நீர் சூழ்ந்த சிவலிங்கமும் நிகரில்லா அர்ச்சகரும்…

நீர் சூழ்ந்த சிவலிங்கமும் நிகரில்லா அர்ச்சகரும்…
Published on
முகநூல் பக்கம்
எழுத்தும் ஓவியமும் ராஜன்

ஒரு ஓவியனின் டைரியிலிருந்து…

பல நாட்களாக அழகிய சிவலிங்கம் ஒன்றை ஓவியமாக வரைய வேண்டும் என்று ஆசை.

இதற்காக ஒரு நல்ல மாடல் படம் ஒன்றை எணிணிஞ்டூஞு Google imagesல் தேடும்போது, ஒரு சிவன் கோவில் வாசலில் ஒரு வயதான அர்ச்சகர் கோவிலின் கதவைப் பிடித்துக்கொண்டு நிற்பது போல ஒரு படம் கிடைத்தது. அதைப் பார்த்து வரைந்த ஓவியம்தான் இது.

சிவலிங்கத்தின் கீழே தேங்கியிருக்கும் தண்ணீரும் இந்த முதியவரின் பக்தி ததும்பும் தெய்விகத் தோற்றமும் என்னை, இதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளத் தூண்டியது. Google image search மூலமாக, இணையத்தில் தேடியபோது இந்தக் கோவில் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.

கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம், ஹம்பி நகரத்தில் உள்ள மிகச் சிறிய கோவில் தான் இந்த 'படவி லிங்க கோவில்'.

'படவி' என்றால் ஏழைப் பெண் என்று பொருள். விஜயநகர சாம்ராஜ்யம் நடந்து கொண்டிருந்த காலத்தில், ஒரு ஏழைப் பெண்யாசகம் பெற்று கட்டிய கோவிலாம் இது.

ஒரே ஒரு நுழைவு வாயிலைக் கொண்ட சிறு பாதாள அறைக்குள் சுமார் 9 அடி உயரம் கொண்ட இந்த மிகப் பெரிய லிங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த லிங்கம் இருக்கும் அறைக்குள் ஒரு பாதாள கால்வாய் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதனால் இந்த லிங்கத்தின் அடிப்பாகத்தில் எப்போதும் இரண்டு அடி உயரத்துக்குத் தண்ணீர் சூழ்ந்து இருக்கும்.

விஜயநகரப் பேரரசரின் சாம்ராஜ்ய முடிவுக்குப் பின்னர், பஹமானி சுல்தான்கள் இந்தக் கோவிலை அழிக்க முயன்றனர். ஆனால் லிங்கம் சேதம் ஆகாமல், கோவில் கோபுரம் மட்டும் சிதைந்த நிலையில் உள்ளது.

சிதைந்த கூரையின் வழியே வரும் இயற்கையான சூரிய ஒளி , பிரம்மாண்டமான சிவலிங்கத்தின் மேல் படர்ந்து, பின்னர் கீழே ஓடும் நீரில் பிரதிபலிக்கும் காட்சியும், அதன் கம்பீரமும் இந்தச் சிறிய கோவிலை ஒரு பெரிய சுற்றுலா தலமாக மாற்றி உள்ளது.

இடிபாட்டுக்குப் பின், சுமார் 500 வருடங்களாக இந்தக் கோவிலில் எந்த வழிபாடும் நடைபெறவில்லை. இது ஒரு சுற்றுலா தலமாக மட்டுமே விளங்கியது. ஆனால் எவரும் கண்டுகொள்ளப் படாத இந்த 9 அடி சிவலிங்கத்திற்கு கடந்த 1980ம் ஆண்டில் இருந்து, கே.என். கிருஷ்ண பட் என்பவர் தினமும் இரு முறை பூஜை செய்து வந்தார்.

ஒரு பாதாள அறைக்குள், எப்போதும் தண்ணீரிலேயே இருக்கும் இந்த லிங்கத்திற்கு பூஜை செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. முட்டி அளவு உள்ள தண்ணீரில் நடந்து சென்று பின் லிங்கத்தைப் பிடித்து அதன் மீது ஏறித்தான் பூஜை செய்ய முடியும்.

பக்தர்களுக்குக் கோவில் உள்ளே செல்ல அனுமதி இல்லை. பக்தர்கள் வெளியில் இருந்துகொண்டு கொடுக்கும் பூக்களை வாங்கி சிவலிங்கத்துக்கு பூஜை செய்வதும், உள்ளே இருக்கும் நீரை பக்தர்கள் மேல் தெளிப்பதும், அடுத்த நாள் காலையில் கோவிலுக்குள் சென்று லிங்கத்தின்மேல் ஏறி பழைய பூக்களை எடுப்பதும், கீழே தண்ணீரில் மிதந்து கொண்டு இருக்கும் பழைய பூக்களைத் திரட்டி சுத்தம் செய்வதும்தான் கிருஷ்ண பட்டின் அன்றாடப் பணி.

அதுமட்டும் அல்லாமல், இது ஒரு சுற்றுலா தலம் என்பதால், அங்கு வரும் மக்களுடன் போட்டோ எடுத்துக் கொள்வது, அவர்களை மகிழ்விப்பது, அவர்களுக்காக பூஜை செய்வது என்று விடிகாலை ஐந்து மணியிலிருந்து மாலை வரை மிகவும் சுறுசுறுப்பாக இருப்பாராம், இந்த வியக்கவைக்கும் முதிய அர்ச்சகர். இவரைப் பார்க்க என்றே பல ஊர் சுற்றுலாவாசிகள் இங்கு வருவார்களாம்.

இறைவன் பணிக்காகத் தன்னை அர்ப் பணித்துக்கொண்ட கிருஷ்ண பட், 40 வருட காலம் இந்தப் பாதாள லிங்கத்துக்குப் பணிவிடை செய்து தனது 90வது வயதில் (26-ஏப்ரல் 2021) சிவனடி சேர்ந்தார்.

அந்த மாபெரும் அர்ச்சகப் பெருமானையும், இந்த வரலாற்றுப் பொக்கிஷமான 'படவி லிங்கம்' கோவிலையும் டிஜிட்டல் ஓவியமாக வரைந்தது மனதுக்கு மகிழ்ச்சி யாகவும் பெருமையாகவும் உள்ளது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com