online@kalkiweekly.com

spot_img

பத்திரிகை நிருபர் பணி என்பது வரம்

கா.சு. வேலாயுதன்

 நிருபர் பணிக்கு வந்து 24 ஆண்டுகள் முடிந்து 25 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். 1997- செப்டம்பர் கடைசி வாரத்தில் எனக்கு கல்கி வார இதழ் தன் அலுவலகத்திற்கு வரவழைத்து, ‘கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், தர்மபுரிக்கு ‘பகுதி நேர நிருபர்‘ என கடிதம் அளித்து பணியில் சேர்க்கும் போது (சுமார் 280 பேர் விண்ணப்பித்து அதில் ஒருவனாக பத்திரிகை உலகின் ஜாம்பவான்களாக இன்றும் விளங்கும் கல்கி கி.ராஜேந்திரன், சீதாரவி, செ.இளங்கோவன், பா.ராகவன் ஆகியோரால் ஒருமித்து தேர்ந்தெடுக்கப்பட்டவன்)

சுமார் 100 சிறுகதைகளுக்கு மேல் எழுதியிருந்தேன். அவை கல்கி, விகடன், தாய், ஜனரஞ்சனி, புதியபார்வை, சுபமங்களா, செம்மலர் இப்படி அனைத்து வெகுஜனப்பத்திரிகையிலும் அச்சில் வந்திருந்தது. கோவை வானொலி, பிலிப்பைன்ஸ் வெரித்தாஸ் வானொலி, சென்னைத் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சிகளில் மட்டுமல்ல, கல்கி, ஜனரஞ்சனி, வாசுகி, தமிழ் அரசி, விகடன் போன்ற இதழ்களிலும் என் கட்டுரைகள், சிறுகதைகள் பல்வேறு பரிசுகளை பெற்றிருந்தது. பொய்த்திரை, தணிவது, சுதேசம் என மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளி வந்திருந்தது. 1999-ல் எழுதப்பட்ட முதல் நாவல் திருப்பூர் தமிழ்சங்க விருதினைப் பெற்றது. அப்போதெல்லாம் வெளியில் எங்கே சென்றாலும் நான் எழுத்தாளன் என்பதையும் தாண்டி, கல்கியின் நிருபர் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்பட்டதில்லை. ஏன் வெட்கப்பட வேண்டும். காரணம் இருக்கிறது.

அந்த சமயம் பிரபல பத்திரிகையில் முழுநேர நிருபர் பணியில் என்னை விட ஐந்து மடங்கு சம்பளம் வாங்கிய ஒரு எழுத்தாள நண்பர் (அவர் ஒரு நாவல்தான் அப்போது எழுதி அச்சில் வந்திருந்தது) முதுநிலைப் பட்டப்படிப்பு படித்திருந்தார். அவர் பேட்டி எடுக்கப் போகிற இடங்களில் எல்லாம் தன்னை நிருபர் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளாமல் குறிப்பிட்ட பத்திரிகையின் துணை ஆசிரியர் என்றே சொல்லிக் கொண்டார். எந்த இடத்திலும் அலுவலகம் கொடுத்திருந்த நிருபர் ஐடி கார்டை காட்ட மாட்டார். அலுவலகம் தந்திருந்த நிருபர் பெயர் பொறித்திருந்த விசிட்டிங் கார்டையும் கொடுக்க மாட்டார்.

‘ஏன் இப்படி செய்கிறீர்கள்?’ எனக் கேட்டால், ‘‘நான் எப்படிப்பட்ட எழுத்தாளன்? நாவலாசிரியன். எனக்கு நிருபர்ன்னு டிசிக்னேஷன் கொடுத்திருக்காங்களே நியாயமா? ஒரு சப் எடிட்டர்ன்னு போட்டிருந்தாக்கூட கெளரவமா இருக்கும். எனக்கு நிருபர்ங்கிறது அவமானமா இருக்கு. அதுதான்!’’ என்று தெளிவுபடுத்தினார். அந்த நிருபர் எழுத்தாளர் ரொம்ப நாள் அந்தப் பணியில் இருக்கவில்லை. ஆறேழு மாதத்தில் வேலையை விட்டு சென்று விட்டார்.

அந்த நண்பரை நினைக்கும்போதெல்லாம் எனக்கு அங்கலாய்ப்பாக இருக்கும். இவர் இப்படியிருக்கிறாரே. இதற்காக வேலையை விட்டுப் போய் விட்டாரே. எனக்கு அலுவலகம் விசிட்டிங் கார்டு தரவில்லை. ஐடி கார்டும் இல்லை. கடிதத்தில் கூட பகுதி நேர நிருபர் என்றுதான் இருக்கிறது. இவரைப் போல் நிருபர் என்று ஒரு ஐடி கார்டு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். செய்தி சேகரிக்க இன்னும் நான்கு மடங்கு ஓட்டம் ஓடுவேனே!’ என மனதில் அலை, அலையாய் எண்ணங்கள் எழும்.

அந்த எண்ணங்களை தாண்டியும் எனக்கு அந்த அதிர்ஷ்டம் என் உழைப்பினால் தேடி வந்தது. குமுதத்தில் 1999-ல் நிருபர், குமுதம் ரிப்போர்ட்டரில் சீனியர் நிருபர் என்றானேன். 13 வருடங்கள் 7 மாதங்கள் கடந்த பின்பு அங்கே சப் எடிட்டர் பதவி உயர்வு என எனக்கு ஓலை வந்தபோது அந்த வேலையையே ராஜினாமா செய்தேன். பிறகு தினமலரில் உதவி ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். அங்கு எதையோ இழந்தது போன்ற உணர்வு.

அப்போது முன்னாள் திமுக அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி போனில் பேசியது இன்று போல் நினைவில் இருக்கிறது.

‘‘என்ன வேலாயுதம் குமுதத்திலிருந்து வேலையை விட்டுப் போயிட்டீங்களா? தினமலரா? டெஸ்க்கா? ஆசிரியர் குழுவா? யாரோ கொடுக்கிற செய்தியை எடிட்டிங் பண்றது எல்லாம் உங்களுக்கு சரியான வேலையா? அந்த செய்தியின் உண்மைத் தன்மை எப்படி தெரிஞ்சுக்குவீங்க? ஏதோ ஒரு நிருபர் என்னன்ன உள்நோக்கம் வச்சு எழுதியிருப்பாரோ? அது எல்லாம் உங்க மனசுக்கு சரியா வருமா? எதுக்கு அப்படிப் போனீங்க. தவிர தினசரிப் பேப்பர்ல போய் என்ன செய்யப்போறீங்க? இதோ என் டேபிளில் பத்துப் பதினைஞ்சு தினசரி பேப்பர் இருக்கு. அதை எல்லாம் படிக்கிறதுக்கு நான் எடுத்துக்கற நேரம் அதிகபட்சம் போனா அரைமணி நேரம். அவ்வளவுதான். எல்லோரும் அப்படித்தான். ஒரு பேப்பருக்கு அஞ்சு நிமிஷம், பத்து நிமிஷம் செலவு செய்யறதே மிக அதிகம். அதுல தகவல்கள் மட்டும்தான் தெரிஞ்சுக்க முடியும். அதுவே வாரப்பத்திரிகை குமுதம், விகடன் பாருங்க. எப்பவும் டேபிளில் கிடக்கும். வாரம் பூரா வர்றவங்க பொறுமையா அதைத்தான் எடுத்துப் படிப்பாங்க. பொறுமையா அதை சுவராஸ்யமா அசை போட்டு விவாதிப்பாங்க. முதல்ல வேற நல்ல பத்திரிகைக்கு போங்க!’’ என்று ரொம்ப உரிமையோடு சொன்னார்.

அவர் வாய்முகூர்த்தமோ என்னவோ? இரண்டரை மாதங்களே அங்கே உதவி ஆசிரியராக இருந்தேன். இந்து தமிழ் வெளி வந்ததும் அதில் முதல் ஆளாக அழைப்பு வந்தது. அப்போது என்னை நேர்காணல் செய்த பிஸினஸ் லைன் ஆசிரியர் சம்பத்குமார் அவர்களும், ‘‘நிருபராக இத்தனை வருடம் அனுபவம் இருக்கு. நிறைய கதை கட்டுரைகள், பரிசுகள் வாங்கியிருக்கீங்க? நிருபராகத்தான் இருக்க வேண்டுமா? டெஸ்க்கில், ஆசிரியர் குழுவில் இருக்கலாமே!’’ என்றுதான் கேட்டார்.

‘இல்லை சார். எனக்கு எப்பவும் மக்களோட மக்களா ஃபீல்டில் இருக்கணும். மக்களுடனான தொடர்புகளை அப்டேட் செஞ்சுட்டே இருக்கணும். தவிர உடல் உழைப்பு ரொம்ப முக்கியம். இப்பவும் கைகால் எல்லாம் நல்லாத்தானே இருக்கு. நான் ஓடியாடி வேலை செய்யவே விரும்புகிறேன்!’’

அதன் வெளிப்பாடுதான் எனக்கு கோவை பதிப்பில் தலைமைச் செய்தியாளர் பணி கிடைத்தது. அதற்குப் பிறகு அதுவே சிறப்பு செய்தியாளராக மாறியது. பகுதி நேர நிருபரோ, முழு நேர நிருபரோ, தலைமை நிருபரோ, சிறப்பு செய்தியாளரோ எதுவாக இருந்தாலும் நான் என் பத்திரிகை நிமித்தம் யாருடன் நேரில், போனில் பேசினாலும், ‘நிருபர்’ என்றே அறிமுகப்படுத்தி பேசி பேட்டி எடுத்து வந்துள்ளேன். எந்த இடத்திலும் ‘நிருபர்’ என்ற வார்த்தைக்காக சிறுமைப்பட்டதில்லை.

எனக்குப் பின்னால் -நான் சேர்த்து விட்டு நிருபர், சப் எடிட்டர் ஆன நண்பர்கள் பலர். அவர்கள் எல்லாம் உச்சத்தில் சென்று புதுப் பத்திரிகை ஆரம்பித்து ஆசிரியராகக்கூட வந்திருக்கிறார்கள். அதைப் பற்றி உவகை மட்டுமே கொண்டுள்ளேன்.

ஆனால் இன்றைக்கு பத்திரிகையாளர்களுக்கான மரியாதை எப்படியெல்லாம் ஊர்வலம் போகிறது என்று எண்ணிப் பார்க்கிறேன். அது மட்டுமே வலியாக வலிக்கிறது.

பாரதி, புதுமைப்பித்தன், கல்கி தொடங்கி அண்மைக்கால மேலாண்மைப் பொன்னுசாமி வரை பத்திரிகை முதலாளிகளாக, ஆசிரியர்களாக, துணை ஆசிரியர்களாக இருந்திருக்கிறார்களே அன்றி நிருபர்களாக வந்ததில்லை.

அப்படியே ஓரிரு எழுத்தாளர்கள் நிருபராக வந்திருந்தாலும் எண்ணி சில மாதங்கள், வருடங்களில் ஆசிரியர் குழுவில் புகுந்தே பணியாற்றியிருக்கிறார்கள்.

இதோ, நான் 24 ஆண்டுகள் முடிந்து 25 ஆண்டிற்குள் நிருபராகவே அடியெடுத்து வைக்கிறேன். இது பிழைப்பு நிமித்தமான பணியாகவே கருதினேன்.

ஆனால் அதையும் தாண்டி நிறைய செய்திருக்கிறேன். ஆயிரம் பேரின் பாவக்கறையை சுமந்தவனை அவனியில் அம்பலப்படுத்தி, அந்த ஆயிரமாயிரம் பேரின் அவலக் கண்ணீரை ஆனந்தக் கண்ணீராக மாற்றியிருக்கிறேன். அது இந்த நிருபர் பணியால்தான் சாத்தியமாயிற்று.

அறியாத மனிதர்களை எல்லாம் அறிந்தது, புகாத இடங்களில் எல்லாம் புகுந்து வந்தது, தேடாத அறிவுச் செல்வங்களை எல்லாம் தேடி எடுத்தது, காண ஆசைப்பட்ட மனிதர்களை மட்டுமல்ல, இவர்களை எல்லாம் நெருங்கவே முடியாது என்று நினைத்திருந்த வி.வி.ஐ.பி மனிதர்களை எல்லாம் நெருங்கிப் பழகியது இந்த நிருபர் பணி மூலமே கிடைத்து வந்திருக்கிறது.

இவை எல்லாமே என் சிந்தனைச் சுரங்கத்தில் ஆயிரமாயிரம் கதைகளுக்கான களங்கள். அவை எதிர்காலத்தில் சிறந்த பல படைப்பிலக்கியங்களாக நிச்சயம் மாறும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. அதைத்தான் நான் நிருபர் பணிக்குள் என்றென்றும் தேடி வந்திருக்கிறேன் என்பதும் பேருண்மை.

நிருபர் பணியில் 25 ஆம் ஆண்டு முழுமை பெறுவதற்குள் படைப்பிலக்கியத்தில் நானும் மூழ்கி முத்தெடுக்க புறப்பட்டிருப்பேன். இதுகாறும் இல்லாத சுதந்திரத்துடன் அதற்குள் பயணிப்பேன் என நம்புகிறேன்.

 

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

“உலகத்திலேயே சுத்தமான போர் வீரன் ஆங்கிலேயன்தான்!

1
அது ஒரு கனாக் காலம் - 4 ஜெயராமன் ரகுநாதன்   வருடம் - 1943. மைலாப்பூரில் ஒரு மாலை. எஸ்.ராமச்சந்திரன் என்பவர் வீட்டுக்குள் வந்தவுடன் குரல் கொடுக்கிறார். “வாங்கோ வாங்கோ! எல்லோரும் வாங்கோ! நாளைக்கு ஒரு விசேஷம்!” “என்ன மாமா? என்ன...

எப்போது தீரும் இந்த  சிப் தட்டுப்பாடு?

1
சந்திர மௌலி   எண் ஜாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்று சொல்லுவார்கள். ஆனால், இன்றைய நவீன தொழில்நுட்ப உலகத்தில் "எலெக்டிரானிக்ஸ் உலகத்தில் சிப்பே பிரதானம்" என்றுதான் சொல்லவேண்டும். இந்தக் காலத்தில்  நாம் பயன்படுத்தும் டி.வி....

திறக்கப்பட்ட மர்ம பெட்டி

0
  ஷாஜஹான் கவர் ஸ்டோரி   கிரேக்கப் புராணங்களின்படி பாண்டோரா என்பவள் உலகின் முதல் பெண். கடவுள்களுக்கெல்லாம் கடவுளான சியூஸ் பணித்தபடி, ஹஃபீஸ்தஸ் அவளை உருவாக்கினார். புரமீதீயஸ் சொர்க்கத்திலிருந்து தீயைத் திருடிவிட்டார். அதற்குப் பழி வாங்க, புரமீதீயஸின் சகோதரன் எபீமீதஸுக்கு...

கடைசிப் பக்கம்

1
  தமிழ்த்தாத்தாவின் கம்பராமாயணம் ! -சுஜாதா தேசிகன் கல்கியால் ‘ரசிகமணி’ என்று அழைக்கப்பட்ட டி.கே.சிதம்பரம் முதலியார் அவர்கள் கல்கியில் ‘கம்பர் தரும் ராமாயணம்’ என்ற தொடரை எழுதினார் (அந்தக் காலத்தில் இலக்கியம் என்ற ஒரு பகுதி கல்கியில்...

என்னை ஒரு பெண் கவிஞர் என அழைக்காதீர்கள் !

0
முகநூல் பக்கம் இந்த ஆண்டு கலைஞர் பொற்கிழி விருதுபெருபவர்களில் ஒருவர் கவிஞர் நிகத் சாஹிபா.  யார் இவர்? ”என்னை ஒரு பெண் கவிஞர் என்று அழைக்காதீர்கள்.என்னைப் பொதுவாக ஒரு கவிஞர் என்று அழையுங்கள்” – என்று...
spot_img

To Advertise Contact :