தராசு பதில்கள்

தராசு பதில்கள்
Published on

முதல்வர் ஸ்டாலினின் சமீபத்திய செயல்பாடுகளில் மிகவும் பிடித்தது?
– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்
அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பொறியியல் கல்லூரிகளில் 7.5 % ஒதுக்கீடு முறை மூலம் இடங்களை வழங்கும் விழாவிற்குச் செல்லும் முன் அப்படி  இடம் பெற்ற மாணவி "இடம் கிடைத்திருக்கிறது படிக்கப் பணம் இல்லையே" என்று ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் சொன்னதைக் கேட்டதனால் அந்த விழாவிலேயே,'அவர்களது கல்வி கட்டணங்களை, கலந்தாய்வுக் கட்டணம் உட்பட அனைத்தையும் அரசே ஏற்கும்' என்று அறிவித்ததுதான்.

உ.பி மாநிலத்துக்குள் மற்ற மாநில முதல்வர்கள் வரக்கூடாது எனத் தடை விதித்திருக்கிறார்களே?
– ராமமூர்த்தித், திருச்சி
ஜனநாயகப் படுகொலையின் உச்ச கட்டம் இது. போராட்டம் நடந்த இடத்தில் விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் சொல்ல அரசியல் தலைவர்கள்  அனுமதிக்கப்படவில்லை என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்புகளைச் செய்தவர்கள் கைது செய்யப்படவில்லை. ஆனால் அங்கு போன பிரியங்கா கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கூட இதுபோல் நடந்ததில்லை. யோகியார் மாநில அரசின் அதிகார எல்லையைக் காட்டுகிறார். மோடியார் வரவேற்கிறார். தங்கள் கோபத்தைக் காட்ட மக்கள் காத்திருக்கின்றனர்.

இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, மருத்துவ அணி என ரசிகர் மன்றத்தை விரிவுபடுத்த உள்ளதாக நடிகர் சிம்பு ரசிகர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளாரே?
– மாடக்கண்ணு, பாப்பன்குளம்
மன்றத்திலிருக்கும் பல லட்சக்கணக்கான ரசிகர்களைத் திருப்தி படுவதற்காகயிருக்கும்.

விமானங்களில் பயணிக்கும் போது மடிக்கணினிகள் கொண்டுபோகக்கூடாதா?
– சரஸ்வதி, மதுரை
எந்தத் தடையும் இல்லை. இன்று பலர் அதில் தங்கள் பணியைப் பயணத்திலேயே செய்கிறார்கள். கைப்பையில் கொண்டு செல்வதால் அவை பாதுகாப்பு விதிகளுக்கேற்ப சோதனை செய்யப்படும். அண்மையில் தமிழக நிதியமைச்சர் , 2 லேப்டாப்கள் எடுத்துச் சென்றது தவறு என்று சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் அமைச்சருடன் பாதுகாவலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பற்றித் தவறு.

'நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு மருத்துவக் கல்லூரியாவது இருக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்' எனப் பிரதமர் மோடி அறிவித்திருக்கிறாரே?
– ஆஆஆஆஆஆஅ
பல ஆண்டுகளுக்கு முன்னரே இதைக் கொள்கை முடிவாக எடுத்துத் தமிழகத்தில் படிப்படியாகச் செயலாக்கப்பட்டவிஷயம்.

'பண்டிகைக் காலத்தில் பயணங்களைத் தவிருங்கள்' என்று செய்திகளில் சொல்கிறார்களே… பொது மக்கள் கேட்பார்களா?
– கண்ணபிரான், நெல்லை
பயணமும் பண்டிகைகளும் தமிழர்களின் வாழ்வோடு இணைந்தவை. வாழ்வாதாரத்துகாக நகரங்களை நோக்கி நகர்ந்த குடும்பங்கள் தங்கள் சொந்த மண்ணையும் மக்களையும் விழா நாட்களில் பார்க்கப் போவதைத்

தவிர்க்க முடியாதது. ஆனால் கேட்டாக வேண்டும்… பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றிப் பயணங்கள் செய்ய வேண்டும்.

பஞ்சாப் அமரீந்தர் சிங்
காங்கிரஸிலிருந்து வெளியேறிவிட்டாரே!
– ஜாகிர் உசேன், *****
அவர் தனிக்கட்சி ஆரம்பிப்பது புதிதல்ல. முன்பு ஒரு முறை செய்து வெற்றியடையாததால் கலைத்தவர். ஆனால் இம்முறை தனிக்கட்சி ஆரம்பிக்கும்  முன்னரே பா.ஜ.க.வுடன் கூட்டணி பேரம் பேசியிருக்கும் புத்திசாலி.

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியதா?
– மஹாலட்சுமி, திண்டுக்கல்
நிலைமை பற்றி நீங்கள் படும் கவலையை, சோனியா படவில்லை. தேசிய அளவில் சூழ்நிலை கனிந்திருக்கும் நேரத்தில் கூட கட்சியைப் பலப்படுத்த வேண்டிய உள்கட்சி பிரச்னைகளைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறார்.

அமெரிக்க விஜயத்துக்குப் பிறகு மோடியின் மைண்ட் வாய்ஸ்?
– ஶ்ரீகாந்த், பங்களுரு
டிரம்ப் அதிபராகயிருந்தபோது கிடைத்த மரியாதை இல்லையே. தூதரகத்தில் பி. ஆர். வேலை செய்யும் அதிகாரிகளை மாற்ற வேண்டும்.

பிரசாந்த் கிஷோர் மே.வங்காள வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறாரே?
-கெளரி ராமச்சந்திரன், திருப்பூர்.
அவர் பிஹாரியாக இருந்தாலும் கல்கத்தாவில் வாழ்ந்தவர் என்பதால் இதில் செய்தி எதுவும்  இல்லை. அடுத்த தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் பெயர் வந்தால் அது செய்தி.

போர் முடித்து வரும் மன்னனை வரவேற்பதுபோல, வெளிநாடு சென்று திரும்பும் அரசியல்வாதிகளை வரவேற்பது பற்றி?
– கண்ணன், நெல்லை
உலகில் இந்தியா மட்டுமே பின்பற்றும் தவிர்க்க வேண்டிய தலைவன் வழிபாடு கலாசாரம்

நிதியமைச்சருக்கு புதிய பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறதே?
– கலா ராணி, வேலூர்
GST மத்தியக் குழுவில் தமிழகம் சார்பாக இடம் பெறுகிறார். இந்தப் பொறுப்பிலிருப்பவர்களுக்கு GST முறை பற்றிய தெளிவான புரிதலும் மாநிலத் தேவைகளை வலியுறுத்திப் பெறும் ஆளுமையும் அவசியம். அது நிதியமைச்சருக்கு இருக்கிறது. முந்தைய அரசில் இந்தப் பணியைச்செவ்வனே செய்தவர் அமைச்சர் கே.பாண்டியராஜன்.

'அண்ணாத்தே' பாடல் வெளியாகியிருக்கிறதே?
– ********
ஆர்ப்பாட்டமான விளம்பரங்களுடன் ஒரே ஒரு பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். பாடல் அவர் கட்சி ஆரம்பிக்கும் சூழ்நிலை இருக்கும் போது எழுதப்பட்டிருக்கிறது  என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. படம் எப்படியிருக்குமோ? பாடல் தன் குரலால் நம்மோடு வாழும் எஸ்.பி.பி.யை நினைக்கவைத்தது.

அதானியின் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் 261% உயர்ந்திருக்கிறதே?
– செந்தமிழ் செல்வன், திருவண்ணாமலை
ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. விரைவில் ஆசியாவில் மட்டுமில்லை, உலகளவில்  முன்னணிப் பணக்கார்களின் பட்டியலில் இடம் பெறுவார். பல்வேறு விதமான பெரிய தொழில்களை ஒரே குழுமத்துக்கு மட்டும் ஒதுக்கும் இந்திய அரசின் பெருந்தொழில் கொள்கையினால் இது சாத்தியமான ஒன்றுதான். காங்கிரஸ் ஆட்சியில் ரிலையன்ஸ் வளர்ந்தது இப்படித்தான்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com