0,00 INR

No products in the cart.

தள்ளு வண்டியில் தட்டு வடை!

நேர்காணல் : சேலம் சுபா

பரத்துக்கு செம பசி. என்னதான் சம உரிமை என்றாலும் சசி சமையல்கட்டு பக்கம் வராத வாரத்தின் மூன்று நாட்கள் அவனுக்கு எப்போதுமே கண்டம் தான். நல்லா வயிறு முட்ட சாப்பிடத் தெரிந்த பரத்தின் காதல் மனைவியின் கண்டிஷன்களில் ஒன்று கட்டாய சமையலும். ஏனோதானோவென்று உப்பு சப்பில்லாத அவனின் சமையலை அவனே சாப்பிட மாட்டான். எப்படித்தான் சசி சாப்பிடுகிறாளோ? நினைத்தவாறே அந்தத் தட்டுவடை செட் தள்ளுவண்டியின், முன் பைக்கை நிறுத்தி, `ஒரு பன் செட் ஒரு கலக்கல்’ என்று ஆர்டர் செய்து நிமிர்ந்தவனின் கண்களில் மின்னல்… அங்கே சசியும் பசி வேகத்தில் தட்டுவடை செட்டுகளை உள்ளே தள்ளிக்கொண்டு இருந்தாள். அவளும் நோக்க… அவனும் நோக்க… முகத்தில் அசடு வழிந்தது அந்தக் காதல் ஜோடிக்கு.

சேலம் பேர்லண்ட்ஸ் பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர் தங்கள் பசிக்கும் ருசிக்கும் தேடிப்போவது ரவியின் சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட் தள்ளுவண்டிக் கடையைத்தான். கேரட், பீட்ரூட், வெங்காயத்துடன் தட்டுவடைகளின் நடுவில் சட்னியும் வைத்து அவர் தரும் தட்டுவடை செட்டுக்கு ஏக டிமாண்ட்.

ரவியின் தட்டுவடை செட்டில் அப்படி என்ன இருக்கிறது? தெரிந்துகொள்ள நாமும் சென்றோம். ’சேலம் ஸ்பெஷல் செட்’ என்று வெள்ளரிக்காய், வெங்காயம், மாங்காய், பூண்டு என நான்கு விதமான சுவைகளில் அழகாக செட்டுகளை அடுக்கி நாம் சுவைக்கத் தந்தார் ரவி. அடடா… சுவையின் சொர்க்கம் என்றால் இதுதானோ?

தள்ளுவண்டி என்றாலும் சுகாதாரத்திற்குக் குறையில்லை. அவ்வப்போது காய்களை சீவி, நம் கண்ணெதிரில் பிரெஷ்ஷாக செட்டுகளை போட்டுத் தருகிறார் ரவி. சுமார் அறுபது வகைகளில் புதுமையான சுவையுடன் விதவிதமாக வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப பரபரவென்று குனிந்த தலை நிமிராமல் செட்டுகளை போடுகிறார் ரவி.

சேலம் பேர்லண்ட்ஸ் பெருமாள் கோயிலிலிருந்து சில அடிகள் தொலைவில், மாலை ஐந்து மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை, `ஜே ஜே’ என்று களைகட்டுகிறது.

கிடைத்த நேரத்தில் ரவியுடன் பேசினோம்… கைகள் இயங்கியவண்ணம் வாடிக்கையாளர்களை திருப்தி செய்துகொண்டே நமக்கும் பதில்களை அளித்தார் ரவி.

விளையாட்டை விட்டுட்டுப் பண்ண ஆரம்பிச்ச இந்தத் தொழில், பல பேரின் பசிக்கும் நல்லுணவாகவும் என் வாழ்க்கையின் பசியையும் போக்கும் ஆதாரமாக அமைந்து விட்டது. என் தந்தை தாஸ் பால் வியாபாரம் செய்தவர். இப்போது இறந்து விட்டார். தாய் லச்சுமி. எனக்கு ரெண்டு தங்கைகள். கவிதா கல்லூரி முதல் வருடம் செல்கிறார். நந்தினி பிளஸ் டூ படிக்கிறார். என் மனைவி புவனேஸ்வரி… பள்ளி படிக்கும் மகன்கள் முகுந்தன், கேசவ சந்திரன். என்னடா, முதல்லேயே குடும்பத்தை சொல்றேன்னு பார்க்கறீங்களா? இவங்க எல்லோருடைய உழைப்புலதான் என்னால எந்த பிரச்னையும் இல்லாம இதை நடத்த முடியுது. இது எங்க குடும்பத் தொழிலாகவே ஆயாச்சு.


ரவி தாய் தங்கையுடன்

நான் பத்தாவது முடிச்சுட்டு, அதுக்கு மேல படிப்புல ஆர்வம் இல்லாம கிரிக்கெட்டுல பைத்தியமா இருந்தேன். அதுலயே நாட்டம் இருந்தா வேலை செய்ய முடியாதுன்னு வீட்டுல அம்மா புத்திமதி சொல்லி வேலைக்குப் போனேன்.”

நடுவில் இடைமறித்த ரவியின் தாய் லச்சுமி, “இந்த வண்டி எப்படி வந்துச்சுன்னு கேளுங்க. எதேச்சையா ஓரம்பர வீட்டுக்குப் போனப்ப, அவங்க வீட்டுல இந்த வண்டி சும்மா இருந்தது. விபரம் கேட்டப்ப தட்டுவடை செட் போட்டவர் வாடகை தர முடியாம வண்டியை விட்டுட்டுப் போனதா சொன்னாங்க. டக்குன்னு எனக்கு ஒரு யோசனை வந்துச்சு. ஏன் நாமும் முயற்சி பண்ணலாமேன்னு நாள் வாடகை 20 ரூபாய்க்குப் பேசி, அட்வான்ஸ் 200 ரூபாயும் தந்துட்டு வண்டிய எடுத்துட்டு வந்தேன். தட்டுவடை செட்டுகளை இந்த வண்டியில் வெச்சு எங்க பகுதியில விற்றேன். முத நாள் முப்பது ரூபாய்க்கு வித்துச்சு. அப்புறம் படிப்படியா கொஞ்சம் வருமானம் வந்துச்சு.

திடீர்னு இவங்கப்பா இறந்துபோக, தொடர்ந்து இதையே தொழிலா செய்ய ஆரம்பிச்சேன். ’நானும் இதுக்கே வரேன். கொஞ்சம் வித்தியாசமா யோசிச்சு நல்லா செய்யலாம்’னு ரவி சொன்னான். கரும்பு தின்னக் கூலியா? பையனே என்னோடு கை கோர்த்தா சந்தோசம்தானே?

என் மகன்னு சொல்லல… என்னை விட, ரவியோட கைப்பக்குவம் இன்னும் ஜோரா இருக்கு. இந்தக்காலத்துப் பிள்ளை என்பதால், எப்படி செய்தால் ஜெயிக்கலாம் எனத் தெரிந்து, இதில் கடுமையா உழைச்சான். இப்ப பேர் வாங்கிட்டான். ஒரு அம்மாவா எனக்குப் பெருமையா இருக்கு.”

“அம்மா சொல்வதுபோல, மற்றவர்கள் போகும் வழியிலேயே நாமும் போவதை விட, யாரும் செய்யாததை செய்தால்தான் பேருடன் வருமானமும் வரும் என்று சில புதுமையான யோசனைகளுடன் களத்தில் இறங்கினேன்.

சுமார் அறுபது வகைகளில் செட்டுகளையும் ஸ்நாக்ஸ்களையும் தயாரித்து தருகிறேன். உதாரணமாக, முறுக்குகளை உடைத்து அதில் காய்கறிகளை கலந்து செய்யும் நொறுக்கலை ஆறு விதமாகத் தருகிறேன். வெள்ளரிக்காய், மாங்காய், வெங்காயம், பூண்டு, தக்காளி, நெல்லிக்காய் என அவரவர் விருப்பத்திற்குத் தருகிறேன். அதில் காரமும் ஸ்வீட்டும் கூட வாடிக்கையாளர்களின் விருப்பமே.

எனது தயாரிப்புகளில் எந்நேரமும் கிடைக்கும் மாங்கா செட், ஹைதராபாத் அப்பளம் கொண்டு போடப்படும் போட்டி செட், வேர்க்கடலையுடன் போடும் ஈரோடு செட், நாவுக்கு சுருக்கென்று பூண்டு, வெங்காயம், மா, இஞ்சி போன்ற ஊறுகாய் செட் வகைகள்… இப்படி வேறெங்கும் கிடைக்காத வகைகள் எங்களிடம் எப்போதும் உண்டு.


ஷாலினி

அம்மா தினமும் செய்துத் தரும் காரச் சட்னியும், தக்காளி சட்னியும், பொடி வகைகளும், அவ்வப்போது புதிதாக சீவப்படும் காய்கறிகளும் எங்கள் தயாரிப்புகளின் கூடுதல் ருசிக்கு ஆதாரம். என் கடைக்கு வரும் கஸ்டமர்களுக்கு பிடித்ததைத் தந்து அவர்கள் வயிறு நிறைந்து பாராட்ட வேண்டும் என்பதே என் நோக்கம்.”

இப்போது போன் ஆர்டர்கள் மற்றும் ஸ்விகி ஆர்டர்களும் ரவிக்கு வந்தவண்ணம் உள்ளன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட திருமணம், கிரகப்பிரவேசம், கல்லூரி விழாக்கள், பிறந்த நாள் விழா போன்றவைகளில் ரவியின் தட்டுவடை செட்டுகள் கட்டாயம் ஆகிவிட்டது.

ஆனாலும், ஐந்து வண்டிகளை வைத்திருந்த ரவி, தற்போது கொரோனா வின் தாக்கத்தால் இரண்டு இடங்களில் மட்டும் கடை வைத்துள்ளதைக் குறிப்பிட வேண்டும். பெங்களூருவில் கடை போடும் வாய்ப்பு வந்தும் கொரோனாவினால் போக முடியாமல் போனதாக வருந்துகிறார். அங்கு போய் கடை போட்டு ஜெயிப்பதுதான் தனது இலக்கு என்றும் உறுதியாகச் சொல்கிறார்.

அழகுக்கலை நிபுணர்கள் கலை மற்றும் சந்தியா: “பசிக்கும் போதெல்லாம் இங்கு வந்து சாப்பிட்டுவிட்டு, வீட்டுக்கும் வாங்கிச் செல்வோம். இவர் கடை செட்டுகள் சுகாதாரத்திலும் சரி, சுவையிலும் சரி செம தூள்! செட்டுடன் குல்பி ஐஸ், கோலா ஐஸ் போன்றவைகளும் அசத்தலான ருசியுடன் இருக்கும். ருசிக்கு ருசி… ஆரோக்கியத்திற்கும் குறைவில்லை.

ஷாலினி கூறியதுதான் ஹைலைட்: “நான் ஐந்து வருடமா இங்கு வந்து சாப்பிடுகிறேன். வேறு எங்கு சாப்பிட்டாலும் இவர் போடும் டேஸ்ட் வராது. கல்யாணம் என்றாலும் உள்ளூர் மாப்பிள்ளைதான் வேண்டும் என்று பெற்றோரிடம் சொல்லி விட்டேன். அப்பத்தானே இங்க வந்து சாப்பிடலாம்?”

அடேங்கப்பா… தட்டுவடை செட்டும் வாழ்வைத் தீர்மானிக்கும் என்பதை அறிந்து. ரவியைப் பாராட்டினோம்.

பைனல் டச் : ஷாலினிக்கு சேலம் அருகில் உள்ள ஊர் மாப்பிள்ளை நிச்சயம் ஆகி, அவரும் ரவியின் வாடிக்கையாளர் ஆகிவிட்டாராம்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

சுதந்திர இந்திய வளர்ச்சிக்கு விதைகள்! தாமஸ் மன்றோ – 2

0
- அ.பூங்கோதை பிற பிரிட்டிஷ் அதிகாரிகளைப் போலன்றி, மக்களுக்கு நெருக்கமானவராக இருந்தார் மன்றோ. அதற்காகவே தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைக் கற்றுக்கொண்டார். ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கெல்லாம் தனது குதிரையில் பயணம் செய்து...

அன்புவட்டம்

0
- அனுஷா நடராஜன் குற்றால அருவி, கும்பக்கரை அருவி, திற்பரப்பு அருவி, ஒகேனக்கல் அருவி... இதில் எந்த அருவியில் தங்களுக்குக் குளித்து மகிழ ஆசை? - எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி கு, கும், திற், ஒ... எல்லா...

`நமக்கு நாமே` – முதியோர் மந்திரம்

0
சந்திப்பு : பத்மினி பட்டாபிராமன் அக்டோபர் முதல் தேதி, உலக முதியோர் தினமாக அனுசரிக்கப்படுவதையொட்டி சென்னை, இந்திரா நகரில் இயங்கிவரும் இந்தியாவின் முதல் `முதியோர் நல மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனை’ ஜெரி கேர் (Geri...

துர்கா தேவி சரணம்!

0
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி * ’துர்க்கம்’ என்றால் அகழி எனப் பொருள். அடியார்களுக்கு அகழி போல் அரனாக இருந்து பாதுகாப்பவள் துர்கை எனப்பட்டாள். துர்க்கமன் என்ற அரக்கனை அழித்ததால், அம்பிகை துர்கை எனப்பட்டதாகவும் கூறுவர்....

எடைக் கட்டுப்பாடு!

0
- இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம் உடல் எடை பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள், ஓர் அபூர்வமான உண்மையை கண்டுபிடித்துள்ளனர். அதாவது, காலையில் லேட்டாக எழுந்து கண்ணைக் கூசும் சூரிய வெளிச்சத்தைப் பார்ப்பவர்களை விட, அதிகாலையில் இருள்...