online@kalkiweekly.com

spot_img

பயங்கரமான பக்கத்து வீட்டுக்காரர்

கவர் ஸ்டோரி
ஆதித்யா

னைவியுடனும் பக்கத்துவீட்டுக்காரனுடனும் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டிருக்க முடியாது என்பது உலகம் முழுவதும் வழக்கிலுள்ள ஒரு பழமொழி. ஆனால், நமது பக்கத்துவீட்டுக்காரன் பாகிஸ்தான் நம்முடன் சண்டை போடுவதைத் தவிர எதுவும் செய்வதில்ல. நாம் சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து நம்மைத் தொடரும் துயரம் இந்தப் பக்கத்துவீட்டுக்காரர் தொல்லை. நேரடிப் போர், சர்வ தேச அரங்கங்களில் அனாவசியமாக பிரச்னை எழுப்பவது போன்றவைகளைத் தாண்டி, இந்தியாவில் தீவிரவாதக் கும்பல்கள் மூலம் தாக்குதல்களை நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.

அண்மைக் காலமாக அமெரிக்கா, பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஆதரித்து வளர்ப்பதாகச் சொல்லி வருகிறது. அதன் தொடர்ச்சியாகக் கடந்த மாதம் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் குறித்து அமெரிக்க நாடாளுமன்றக் குழு ஆய்வு செய்து, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. அதில் சொல்லப்பட்டிருப்பது இந்தியாவிற்கான நேரடியான எச்சரிக்கை. இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் 12 தீவிரவாத அமைப்புகளின் தாயகமாகப் பாகிஸ்தான் இருப்பதாகவும், தற்போதும் தீவிரவாத அமைப்புகளின் புகலிடமாகப் பாகிஸ்தான் திகழ்வதாகவும் அந்த நாடாளுமன்ற ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கச் சட்டப்படி, ‘வெளிநாட்டுத் தீவிரவாத குழுக்கள்’ எனத் தடை செய்யப்பட்ட 12 அமைப்புகளின் புகலிடமாகவும், தாயகமாகவும் பாகிஸ்தான் இருக்கிறது என்கிறது அந்த அறிக்கை.

அமெரிக்கச் சட்டப்படி, ‘வெளிநாட்டுத் தீவிரவாத குழுக்கள்’ எனத் தடை செய்யப்பட்ட 12 அமைப்புகளின் புகலிடமாகவும், தாயகமாகவும் பாகிஸ்தான் இருந்து வருகிறது என்று சொல்லி அவை எந்தெந்த தீவிரவாத அமைப்புகள் என்பதையும் பட்டியலிட்டிருக்கிறது.

* லஷ்கர் இ தொய்பா

* ஜெய்ஷ் இ முகமது

* ஹரகத் உல் ஜிகாத்

* ஹிஸ்புல் முஜாகிதீன்

* அல்கொய்தா

* ஐஎஸ்கேபி

* தலிபான்களின் ஹக்கானி நெட்வொர்க்

* தெஹ்ரிக் இத் தலிபான் பாக்.

* பலுசிஸ்தான் லிபரேஷன் ஆர்மி

* ஜூன்தல்லா

* சிபா இச் சபாபா பாக்.

* லஷ்கர் இ ஜாங்வி

இவைதவிர, அமெரிக்காவால் தடை செய்யப்படாத பல தீவிரவாத அமைப்புகளும் பாகிஸ்தானில் இருப்பதாக அறிக்கை சொல்லுகிறது.

இந்த அமைப்புகளில் பெரும்பாலானவை 1980ம் ஆண்டிலிருந்து செயல்படுபவை.. இவற்றில் முக்கியத் தீவிரவாத குழுக்கள் இந்தியா மற்றும் காஷ்மீரைக் குறிவைத்துச் செயல்படுகின்றன. கடந்த 1980ல் உருவான லஷ்கர் இ தொய்பா அமைப்பு, மும்பையில் 2008ல் நடந்த பயங்கரத் தாக்குதல் நடத்தக் காரணமானது. மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது அமைப்பு, லஷ்கர் இ தொய்பாவுடன் சேர்ந்து 2001ல் இந்திய நாடாளுமன்றத்திலும் தாக்குதல் நடத்தியது. 1980ல் சோவியத் ராணுவத்தை எதிர்த்து ஆப்கானில் போராட ஹர்கத் உல் ஜிகாத் அமைப்பு உருவானது. அதன்பின் இதுவும் இந்தியாவுக்கு எதிராகத் திரும்பியது. இந்த அமைப்பு இப்போது ஆப்கான் தாலிபான்களுக்கும் வீரர்களை வழங்கி வருகிறது.

இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் 12 தீவிரவாத அமைப்புகளின் தாயகமாகப் பாகிஸ்தான் இருப்பதாக இன்று தங்கள் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தாலும், அங்கு இந்த நிலை ஏற்பட மறைமுகமாக அமெரிக்காவும் ஒரு காரணம் என்பதை உலகம் நன்கு அறியும். ஆப்கானிஸ்தானத்தில் ரஷ்யாவின் ஆதிக்கத்தைக் குறைக்க, தாலிபான்களை உருவாக்கிய பாக். அரசுக்கு அந்தத் திட்டத்தையும் அதற்கான நிதி, ஆயுத உதவிகளையும் செய்தது அமெரிக்காதான். இன்று உலகிற்கு விடுத்த செய்தியில் அவர்கள் சொல்லாமல் விட்டது – “இதற்கு நாங்களும் ஒரு வகையில் காரணம்” என்பதைத்தான்.

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப், தான் ஏன் ஒசாமா பின்லேடனுக்கு எதிராக, அமெரிக்காவுக்கு ஆதரவாக இறங்க முடிவு செய்தார் என்பதைப் பற்றித் தனது புத்தகத்தில் தீவிரமாக அலசுகிறார். தாலிபான்களை உருவாக்கியதே பாகிஸ்தான் தான். முல்லா முகமது ஓமருக்கு ஆதரவு கொடுத்ததும் பாகிஸ்தான் தான். இன உறவு முறைப்படி தாலிபான்கள் பலருக்கும் நெருங்கிய உறவினர்கள் பாகிஸ்தானில் உள்ளனர். ஆனாலும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்கா பக்கம் இருப்பதுதான் தனது நாட்டுக்கு நலனைத் தரும் (பணத்தைத் தரும்) என்று முஷாரஃப் முடிவு செய்கிறார்.

ஆனால் அதே நேரம், தாலிபான்களும் ஒசாமாவும் தனக்கு எந்த அளவுக்குத் தலைவலியைத் தருவார்கள்; அந்தத் தருணத்தில் அமெரிக்கா தனக்கு எந்தவிதத்தில் உதவியைச் செய்யாது சொல்லப்போனால் உபத்திரவத்தைத்தான் கொடுக்கும் என்பதை முஷாரஃப் யோசிக்கவில்லை.

அந்தத் தவற்றின் விலையைத்தான் தொடர்ந்து வரும் பாகிஸ்தான் அரசுகள் சந்திக்கின்றன. அதில் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்கப்போவது பாகிஸ்தானின் இன்றைய பிரதமர் இம்ரான்கான்.

ஆப்கானிலிருந்து அமெரிக்கத் துருப்புக்கள் வெளியேறி, அங்கு ஏற்பட்டுள்ள சிக்கலான ஆபத்தான அரசியல் குழப்பங்களினால் மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.. அவர்களில் பலருக்குப் பாகிஸ்தானில் உறவுகள், நட்புகள் இருப்பதால் மிகப்பெரிய அளவில் அங்கு ஆப்கானிஸ்தான் அகதிகள் குடியேறுவார்கள்.

ஏற்கெனவே பொருளாதாரச் சிக்கல், அரசியல் சிக்கல்களினால் எந்த வளர்ச்சியையும் காணமுடியாமல் தவிக்கும் பாக். அரசுக்கு இது ஒரு புதிய பிரச்னையாக உருவாக அனைத்து வாய்ப்பும் இருக்கிறது. உள்நாட்டுப் பிரச்னைகள் பெருகும்போதெல்லாம், பாகிஸ்தான் மக்களைத் திசை திருப்பச் செய்யும் ஒரு விஷயம், ‘இந்தியாவில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பில்லை’ என்று தீவிரவாதிகளின் மூலம் இந்தியாவில் வன்முறையை ஏவுவது.

இப்போது ஆப்கானிஸ்தானின் தீவிரவாதிகளின் அரசுக்கு முதன் முதலில் ஆதரவு தெரிவித்ததின் மூலம் அவர்களை இந்தியாவிற்கு எதிராகப் பயன்படுத்துவது எளிதாகிவிடும்.

அமெரிக்கா எப்போதுமே பாகிஸ்தானுடன் நேர்மையாக இருக்கிறது. பயங்கரவாத தடுப்பில் அமெரிக்கா தன் அக்கறையை வெளிப்படையாகத் தெரிவித்து வருகிறது. ஆனால், பாகிஸ்தானால் ஆப்கான் எல்லையில் இப்போதும் பயங்கரவாதிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இதுதான் எங்களின் கவலை என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கெர்பியின்அறிக்கையிலிருந்து இதைப் புரிந்துக்கொள்ளலாம்.

அண்மையில் ஐ.நா. பொதுச் சபையில் காஷ்மீர் விவகாரம் குறித்துப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசியதற்கு இந்திய பிரதிநிதி சரமாரி பதிலடி கொடுத்தார். தொடர்ந்து கடந்த வாரம் பிரதமர் மோடி, பைடனுடன் நேரில் சந்தித்தபோது, ‘இந்த விவகாரம் மீண்டும் எழுப்பப்பட்டுள்ளது ’ என்ற வெள்ளை மாளிகையின் செய்தியின் மூலம் இந்திய அரசின் அயலகத்துறை நிலவரங்களை மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்பது புரிகிறது.

அமெரிக்க அதிபராக பைடன் கடந்த ஜனவரியில் பதவியேற்றதிலிருந்து இதுவரை பாகிஸ்தான் பிரதமர் இம்ரானுடன் தொலைப்பேசியில் ஒருமுறை கூடப் பேசியதில்லை. கடந்த மாதம் பிரதமர் மோடி, பைடனை சந்தித்த போது இது குறித்து விவாதித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இம்ரானுடன் பைடன் எப்போது பேசப்போகிறார்? என்பதுதான் இப்போது எழுந்திருக்கும் கேள்வி.

எவ்வளவு எடுத்துச்சொல்லியும் புரிந்து கொள்ளாத பக்கத்து வீட்டுக்காரருக்கு மிகத்தொலைவிலிருக்கும் நண்பர் மூலம் நல்ல புத்தி சொல்ல முயற்சிக்கிறார் நம் பிரதமர்.

பயங்கரமான நம் பக்கத்துவீட்டுக்காரர் புரிந்துகொள்கிறாரா எனப் பார்ப்போம்.

 

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

“உலகத்திலேயே சுத்தமான போர் வீரன் ஆங்கிலேயன்தான்!

1
அது ஒரு கனாக் காலம் - 4 ஜெயராமன் ரகுநாதன்   வருடம் - 1943. மைலாப்பூரில் ஒரு மாலை. எஸ்.ராமச்சந்திரன் என்பவர் வீட்டுக்குள் வந்தவுடன் குரல் கொடுக்கிறார். “வாங்கோ வாங்கோ! எல்லோரும் வாங்கோ! நாளைக்கு ஒரு விசேஷம்!” “என்ன மாமா? என்ன...

எப்போது தீரும் இந்த  சிப் தட்டுப்பாடு?

1
சந்திர மௌலி   எண் ஜாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்று சொல்லுவார்கள். ஆனால், இன்றைய நவீன தொழில்நுட்ப உலகத்தில் "எலெக்டிரானிக்ஸ் உலகத்தில் சிப்பே பிரதானம்" என்றுதான் சொல்லவேண்டும். இந்தக் காலத்தில்  நாம் பயன்படுத்தும் டி.வி....

திறக்கப்பட்ட மர்ம பெட்டி

0
  ஷாஜஹான் கவர் ஸ்டோரி   கிரேக்கப் புராணங்களின்படி பாண்டோரா என்பவள் உலகின் முதல் பெண். கடவுள்களுக்கெல்லாம் கடவுளான சியூஸ் பணித்தபடி, ஹஃபீஸ்தஸ் அவளை உருவாக்கினார். புரமீதீயஸ் சொர்க்கத்திலிருந்து தீயைத் திருடிவிட்டார். அதற்குப் பழி வாங்க, புரமீதீயஸின் சகோதரன் எபீமீதஸுக்கு...

கடைசிப் பக்கம்

1
  தமிழ்த்தாத்தாவின் கம்பராமாயணம் ! -சுஜாதா தேசிகன் கல்கியால் ‘ரசிகமணி’ என்று அழைக்கப்பட்ட டி.கே.சிதம்பரம் முதலியார் அவர்கள் கல்கியில் ‘கம்பர் தரும் ராமாயணம்’ என்ற தொடரை எழுதினார் (அந்தக் காலத்தில் இலக்கியம் என்ற ஒரு பகுதி கல்கியில்...

என்னை ஒரு பெண் கவிஞர் என அழைக்காதீர்கள் !

0
முகநூல் பக்கம் இந்த ஆண்டு கலைஞர் பொற்கிழி விருதுபெருபவர்களில் ஒருவர் கவிஞர் நிகத் சாஹிபா.  யார் இவர்? ”என்னை ஒரு பெண் கவிஞர் என்று அழைக்காதீர்கள்.என்னைப் பொதுவாக ஒரு கவிஞர் என்று அழையுங்கள்” – என்று...
spot_img

To Advertise Contact :