துர்கா தேவி சரணம்!

துர்கா தேவி சரணம்!
Published on
– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

* 'துர்க்கம்' என்றால் அகழி எனப் பொருள். அடியார்களுக்கு அகழி போல் அரனாக இருந்து பாதுகாப்பவள் துர்கை எனப்பட்டாள். துர்க்கமன் என்ற அரக்கனை அழித்ததால், அம்பிகை துர்கை எனப்பட்டதாகவும் கூறுவர். மூன்று சக்திகளின் ஒன்றிணைந்த வடிவமாகத் தோன்றியவள் துர்கை எனப்பட்டாள். துர்கையை தமிழில், 'கொற்றவை' என்றும், 'மகிடற்காய்ந்தாள்' என்றும் கூறுவர். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கைக்குரிய தாகும்.

* காசியில் நவதுர்கை கோயில்கள் உள்ளன. நவராத்திரியில் இங்கு மிகவும் சிறப்புடன் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது கண்கொள்ளாக் காட்சி ஆகும்.

முதலாவது நாள் – சைலபுத்ரி மலைமகள் துர்கை

இரண்டாம் நாள் – பிரம்மசாரிணி (துர்க்காட் படித்துறை)

மூன்றாம் நாள் – சந்திரமணி தேவி (சித்ராகண்டி அம்மன்)

நான்காம் நாள் – கூஷ்மாண்டா அம்மன் (கூஷ்மாட் துர்கை கோயில்)

ஐந்தாம் நாள் – ஸ்கந்த மாதா (ஜைத்புர பகுதி)

ஆறாம் நாள் – கார்த்தியாயினி (ஆத்மவிசுவேஸ்வரர் கோயில்)

ஏழாம் நாள் – காளராத்ரி (காளிகலி பகுதி)

இந்தச் சிற்பம் மிகவும் விசேஷமானது. இந்த அம்மன் கழுதையை வாகனமாகக் கொண்டிருக் கிறாள்.

எட்டாம் நாள் – அன்னபூரணி

ஒன்பதாம் நாள் – சித்திதாத்ரி துர்கை (தாத்ரி சங்கடா கோயில்)

இந்த அம்மன் சிலைக்குக் கீழே வெள்ளித் தொட்டிலில் சிவலிங்கம் இருப்பது மிகவும் விசேஷம் என்று கூறுகிறார்கள்.

* கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் வடக்கு வாசலில் அஷ்டபுஜ துர்கா தேவி அருள்புரிகிறாள். இந்த துர்கையை விஷ்ணுதுர்கை என்றும் சொல்வர். வழிபடும் பக்தர்களைக் காக்க உடனே புறப்படுகிற தயார் நிலை தோற்றத்தில் இந்த அம்மன் நிற்பது சிறப்பாகும். எட்டு கரங்களை உடைய துர்கை அம்மன் கையில் கிளியை வைத்திருப்பது சிறப்பாகும். இந்த துர்கை அம்மன், மகிஷன் தலை மீது நின்ற கோலத்தில் சாந்த சொரூபியாகக் காட்சி தருகிறாள். இந்த தேவி, சிம்ம வாகனத்துடன் கூடிய திரிபங்க நிலையில் எட்டுக் கரங்களுடன் அருள்புரிகிறாள்.

* திருநெல்வேலியிலிருந்து தாழையூத்துக்குச் செல்லும் வழியில் கங்கைகொண்டான் திருத் தலத்திற்கு அருகில் உள்ள பிராஞ்சேரி என்னும் இடத்தில், 'சயன கோல துர்கை' அருள்புரி கிறாள். திருவெண்காடு புதன் திருத்தலத்தில் துர்கை மேற்கு திசை நோக்கி காட்சி தருகிறாள்.

* விழுப்புரம் மாவட்டம், திருவக்கரை திருத்தலத்தில் அருள்புரியும் வக்ரகாளியம்மன் கோயிலில் அருள்புரியும் துர்கை, தலை சாய்ந்த கோலத்துடன் வடக்கு நோக்கி பிரம்மாண்ட தோற்றத்தில் அருள்புரிகிறாள்.

* சுருட்டப்பள்ளி தலத்தில் பள்ளிகொண்ட ஈஸ்வரன் கோயிலில் பிடாரியின் மீது நிற்கும் கோலத்தில் துர்கை அருள்புரிகிறாள்.

* குடந்தைக்கு அருகே உள்ள கதிராமங்கலம் வனதுர்கா கோயிலில் அருள்பாலிக்கும் துர்கை கிழக்கு நோக்கி லட்சுமியின் அம்சமாக தாமரை மலரில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.

* தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், வடபுறமுள்ள கோஷ்டத்தில் காட்சி தரும் துர்கை ஆறு கரங்களோடு, எருமைத் தலையின் மீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். மேலும், இக்கோயிலில் ராஜகம்பீரன் மண்டபத்தில் அர்த்தநாரீஸ்வரர் உருவம் உள்ளது. இங்கு மூன்று தலைகளுடைய துர்கைக்கு எட்டுக் கரங்கள் உள்ளன. இத்திருவுருவை லட்சுமி, சரஸ்வதி, மகேஸ்வரி என்ற முப்பெரும் தேவியர் இனணந்த வடிவம் என்பர்.

* ராமேஸ்வரம் கோயிலில் வெள்ளைக் கல்லாலான துர்கையை தரிசிக்கலாம்.

* செஞ்சிக்கும் வந்தவாசிக்கும் இடையில் உள்ள தாதாபுரம் ரவிகுலமாணிக்கேஸ்வரர் கோயில் வடக்கு கோஷ்டத்தில் எட்டுக் கரங்களுடன் காட்சி தரும் துர்கையின் ஒரு கரத்தில் கிளி உள்ளது.

* நவ துர்கை

பிறவிப்பெருங்காட்டை அழிப்பவள் – வன துர்கை, திரிபுரம் எரிக்கச் சென்றவள் – சூலினி துர்கை, அக்னிக்கும் வாயுவுக்கும் அருளியவள் – ஜாதவேதோ துர்கை, அனல் பிழம்பாகக் காட்சியளிப்பவள் – ஜ்வாலா துர்கை, சிவனை சாந்தப்படுத்தியவள் – சாந்தி துர்கை, வேட்டுவச்சி வடிவில் சென்றவள் – சபரி துர்கை, ஒளியாக நிற்பவள் – தீப துர்கை, ஸ்ரீராமர் வழிபட்ட துர்கை – லவண துர்கை.

* பதினெட்டு கர துர்கை!

கங்கைகொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழன், மேலைச் சாளுக்கிய அரசரை வென்று, வெற்றிச் சின்னமாகக் கொண்டு வந்த துர்கா தேவிக்கு பதினெட்டு கரங்கள் உள்ளன. பதினாறு கரங்களில் படைக்கலன்களும். ஒரு கரத்தில் அபய ஹஸ்தமும், மற்றொரு கரத்தில் வரஹஸ்தமும் கொண்டிருக்கிறாள்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com