பு அறிவிப்பு தலைமைச் செயலகம் முதல் தாலுகா அலுவலகம் வரை தமிழை அலுவல் மொழியாக ஆக்குவதில் முனைப்புக் காட்டப்படும் என்ற அறிவிப்பும் அதற்கான நிதி ஒதிக்கீடும், அரசுத் துறை பெருமளவில் கணினிமயமாக்கப்படும் என்ற அறிவிப்பும் அதன் அடையாளமாக நிதிநிலை அறிக்கையையே காகிதமில்லா முறையில் கணினியில் வெளியிட்டது.
அரசின் அனைத்துக் கொள்முதல் பொதுச் சேவைகள் கணினிமயமாக்கப்பட்டு அனைத் தும் டென்டர்கள் இணையவழிச் சேவையாக இருக்கும் என்ற அறிவிப்பு. இது கட்டாயமாக் கப்பட்டால் மிகப் பெரிய அளவில் ஊழல் தடுப்பும் நிர்வாகச் சீர்திருத்தமும் நிகழும்.
மத்திய அரசு கல்விக் கொள்கையை அறிவித்திருக்கிறபோதும் கல்வித்துறை சிந்தனையைத் தூண்டும் வகையில் மாற்றப் படும் என்ற அறிவிப்பு.
வேளாண்மைத் துறைக்குத் தனி பட்ஜெட் வெளியிட்டிருப்பது சமூகநலனில் அக்கறை கொண்ட வகையில் தயாரிக்கப்பட்ட பட்ஜெட் இது.
தொழில் துறை, மீன் துறை, விளையாட்டுத் துறை, பள்ளிக் கல்வி, மகளிர் முன்னேற்றம் அனைத்துத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு.
சிறு நகரங்களில் பாதாளச் சாக்கடைகள்,
பசுமைவழிச் சாலைகள் போன்ற திட்டங்கள், 12,955 கோயில்களில் ஒருகால பூஜை திட்டத்தைச் செயல்படுத்த ரூ.130 கோடி நிதிநிலை உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு.
மத்திய அரசின் திட்டங்களான ஜல்ஜீவன், ஸ்வட்ச் பாரத், அம்ருத், பாரத் நெட் போன்ற வற்றிற்கு நிதி ஒதுக்கியிருப்பது, இது ஒன்றிய அரசுக்குக் காட்டப்பட்டிருக்கும் முக்கியமான சிக்னல்.
விழுப்புரம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் டைடல் பார்க் உருவாக்கப்படும், திருவண்ணாமலை, நெல்லை, விருதுநகர், நாமக்கல், தேனி, சிவகங்கை, விழுப்புரம், நாகையில் புதிதாக சிப்காட் தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும்.
கோவையில் ரூ.225 கோடியில் பாதுகாப்புக் கருவிகள் உற்பத்திப் பூங்காவை மாநில அரசு செயல்படுத்தும் என்ற அறிவிப்பு.
சறுக்கல்கள்
கல்வித்துறையில் பெரும் சீர்திருத்தம் என அறிவித்துவிட்டு கல்விக்கான நிதியைக் குறைத்திருப்பது, பசுமைவழிச் சாலைகளை எதிர்த்துப் போராட்டம் நடத்திய தி.மு.க. இப்போது பசுமைவழிச் சாலைகளை அறிவித் திருப்பது, வெள்ளை அறிக்கையில் ஒரு குடும்பத்தின் தலையில் இவ்வளவு கடன் என்றும், அதற்கு முந்தைய அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்று சொல்லி விட்டு கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 45 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருப்பது.
தேர்தல் அறிக்கையில் அனைத்து இல்லத் தரசிகளுக்கும் உரிமைத்தொகை என்ற அறிவிப்பை இப்போது தகுதியுள்ளோருக்கு மட்டும் என மாற்றியிருப்பது, வருவாய் குன்றிய செலவினங்களைக் கடன் வாங்கிச் சமாளிக்கவேண்டிய நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தொகுதி மேம்பாட்டுக் காக மூன்று கோடிகள் என்ற அறிவிப்பு, போக்குவரத் துறையின் நிர்வாகச் சீர்கேட்டை, பெரும் வருவாய் இழப்பை வெள்ளை அறிக்கையில் சுட்டிக்காட்டிவிட்டு அந்தத் துறையின் சீர்திருத்தத்துக்கான எந்த அறிவிப்பும் செய்யாமல் மேலும் 1000 பேருந்துகளை வாங்கத் திட்டமிட்டிருப்பது.
சந்தேகங்கள்
கடந்த ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட வருவாயைவிட இப்போது எதிர்பார்க்கப்படும் வருவாய் குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் எதிர்பார்க்கப்படும் செலவினங்கள் அதிகமாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக வருவாய் பற்றாக்குறை 41,417.30 கோடியிலிருந்து 58,692.68 கோடியாக உயர்ந்திருக்கிறது.
இதை எப்படிச் சமாளிக்கப்போகிறது இந்த அரசு?
முந்தைய அரசைப் போலவே புதிய கடன்களை வாங்கப் போகிறதா? அல்லது ஒன்றிய அரசிடம் போராடி அதிக நிதி பெறப்போகிறதா?
சவால்கள்
ஒருபுறம் தேர்தலில் கொடுத்துவிட்ட வாக்குறுதிகள், மறுபுறம் பற்றாக்குறையான நிதி ஆதாரம். மாநிலத்துக்கு அளிக்க வேண்டிய நிதி ஆதாரங்களைச் சரியான நேரங்களில் வழங்காத ஒன்றிய அரசு, இவற்றுக்கிடையில் வெளியாகியிருக்கும் இந்த பட்ஜெட் தி.மு.க. அரசு தங்களுக்கே விட்டுக்கொண் டிருக்கும் ஒரு சவால்.
சந்திக்கும் திறனும் சாதிக்கும் சூழலும் உருவாகும் என நம்புவோம்.