நேர்மையின் உரைகல்

நேர்மையின் உரைகல்
Published on
உங்கள் குரல்

'தலைவி' தரமான விமர்சனம். மக்கள் திலகத்திற்குப் பிறகு அ.தி.மு.க. என்கிற மாபெரும் இயக்கத்தை வழிநடத்தி, ஜனநாயக முறையில் ஆட்சி அமைத்த ஜெ. குறித்த இந்தப் படம் இன்றைக்குத் தேவையானதாகும். மக்களுக்காக உழைப்பதற்குப் பெண்களின் சேவை தேவையாக உள்ளது என்பதே ஜெ. வாழ்க்கை வரலாறு உணர்த்துகிறது. ஆணாதிக்க அரசியலில், பல போராட்டக் களங்களை வெற்றிகொண்டு 'தங்கத்தாரகையாக' ஜொலித்த 'தலைவி' களம் பல கண்ட வெற்றிப் போராளி ஆவார். – ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்

கல்கி 10/09/21 மின்னிதழின் அட்டைப் படத்தில் பாரதியின் படத்தை எதிர்பார்த்த நிலையில் பேச்சுப் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌போட்டியில் சுயமாகப் பொழிந்த மாணவி பாரதி இரண்டாம் பரிசு பெற்றுள்ளாரே!‌‌‌ இது எந்த வகையிலும் நியாயமில்லையே! அய்யா இது சரியா! -ஜி.ஆனந்தமுருகன், சென்னை

கல்கி மின்னிதழ் புதிய வடிவமைப்பில் கிளர்ந்தெழுந்துவிட்ட நிலையில் இனி வாசகர் கடிதங்கள் பகுதி தேவையில்லைதானே! எல்லா கட்டுரைகளுக்கும் தனித்தனியே கருத்துக்களைப் பதிவிடும் வசதி இருப்பதால் ஒருவருக்கு ஒரு கடிதம் என்ற வரையறையும் போயிற்றே!- மணிகண்டன், மேல்மருவத்தூர்

தராசு கேள்வி பதில்கள் பகுதிக்கும் கல்கிக்கும் படைப்புகளை அனுப்பவும். வழக்கம் போல் மின்னஞ்சலைப் பயன்படுத்தலாம் தானே! ஒரு வாசகரின் கருத்தை ஏற்றோ / மறுத்தோ இன்னொரு வாசகர் கருத்துச் சொல்வதைத் தவிர்க்கவும். முறையற்ற கருத்தை வெளியிடாமல் ‌‌‌இருக்கவும் முன் தணிக்கையும் அவசியமாகலாம். கல்கி நல் வாசகர்களிடையே நட்பும் வளரலாம். – திருவரங்க‌ வெங்கடேசன், பெங்களூரு

(இது குறிது விவரமான அறிவிப்பு அடுத்த இதழில் வெளியாகும்.)

"தராசுவின் பதிலிலிருந்து அவருடைய அரசியல் நிலைப்பாடு என்னவென்று புரியவில்லையே?" என்று குழம்பிய வாசகருக்குத் தெள்ளத் தெளிவான பதில் சொன்ன தராசுக்குப் பாராட்டுகள். உண்மைதான். உங்களுடைய ஒவ்வொரு பதிலும் நேர்மையின் உரைகல்லாக இருப்பதாக ஒவ்வொரு வாரமும் உணர்கிறேன். பத்திரிகை என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று எடுத்துக் காட்டாக இருப்பதைப் படிக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக் கிறது. தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் தராசு. – உஷா முத்துராமன்.

'சுளுந்தீ` நூல் அறிமுகம் படித்தேன். நாவிதர்கள் மருத்துவர்களாக சேவை புரிந்த வரலாற்றை மறக்க / மறைக்க / மறுக்க முடியாது. இன்று அவர்கள் மருத்துவர்களாகவே அழை(மதி)க்கப் படுகிறார்கள். சாதிகளில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும் இன்று அவர் களுக்கு 'மருத்துவர்' என்றே சாதி சான்று வழங்கப்படுகிறது. நடுகல் நடுபவர்களாக அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதோடு, சவரக் கத்தியால் அரசாட்சிகள் கவிழ்ந்திருப்பதும் ஆச்சர்யப்படுத்துகிறது. பல விருதுகளைப் பெற்ற இந்நூல் இன்னும் பல விருதுகளைப் பெறும் அளவிற்கு 'ஆரோக்கியமாக' உள்ளது. – நெல்லை குரலோன்

'இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே' கட்டுரை உண்மையில் தேனாய் இனித்தது. மகாகவி பாரதியின் தாக்கத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டுமானால் தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் மகாகவி பாரதியின் அனைத்து நூல்களையும் பட்டியல் இட்டு வைப்பதுடன் அதற்குத் தனி பிரிவையே ஏற்படுத்தவேண்டும். அதுதான் மிகச் சரியான வழியாக எனக்குத் தோன்றுகிறது. – எம்.வெங்கடேசன், கரூர்

நான் சிறுவனாக இருந்தது முதல் வளர்ந்து உயர் கல்வி கற்கும் பருவத் தினை எட்டியது வரை எமது வீட்டில் வாராவாரம் 'கல்கி' வாங்கத் தவறுவ தில்லை. எனது தந்தையார் 'கல்கி'யின் ஆரம்ப கால இதழ்களில் இருந்து

(1942ஆம் ஆண்டு முதல்) தாம் எடுத்துவந்த கல்கி இதழ்களை ஒன்றுவிடாமல் அழகாக அடுக்கி வைத்திருந்தார். 'கல்கி' குடும்பத்தின் ஓர் அங்கத்தவனாய் நானும் தொடர்ந்து இருப்பதைத் தங்களுக்கு இது உணர்த்துமாயின் மிகவும் மகிழ்ச்சியடைவேன். – சர்வ சித்தன்

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் "வானதி" கதாபாத்திரத்தை மனதில் வைத்தே திருநாவுக்கரசு அவர்கள், தன் பதிப்பகத்திற்கு அப்பெயரைச் சூட்டிய தாக, விஜயா பதிப்பக உரிமையாளர் திரு. வேலாயுதம் தொடர் ஒன்றில் தெரிவித்தார்.-ஶ்ரீகாந்த்

டாக்டர் ஜெயஸ்ரீ சர்மாவின் 'காதலுக்கு மரியாதை' கதை காதலின் ஆழத்தையும் தாயின் வேதனையையும் படம்பிடித்துக் காட்டியது அருமை.- து.சேரன், ஆலங்குளம்

கல்கியில் வந்த விமர்சனத்தைப் படித்ததும் 'தலைவி' படத்தைப் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன்.- சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா

'எதிர் வீட்டு மருமகள்' கதை அருமை, அருமை, மிக அருமை.- மெஹர் அலி

கடைசிப் பக்கக் கட்டுரை அனுபவங்கள் அருமை. படித்த உணர்வைவிட எதிரே நின்று பேசியது போல் இருந்தது.- பூமா செல்வன்

வாசகர்களே, தராசு பதில்கள் பகுதிக்கான கேள்விகளை editorkalki@kalkiweekly.com என்ற மெயில் ஐ.டி.க்கு அனுப்பவேண்டும். (ஆ-ர்.)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com